இன்று ஆகஸ்ட் 15, செங்கோட்டையில் கொடியேற்றி “சுதந்திரத்தின்” அருமை பெருமைகளைப் பேசி முடித்து 2047க்குள் முழுமையான வளர்ச்சியடைந்த நாடாக மாறுவதற்கான தொலைநோக்குப் பார்வையுடன், ஒரு பொற்காலத்தில் நம் நாடு நுழைகிறது எனக் கூறியிருக்கிறார் நரேந்திர மோடி.
1947, ஆகஸ்ட் 15ல் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் நமது நாட்டை விட்டு வெளியேறி இன்றுடன் 78 ஆண்டுகள் ஆகிவிட்டன. 1947க்கு முன்பு இந்தியா பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் நேரடிக் காலனியாக இருந்த நிலை மாறி இன்று அமெரிக்கா ஏகாதிபத்தியத்தின் தலைமையிலான பல ஏகாதிபத்தியங்களின் வேட்டைக்காடாக, மறுகாலனியாக மாற்றப்பட்டு கொண்டிருக்கிறது.
பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் தனது ஆட்சியதிகாரத்தை இந்தியர்களின் கையில் மாற்றி கொடுத்ததிலிருந்து இந்தியா சுதந்திரமும், இறையாண்மையுமுள்ள ஒரு அரசாக மாறிவிட்டது என ஆளும் வர்க்கங்கள் மக்களை நம்ப வைத்து வருகிறார்கள். போலி கம்யூனிஸ்டுகளோ இந்தியாவிற்கு அரசியல் சுதந்திரம் கிடைத்துவிட்டது; பொருளாதார சுதந்திரம் மட்டும் கிடைக்கவில்லை எனக் கூறி வருகின்றனர்.
காலனி ஆதிக்கத்தையும் அதன் இந்திய அடிவருடிகளையும் தூக்கி எறிவதோடு, காலனியாதிக்கத்தின் பழைய ஒழுங்கமைவு புதிய அரசியல், பொருளாதார, சமூக மற்றும் இரானுவ ஒழுங்கமைவால் அகற்றப்பட வேண்டும் என்பதே உண்மையான காலனியாதிக்க ஒழிப்பு என்பதன் பொருளாகும். இதன்படி இந்தியாவிற்கு அரசியல் சுதந்திரமும், பொருளாதார சுதந்திரமும் கிடைக்கவில்லை. 1947ல் நடந்தது ஒரு அதிகார மாற்றமே.. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் தன் கையில் இருந்த அதிகாரத்தை தனது விசுவாசிகளான இந்திய தரகு அதிகார வர்க்கத்திடம் ஒப்படைத்தது என்பது தான் நக்சல்பாரிகளின் நிலைப்பாடு.
இந்தியாவை தற்போது ஆண்டு வரும் மோடி கும்பல். ஏகாதிபத்தியங்களை சார்ந்திருந்து, அவைகள் இடும் கட்டளைக்கு அடிபணிந்து, இந்தியாவின் இறையாண்மையை ஏகாதிபத்தியங்களின் காலடியில் சமர்ப்பித்து நாட்டை தீவிரமாக மறுகாலனியாக்கி வருகின்றனர். இதன் மூலம் நாட்டினை ஆளும் உரிமையை பெற்ற தரகு அதிகார வர்க்கம் நக்சல்பாரிகள் கூறுவது சரிதான் என இன்று வரை தினந்தோறும் நிருபித்து வருகிறார்கள். இதற்கு மோடியும் விதிவிலக்கல்ல. மோடி அரசு சமீபத்தில் தாக்கல் செய்து இருக்கும் பட்ஜெட்டை பார்த்தாலே நாம் இதனை எளிதாக புரிந்து கொள்ளமுடியும்.
அந்நிய ஏகாதிபத்தியம் 78 ஆண்டுகளுக்கு முன்னரே நம் நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாக கூறப்பட்டாலும், அந்நிய ஏகபோக சக்திகள், ஒப்பந்தங்கள் மூலமாகவும், கடனுதவி என்ற பெயரிலும் நம்மை இன்றும் ஆண்டுகொண்டிருக்கிறார்கள். இந்த அந்நிய ஏகபோக சக்திகள் நினைத்தபடி தான் இங்கு சட்டங்கள் போடப்படுகின்றன; திட்டங்கள் தீட்டப்படுகின்றன.
அந்நிய ஏகாதிபத்தியங்கள் நம் நாட்டு ஆளும் வர்க்கத்தை கட்டுப்படுத்த உதவும் முக்கியமான சுருக்குகயிறு இந்த கடன். இது ஏகாதிபத்தியங்களின் நுகத்தடியில் நம்நாட்டை இறுகக் கட்டும் கயிறு.
ஒருபுறம் கடனை நம் நாட்டின் மீது வலுக்கட்டாயமாக திணிப்பதுடன், மறுபுறம் தொழிலாளர் நலச்சட்டங்களை திருத்து; வேளாண் புதிய சட்டங்களை புகுத்து; இயற்கை வளங்களை கொள்ளையடிக்க அனுமதி வழங்கு என தங்களது கட்டளைகளுக்கு கோலெடுத்தால் ஆடும் குரங்காக ஆட்சியாளர்களை அந்நிய ஏகாதிபத்தியங்கள் ஆட்டுவிக்கின்றனர்.
மோடி பதவியேற்ற பின்பு, கடந்த பத்து ஆண்டுகளில், இந்தியாவின் அந்நியக் கடனின் அளவு பல மடங்கு அதிகரித்துள்ளது. அந்நிய கடன் உயரும் அளவிற்கு அந்நிய ஏகாதிபத்தியங்களின் பிடியும் இந்தியா மீது பன்மடங்கு அதிகரித்துள்ளது.
( புகைப்படம் : இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் ஏற்றம்)
மார்ச் 31, 2024 அன்றுவரை, இந்தியாவின் உள்நாட்டுக்கடன் ரூ.1,63,35,070.06 கோடியாகவும், அந்நியக் கடன் ரூ.53,70,484.10 கோடியாகவும் உள்ளது. இக்கடனுக்கான வட்டியை கட்டுவதற்கே பல இலட்சம் கோடி செலவு செய்கிறது இந்திய அரசு.
ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த 2024-25 பட்ஜெட்டில் இந்திய கடனுக்கான வட்டியை அடைப்பதற்கு மட்டுமே 11,62,940 கோடியை ஒதுக்கியுள்ளார். இத்தொகை மொத்த பட்ஜெட்டின் தொகையான 48 இலட்சம் கோடியில் 24% ஆகும். கடனுக்கான இந்த வட்டித் தொகை கடந்த ஆண்டை ஒப்பிடும் போது ஒரு லட்சத்து ஏழாயிரம் கோடி அதிகமாகும். இந்திய கடன் சுமை இப்படி இருக்கும் போது உள்கட்டமைப்பு வளர்ச்சி எனும் பெயரில் அந்நிய நிறுவனங்களிடம் மேலும் கடன் பெற்று முதலாளிகளுக்கு வாரி வழங்குகிறது மோடி அரசு.
இந்தியாவின் உள்கட்டமைப்பின் வளர்ச்சித் திட்டங்களுக்காக ஜப்பான் வங்கிகள் ஒன்றிய அரசுக்கு ரூ 71,463 கோடியும், மாநில அரசுகளுக்கு ரூ44,547 கோடியும் கடனாக கொடுத்திருக்கின்றன. இதுமட்டுமில்லாமல் உலக வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ஆசிய மேம்பாட்டு வங்கி, ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி, ஐரோப்பிய முதலீட்டு வங்கி,சர்வதேச மறுகட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு வங்கி, ரஷ்யா,ஜெர்மன், பிரான்ஸ் ஏகாதிபத்தியங்களை சார்ந்த பிற நிதி நிறுவனங்களிடம் கடன் வாங்கியே இந்தியாவில் நடக்கும் உள்கட்டமைப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு பட்ஜெட்டிற்க்கும் முன்பே இந்த அந்நிய நிறுவனங்களிடம் நாட்டை அடகு வைப்பது தொடங்கி விடுகிறது.
ஒன்றிய அரசு வெளியிட்ட பட்ஜெட் அறிக்கையில், நாட்டில் நடைபெறும் ஒவ்வொரு வளர்ச்சி திட்டத்திற்கும் ஒன்றிய அரசு, மாநில அரசுகள் மேற்கூறிய அந்நிய நிறுவங்களிடமிருந்து எவ்வளவு கடன் பெற்றிருக்கிறது என்ற விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஒன்றிய அரசு தமது 49 திட்டங்களுக்காக ரூ.72,781 கோடியையும், மாநில அரசுகள் 109 திட்டங்களுக்காக ரூ.46,499 கோடி ரூபாயையும் கடனாக வாங்கியுள்ளன. மொத்தத்தில் 1,19,280 கோடி கடனாக பெற்றிருக்கிறது மோடி அரசு.
Centre Govt Infrastructure Plan | |
Name of Foreign Funding Agency | Rupees in Crores |
JAPAN | 71463.4 |
RUSSIA | 4200 |
IBRD | 382.98 |
AIIB | 223.32 |
ADB | 92.26 |
EIB | 70 |
NDB | 50 |
FRANCE | 46.1 |
GERMANY | 33.04 |
States govt Infrastructure Plan | |
Name of Foreign Funding Agency | Rupees in Crores |
GOJP/JAPAN | 44547.7 |
ADB | 804.461 |
IBRD | 526.152 |
AIIB | 328.267 |
JAPAN | 205.463 |
GODE/GERMANY | 77.05 |
கடந்த டிசம்பர் 2023ஆம் மாதத்தில் ஐ.எம்.எப் நிறுவனம், இந்தியாவின் கடன், 2027 ஆம் ஆண்டில் நாட்டின் உள்நாட்டு உற்பத்தியில் 100% க்கும் மேல் இருக்கும் என எச்சரித்து ஒரு அறிக்கையை வெளியிட்டது. இந்நிலைமை சரிசெய்வதற்காக உலகவங்கி, ஐ.எம்.எப் போன்ற நிறுவனங்கள் கட்டளைப் படியே நாட்டின் பட்ஜெட் போடப்படுகின்றன. இந்த உண்மையை உழைக்கும் மக்கள் புரிந்து கொண்டு விடக்கூடாது என்பதற்காகவே உள்கட்டமைப்பு வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி, நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதே முதன்மையான பணி என்றும் அதற்காகவே சென்ற ஆண்டை விட 11 சதவீதம் அதிகமாக நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது என்றும் இத்தொகை நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.4 சதவிதம் என்று பீற்றிக் கொள்கின்றனர். அதற்கேற்ப முதலாளித்துவ பத்திரிக்கைகளும் அந்நிய ஏகாதிபத்தியங்களிடம் கையேந்தி, நாட்டை மறுகாலனியாக்க சுருக்கு கயிறில் சிக்க வைக்கும் திட்டங்களை பற்றி வாய் திறவாமல், மக்களை பிரமையில் ஆழ்த்துகின்றன.
ஜப்பான் ஏகாதிபத்தியத்திடம் கடன் வாங்கி இந்தியாவில் நிறைவேற்றப்படும் மெட்ரோ ரயில் திட்டங்கள், ஜப்பான் மூலம் மதிப்பீடு செய்யப்பட்டு, அதன் நேரடி மேற்பார்வையில் தான் நடைபெறுகின்றன என்பதை ஏற்கனவே செங்கனலில் வெளியிட்டிருந்தோம்.
இந்திய உழைக்கும் மக்கள் பயன்படுத்தும் இரயில்வே துறையை ஒழித்துக்கட்ட நாடு முழுவதும் பல மாநிலங்களில் மெட்ரோ இரயில் திட்டங்கள் செயலபடுத்தப்படுகின்றன. பெங்களூரு தொடங்கி போபால், ஆக்ரா, புனே, சென்னை, சூரத், அகமதாபாத், நாக்பூர் என இந்தியாவில் நடைபெறும் அனைத்து மெட்ரோ இரயில் திட்டங்களிலும் கடன் கொடுத்த அந்நிய நிறுவனங்களே இத்திட்டங்களை கட்டுப்படுத்துகின்றன.
மாநிலங்களின் திறன் மேம்பாடு; குடிநீர் வசதி, சாலை விரிவாக்கம்; விவசாய விரிவாக்கம்; புதிய அணை கட்டுதல் போன்றவற்றிற்கு அந்நிய நிறுவனங்கள் கடன் தருகின்றன; மேற்கு வங்கத்தில் நடைபெறும் துர்கா நீர் சேமிப்பு திட்டத்தால் ஆயிரக்கணக்கான பழங்குடி மக்கள் தமது பூர்விக நிலங்களை இழந்து தங்களது வாழ்வாதாரத்தை இழப்பதால் இத்திட்டத்தை எதிர்த்து தொடர்ந்து போராடி வருகின்றனர். ஆனால் கார்ப்பரேட் நிறுவனங்களின் தேவைக்கு மிகக் குறைந்த விலைக்கு மின்சாரம் கொடுப்பதற்காக, காடுகளை அழிப்பதுடன், பழங்குடியினரின் வாழ்வாதாரத்தையும் அழிக்கிறார்கள்.
தமிழ்நாட்டின் சேலம் மாவட்ட சுற்றுப்புறத்தில் உள்ள மலைகளில் இருந்து கனிமவளங்களை வெட்டியெடுத்து ஏற்றுமதி செய்வதற்காக சேலத்தை சென்னை துறைமுகத்துடன் இணைக்கும் 8 வழிச் சாலை திட்டம், வெளிநாட்டு நிதிமூலதனத்தின் கடனுதவியோடு நடத்தப்படுகிறது. தமிழ்நாட்டை திமுக ஆண்டால் என்ன அதிமுக ஆண்டால் என்ன என்று, மக்களின் எதிர்ப்பை மீறி சாலை போடப்படுவதற்கு அந்நியரிடம் கைநீட்டி வாங்கிய கடன்தான் காரணம்.
இதே போல வடகிழக்கு மாநிலமான மிசோரத்தில், சுற்றுச் சூழலை, காடுகளை அழித்து, விவசாய நிலத்தைப் பிடுங்கி, கனிம வளங்களை கண்டெய்னர் லாரிகளில் கொண்டு செல்ல ஏதுவாக சாலைகளை விரிவாக்குவதற்கு எதிராக தொடர்ந்து மக்கள் போராடினாலும், அந்நிய கடன் உதவியுடன் நடைபெறும் திட்டத்தினை ஆட்சியாளர்கள் நிறுத்த தயாராக இல்லை.
இது போன்று நூற்றுக் கணக்கான திட்டங்கள், பல்வேறு ஏகாதிபத்தியங்களின் கடனுதவியுடன் மக்களின் எதிர்ப்பை மீறி நடைமுறைப்படுத்தப்படுகின்றன. இவ்வாறு அனைத்து ஓட்டுக்கட்சிகளின் ஆதரவோடு, ஏகாதிபத்திய, தரகு பெரு முதலாளித்துவ நலனுக்காக கோடானு கோடி மக்களை வறுமைப் படுகுழியில் தள்ளிவிட்டு நாட்டை மறுகாலனியாக்கி வருகிறது மோடி கும்பல்.
இது தான் நம்மை ஆளும் தரகு அதிகார வர்க்கத்தின் யோக்கிதை. அந்நிய ஏகாதிபத்தியங்களின் காலில் குப்புறவிழுந்து கும்பிடு போட்டுக்கொண்டு சுதந்திரம், இறையாண்மை, என நம்மை ஏய்க்க ஆண்டுக்கு ஒரு முறை சுதந்திர தினம் என்ற பெயரில் கொடியேற்றி கதையளக்கிறது இந்த ஆளும் வர்க்கம்.
- தாமிரபரணி
சுதந்திரம் என்பது சென்ட் மாதிரி கொஞ்ச நேரம் வாசனை இருக்கும், பிறகு நாறும்.