இந்திய முதலாளிகளின் கூட்டமைப்பான CII பட்ஜெட் குறித்து ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் பேசிய பிரதமர் மோடி “தனது மூன்றாவது ஆட்சி காலத்தில் இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக வளர்ச்சி அடையும். அந்த வளர்ச்சியை நோக்கிய பட்ஜெட் தான் இது” என்று முதலாளிகளின் மத்தியில் பேசி இருக்கிறார்.
இந்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டின் மொத்த மதிப்பு 48 லட்சம் கோடி ரூபாய். இது காங்கிரஸ் காலத்தில் போடப்பட்ட பட்ஜெட்டின் மதிப்பை விட மிக அதிகம் என பெருமை பேசிய மோடி, உலக முதலாளிகள், நிதி நிறுவனங்கள், பன்னாட்டு தொழில் நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கு தற்போது அற்புதமான வாய்ப்பு இருப்பதாகப் பேசியிருக்கிறார்.
முதலாளிகளை பொருத்தவரை மோடி பேசி இருப்பது சரியானதே. நாங்கள் கேட்டவற்றில் இன்னும் கொஞ்சம் கூடுதலாக அறிவித்திருக்கலாம் என்பதே அவர்களின் விமர்சனம். முதலாளிகளுக்காக அவர்களின் கடன்களை தள்ளுபடி செய்தும் கார்பரேட் வரியை குறைத்தும் சலுகைகளை அறிவித்துள்ளனர். ஆனால் மக்கள் நல திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு என்று வரும்போது, அதற்கான நிதியை குறைப்பது தான் வாடிக்கையாக உள்ளது. இந்த நியாண்டிலும் அதே கதைதான்.
2024-25 ஆண்டுக்கான பட்ஜெட்டில் உணவு, உரம் மற்றும் எரிபொருளுக்கான மானியம் கடந்த நிதியாண்டு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதியோடு ஒப்பிடும்போது 7.8 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. 2023-24 நிதியாண்டில் உணவு, உரம் மற்றும் எரிபொருளுக்கான மானியம் 4,13,466 கோடியாக ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் இந்த நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் 3,81,175 கோடியாக குறைத்திருக்கிறது மோடி அரசு. இதில் உணவுக்காக ஒதுக்கப்பட்ட மானியம் கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட மானியத்தை விட 3.3% குறைவானதாகும். கடந்த நிதியாண்டில் உணவு 2,12,332 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் 2,00,005 கோடி ரூபாயாக குறைக்கப்பட்டிருக்கிறது.
உணவு மானியத்தை பொருத்தவரை, 2021-22 ஆம் ஆண்டில் 2.89 லட்சம் கோடியாக இருந்தது. அது, 2022-23 ஆம் நிதியாண்டில் 2.73 லட்சம் கோடியாகவும் 2023-24 ஆம் ஆண்டில் 2.12 லட்சம் கோடியாக குறைக்கப்பட்டது. தற்போதைய நிதியாண்டில் (2024-25) உணவு மானியம் 2.05 லட்சம் கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் உணவு மானியத்தில் மட்டும் 84,000 கோடி ரூபாயை (29.7%) மோடி அரசு குறைத்துள்ளது. இதன் விளைவாக நாட்டின் பெரும்பான்மையான மக்கள் பட்டினியுடனும் ஊட்டசத்துக் குறைபாட்டுடனும் வாழவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
உணவு மானியம் குறைப்புக்கு காரணத்தைக் கேட்டால், “பழைய கொள்முதலுக்காக மாநிலங்களுக்கு செலுத்தப்பட வேண்டிய நிலுவைத் தொகைகளை கடந்த ஆண்டு செலுத்த வேண்டியிருந்தது. இல்லையெனில், கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் ஒரேஅளவிலான ஒதுக்கீடு தான் இருந்திருக்கும். அதனடிப்படையில் தற்போதைய பட்ஜெட்டில் உணவு மானிய குறைப்பே இல்லை” என்று பொறுப்பற்ற விளக்கத்தினை தந்திருக்கிறார் நிதித்துறை செயலாளர் சோமநாதன். அவரின் பதிலை ஒருவேளை நாம் ஏற்றுக்கொண்டால் கூட, கடந்த நாங்கு ஆண்டுகளாக உணவு மானியம் தொடர்ந்து குறைக்கப்பட்டு வருவதின் காரணம் என்ன? ஒருவேளை சொக்கநாதர் இக்கேள்விக்கு பதில் சொல்லலாம்.
சமீபத்தில் வெளியிடப்பட்ட வீட்டு உபயோக செலவு கணக்கெடுப்பின் படி (National Household Expenditure Survay-NHES) இந்தியாவில் மூன்று வேளை உணவு சாப்பிடுபவர்கள் மொத்த மக்கள்தொகையில் 54 சதவீதம் தான். மீதமுள்ள 46 சதவீதம் மக்கள் 2 வேலை உணவு மட்டுமே சாப்பிடுகின்றனர். ஒருவேளை பட்டினியாக இருக்கிறார்கள். குறிப்பாக குஜராத், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் மற்றும் உத்திரப்பிரதேசம் மாநிலங்களில் 60% மக்களுக்கு மூன்று வேலை உணவு கிடைக்காத நிலைதான் உள்ளது.
உணவு மானியத்தை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை பலராலும் முன்வைக்கப்பட்டது. ஆனால், பாசிஸ்ட் ‘மோடியோ’ முதலாளிகளின் வளர்ச்சியே இந்தியாவின் வளர்ச்சி, மக்களைப் பற்றி எனக்கு கவலையில்லை என்ற தொனியில் அக்கோரிக்கையை கண்டுகொள்ளவே இல்லை.
பிரதான் மந்திரி கிரீப் கல்யாண் யோஜனா(PMGKAY) என்ற திட்டத்தின் கீழ் 81.35 கோடி பேருக்கு இலவச உணவு தானியங்கள் வழங்கும் திட்டம் கொரோனா காலத்தில் ஒன்றிய அரசால் அமல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தை ஜனவரி 2024 லிருந்து இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிப்பதாக மோடி அரசு அறிவித்தது. வேலையின்மை, விலைவாசி உயர்வு, அதிகமான ஊட்டச்சத்துக்குறைபாடு மற்றும் கடந்த நாடாளுமன்றத் தேர்தல் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டுதான் இந்நீட்டிப்பை மோடி அமைச்சரவை அறிவித்தது.
PMGKAY திட்டத்தில் சொல்லப்பட்டுள்ள 81.35 கோடி பேர் என்பது 2011 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் இருந்து பெறப்பட்ட எண்ணிக்கையாகும். மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுத்து 13 வருடங்கள் ஆகிறது. கொரோனா காலத்தில் கூடுதலாக, மைக்கிரண்ட் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் 8 கோடி பேரை பிரதான் மந்திரி கிரீப் கல்யாண் யோஜனா என்ற திட்டத்தின் கீழ் கொண்டுவர வேண்டும் என உச்சநீதிமன்றம் வழிகாட்டியிருந்தது. அதன் பிறகும் மோடி அரசு 8 கோடி தொழிலாளர்களை PMGKAY வின் கீழ் சேர்க்கவில்லை. கூடவே ஏற்கனவே ஒதுக்கப்பட்ட உணவு மானியத்தையும் குறைத்துள்ளனர்.
நாட்டில் பலகோடி மக்கள் ஒருவேளை பட்டினியாக இருக்கிறார்கள் எனத் தெரிந்திருந்தும் அதை போக்க நிதி ஒதுக்காமல் கார்ப்பரேட்டுகளுக்கும், முதலாளிகளுக்கும் பல்வேறு சலுகைகள் வழங்கி, பெரும்பான்மை மக்களை பட்டினியில் தள்ளும் இக்கும்பலை என்ன செய்தால் தகும்?
- அழகு
மோடியின் பாசிச ஆட்சில் மக்களை கொள்ளை அடிக்கவும் கார்ப்பரேட்களுக்கு வாரி கொடுக்கவும் மட்டுமே தெரியும்