காமகோடி – கோமியம் குடிக்கும் முட்டாளல்ல
மதவெறியை பரப்பும் பாசிச சங்கி!

மூத்திரத்தை மருந்தென ஊருக்கு உபதேசம் செய்யும் காமகோடி தனக்கோ அல்லது தன்னுடைய குடும்பத்தினருக்கோ உடல்நிலை சரியில்லை என்றால் மருத்துவரை பார்க்காமல் வெறும் மாட்டு மூத்திரத்தை மட்டும் குடித்துக் கொள்வாரா என்று பதில் சொல்ல வேண்டும்.

மேற்கு மாம்பாலத்தில் உள்ள செத்துபோன சங்கராச்சாரியின் கோசாலையில் நடைபெற்ற மாட்டுப் பொங்கல் விழாவில் பேசிய சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி, “ஒரு சன்யாசிக்கு கடுமையான காய்ச்சல், மருத்துவரை கூப்பிடலாமா என்று கேட்டதற்கு கோமூத்ரா நவாமி என்றார். மாட்டு கோமியம் அருந்திய உடனே காய்ச்சல் குணமாகிவிட்டது. கோமியம் சிறந்த மருத்துவ குணத்தைக் கொண்டது. பாக்டீரியா எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு குணம் கொண்டது. செரிமான கோளாறு, இரிட்டபுல் பவுல் சின்ரோம் போன்ற வயிற்று பாதிப்புகளை  எதிர்க்கும் ஆற்றல் கொண்டுள்ளது” என்று பிரசங்கம் செய்திருக்கிறார்.

ஊருக்கு உபதேசம் இருக்கட்டும். மூத்திரத்தை மருந்தென பரிந்துரை செய்யும் காமகோடி தனக்கோ அல்லது தன்னுடைய குடும்பத்தினருக்கோ உடல்நிலை சரியில்லை என்று சொன்னால் மருத்துவரை பார்க்காமல் வெறும் மாட்டு மூத்திரத்தை மட்டும் குடித்துக் கொள்வாரா என்று முதலில் பதில் சொல்ல வேண்டும்.

இரண்டாண்டுகளுக்கு முன்பு வெளிவந்த இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வு முடிவானது, கோமியம் குடிப்பது மனிதர்களுக்குத் தீங்கு விளைவிக்கக் கூடியது எனக் கூறுகிறது. “பசுக்கள், எருமைகளின் சிறுநீர் மாதிரிகளை ஆய்வுக்கு உட்படுத்தியதில், எஸ்சரிசியா கோலை, சால்மொனெல்லா உள்ளிட்ட தீங்கு விளைவிக்கக் கூடிய 14 வகையான பாக்டீரியா இருப்பது கண்டறியப்பட்டிருப்பதாகவும் மனிதர்கள் மாட்டு கோமியத்தைக் குடித்தால் அதில் இருக்கும் பாக்டீரியா மூலம்  வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படும் அபாயம் உள்ளது என்றும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

“எருமைகளின் சிறுநீரை விட பசுக்களின் சிறுநீரில் நோய்த் தடுப்பு சக்தி உள்ளதாக பலர் கூறுகின்றனர். ஆனால் பசுக்களின் சிறுநீரில் நோய் எதிர்ப்பு சக்தி  உள்ளதாக நம்பப்படுவதைப் பொதுமைப்படுத்த முடியாது. எனவே கோமியத்தை மனிதர்கள் குடிக்கலாம் என எப்போதும் பரிந்துரைக்க முடியாது. விலங்குகளின் சிறுநீரில் காணப்படும் பல பாக்டீரியாக்கள் சிறுநீரக கற்கள், சிறுநீரக செயலிழப்பு, நிமோனியா மற்றும் சுவாச தொற்று போன்ற கடுமையான நோய்களுக்கு வழிவகுக்கும்.” என்றும் இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் கூறியுள்ளது.  

காமகோடியின் பேச்சுக்கு மிகக் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆனால் 20 ஆயிரம் புத்தகங்களைப் படித்த மாமேதை அண்ணாமலையோ, குவாண்டம் கம்ப்யூட்டிங், மைக்ரோ பிராசசர் போன்ற துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர் காமகோடி அதை பாருங்கள், கோமியத்தை குறித்து அவர் சொன்னது அவருடைய தனிப்பட்ட கருத்து அதை ஏன் விமர்சனம் செய்கிறீர்கள்? என்று வக்காலத்து வாங்குகிறது. காய்ச்சலுக்காக அண்ணாமலையும் கோமியம் குடித்திருப்பார் போல. மாட்டு மூத்திரம் உடலுக்கு கெடுதல் என மருத்துவ ஆராய்ச்சி உறுதிபடுத்தியப் பின்பும் ஒரு பேராசிரியர், சன்யாசி கதை சொல்லி மாட்டு மூத்திரத்தினை புனிதமாக்க வேண்டிய அவசியம் என்ன?

இந்தியாவின் உயர் கல்வி நிறுவனங்களில் பேராசிரியர்களாகவும் ஆராய்ச்சியாளர்களாகவும் உயர் பதவிகளிலும் உள்ள பார்ப்பனர்கள் அறிவியல் ஆராய்ச்சிகளில் பங்குபெற்றாலும் இன்னமும் மூடநம்பிக்கைகளையும் மிகவும் பிற்போக்கான பழம்பெருமைகளையும் வேதகால கதைகளையும் அறிவியல் என்று பிரச்சாரம் செய்கின்றனர். மாநில உயர்கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் சில கருப்பு பார்ப்பனர்களும் இதற்கு விதிவிலக்கல்ல. மெத்தப்படித்த இவர்கள்தான், ஜக்கியின் சிவராத்திரி களியாட்டங்களிலும் பாபாராம்தேவ், ரவிசங்கர், நித்தியானந்தாவின் வகுப்புகளிலும் முதல் வரிசையை அலங்கரிப்பவர்கள்.

அனைத்தும் வேதத்தில் உண்டு, பார்பனிய மரபே அனைத்திற்கும் அடிப்படை என்ற கருத்தை ஆங்கிலேயர்களின் துணையோடு பரப்பியதே பார்பன-பனியா கும்பல்தான். அரசியல் அதிகாரம் தரகு அதிகார கும்பலுக்கு கைமாறிய பிறகு இந்திய வரலாறென்பது வேதகால வரலாறு என்ற பொய்யை ஆர்எஸ்எஸ்–பார்பன-பனியா கும்பல் திட்டமிட்டு உருவாக்கி பரப்பி வந்தது. வாஜ்பாய் காலத்தில் இந்தப்பரப்புரைக்கென தனித் துறையே உருவாக்கப்பட்டது. தற்போது மோடியின் பத்தாண்டுகளில் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பல அரசுத் துறைகள் என அரசின் அனைத்து கட்டமைப்பும் வேத-பார்பனிய அசிங்கங்களையும் மூட நம்பிக்கைகளையும் அறிவியலாக திட்டமிட்டு பிரச்சாரம் செய்துவருகிறது.

பிளாஸ்டிக் சர்ஜரி வேத காலத்தில் இருந்தது; ஏரோபிளேனை நாங்கள் தான் கண்டுபிடித்தோம்; பிதாகரஸ் தேற்றத்தை முதலில் சொன்னதே நாங்கள் தான்; நியூட்டனுக்கு முன்பே புவியீர்ப்பு விசையை பற்றி முன்னோர்கள் சொல்லியுள்ளனர்; மாட்டு கோமியத்தால் கேன்சர் போன்ற நோய்கள் குணமாகும் என்று எந்த ஆதாரமும் இல்லாத அறிவியலுக்கு புறம்பான பழங்கதைகளை அரசு துறைகளின் பெரும் துணையோடு பிரச்சாரம் செய்கின்றனர். இதற்கான எதிர் பிரச்சாரங்கள் போதிய அளவு இல்லை என்பதால் காவிகளின் பொய்யை பலரும் உண்மை என நினைக்கின்றனர்.

இவ்வளவு பேசும் இவர்கள் அத்வானிக்கு உடல்நிலை சரியில்லை என்றவுடன் ஏன் எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்த்து சிறந்த மருத்துவர்களை கொண்டு மருத்துவம் பார்க்கின்றனர். தினமும் இரண்டு லிட்டர் கோமியத்தை கொடுத்து வயது மூப்பினால் ஏற்பட்டுள்ள நோயை சரி செய்ய வேண்டியது தானே. இது வேலைக்காகாது என்பது சங்கிகளுக்குத் தெரியும்.

பாசிஸ்டுகள் பழங்காலப் பெருமைகளை தூக்கிப்பிடிப்பதின் நோக்கமே மக்களிடையே தேசவெறியைத் தூண்டுவதுதான். ஹிட்லர் பேசிய ஆரிய இனப்பெருமை என்பது யூதர்களுக்கு எதிராக ஆரிய-தேச வெறியை ஜெர்மானியர்களிடையே தூண்டி விடுவதற்குத்தான். இங்கே காவி பாசிஸ்ட்கள் வேதகால பெருமைகளையும் மூடம்பிக்கைகளையும் அறிவியலாக பரப்புவதற்கு காரணம் இந்து-தேச வெறியை மக்களிடையே தூண்டுவதற்குத்தான்.

  • செல்வம்

 

https://www.youtube.com/watch?v=mi7MwRBJbR0

https://timesofindia.indiatimes.com/india/anti-bacterial-digestive-properties-iit-madras-chiefs-praise-for-cow-urine-draws-criticism-video/articleshow/117372700.cms

https://thesouthfirst.com/health/kidney-stone-infection-respiratory-problems-cow-urine-can-cause-several-diseases-says-study/

 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன