காவி பாசிசத்தின் ஒடுக்குமுறை
இன்று ஜுபைர், நாளை?

பாஜக-ஆர்எஸ்எஸ் கும்பல் பரப்பும் பொய்யான தகவலை அம்பலப்படுத்துதல், மக்களிடம் பரப்பப்படும் இந்து மதவெறிப் பிரச்சாரத்தை அம்பலப்படுத்துகின்ற ஒரே காரணத்திற்காக, ஒரு சாதாரண பத்திரிக்கையாளரை தன்னுடைய கொடூர சட்டங்கள் மற்றும் போலீஸைக் கொண்டு ஒடுக்க முயற்சிக்கிறது ஆதித்யநாத் அரசாங்கம். இதை காவி பாசிசம் என்று சொல்லாமல் வேறு என்னவென்று சொல்வது?

பிரபல உண்மை அறியும் இணையப் பத்திரிக்கையான ஆல்ட் நியூஸ் ன் துணை நிறுவனர் முகமது ஜுபைர் மீது தேச துரோக வழக்கு பதிந்துள்ளது யோகி ஆதித்யநாத்தின் உத்தரப்பிரதேச காவல்துறை. தேச துரோக வழக்கு போடுகின்ற அளவுக்கு ஜுபைர் செய்த குற்றம் என்ன?

உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த இந்துமதவெறி சாமியாரான நர்சிங் ஆனந்த், முகமது நபி குறித்து தரக்குறைவாக பேசிய காணொலி சமூக ஊடகத்தில் பரவலானது. அதை தனது X தளத்தில் பதிவிட்டு நடவடிக்கை எடுக்குமாறு போலீசுக்கு சுட்டிக்காட்டி இருந்தார். இதற்காக தேச துரோக வழக்கை தொடுத்துள்ளது ஆதித்யநாத் அரசாங்கம்.

 

 

ஜுபைர் மீது கிட்டத்தட்ட 12 வழக்குகளை போட்டுள்ளனர் இந்துத்துவ பாசிஸ்டுகள். அதில் ஒன்பது வழக்குகள் ஆதித்யநாத் அரசாங்கம் போட்டது. இரண்டு வருடங்களுக்கு முன்பு, உத்தரபிரதேச அரசு ஜோடித்த வழக்கில் ஜுபைருக்கு உச்சநீதிமன்றம் பிணை கொடுத்தது. அதன் பிறகு வழக்கு விசாரணையை கிடப்பில் போட்டது உ.பி. அரசாங்கம். தற்போது புதியதாக தேச துரோக வழக்கை பதிந்துள்ளது.

செப்டம்பர் 29ஆம் நாள் நர்சிங்கானந் உத்தரபிரதேச மாநிலத்தின் காசியாபாத்தில் உள்ள தனது தசனா தேவி ஆசிரமத்தில் நடந்த கூட்டத்தில் முகமது நபி குறித்து மிகவும் மோசமான வகையில் பேசி இருந்த காணொளி சமூக வலைதளங்களில் பலராலும் பகிரப்பட்டது. இதனையடுத்து இந்தியாவின் பல்வேறு இடங்களில் இருந்து முஸ்லிம் மக்கள் நர்சிங் ஆனந்த் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் கொடுத்தனர். ஒரு சில இடங்களில் கடுமையான போராட்டங்களும் நடைபெற்றது. அக்டோபர் 3 அன்று, காசியாபாத்தில் உள்ள நரசிங்கானந் நிர்வகிக்கும் தசனா தேவி கோவிலுக்கு எதிரே பல முஸ்லீம் இளைஞர்கள் நரசிங்கானந்தை கைது செய்ய வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கோவில் மீது கற்களை வீசியதாக கூறி போராட்டக்காரர்கள் மீது வழக்கு பதிந்துள்ளது உ.பி. போலீஸ்.

மகாராஷ்டிரா உத்தரப்பிரதேசம் மற்றும் ஜம்மு காஷ்மீரின் பல பகுதிகளில் நர்சிங் ஆனந்து மீது வழக்குகள் பதியப்பட்டுள்ளன. பல்வேறு இடங்களில் கொடுக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில் நர்சிங் ஆனந்த் மீது பிஎன்எஸ்-ன் சில வலுவற்ற பிரிவுகளின் கீழ் முதல் குற்ற பத்திரிகையை பதிவு செய்துள்ளது உ.பி. காவல்துறை. இன்றுவரை நர்சிங்கானந்தை கைதுசெய்யவில்லை.

 

 

நர்சிங்கானந், சாமியார் போர்வையில் முஸ்லீம் வெறுப்பை பிரச்சாரம் செய்துவருவதை தொழிலாகக் கொண்டவன். பெண்களை இழிவாகப் பேசியது, முஸ்லீம் வெறுப்பு பேச்சு, மதக்கலவரங்களைத் தூண்டியது என இவன் மீது பல வழக்குகள் உள்ளது. வழக்குகள் பதிவு செய்தாலும் உ.பி. அரசாங்கம் இவன் மீது முறையான நடவடிக்கைகள் எதையும் எடுப்பதில்லை. ஒரு வழக்கில், இனி முஸ்லீம் வெறுப்பை பேசமாட்டேன் என்று உச்ச நீதிமன்றத்தில் உத்திரவாதம் கொடுத்ததன் பேரில்  நீதிமன்றம் இவனுக்கு சமீபத்தில் பிணை வழங்கியது.

முகமது நபி குறித்து நர்சிங் ஆனந்த் பேசிய காணொளியை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்த முகமது ஜுபைர் இவர் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுட்டிக் காட்டி இருந்தார். அதனோடு சேர்ந்து நர்சிங் ஆனந்த் பேசி இருந்த பழைய வீடியோக்களையும் பதிவிட்டு இருந்தார்.

அக்டோபர் 3 அன்று நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு முகமது ஜூபைர் தான் காரணம் என்றது நார்சிங்கானந்த் தரப்பு. ஜூபைர் சமூக வலைதளத்தில் பகிர்ந்த காணொளி முஸ்லீம் மக்களை நர்சிங்கானந்த்துக்கு எதிராக போராடத் தூண்டியதாக் கூறி நர்சிங் ஆனந்த் சரஸ்வதி பவுண்டேஷன் செயலாளர் உதித்த தியாகி கொடுத்த புகாரின் அடிப்படையில் ஜுபைர் மீது வழக்கு பதிவு செய்தது காசியாபாத் போலீஸ்.

BNS 196 (மதத்தின் அடிப்படையில் வெவ்வேறு குழுக்களிடையே பகைமையை வளர்த்தல்), BNS 228 (பொய் சாட்சியம் ஜோடித்தல்), BNS 299 (உள்நோக்கத்துடன் மற்றும் கீழான செயல்கள் மூலம் எந்தவொரு வகுப்பினரின் மதம் அல்லது மத நம்பிக்கைகளை அவமதிப்பதன் மூலம் அவர்களின் மத உணர்வுகளை சீண்டுவது), BNS 356(3) (அவதூறு செய்வது) and BNS 351 (2) (குற்றம் செய்யத் தூண்டுதல்) ஆகிய பிரிவுகளை உ.பி. போலீஸ் வழக்கில் சேர்த்துள்ளது.

நர்சிங்கானந்த் குறித்து ஏற்கனவே சமூக வலைதளங்களில் உள்ள வீடியோக்களைதான் ஜூபைர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இது நர்சிங்கானந்தால் வெளியிடப்பட்டவை தான்.  எனவே BNS 228 (பொய் சாட்சியம் ஜோடித்தல்) என்பது பொருந்தாது. நர்சிங்கானத்திற்கு எந்த மிரட்டலும் விடுக்கப்படவில்லை BNS 351 (2) ம் பொருந்தாது. சமூகவலைதளங்களில் பகிரப்பட்ட நர்சிங்கானந்தின் உண்மையான காணொளியை ஜூபைர் பகிர்ந்துள்ளதால் அது அவதூறு பரப்புவதாக கருத முடியாது. எனவே BNS 356(3)  ம் பொருந்தாது. மீதமுள்ள BNS 299 பிரிவு நர்சிங்கானந்துக்கு தான் நூறு சதவிகிதம் பொருந்தக்கூடியது. ஏனென்றால் அவன் தான் திட்டமிட்டே இஸ்லாமியர்களின் மத உணர்வுகளை காயப்படுத்த வேண்டுமென்று பேசியவன். ஆனால் அப்பிரிவை ஜூபைர் மீது போட்டுள்ளனர்.

காசியாபாத் போலீசார், ஜுபைர் மீதான முதல் தகவல் அறிக்கையில் சேர்த்துள்ள பிரிவுகள் உண்மைக்கு புறம்பானவை. இந்நடவடிக்கை ஜூபைரை கைது செய்ய வேண்டும் என்ற உள்நோக்கத்திலிருந்து செய்யப்பட்டதென்பது வெளிப்படை. விஷயம் இதோடு நின்று விடவில்லை. தன் மீது பதியப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்று அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார் ஜூபைர். ஏறத்தாழ இரண்டு மாதங்களுக்குப் பிறகு நவம்பர் இறுதியில் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது ஏற்கனவே உள்ள பிரிவுகளோடு கூடுதலாக இரண்டு பிரிவுகளை வழக்கில் சேர்த்துள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்தது போலீஸ் தரப்பு.  ஒன்று நாட்டின் இறையாண்மை மற்றும் ஒற்றுமைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துதல் (BNS 152) மற்றொன்று கணிப்பொறி மூலம் அவமதிப்பான தகவல்களை அனுப்புவது(IT Act  sec 66).

காவி பாசிஸ்டுகளின் வரையறுப்பின் படி இந்து மத வெறியர்களை அம்பலப்படுத்துவது என்பது இந்திய இறையாண்மைக்கு எதிரான செயல். முஸ்லிம் வெறுப்பு என்பது இந்தியாவின் ஒற்றுமைக்கு (இந்துக்களின் ஒற்றுமை) அடிப்படை. இதை கேள்விக்கு உட்படுத்தினால் அது இந்தியாவின் மீது போர் தொடுத்ததாக,தேச துரோக செயல், அர்த்தம். இது காவிபாசிம் அல்லாமல் வேறென்ன?

பழைய குற்றவியல் சட்டத்தின் படி(IPC), சட்டப்படி அமைக்கப்பட்டுள்ள ஆட்சிக்கு தூக்கியெறிய வேலைசெய்வதென்பது தேசதுரோக குற்றம். எனவே பிரிவு 124A – தேசதுரோக வழக்குப்போடப்படும். இது காலனிய காலத்துக் கொடுங்கோன்மை சட்டம். பல ஆண்டுகாலத் தொடர் போராட்டங்களுக்கு பிறகு இச்சட்டத்தினை பிரயோகிப்பதை நிறுத்தி வைக்க வேண்டும் என்று உச்சநீதி மன்றம் தீர்பளித்தது. உடனே வார்த்தையை மாற்றி முன்பிருந்ததை விட இன்னும் கடுமையான சட்டமாக புதிய குற்றவியல் சட்டத்தில்(BNS) சேர்த்தது ஆர் எஸ் எஸ்-பாஜக கும்பல்.

BNS 152ன் படி “இந்திய இறையாண்மை, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடுக்கு ஆபத்து விளைவிப்பது தேசதுரோக குற்றம்” என்று குறிப்பிட்டுள்ளனர்.  ஆனால் ஒரு இந்திய பிரஜை, இந்திய இறையாண்மை, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடுக்கு ஆபத்து ஏற்படுத்தாமல் பேசுவதற்கான வரையறை என்ன என்பது குறித்து BNSல் விளக்கம் இல்லை. இந்த பிரிவின் கீழ் யாரையும் எப்பொழுது வேண்டுமானாலும் கைது செய்யலாம் என்பதற்கான சட்ட அங்கீகாரம் முன்பை விட தற்போது அதிகமாகவே உள்ளது. பாசிச ஒடுக்குமுறைக்கான சட்ட அங்கீகாரமே இந்த புதிய குற்றவியல் சட்ட திருத்தம்.

தன் மீது போடப்பட்டுள்ள இந்த தேச துரோக குற்றச்சாட்டினால் கைதாவதைத் தடுக்க முன்ஜாமின் கேட்டு அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் ஜுபைர் விண்ணப்பித்திருந்தார். ஆனால் நீதிமன்றம் முன் ஜாமின் வழங்க மறுத்துவிட்டது. ஜுபைரின் வீட்டில் உத்தரபிரதேச காவல்துறை சோதனை நடத்தியுள்ளது. இனிமேல் கைது நடவடிக்கையும் தொடரும்.

இவ்வழக்குகளில் நீதிமன்றங்கள் சட்டப்படி நேர்மையாக நடந்து கொள்ளாது என்பது பத்து வருடக் காலத்திய அனுபவம். ஆளும் மோடி-அமித்ஷா கும்பல் என்ன நினைக்கிறதோ அதையே நீதிபதிகள் தீர்ப்பாக வழங்குவார்கள். வழக்கு நடத்தாமல் பலவருடம் இழுத்தடிக்கப்படும். அதையொட்டி பலவருட சிறை பிறகு பிணை. உமர்காலித், ஆனந்த் தெல்தும்டே என இவ்வாறு ஆண்டுக்கணக்கில் சிறையில் இருந்துவிட்டு அரசுத் தரப்பில் குற்றங்களை நிரூபிக்க எவ்வித ஆதாரமும் இல்லை என்பதால் பிணையில் வந்துள்ளவர்கள் போல ஏராளமான உதாரணங்களை நாம் கூற முடியும்

பாஜக – ஆர்எஸ்எஸ் கும்பல் பரப்பும் பொய்யான தகவலை அம்பலப்படுத்துதல், மக்களிடம் பரப்பப்படும் இந்து மதவெறிப் பிரச்சாரத்தை அம்பலப்படுத்துகின்ற ஒரே காரணத்திற்காக, ஒரு சாதாரண பத்திரிக்கையாளரை தன்னுடைய கொடூர சட்டங்கள் மற்றும் போலீஸைக் கொண்டு ஒடுக்க முயற்சிக்கிறது ஆதித்யநாத் அரசாங்கம். 

பத்திரிகையாளர்கள், மாணவர் அமைப்பு தலைவர்கள், பேராசிரியர்கள், சமூக செயல்பாட்டாளர்கள், மனித உரிமை செயல்பாட்டாளர்கள், அம்பேத்காரிஸ்ட்கள் கம்யூனிஸ்டுகள் என தன்னை அறிவு ரீதியாக அம்பலப்படுத்தும் பலரையும் கொடூர சட்டங்கள் மூலமாக அரசு இயந்திரத்தின் உதவியுடன் ஒடுக்குகின்ற வேலையை பல ஆண்டுகளாக செய்து வருகிறது இந்த காவி-கார்பரேட் பாசிச கும்பல்.

அதன் தொடர்ச்சியில் தற்போது அல்ட் நீயூஸ்-ன் முகமது ஜுபையர். இதை நாம் தொடர்ச்சியாக அனுமதிக்க போகிறோமா என்பது நம் முன் உள்ள பிரதானமான கேள்வி.

இது வெறும் உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத், ஜம்மு காஷ்மீரில் உள்ள முற்போக்காளர்களுக்கு நடக்கின்ற நிகழ்வுகளாக நாம் கருத முடியாது. இது சமூகம் குறித்த அக்கறை கொண்டுள்ள, சிந்திக்கின்ற அனைவருக்குமான பிரச்சனை. காவி-கார்பரேட் பாசிசத்தை வீழ்த்தாமல் நாம் இதிலிருந்து மீளமுடியாது.

  • அழகு

தகவல் உதவி

https://scroll.in/latest/1076208/press-bodies-demand-withdrawal-of-fir-against-alt-news-co-founder-mohammed-zubair

https://article-14.com/post/-i-m-used-to-it-but-endangering-sovereignty-is-too-much-fact-checker-mohd-zubair-faces-gravest-criminal-case-yet–674d39ead4fec

https://www.opindia.com/2024/12/allahabad-hc-bench-recuses-from-hearing-mohammed-zubairs-petition-seeking-protection-from-ghaziabad-police/

https://thewire.in/government/uttar-pradesh-police-mohammed-zubair-acts-endangering-indias-sovereignty/?mid_related_new

https://thewire.in/communalism/narsinghanand-row-fir-filed-against-alt-news-cofounder-mohammad-zubair-for-provoking-violence

https://www.livelaw.in/lawschool/articles/balancing-free-speech-national-security-critical-analysis-section-152-bhartiya-nyaya-sanhita-section-124-a-ipc-259465

https://www.thehindu.com/news/national/maharashtra/inflammatory-remarks-on-prophet-muhammad-thane-police-register-case-against-priest-yati-narsinghanand/article68724221.ece/amp/

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன