புதிய கல்விக் கொள்கை
தொடர்கிறது திமுகவின் இரட்டை வேடம்.

அரசுப் பள்ளிகளை தனியார் பங்களிப்புடன் மேம்படுத்துவது, இதற்காக அரசுப் பள்ளிகளை ஐந்து முதல் பத்து ஆண்டுகளுக்கு தனியார் நிறுவனங்கள் தத்தெடுக்க அனுமதிப்பது. இதுதான் ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையில் கூறப்பட்டுள்ள ‘வித்யாஞ்சலி’ திட்டம். இதன் நோக்கம் அரசுப் பள்ளிகளை நடத்தும் பொறுப்பில் இருந்து அரசு விலகிக் கொண்டு அதனை தனியார்வசம் ஒப்படைப்பது. வேறு வார்த்தைகளில் சொன்னால் அரசுப் பள்ளிகளைத் தனியார்மயமாக்குவது.

புதிய கல்விக் கொள்கையை அமுல்படுத்த ஒன்றிய அரசு அழுத்தம் கொடுக்கிறது, அதனை நிறைவேற்றினால்தான் கல்விக்கான நிதியை ஒதுக்க முடியும் என ஒன்றிய அரசு நிர்பந்திக்கிறது என கூறி ஏதோ திமுக அரசு புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த மறுப்பது போலவும், அதற்காக ஒன்றிய அரசுடன் முரண்படுவது போலவும் ஒரு சித்திரம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் நடந்து கொண்டிருப்பதோ வேறு. வெறும் வாயளவில் புதிய கல்விக் கொள்கையை எதிர்ப்பதாக திமுக கூறினாலும் ஒன்றிய அரசின் கல்விக் கொள்கைகளில் கூறப்பட்ட பல்வேறு அம்சங்களை வேறு பெயர்களில் அடுத்தடுத்து தமிழ்நாட்டில் அமுல்படுத்திவருகிறது. அப்படிப்பட்ட அறிவிப்பு ஒன்றை தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சமீபத்தில் வெளியிட்டுள்ளார்.

வரும் கல்வியாண்டில் 500 அரசுப் பள்ளிகளை தனியார் பள்ளிகளிடம் ஒப்படைக்கும் முடிவை அவர் அறிவித்துள்ளார். அதனை அவர் தனியார் பள்ளிகள் சங்கம் நடத்திய கூட்டத்தில் அறிவித்தார் என்பதுதான் இதில் உள்ள சிறப்பு.

தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளி முதலாளிகள் இதுவரை ஆறு தனித்தனி சங்கங்கள் வைத்திருந்தனர். தற்போது இந்த ஆறு சங்கங்களையும் இணைத்து ஒரே சங்கமாக மாற்றியிருக்கின்றனர். “தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம்” என்ற இந்த சங்கத்தின் தொடக்கவிழா சில நாட்களுக்கு முன்னர் சென்னையில் நடைபெற்றது. இதில் பள்ளி முதலாளிகள் சார்பாக ஒன்பது தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் ஒன்றுதான் 500 அரசுப் பள்ளிகளை தனியார் பள்ளிகளின் பங்களிப்புடன் மேம்படுத்துவது.

இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்  “வரும் கல்வியாண்டில் 500 அரசுப்பள்ளிகளைத் தத்தெடுத்து அந்தப் பள்ளிகளுக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளை அருகில் உள்ள தனியார் பள்ளிகளின் பங்களிப்புடன் நிறைவேற்றித்தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என தனியார் பள்ளிகள் சங்கம் நிறைவேற்றிய தீர்மானத்திற்கு பாராட்டு தெரிவித்து பேசியிருக்கிறார்.

இதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உட்பட பலரும் விமர்சித்த பிறகு கார்ப்பரேட்டுகள் வரிச்சலுகை பெறுவதற்காகச் செய்யும் சமூக சேவையான சி.எஸ்.ஆர்ன் கீழ் தனியார் பள்ளிகள் மேற்கொள்ளும் திட்டம் இது. இதற்கும் அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை என மறுத்துப் பேசுகிறார். அரசுப் பள்ளிகள் எங்களது பிள்ளைகள் அதனை நாங்கள் தத்துக் கொடுப்போமா என பொங்குகிறார்.

ஆனால் அரசுப் பள்ளிகளுக்கு டேபிள் சேர், எழுதுபொருட்கள், கணிணி, உள்ளிட்ட வசதிகளைக் கூட ஏற்படுத்தித் தர நிதி ஒதுக்காமல், அவற்றிற்காக கல்வி சீர்வரிசை என்ற பெயரில் கிராம மக்களிடமும், புரவலர்களிடமும், தனியார் நிறுவனங்களிடமும் கையேந்தும் திட்டத்தை கடந்த ஆண்டே தமிழக அரசு நடைமுறைப்படுத்திவிட்டது. 

அரசுப் பள்ளிகளை தனியார் பங்களிப்புடன் மேம்படுத்துவது, இதற்காக அரசுப்பள்ளிகளை ஐந்து முதல் பத்து ஆண்டுகளுக்கு தனியார் நிறுவனங்கள் தத்தெடுக்க அனுமதிப்பது. இதுதான் ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையில் கூறப்பட்டுள்ள ‘வித்யாஞ்சலி’ திட்டம். இதன் நோக்கம் அரசுப் பள்ளிகளை நடத்தும் பொறுப்பில் இருந்து அரசு விலகிக் கொண்டு அதனை தனியார்வசம் ஒப்படைப்பது. வேறு வார்த்தைகளில் சொன்னால் அரசுப் பள்ளிகளைத் தனியார்மயமாக்குவது.

இந்த திட்டத்தைத்தான் தற்போது தமிழ்நாட்டில் அமுல்படுத்தப் போவதாக கல்வி அமைச்சர் கூறியிருக்கிறார். ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையை ஏற்கமாட்டோம் தமிழ்நாட்டிற்கென்று தனியாக கல்விக் கொள்கை வகுக்கப்போகிறோம் என்று திமுக அரசு அறிவித்து ஆண்டுகள் பலவாகிவிட்டன, இதுவரை அது குறித்து அவர்கள் வாயே திறக்கவில்லை. அதேசமயம் இல்லம் தேடி கல்வி, வானவில் மன்றம், எண்ணும் எழுத்தும் திட்டம், நம்ம ஸ்கூல் பவுண்டேசன் திட்டம் என அடுத்தடுத்து புதிய கல்விக் கொள்கையில் கூறப்பட்டுள்ள திட்டங்களை வேறு பெயர்களில் நடைமுறைப்படுத்தி வந்தனர். தற்போது ‘வித்யாஞ்சலி’ திட்டத்தினை வேறு பெயரில் அமுல்படுத்த முனைகின்றனர்.

கல்வித்துறை தனியார்மயத்தை நோக்கமாக கொண்டு ஒன்றிய அரசு அறிவித்துள்ள புதிய கல்விக் கொள்கைக்கும் திமுக அரசு நடைமுறைப்படுத்தி வரும் கல்விக் கொள்கைக்கும், மும்மொழிக் கொள்கையா அல்லது இரு மொழிக் கொள்கையா என்பதைத் தாண்டி, அடிப்படையில் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை. ஆனால் அதனை மூடி மறைத்துவிட்டு தாங்கள் ஏதோ முரண்படுவதுபோல நாடகமாடுகின்றனர். முழுக்க நனைந்த பின்னரும் முக்காடு போட்டு நடிக்கின்றனர்.

  • அறிவு

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன