உலகம் முழுவதும் ஊழல் அதிகரித்து வரும் 180 நாடுகளில், இந்தியா 93 வது இடத்தில் அங்கம் வகிப்பதாக, ஊழலைக் கண்காணிக்கும் டிரான்ஸ்பரன்ஷி இன்டர்நேஷனல் அமைப்பானது அறிவித்துள்ளது.
‘தேனையெடுப்பவன் கையை நக்காமலா இருப்பான்’ என்று ஊழலை நியாயப்படுத்தும் கருணாநிதி வகையறாக்களால் ஊழலை ஒழிக்க முடியாது என்பது நிதர்சனம். ஆனால், ஊழலை ஒழிக்கப் போவதாக சவடால் அடித்த, அரவிந்த் கெஜ்ரிவால், மோடி வகையறாக்கள் கூட, மதுபானக் கொள்ளை, CAG அம்பலப்படுத்திய 7 1/2 லட்சம் கோடி, ரபேல் ஊழல் என ஊழல் பேர்வழிகளாக ஊறித் திளைக்கின்றனர். போதாக்குறைக்கு மோடியும் அமித்ஷாவும் எதிர்க்கட்சிகளில் உள்ள ஊழல் பேர்வழிகள் மீது IT, ED-யை ஏவி விட்டு, மிரட்டியும், பதவி, பணத்தாசை காட்டியும் ஊட்டியும் தனது கட்சியில் சேர்த்துக் கொள்கின்றனர். இனியும், இப்படிப்பட்ட பேர்வழிகளால் ஊழலை ஒழிக்க முடியாது என்பது திண்ணம்.
ஊழல் ஒழிப்பு அலைவரிசையில் தற்போது அங்கம் வகித்து வருபவர் விஜய். வரி ஏய்ப்பை நடைமுறைப்படுத்தி வரும் கறுப்புப் பண பேர்வழியான விஜய், ஊழலை ஒழிக்கப் போவதாக ஊளையிடுவதை எந்த வகையறாக்களில் சேர்ப்பது என்பதை, தொண்டர்களே முடிவது செய்து கொள்ளட்டும். கறுப்புப்பண பெருச்சாளிகளான சரத்குமார், ரஜினிகாந்த் ஆகிய இருவரில், ஒருவர் தான் துவங்கிய கட்சியையே கலைத்துவிட்டு பிஜேபியின் அங்கமாகிவிட்டார். இதன் ரகசியம் மோடிக்கும், சரத்குமாருக்கும் தான் வெளிச்சம். மற்றொருவர், கட்சி துவங்குவதையே நிறுத்திவிட்டார் என்பது அனைவரும் அறிந்ததே. விஜயின் விஜயத்தை மட்டும், பாசிச மோடி, அமித்ஷா கும்பல் ஏன் விட்டு வைத்துள்ளது என்பது குறித்து விரைவில் திரையில் வெளிவரும், பொறுத்திருந்து பார்ப்போம்.
எய்ட்ஸ் ஒழிப்புத் தினம், காலரா ஒழிப்புத் தினம் போன்ற தினங்களில் ஒன்றாக ஊழல் ஒழிப்பு தினம் என்பது உலகம் முழுவதும் டிசம்பர் 9 அன்று அனுசரிக்கப்படுகிறது. அன்றைய தினம், ஊழல் ஒழிப்புகளான வழிமுறைகள், தீர்வுகள், ஒவ்வொரு நாட்டின் சூழலுக்கேற்ற வகையில் எடுக்க வேண்டும் என உறுதி மொழியும் எடுக்கப்படுகிறது.
ஆனால், ஊழல் மட்டும் ஒழிந்தபாடில்லை, ஒழிக்கவும் முடியவில்லை. புற்றீசல் போல் வளர்ந்த வண்ணமே உள்ளது. இதனால், அரசின் நலத்திட்டங்கள் அனைத்தும் விழலுக்கு இறைத்த நீராக வீணாகிறது. ஒரு சிலருக்கு செல்வமும், பெரும்பான்மையினருக்கு ஏழ்மையும் பெருகிய வண்ணம் உள்ளது. ஊழல் பெருக்கத்தில், ‘பாரத’ நாடும், மக்கள் பெருக்கத்தைப் போலவே உள்ளது. கரையான் போல் சமுதாயத்தை அரித்துவிடும். ஊழலைத் தடுக்க, ஊழல் தடுப்புச் சட்டமும் 1988 இல் கொண்டுவரப்பட்டது. இதை நடைமுறைப்படுத்தி கரையானை அழிக்க வேண்டிய அரசு அதிகாரிகளே, அவற்றை உன்னிப்பாக கவனித்து நடைமுறைப்படுத்த வேண்டிய மக்கள் பிரதிநிதிகளான அரசியல்வாதிவாதிகளே கரையான்களாக மாறி வருகின்றனர். அரசு நலத்திட்டங்களையும் முழுமையாக மக்களிடம் கொண்டு போய் சேர்க்காமல், இந்த கரையான்களே பெரும் பகுதியை அரித்துத்தின்று விடுகின்றனர். மீதியை ‘புல்லுக்கு புசித்தக் கதையாக’ மக்களிடம் கொண்டு போய் சேர்க்கின்றனர். இதன் மூலம் சுருட்டுகின்ற அனைத்தையும் பினாமி பெயர்களில், அந்நிய வங்கிகளில் பணமாகவோ, தங்கமாகவோ பதுக்கி விடுகின்றனர். (இதைத்தான் மோடி, பறிமுதல் செய்து ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் ரூபாய் 15 லட்சம் போடுவதாக கூறினார். இது ஒரு மோசடி என்பது ஒரு புறம் இருக்கட்டும்) மேலும், அசையா, அசையும் சொத்துக்களாகவும் பினாமிகளின் பெயரில் குவித்து விடுகின்றனர் என்பது அனைவரும் அறிந்த தகவல்.
ஊழலில் ஈடுபடும் போது, தப்பித்தவறி மாட்டிக் கொண்டாலோ, எதிர்க்கட்சிகளின் பழிவாங்கும் நடவடிக்கைகளில் சிக்கிக் கொண்டாலோ, ஊழல் தடுப்புச் சட்டம் 1988ன் படி 6 மாதம் முதல் 5 வருடம் வரை சிறையில் அடைக்கப்படலாம். அதேசமயம் ஊழலில் சுருட்டப்பட்ட சொத்துகள் என்றைக்கும் பறிமுதல் செய்யப்படாது. அவை அனைத்தையும் அவர்களுடைய குடும்பமும், பினாமிகளும் கேள்வி கேட்பாரின்றி சுகமாக அனுபவிப்பர். கைதானவரும் வெளியே வந்து, அந்த சுகத்தில் ஊறி திளைப்பார், இதுவும் நடைமுறை உண்மை.
இந்த வகையில் ‘பாரத’ நாட்டின் ஊழல் என்பது அடி முதல் முடி வரை ஆழமாக வேரூன்றி உள்ளது. இவை, நமது நாட்டை அடிமைப்படுத்திய, கிழக்கிந்தியக் கம்பெனியின் அதிகாரிகளிடம் இருந்து தொடங்கியது. ஆளும் வர்க்கமான ஆங்கிலேய முதலாளிகளின் தேவைகள், நோக்கங்கள் அனைத்தையும் நிறைவேற்றி தருவதற்கு ஏற்ப கையூட்டுகளைப் பெற்றனர். அதாவது, ஊழலில் ஈடுபட்டனர். ஆளும் வர்க்கமான ஆங்கிலேய முதலாளிகளால் ஊழலில் ஈடுபடுத்தப்பட்டனர் என்பதே சரி. அன்றையே ஆட்சியாளர்களாக கிழக்கிந்தியக் கம்பெனியும், அதன் அதிகாரிகளும் இருந்தனர். இன்றோ, ஆங்கிலேய ஏகாதிபத்தியவாதிகளால், புகுத்தப்பட்ட இரட்டை ஆட்சி முறையால் அரசு அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் ஆட்சியாளர்களாக உள்ளனர்.
அன்று கிழக்கிந்திய கம்பெனியில் அதிகாரிகள் மட்டுமே ஆளும் வர்க்கமான ஆங்கிலேய முதலாளிகளால் ஊழல் படுத்தப்பட்டனர். இன்றோ, அரசு அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் கார்ப்பரேட் முதலாளிகளால் ஊழல் படுத்தப்பட்டு வருகின்றனர். இதன் அடிப்படையில், அன்றும் சரி, இன்றும் சரி ஊழலுக்கு ஊற்றுக் கண்களாக விளங்குவது ஆளும் வர்க்கமான கார்ப்பரேட் முதலாளிகளே என்பது தெளிவு.
அரசு நலத்திட்டங்களை, சட்டங்களை அரசியல்வாதிகள் வகுத்தாலும், அதை நடைமுறைப்படுத்தும் அதிகாரம் அரசு அதிகாரிகளிடமே உள்ளது. இவற்றை, அரசு அதிகாரிகளே, ஆளும் வர்க்கமான கார்ப்பரேட் முதலாளிகளின் சுரண்டலுக்கு ஏதுவாக, வளைத்துத் தரும் வேலையை செவ்வனே செய்து வருகின்றனர். இவர்களுடன் கூட்டணி அமைத்து கார்ப்பரேட் முதலாளிகளது கைக்கூலியாக செவ்வனே செயல்பட்டு வருகின்றனர் அரசியல்வாதிகள்.
இது ஒரு புறம் இருப்பினும், இவர்கள் ஊழல் படுத்தும், ஊழலின் ஊற்றுக் கண்ணான ஆளும் வர்க்க கார்ப்பரேட் முதலாளித்துவத்தை ஒழிக்காமல், ஊழலை ஒழிக்க முடியாது. அதே போல், கார்ப்பரேட் ஊழலுக்கு பாதையைச் செப்பனிட்டு தரும் இரட்டை ஆட்சி முறையை ஒழிக்காமலும் ஊழலை ஒழிக்க முடியாது.
அனைத்து அதிகார மட்டங்களுக்கும், தேர்ந்தெடுக்கவும், திருப்பியழைக்கவும், தவறு செய்தால் தண்டிக்கவும் உரிமையுடன் கூடிய அதிகாரத்தை மக்களுக்கு அளிப்பது மூலமே, ஊழலை ஊதி தள்ள முடியும்.
- மோகன்