ஆங்கிலேயர்கள் இந்தியாவின் பொற்காலத்தை அழித்தார்களா?

ஈராயிரம் ஆண்டுகள் நம்மை அழுத்தி வைத்திருந்த சாதிய ஒடுக்குமுறையை, பிறப்பின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வு கற்பித்து, பெரும்பான்மையினருக்கு கல்வியை வழங்க மறுத்த சமூக அமைப்பை பொற்காலம் என்று நம்மை நம்பச் சொல்கிறது இந்தக் காவிக் கூட்டம். அந்த பொற்காலத்தை ஆங்கிலேயர்கள் அழித்துவிட்டார்கள் என பிரச்சாரம் செய்கிறது.

சென்னை அரசுப் பள்ளி மாணவியருக்கு நன்னெறி வகுப்பெடுப்பதாக கூறிக்கொண்டு அறிவியலுக்குப் புறம்பான பல கருத்துக்களைப் பிரச்சாரம் செய்த மாகவிஷ்ணு தற்போது கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டாலும், மகாவிஷ்ணுவுக்கு ஆதரவான கருத்துக்கள் இன்னமும் ஓயவில்லை. காவி கும்பல் தொடர்ந்து பல வாதங்களை முன்வைத்து வருகின்றன. அவற்றில் ஒன்றுதான், பண்டைய இந்தியாவில் அறிவியலும் தொழில்நுட்பமும் மிகப்பெரிய அளவில் வளர்ந்து இருந்தது என்றும் ஆங்கிலேயர்கள் இந்தியாவை அடிமைப்படுத்திய போது அதனை அழித்துவிட்டனர் என்றும் கூறுவது.

இன்னமும் சில முட்டாள்கள் தஞ்சை சரஸ்வதி மஹால் நூல் நிலையத்தில் இருந்த ஓலைச் சுவடிகளை திருடிச் சென்றுதான் ஐரோப்பியர்கள் அணுகுண்டு தயாரித்தனர் என்று கூறிவருகிறார்கள். அதனையும் ஒரு கூட்டம் நம்பிக் கொண்டு திறிகிறது.

 

 

மகாவிஷ்ணுவும் கூட தன்னுடைய பேச்சில், குருகுலக் கல்வி முறைதான் சிறந்தது என்றும் காற்றில் மிதக்க ஒரு மந்திரம், நெருப்பு மழை பொழிய ஒரு மந்திரம் இருந்தது, அவற்றையெல்லாம் ஆங்கிலேயர்கள் அழித்துவிட்டனர் என்று கூறியிருக்கிறான்.

ஈராயிரம் ஆண்டுகள் நம்மை அழுத்தி வைத்திருந்த சாதிய ஒடுக்குமுறையை, பிறப்பின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வு கற்பித்து, பெரும்பான்மையினருக்கு கல்வியை வழங்க மறுத்த சமூக அமைப்பை பொற்காலம் என்று நம்மை நம்பச் சொல்கிறது இந்தக் காவிக் கூட்டம். அந்த பொற்காலத்தை ஆங்கிலேயர்கள் அழித்துவிட்டார்கள் என பிரச்சாரம் செய்கிறது.

சமஸ்கிருதம் தேவ பாஷை தமிழ் நீச பாஷை என மொழியிலும் தீட்டுப்பார்த்து, இன்றைக்கும் கோவில்களில் தமிழ் ஒழிக்க தடைவிதிக்கும் பார்ப்பன பயங்கரவாதிகள், ஆங்கிலேயர்கள் அந்த பொற்காலத்தை அழித்துவிட்டதாக கதையளக்கிறது.

உண்மையில் இந்த பார்ப்பன பயங்கரவாதக் கூட்டம்தான் தமது மேலாதிக்கத்தை நிறுவிக்கொள்ள, சமஸ்கிருதத்தின் ‘மேன்மை’யை நிலைநாட்டிட மற்ற மதங்களின், மொழிகளின் இலக்கியங்களை அழித்தது. இதற்கான சாட்சியங்கள் நம் நாட்டின் வரலாறு நெடுகிலும் காணக்கிடக்கிறது.

அனல்வாதமும் புனல்வாதமும்

பல்லாயிரம் சமணர்களைக் கழுவில் ஏற்றிக் கொன்ற பார்ப்பன மதவெறிக் கூட்டம் அதற்கு முன்னர் அவர்களது இலக்கியங்களை அழிப்பதை முதல் வேலையாகச் செய்தது.  சமணர்களின் இலக்கியங்களை நெருப்பில் போட்டு பொசுக்கினார்கள், ஓடும் ஆற்றில் அள்ளி வீசினார்கள். இதனை அனல்வாதம் என்றும் புனல்வாதம் என்றும் நியாயப்படுத்தினார்கள்.

 

 

சமணர்களை அழித்தபின் இதையே மற்ற எல்லா தமிழ் மொழி இலக்கியங்களை அழிப்பதற்காகவும் பார்ப்பனர்கள் பயன்படுத்தினார்கள். ஆடிப்பெருக்கின் போது ஓடும் ஆற்றில் பழைய ஓலைச் சுவடிகளை விட்டுவிடுவது, போகி நெருப்பில் இலக்கியச் சுவடிகளை பொசுக்குவது என அனல்வாதமும், புனல்வாதமும் பார்ப்பனர்களின் சூழ்ச்சியால் பரிணமித்தது.

இந்த வழக்கத்தால் பல இலக்கியங்கள் அழிந்து போயின. ஓலைச் சுவடிகளைத் தேடித் தேடிச் சேகரித்து அச்சு நூலாக கொண்டு வந்த உ.வே.சா என்றழைக்கப்படும் உ.வே. சாமிநாதையர், ஓலைச் சுவடிகளை இயற்கை அழித்ததை விட மனிதர்களின் இந்த மூட நம்பிக்கை அழித்ததை கண்டு வருந்தியிருக்கிறார்.

அவர், திருநெல்வேலி மாவட்டம் கரிவலத்தில், நல்லூர் வரகுணபாண்டியனின் ஏட்டுச் சுவடிகள் கோவிலில் இருக்கிறது என்பதைக் கேள்விப்பட்டு மகிழ்ச்சியுள்ளார்.  பின், தேவஸ்தான தர்மகர்த்தாவைப் பார்த்துக் கேட்ட பொழுது அவரோ பழைய சுவடிகளை கண்ட கண்ட இடங்களில் போடக் கூடாது என ஆகம சாஸ்திரங்களில் கூறியபடி, அக்கினி வளர்த்து சுவடிகளை நெய்யில் தோய்த்து ஆகுதி செய்யப்பட்டுவிட்டது எனக் கூறியதைக் கேட்டு மிகவும் கவலை கொண்டிருக்கின்றார்.[1]

அதே போல திருநெல்வேலி தெற்குப் புதுத் தெருவில் வசித்த வக்கில் சுப்பையா பிள்ளை என்பவரிடம் சில ஏடுகள் உண்டென்று கேள்வியுற்று அங்குச் சென்றார். அவர்கள், “எங்கள் வீட்டில் ஊர்க்காட்டு வாத்தியார் புத்தகங்கள் வண்டிக்கணக்காக இருந்தன. எல்லாம் பழுதுபட்டு ஒடிந்து உபயோகமில்லாமற் போய்விட்டன.  இடத்தை அடைத்துக் கொண்டு பார்க்கப் பிரயோசனமில்லாமல் இருந்த அவற்றை என்ன செய்வதென்று யோசித்தேன்….  ஒரு ஆடி பதினெட்டாம் பெருக்கன்று சுவடிகளைத் தேர் போலக் கட்டி விடுவது சம்பிரதாயமென்று சில முதிய பெண்மணிகள் கூறினார்கள்.  நானும் அப்படியே எல்லா ஏடுகளையும் ஓர் ஆடி மாதம் பதினெட்டாம் தேதி வாய்க்காலில் விட்டுவிட்டேன்” என்று கூறியதைக் கேட்டு மிகவும் வருத்தப்பட்டிருக்கின்றார்.

 

 

இப்படி தனிநபர்கள் மட்டுமின்றி சமயம் வளர்க்கத் தோன்றிய மடங்களிலும் இவ்வாறு நடந்துள்ளதை உ.வே. சாமிநாதையர் குறிப்பிடுகின்றார்.  “தருமபுர ஆதீனத்தின் புத்தக சாலைக்குச் சென்ற பொழுது அங்கு ஆயிரக் கணக்கில் ஏடுகள் இருந்தன எனவும், அவற்றை முறையாகக் கட்டி அடுக்கி வைத்திருந்ததாகவும், மறுமுறை சென்று அச்சுவடிகளைப் பற்றிக் கேட்ட பொழுது, ‘சில தினங்களுக்கு முன் பதினெட்டாம் பெருக்கில் காவிரியில் கொண்டு போய் விட்டு விடுவதற்காகப் பல பழைய கணக்குச் சுருணைகளையும் சிதிலமான வேறு சுவடிகளையும் கட்டிச் சிறிய தேரில் வைத்துக் கொண்டு போனார்கள்” என்று காறுபாறு ஸ்ரீசுவாமிநாதத் தம்பிரான் கூறியதாகக் குறிப்பிடுகின்றார்.

பார்ப்பனர்களின் பிரச்சாரத்திற்கு சாதாரண மக்கள்தான் பலியாயினர் என்றில்லை. இன்றைக்கு தமிழ் இனவாதிகளும், காவி பாசிஸ்டுகளும் ஏற்றிப் புகழ்கின்ற, பார்ப்பனிய அடிமையான சோழ மன்னன் ராஜ ராஜனையே ஓலைச் சுவடிக்காக அலையவிட்டவர்கள் தில்லைப் பார்ப்பனர்கள்

சிவனைப் பற்றி திருநாவுக்கரசர், சுந்தரர், ஞானசம்பந்தர் என மூவரும் எழுதிய பாடல்களின் தொகுதியான தேவாரப் பதிகங்களை தமிழில் எழுதப்பட்டது என்ற ஒரே காரணத்திற்காக, யாருக்கும் கிடைக்கக் கூடாது என்ற துர்நோக்கத்தில் தில்லை தீட்சித பார்ப்பனர்கள், சிதம்பரம் நடராஜர் கோவிலின் அறை ஒன்றில் ஒளித்து வைத்துவிட்டனர். தேவாரப் பதிகங்கள் வேறு எங்கும் கிடைக்காமல், தில்லையில் மட்டுமே இருக்கின்றது என்பதை கேள்விப்பட்ட மன்னன் ராஜ ராஜ சோழன் அறையைத் திறந்து விடும்படி கேட்ட போது, தேவாரம் பாடிய மூன்று நாயன்மார்களும் ஒன்றாக வந்து கேட்டால்தான் அறைக்கதவைத் திறப்போம் என்று கூறி தில்லைப் பார்ப்பனர்கள் மறுத்துவிட்டனர்.

தேவாரம் எழுதிய மூன்று பேரும் இறந்து பலகாலம் ஆகிவிட்ட பிறகும் மூவரும் ஒன்றாக வந்தால்தான் கதவைத் திற்ப்போம் என தீட்சிதர்கள் கூறியது தமிழ் மீது அவர்களுக்கு இருந்த வெறுப்பினையும், தமிழ்ச் சுவடிகள் அழிந்து போக வேண்டும் என்று அவர்கள் செய்த சதியையும் காட்டின.

காந்தளூர்ச்சாலை கலமறுத்தருளி, ஈழம் முதல், சாளுக்கிய தேசம் வரை புலிக்கொடியை பறக்க விட்ட ராஜ ராஜ சோழன், தில்லை தீட்சிதர் கொட்டமடக்க யானைகளைக் கொண்டு கதவைப் பிளக்கவில்லை, மாறாக பார்ப்பனர் பாதம் பணிந்து, அவர் விருப்பப்படி மூன்று நாயன்மார்களின் உருவத்தில் தங்கத்தால் சிலைசெய்து அதனைத் தில்லைத் தீட்சிதர்களுக்கு காணிக்கையாக கொடுத்தான். அதன் பிறகே தீட்சிதப் பார்ப்பனர்கள் அறைக் கதவைத் திறந்தனர். இருந்த போதும் தேவாரப் பதிகங்களின் பெரும் பகுதி கரையான் தின்று மண்மேடாக அழிந்து போயிருந்தது.[2] பார்ப்பனர்களின் சதிக்குத் தப்பிப் பிழைத்த பாதி தேவாரப் பதிகங்களைத்தான் இன்றைக்குப் பாடிக் கொண்டிருக்கிறார்கள்.

பாதுகாக்கப்பட வேண்டிய ஓலைச் சுவடிகளை மதவெறி சாதிவெறிக் கூட்டம், அழிப்பது என்பது ஏதோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தது என நினைக்கக் கூடாது. ஏனென்றால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த பார்ப்பன மதவெறியர்களை விடவும் கொடூரமானவர்கள் இன்றைக்கு இருக்கும் பார்ப்பன பாசிஸ்டுகள். அழிவின் விழிம்பில் இருந்த ஆயிரக் கணக்கான ஓலைச் சுவடிகளையும் அறிய நூல்களையும் பாதுகாத்து வைத்திருந்த பூனேவில் உள்ள பண்டார்க்கர் கீழ்த்திசை ஆய்வு நிலையத்தினை, சங்கப் பரிவார வானர கூட்டம் 2004ம் ஆண்டு ஜனவரி மாதம் தாக்கி அழித்தது.[3] இந்த பாசிசக் கும்பல்தான் இன்றைக்கு ஆங்கிலேயர்கள் இந்தியாவின் அறிவை அழித்தார்கள் என கதையளக்கிறது. ஆனால் மாறாக இந்தியாவின் இலக்கிய வளங்களை பாதுகாக்க பல ஐரோப்பியர்கள் உதவியுள்ளனர்.

ஐரோப்பியர் பாதுகாத்த சுவடிகள்:

பார்ப்பனர்களால் திட்டமிட்டு அழிக்கப்பட்ட தமிழ் இலக்கிய நூல்களை பாதுகாத்து அச்சுக்கு கொண்டுவருவதில் இந்தியர்கள் மட்டுமல்ல கிழக்கிந்தியக் கம்பெனியின் பல அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளனர்.  ஐரோப்பியர்கள் இந்தியாவின் இலக்கியங்களையும், அறிவையும் திருடி தங்கள் நாட்டிற்குக் கொண்டு சென்றனர் என்பது ஆதாரமற்ற பொய் என்பதை சென்னை அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகத்தில் உள்ள ஐரோப்பியர்கள் சேகரித்த சுவடிகள் அம்பலப்படுத்துகின்றன. 

 

காலின் மெக்கன்சி

கிழக்கிந்தியக் கம்பெனியின் நில ஆய்வாளராக தென் இந்தியாவிற்கு வந்த காலின் மெக்கன்சி ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்தவர். இவர் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து 1534 சுவடிகளைச் சேகரித்து வைத்துள்ளார், அவை கீழ்த்திசைச் சுவடிகள் நூலகத்தில் உள்ளது. காலின் மெக்கன்சியின் பணிகளை ஆய்வு செய்து இரண்டு நூல்களை வெளியுட்டுள்ள டாக்டர்.ம.ராஜேந்திரன் தனது நூலில் “18,19ம் நூற்றாண்டுகளில் ஈழத்தில் ஆறுமுக நாவலர், சி.வை.தாமோதரம் ஆகியோரும் தமிழகத்திலே உ.வே.சா, வ.உ.சி ஆகியோரும் தொகுப்பிலும் பதிப்பிலும் ஈடுபட்டவர்களில் முன்னோடிகளாவார்கள். ஆனால் இவர்களுக்கு முன்பும் பக்தி இலக்கியக் காலத்திற்குப் பின்பும் ஆங்கிலக் காலனி ஆதிக்கத்தில் ஆட்பட்டுக் கிடந்த இந்தியாவில் தொகுப்புப் பணியைத் தொடக்கிவைத்த முதல் ஐரோப்பியர் கர்னல் காலின் மெக்கன்சியாவார்.” என்று கூறுகிறார் [4]

டாக்டர் லெய்டன் மற்றும் சி.பி.பிரௌன்

1803 முதல் 1813 வரை கிழக்கிந்தியக் கம்பெனியின் மருத்துவராக இந்தியாவில் பணியாற்றிய மொழியியல் வல்லுநரான டாக்டர் லெய்டன் பல்வேறு சுவடிகளைச் சேகரித்து வைத்திருந்தார். அவை அவரது இறப்புக்குப் பிறகு லண்டனில் உள்ள “இந்திய அலுவலக நூலகத்திற்கு” கிழக்கிந்தியக் கம்பெனியரால் அனுப்பப்பட்டன ஆனால் அவை ஆங்கிலேயரின் காலத்திலேயே (1855) மீண்டும் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டன. இதனைச் செய்தவர் ஆங்கிலேய குடிமைப்பணி (ICS இன்றைய IAS) அதிகாரியான சி.பி.பிரௌன்.

சி.பி.பிரௌன், தெலுங்கு மொழியின் இலக்கிய மீட்சிக்கு வித்திட்டவர். இவர் தெலுங்கு மொழியில் பல நூல்களை எழுதியுள்ளதுடன், ஓலைச் சுவடிகளில் இருந்த இலக்கியங்களைப் பதிப்பித்துள்ளார். இவர் சேகரிப்பில் இருந்த சுவடிகளும் டாக்டர் லெய்டனின் சுவடிகளும் தற்போது அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகத்தில் உள்ளன. இவை பண்டைய தென் இந்தியாவின் இலக்கியம், வரலாறு, தத்துவம், அறிவியல் மற்றும் ஊர் வரலாறுகள் குறித்த பார்வையை வழங்குவதாக சுவடிகள் ஆய்வு மையம் தெரிவிக்கிறது.[5]

எல்லீஸ்

ஆங்கிலேய கலெக்டரான எல்லீஸ் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர். எல்லீஸ் சேகரித்த வீரமாமுனிவரின் சதுரகராதி, தேம்பாவணி, கொடுந்தமிழ், பரமார்த்த குருகதை, போதமறுத்தல் போன்ற சுவடிகள் சென்னைக் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகத்தில் உள்ளன.

ஆங்கிலேயக் காலனியாதிக்கவாதிகள் இந்தியாவின் வளங்களைக் கொள்ளையடிக்க வந்தவர்கள்தான், ஏறக் குறைய மூன்று நூற்றாண்டுகள் நம்மை அடிமைப்படுத்தி ஆண்டவர்கள்தான், ஆனால் ஆங்கிலேயர்களின் சுரண்டலுக்குப் பின்னால் ஒழிந்து கொண்டு, ஈராயிரம் ஆண்டுகளாக நம்மை அடிமைப்படுத்தி வைத்திருந்த, பார்ப்பனிய ஒடுக்குமுறையைப் பொற்காலம் என்று காவிக் கும்பல் பிரச்சாரம் செய்கிறது. அந்தப் பிரச்சாரத்தின் ஒரு துளிதான் இந்த மகாவிஷ்ணு.

இவற்றையெல்லாம் எத்தனை முறை ஆதாரங்களுடன் எடுத்துக் கூறினாலும் காவிக் கும்பல் அதனை ஏற்கப்போவது இல்லை. அவர்கள் திரும்பத் திரும்ப தங்களது பொய் பிரச்சாரங்களைத் தொடரத்தான் செய்வார்கள். நாமும் சளைக்காமல் அதனை முறியடிக்க இந்த உண்மையை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க வேண்டியிருக்கிறது.

  • அறிவு

 

குறிப்புகள்

[1] என்சரித்திரம் – உவே சா எழுதியது பக்கம்  666

[2] திருமுறை கண்ட புராணம்

[3] https://frontline.thehindu.com/other/article30220896.ece

[4] காலின் மெக்கன்சி வரலாறும் சுவடிகளும் – ம. இராசேந்திரன் – கவிதா வெளியீடு

Mackenzie Collection: A Descriptive Catalogue of the Oriental Manuscripts and Other Articles – தொகுப்பு 1

Mackenzie Collection: A Descriptive Catalogue of the Oriental Manuscripts and Other Articles – தொகுப்பு 2

[5] https://cms.tn.gov.in/sites/default/files/press_release/pr130115_17.pdf

 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன