1954-இல் வக்பு வாரியம் உருவாக்கப்பட்டு, இன்றுவரை இயங்கி வருகிறது. இதுவரை எந்த அரசாங்கமும் கொண்டு வராத வக்பு வாரிய திருத்த மசோதாவை, ஒன்றிய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண்ரிஜ்ஜீ திணிப்பதின் நோக்கத்தை எளிதில் புரிந்து கொள்ளலாம்.
இம்மசோதா, “மத சுதந்திரத்தில் தலையீடோ, குறுக்கீடோ செய்யாது; வக்பு வாரிய நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் கொண்டு வரப்பட்டதாக” திருவாய் மலர்ந்துள்ளர் ஒன்றிய அமைச்சர்.
இவை உண்மையாக [பாசிச, ஆர்.எஸ்.எஸ், பிஜேபி கும்பல், என்றைக்கும் பொய்யை தவிர, உண்மையை பேசியதில்லை என்பது ஒரு புறம்] இருப்பின், அதன் நோக்கத்தை முழுமையாக பரிசீலிக்காமலே, வக்பு வாரியம், மாஃபியா கும்பலின் பிடியில் இருப்பதாக அவதூறை அள்ளி வீசுவதிலிருந்தே, காவி – கார்ப்பரேட் பாசிஸ்டுகளின் வன்மத்தின் நோக்கத்தை புரிந்துக் கொள்ள முடியும். இதற்கு ஆராய்ச்சி எதுவும் தேவையில்லை.
மேலும், இம்மசோதாவின் படி, வக்பு வாரியத்தில் இஸ்லாமிய பெண்கள் – இஸ்லாமியர் அல்லாதவர்கள் இடம்பெற வேண்டும். வாரிய நிலங்கள் கட்டாயமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும். அவை வக்பு வாரிய நிலமா? என்பதை மாவட்ட நிர்வாகமும், நீதிமன்றமும் முடிவு செய்யும். இவை எப்படி முடிவு செய்யும் என்பதை அயோத்தி விவகாரத்தில் இருந்தே அறிய முடியும். இருப்பினும், எதிர்க்கட்சிகள், இவை அனைத்தும் இந்து மத நிறுவனங்களான தேவஸ்தானங்களுக்கும், அறக்கட்டளைகளுக்கும் கொண்டுவர தயாரா? என்ற கேள்விக்கு நாணயமாக பதில் சொல்ல வேண்டும். அயோத்தி கோயில் வாரியம் அமைக்க வேண்டும் என்கிற நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் இந்த அயோக்கிய பேர் வழிகளிடம் நாணயத்தை எதிர்பார்ப்பது முட்டாள்தனம்.
“வேலியே பயிரை மேய்ந்த கதையாக”, அரசுத் துறை, பொதுத்துறை நிறுவனங்களை, அதன் கோடிக்கணக்கான சொத்துக்களை கார்ப்பரேட்டுகளுக்கு அடிமாட்டு விலைக்கு தாரை வார்ப்பதற்கு என்றே ஒரு துறையை உருவாக்கியது பாசிச மோடி அரசு. அதே போல, சிறுபான்மையினர் நலத்துறையைப் பயன்படுத்தி, பாதுகாப்புத் துறை, ரயில்வே துறைக்கு இணையாக நிலங்களைக் கொண்டுள்ள, வக்பு வாரியத்தின் லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள், கோடிக்கணக்கில் மதிப்புள்ள சொத்துக்கள், எஸ்டேட்டுகளை கார்ப்பரேட்டுகளுக்கும், ரியல் எஸ்டேட் பேர்வழிகளுக்கும் தாரை வார்ப்பதற்கான நகர்வே இம்மசோதா.
மேலும், அயோத்தி கோயிலைப் போல, வக்பு வாரியத்திற்கு சொந்தமான பல ஏக்கர் நிலங்கள் , இதற்கு முன்னர் பார்ப்பன – சத்திரிய மன்னர்களுக்கு சொந்தம் என்று கூறி பறிமுதல் செய்வதற்கான நகர்வாகவும் இம்மசோதா அமையும்.
இந்த நோக்கத்திற்கேற்பவே, வக்பு வாரிய நிலங்கள் அனைத்தும் கட்டாயமாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும். இவை அனைத்தும் வக்பு வாரியத்திற்கு சொந்தமா? என்பதை மாவட்ட நிர்வாகமும், நீதிமன்றமும் முடிவு செய்யும் என்கிற சரத்துகளைத் திணித்துள்ளது. இவை இஸ்லாமிய பிரிவினருக்கும் மட்டுமல்ல; இதர சிறுபான்மை பிரிவினரான கிருத்துவம், சமணம், புத்தம், சீக்கியம் போன்ற இன்னும் பல பிரிவினருக்கும் விரிவடையும் என்பதை விரைவில் எதிர்நோக்குவோம்.
மக்களின் அறியாமையால் விளைந்த, கடவுள் நம்பிக்கையை, நிறுவனப்படுத்தும் வேலையை, வர்க்க ஒடுக்குமுறையை மக்கள் மனமுவந்து ஏற்கும் மனநிலையை – அனைத்து மத நிறுவனங்களும் கட்டியமைக்கிறது என்கிற வகையிலும், ஆசான் “மார்க்ஸ்” கூற்றுப்படி மதம் ஒரு அபின் என்கிற வகையிலும் மத நிறுவன செயல்பாடுகளை நிராகரிக்கிறோம்.
அதே வேளையில், “மார்க்சியம்” என்பது பொதுவான தத்துவம் அல்ல, ஒடுக்கப்படும் அனைத்து பிரிவினருக்குமான தத்துவம் என்கிற வகையில், ஒடுக்கப்படும் சிறுபான்மை பிரிவினரான இஸ்லாமிய மதப் பிரிவினர் நலன்களை, காவி – கார்ப்பரேட் பாசிசக் கும்பலின் சுரண்டலுக்காக ஒடுக்கப்படுவதை, ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அந்த வகையில், இம்மசோதா முற்றிலும் நிராகரிக்கப்பட வேண்டியதே.
- மோகன்
RSS நபர்கள் சமூக வலைதளங்களில் பொய் பிரச்சாரத்தை செய்து வருகிறார்கள். மதவெறியோடு பிரச்சாரம் நடக்கிறது. விரைவில் கலவரமாக மாறலாம்.