இன்று டிசம்பர் 26ம் தேதிதோழர் மாவோவின் 132வது பிறந்த தினம். தோழர் மாவோ, நமது காலத்தின் மாபெரும் மார்க்சிய லெனினியவாதியாவார். தோழர் மாவோ மேதாவிலாசத்துடனும், ஆக்கப்பூர்வமாகவும் பன்முகங்களிலும், மார்க்சிய-லெனினியத்தை கற்று,பாதுகாத்து, வளர்த்து, அதை புத்தம் புதிய ஒரு கட்டத்துக்கு உயர்த்தியுள்ளார். தோழர் மாவோவின் பிறந்த நாளில் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலராக இருந்த நா. சண்முகதாசன் எழுதிய “மகத்தான மாவோ சேதுங் சிந்தனைகள்” எனும் நூலிலிருந்து மார்க்சிய – லெனினிய வளர்ச்சிக்கு மாவோ வழங்கிய மகத்தான சாதனைகள் எனும் தலைப்பில் உள்ளதை சுருக்கமாக இங்கு வெளியிடுகிறோம்.
மார்க்சிய – லெனினியத்தின் வளர்ச்சிக்கு தோழர் மாவோ வழங்கிய செழிப்பான, பலதரப்பட்ட சாதனைகள் அனைத்தையும் ஒரு கட்டுரையில் விபரமாக விளக்குவது சாத்தியம் என்று யாரும் எண்ணி விட முடியாது. இத்தகைய ஒரு பூரண ஆய்வுக்கு கூடிய காலமும், நீடிய உழைப்பும், ஆராய்ச்சியும் தேவை. எனவே இக்கட்டுரை அந்தத் திசையில் முதலடி எடுத்து வைப்பதாகவே இருக்கும்; இது பரிபூரணமானது அல்ல.
லெனின் கூறியபடி மார்க்சியம் என்பது தத்துவஞானம், அரசியல் பொருளாதாரம், வர்க்கப் போராட்டம் எனும் மூன்று பகுதிகளை உள்ளடக்கியது. நாம் மாவோ சிந்தனையை ஆராய்ந்து பார்த்தால், மார்க்சியத்தின் இம்மூன்று பகுதிகளையும் மாவோ எவ்வாறு வளர்த்துள்ளார் என்பதைக் காண முடியும்.
தத்துவஞானத்தைப் பொறுத்தவரையில் மாவோவின், ஏராளமான சாதனைகளை குறிப்பிடலாம். உதாரணமாக, தோழர் மாவோவின்” யென் ஆன் கலை இலக்கிய கருத்தரங்கு உரைகளை” எடுத்துக் கொள்வோம். இந்த படைப்பில் பாட்டாளி வர்க்க கலை இலக்கியம் பற்றிய தத்துவத்தை ஆக்கப்பூர்வமாக வளர்த்து, விளக்குவதை மட்டும் அவர் செய்யவில்லை. இப்படைப்பு முழுவதும் மார்க்சிய-லெனினிய தத்துவம் வியாபித்திருப்பதையும், இது வாழ்வுக்கும், சிந்தனைக்கும் இடையில், சடப்பொருளுக்கும் மனத்துக்கும் இடையில் உள்ள உறவு பற்றி விளக்குவதையும் காணலாம். கருத்துக்கள் எங்கிருந்து வருகின்றன? என்ற முக்கியமான தத்துவஞான கருத்தை இது விளக்குகின்றது. தனிநபரும், பொதுமக்கள் பற்றிய பிரச்சினை, அரசியலும் இயக்கமும் பற்றிய பிரச்சினை, காரணமும்,காரியமும் பற்றிய பிரச்சினை ஆகியவை பற்றியும் இது விளக்குகின்றது.
யென் ஆன் கலை இலக்கிய கருத்தரங்கு உரைகள் என்ற படைப்பில் தோழர் மாவோ புரட்சிகர கலை இலக்கிய ஊழியர்களுக்கு உரிய ஐந்து அம்சங்களான வர்க்கநிலைப்பாடு, அனுகுமுறை, ரசிகர்கள், வேலை, மார்க்சிய-லெனினிய படிப்பு போன்றவற்றை முன்வைத்துள்ளார்
வர்க்க நிலைப்பாடு எனும் போது அவர் பாட்டாளி வர்க்க நிலைப்பாட்டை குறிப்பிடுகின்றார். நமது வர்க்க நிலைப்பாடு தவறானால், நமது கருத்துக்கள் அனைத்தும் தவறாகி விடும். அனுகுமுறை என்பது நமது எதிரி, நமது நேச அணிகள், நமது சொந்த மக்கள் ஆகியோர் மீது நாம் மேற்கொள்ளும் மனோபாவம் ஆகும். இந்த மூன்று பகுதியினரையும் பொறுத்தவரையில் நாம் வேறு வேறு மனோபாவத்தை மேற்கொள்ள வேண்டும்; எதிரியை பொறுத்தவரையில் நமது அனுகுமுறை அவர்களைப் பூரணமாக அம்பலப்படுத்துவதும், அவர்களை உறுதியாக தூக்கியெறிவதும் ஆகும்.
நமது நேச அணிகளிடம் நாம் கடைப்பிடிக்கும் மனோபாவம், நாம் அவர்களுடன் ஐக்கியப்படும் அதே வேளையில், அவர்களுக்கு எதிராக பொருத்தமான போராட்டங்களையும் நடத்த வேண்டும். நமது நேச அணியில் முற்போக்கான அம்சங்களை பொறுத்தவரையில், நாம் அவர்களுடன் ஐக்கியப்பட வேண்டும்; தவறான அம்சங்களைப் பொறுத்தவரையில் நாம் அவர்களுடன் போராட வேண்டும்.
புரட்சிகரப் பொதுமக்களைப் பொறுத்தவரையில் நமது அனுகுமுறை அவர்களைப் போற்றி பாராட்டுவதும், புகழ்ந்து பாடுவதும் ஆகும். அவர்களிடம் குறைபாடுகளும், தவறுகளும் காணப்படலாம். இருந்தும் நமது மனோபாவம் பொறுமையாக இருந்து, நல்லெண்ணத்துடன் அவர்களுக்கு உதவி செய்வதாக இருக்க வேண்டும். இவ்வாறு தோழர் மாவோ இந்த மூன்று தரப்பினருக்கும் மூன்றுவித அனுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று தெட்டத் தெளிவாக கூறியுள்ளார்.
இது மார்க்சிய- லெனினிய பொதுத் தத்துவமாகும். இது வர்க்கப் போராட்டத்தில் ஒரு முக்கியமான கோட்பாடு சம்பந்தமான விசயம் மாத்திரமல்ல, சீனாவின் மகத்தான கலாச்சாரப் புரட்சியிலும் பெரும் முக்கியத்துவம் வகித்தது. கட்சியில் அதிகாரத்திலிருந்து கொண்டு முதலாளித்துவ பாதையை மேற்கொண்ட ஒரு சில நபர்களுக்கு எதிராக புரட்சிகர நேச அணியை அமைக்கவும், அவர்களை எதிர்த்து போரிடவும் இது யதார்த்த முக்கியத்துவம் வாய்ந்து விளங்கியது.
மாவோ சிந்தனை உண்மையில் மார்க்சிய – லெனினியத்தை ஆக்கப்பூர்வமாக வளர்த்துள்ளது. அது ஒரு உயர்ந்த மட்டத்துக்கு உயர்த்தப்பட்டது. ஆகவே, “யென் ஆன் கலை இலக்கியக் கருத்தரங்கு உரைகள்” எனும் படைப்பு கலை இலக்கியம் தழுவியதாக இருந்த போதிலும், அதில் மார்க்சிய-லெனினிய இயங்கியலும் வியாபித்திருக்கின்றது.
அடுத்ததாக மாவோ, தன் முரண்பாடு பற்றி என்ற அதிமுக்கியத்துவமான கட்டுரையில் இயங்கியலை ஆக்கப்பூர்வமாக ஆராய்ந்தது ஒரு சிறப்பு தன்மை வாய்ந்தது.
தோழர் மாவோ தனது இக்கட்டுரையின் முதல் வாக்கியத்தில் “ விசயங்களில் உள்ள முரண்பாடு சம்பந்தமான விதி, அதாவது, எதிர்மறைகளின் ஒற்றுமை சம்பந்தமான விதி பொருள் முதல்வாத இயங்கியலின் அடிப்படை விதியாகும்” என்கிறார். இது ஆழ்ந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வாக்கியம். இது மிகச்சிறிய ஒரு வாக்கியமாக இருந்த போதிலும் இதை விளக்குவதற்கு ஒரு நாள் பிடிக்கும்.
தனது கட்டுரையின் இரண்டாவது வாக்கியத்தில் தோழர் மாவோ, இயங்கியல் என்பது அதன் முறையான அர்த்தத்தில், பொருட்களின் சாராம்சத்துக்குள்ளேயே இருக்கும் முரண்பாட்டை ஆராய்வதாகும்” என்ற லெனினின் கூற்றை மேற்கோள் காட்டியுள்ளார். எனவே நம்மைப் பொறுத்தவரையில், முரண்பாடு சம்பந்தமான விதி, அதாவது எதிர்மறைகளின் ஒற்றுமை சம்பந்தமான விதிதான் பொருள்முதல்வாத இயங்கியலின் மிக அடிப்படையான விதி என்பதை புரிந்து கொள்வது மிக முக்கியம்.
தோழர் மாவோவின் ”முரண்பாடு பற்றி”என்ற கட்டுரை, மார்க்சிய தத்துவஞானத்துக்கு அவர் வழங்கிய மிக முக்கியமான சாதனையாக இருந்த போதிலும், அவர் தமது வேறு பல படைப்புகளிலும் மார்க்சிய தத்துவஞானத்தை வேறு பல துறைகளில் விருத்தி செய்துள்ளார்.
தோழர் மாவோவின் ‘ மக்கள் மத்தியில் முரண்பாடுகளை சரியாக கையாள்வது பற்றி” என்ற கட்டுரை அவருடைய இன்னொரு தத்துவஞானப் படைப்பாகும். இந்தப் படைப்பில் அவர், எதிரிக்கும் நமக்கும் இடையிலுள்ள முரண்பாடுகளைக் கையாள்வது எப்படி என்பதற்கு மாறாக, மக்கள் மத்தியில் முரண்பாடுகளை கையாள்வது எப்படி என்ற பிரச்சினையை விளக்குகின்றார். வேறு வேறு இயல்புடைய முரண்பாடுகளில், ஒன்று இன்னொன்றாக மாற்றப்பட முடியும் என்பதையும் அவர் விளக்குகின்றார். கட்சிக்குள் வேறுபட்ட கண்ணோட்டங்கள், கருத்துக்களுக்கு இடையில் நிகழும் போராட்டத்தைக் கையாள்வது எப்படி என்பதை பற்றி விளக்கவும் அவர் முரண்பாடு சம்பந்தமான விதியை உபயோக்கின்றார்.
இதோடு மட்டுமில்லாமல் தோழர் மாவோ, வர்க்கப் போராட்டம் பற்றிய மார்க்சிய- லெனினிய தத்துவத்தை எப்படி வளர்த்துள்ளார் என்பதை பீகிங் மக்கள் தினசரி “ மகத்தான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு ஆவணம்” என்ற தலைப்பில் வெளியிட்ட தலையங்கத்தில் விளக்கப்பட்டுள்ளது ( 1976 பீகிங் ரிவூவ்யூ- 21வது இதழ்)
சோசலிசத்தின் கீழ் வர்க்கங்களும் வர்க்கப் போராட்டமும் இருக்கின்றனவா, இல்லையா என்ற கேள்விக்கு, இருக்கின்றன என்று பதிலளித்தது தான், தோழர் மாவோ வர்க்கப் போராட்டம் பற்றிய மார்க்சிய- லெனினியத் தத்துவத்தின் வளர்ச்சிக்கு வழங்கிய விசேச சாதனையாகும்.
மார்க்சும், எங்கெல்சும் பாட்டாளி வர்க்கப் புரட்சியும், பாட்டாளிவர்க்க சர்வதிகாரமும் பற்றிய பிரச்சினையை முன்வைத்தனர். லெனினும், ஸ்டாலினும் சோவியத் யூனியனில் இதை யதார்த்தமாக்கினர். தோழர் மாவோ சீனாவில் இதை யதார்த்தமாக்கியது மட்டுமல்ல, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் கீழ் புரட்சியை எப்படி நடத்துவது என்ற பிரச்சினைக்கும் தீர்வு கண்டார். பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் அதன் நிறத்தில் மாறாமல் தடுப்பது எப்படி, முதலாளித்துவ மீட்சியைத் தடுப்பது எப்படி, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை ஸ்திரப்படுத்துவது எப்படி என்ற பிரச்சினைக்கும் அவர் தீர்வு கண்டார். எனவே மேற்கூறிய ஒரு சில உதாரணங்களிலிருந்து தோழர் மாவோ மார்க்சிய- லெனினிய தத்துவத்தை எப்படி ஆக்கப்பூர்வமாக வளர்த்தார் என்பது தெளிவாகிறது.
மார்க்சியம் முதலில் லெனினியம் என்ற கட்டத்திற்கு வளர்ந்து, இன்று மாவோ சிந்தனை என்ற கட்டத்திற்கு மேலும் வளர்ந்து விட்டது. மாவோ சிந்தனை எல்லா வேலைகளிலும், கட்சிக்கும், புரட்சிக்கும் வழிகாட்டும் ஒரு கோட்பாடு.
தோழர் மாவோவின் கோட்பாடுகளை கற்று முதலாளித்துவத்தைக் கொன்று புதைத்த மண்ணில் தோழர் மாவோவின் புகழை ஓரு மலர்செடியாய் நாம் நடுவோம்!
தோழர் மாவோவின் வழிநடப்போம்! அவரின் நினைவை நெஞ்சிலேந்துவோம்!
முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிப்போம்!
தோழர் மாவோ வின் வழியில் பயணிப்போம் இந்தியாவில் காவி கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிப்போம்