புதிய (பாரதிய) குற்றவியல் சட்டங்கள் ஜூலை 1 முதல் அமலுக்கு வந்துள்ளன. ஏற்கனவே நடைமுறையில் இருந்த இந்திய குற்றவியல் சட்டம் 1860 (IPC) இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் 1872(CrPC) மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம்1863(IEA) ஆகிய மூன்று சட்டங்களுக்குப் பதிலாக பாரதிய நியாய சன்ஹிகீதா 2023, பாரதிய நாகரிக் சுரக்க்ஷா 2023 மற்றும் பாரதிய சாட்சியா 2023 என்ற மூன்று சட்டங்களை கொண்டு வந்துள்ளது மோடி அரசு.
இம்மூன்று சட்டங்களையும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 11ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “காலனியச் சட்டங்கள் பிரிட்டீஷாரையும் பிரிட்டீஷ் அரசாங்கத்தையும் பாதுகாப்பதையே முதன்மையாகக் கொண்டிருந்தது ஆனால் தற்போது அறிமுகப்படுத்தியுள்ள புதிய மூன்று சட்டங்கள் இந்தியர்களைப் பாதுகாப்பது என்பதை அடிப்படையாகக் கொண்டது.” இதுவே புதிய சட்டங்கள் கொண்டுவந்ததற்கான காரணம் என்று விளக்கினார். மேலும் காலனியநீக்கம், அனைவருக்கும் நீதி, மக்களை மையப்படுத்திய சட்டம் என்று வாய்சவடால் அடித்தது மோடி-அமித்ஷா கும்பல். மோடியின் ஆதரவாளர்களான மேட்டுக்குடி குருட்டு மேதாவிகளும் சங்கப் பரிவாரங்களின் முரட்டுப் பக்தர்களும் காலனிய சட்டங்களுக்கு பதிலாக பாரதீய சட்டங்களை மோடி கொண்டுவந்துள்ளதாக புலகாங்கிதம் அடைகின்றனர்.
‘இந்தியர்களின் பாதுகாப்பை’ அடிப்படையாகக் கொண்ட இச்சட்டங்கள் அமலுக்குவந்த உடன் முதலில் பாய்ந்ததே ஒரு சாமானிய இந்தியன் மீதுதான். டெல்லி இரயில் நிலையத்திற்கு வெளியே சாலை ஓரத்தில் மாம்பழம் விற்றுக்கொண்டிருந்த பங்கஜ் என்ற இளைஞர் மீது BNS-ன் 285-வது பிரிவில் “பொதுவழியில் செல்வதற்கு ஆபத்து மற்றும் தடையாக இருத்தல்” என்று வழக்குப் பதிவு செய்திருந்தது டெல்லி போலீஸ். இது பரவலான விமர்சனத்திற்கு உள்ளாகவே வழக்கை திரும்பப்பெறுவதாக அமித்ஷா அறிவித்தார். இந்தியாவை முன்னேற்றுவதற்கு அயராது உழைக்கும் மோடி, தனது புதிய சட்டத்தினை ஒரு சாமான்ய “இந்து“வின் மீது பிரயோகித்திருப்பது உசித்தமா? என்று அவாளே கேட்கும்படி தர்மசங்கடமாகிவிட்டது மோடிஜீக்கு. இச்சட்டங்கள் ‘இந்தியர்களின் பாதுகாப்பை’ அடிப்படையாகக் கொண்டது என்று உள்துறை அமைச்சர் சொன்னதின் யோக்கியதை இதுதான்.
காலனியச் சட்டத்தை விட மோடி கொண்டுவந்துள்ள இப்புதிய சட்டங்கள், மக்கள் மீது அரசின் கண்காணிப்பை அதிகப்படுத்தியுள்ளதாகவும், போலீசுக்கு அதிக அதிகாரம் வழங்கியுள்ளதாகவும், இருக்கின்ற கொஞ்சநஞ்ச ஜனநாயக உரிமைகளையும் பறிப்பதாகவும் உள்ளது. மேலும் இச்சட்டங்களின் பலபிரிவுகள் தெளிவில்லாமல் இருப்பதாகவும் சட்டவல்லுனர்கள் விமர்சித்துள்ளனர். “அரசியலமைப்பு சட்டத்தின் 19-வது பிரிவில் சொல்லப்பட்டுள்ள ஜனநாயக உரிமைகளின் [கருத்துச் சுகந்திரம்(19A); பொதுவெளியில் கூடுவது, கூட்டம் நடத்துவது அல்லது பேரணி நடத்துவது(19B); சங்கமாக சேர்ந்துகொள்வது(19C)] மீது இப்புதிய குற்றவியல் சட்டங்கள் மூலம் மோடி அரசு தாக்குதல் தொடுத்துள்ளதாகவும், மேலும் 19-வது பிரிவின் பயன்பாட்டினை சுருக்க வாய்ப்புள்ளதாகவும்” கூறுகிறார் தேசிய நீதித்துறை அகாடமியின் முன்னாள் இயக்குநர் பேரா. மோகன் கோபால்.
புதிய மூன்று குற்றவியல் சட்டங்களை அவசரகதியில் அமல்படுத்த வேண்டாம்; அதில் பல திருத்தங்களை செய்ய வேண்டியது அவசியம் என்பதை வலியுறுத்தி மாநில முதல்வர்களும், உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்களும், சட்ட வல்லுனர்களும், மாநில பார் கவுன்சில்களும் இந்திய பார் கவுன்சிலும் மற்றும் பல சமூக ஆர்வலர்களும் நூற்றுக்கணக்கான கடிதங்களை ஒன்றிய அரசுக்கு எழுதியுள்ளனர். கடந்த ஆண்டு 146 எம்பிக்களை நாடாளுமன்றத்திலிருந்து இடைநீக்கம் செய்த சமயத்தில் தான் இந்த புதிய குற்றவியல் சட்டம் 2023 நிறைவேற்றப்பட்டது. எனவே நாடாளுமன்றத்தில் இந்த சட்டங்களின் சரித்தன்மை குறித்து எந்தவிதமான விவாதங்களும் நடைபெறவில்லை. உள்துறை விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்த திருத்தங்களைக் கூட மோடி அரசு முழுமையாக கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. இந்த மூன்று சட்டங்களும் எந்தவிதமான விவாதங்களும் இல்லாமலேயே மோடி-அமித்ஷா கும்பலால் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது என்பது தெளிவு.
நாடாளுமன்றத்தில் இச்சட்டங்கள் குறித்து பேசிய அமித்ஷா, சட்டத்தில் உள்ள புதிய அம்சங்களைப் பட்டியலிட்டு, இச்சட்டங்கள் காலனிய தன்மைகள் அற்றது. பாரதிய தன்மை கொண்டது என்றார். அமித்ஷா பேசியது வடிகட்டிய பொய். புதிய மூன்று சட்டங்களில் உள்ள சரத்துக்களில் 95% பழைய சட்டங்களே உள்ளன. அதன் தலைப்புகள், உட்பிரிவுகள், பெயர்கள் மட்டுமே மாற்றப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்ற மூத்த வழக்குரைஞர் நிபுன் சக்சேனா தி ஓயர் இணையதள நேர்காணலில் விளக்கியுள்ளார். பிரிட்டீஷ் காலனியாதிக்கவாதிகளின் பழைய குற்றவியல் சட்டங்களில் உள்ள பல்வேறு ஒடுக்குமுறைக் கூறுகளையும் சேர்த்துக் கொண்டு ‘பாரதிய’ சட்டம் என்று இந்தியாவிற்கு பெருமை சேர்ப்பதுபோல் வாய்சவடால் அடித்து வருகிறது மோடி-அமித்ஷா கும்பல் என்பதே உண்மை.
பழைய குற்றவியல் சட்டத்தில் பிரிவு 124 என்பது ”சட்டப்படி அமைக்கப்பட்ட அரசுக்கு எதிராக குற்றம் இழைத்தல்” என்பதாகும். இதனை பிரிட்டீஷ் அரசாங்கம் பிரிட்டிஷ் ராஜ்யத்திற்கு எதிராகவும் அதனை தூக்கி எறிவதற்கு வேலை செய்பவர்களை தண்டிப்பதற்காகவும் கொண்டு வந்தது. இந்த பிரிவின் கீழ் பகத்சிங், உத்தம்சிங் உட்பட ஏராளமான தலைவர்கள் கைது செய்யப்பட்டு தண்டனை அனுபவித்து இருக்கின்றனர். 1947-க்கு பிறகு நிதிமூலதனத்தின் நலனுக்கான ‘சுதந்திர இந்தியாவின்’ ஆளும்வர்க்கமும் தன்னை எதிர்ப்பவர்களை ஒடுக்குவதற்காக 124 பிரிவை அப்படியே வைத்துக்கொண்டது. இச்சட்டத்தின் கீழ் ஏராளமான சமூக செயல்பாட்டாளர்கள், நக்சலைட் அமைப்பை சேர்ந்தவர்கள், முதலாளிகளின் சுரண்டல்களை அம்பலப்படுத்துபவர்கள், அரசுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபடுபவர்கள், மக்கள் நலன் சார்ந்து செயல்படக்கூடிய சமூக செயல்பாட்டாளர்கள், பத்திரிக்கையாளர்கள் என பலரையும் சிறையிலடைத்து துன்புறுத்தியுள்ளது இந்த ஆளும் வர்க்கம். இதனை இன்னும் விரிவுபடுத்தி பாரதிய நியாய சன்நிதா பிரிவு 152 ஆகமாற்றியுள்ளது மோடி-அமித்ஷா கும்பல். அதாவது IPC 124 ஆனது கூடுதல் கோரப்பற்களோடு BNS 152 “இந்திய இறையாண்மை, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவித்தல்” என்ற தலைப்பில் மாற்றப்பட்டுள்ளது.
section 152 of the BNS, titled ‘Act endangering sovereignty, unity and integrity of India’
Whoever, purposely or knowingly, by words, either spoken or written, or by signs, or by visible representation, or by electronic communication or by use of financial mean, or otherwise, excites or attempts to excite, secession or armed rebellion or subversive
activities, or encourages feelings of separatist activities or endangers sovereignty or unity and integrity of India; or indulges in or commits any such act shall be punished with imprisonment for life or with imprisonment which may extend to seven years and shall also be
liable to fine.
124 ல் சொல்லப்பட்டவையோடு கூடுதலாக “பிரிவினைவாத உணர்வை ஊட்டுவதாக இருந்தாலும் (encourages feelings of separatist activities) அல்லது ஏதாவது மறைமுக/நாசகர வேலைகளாக இருந்தாலும் (subversive
activities) அல்லது இந்தியாவின் இறையாண்மை ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு தீங்கு விளைவிப்பதாக இருந்தாலும் ஆயுள் தண்டனையோ அல்லது ஏழு வருடம் சிறை தண்டனையோ விதிக்கலாம் என்று இப்பிரிவு கூறுகிறது.
ஆரியம் மற்றும் திராவிடத்தை பற்றி இனி பேச முடியாது ஏனென்றால் இக்கருத்துக்கள் பிரிவினைவாத உணர்வை ஊக்குவிப்பதாக அமைந்துவிடும். மறைமுக/நாசகர வேலைகள் என்று பொதுவாக சட்டத்தில் குறிப்பிட்டுள்ளனர் அதைப்பற்றி எந்த ஒரு விளக்கமும் இல்லை. அரசு கொண்டு வருகின்ற திட்டங்களை பற்றி ஒரு 50 பேர் சேர்ந்து ஒரு அறைக்கூட்டம் நடத்தினால் கூட அல்லது ஒரு அரங்க கூட்டம் நடத்தினால் கூட அதை அரசுக்கு எதிரான வேலை என்று போலீசாரால் முத்திரை குத்தி தேச துரோக வழக்கில் வழக்கு பதிவு செய்ய முடியும்
இது குறித்து நாடாளுமன்றத்தில் பேசிய அமித்ஷா, ராஜதுரோகத்திற்கான தண்டனையிலிருந்து தேசதுரோகத்திற்கான தண்டனையாக மாற்றப்பட்டுள்ளதாக பேசினார். அதாவது பிரிட்டிஷ் ராஜ்யத்தை தூக்கி எறிவதற்காக செயல்பட்டவர்கள் என்று குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது 124A வழக்குகளை பிரிட்டீஷாரால் பதியப்பட்டன. தற்போது இந்திய தேசத்திற்கு எதிராக, அதாவது மோடி-அமித்ஷா வரையறுப்பின்படி இந்து தேசத்திற்கு (ஹிந்துராஷ்ட்ரா) எதிராக செயல்படும் தேசத்துரோகிகளை தண்டிப்பதற்காக BNS 152 சட்டப்பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது.
தங்களது அரசியல் நோக்கத்திற்காக மோடி-அமித்ஷா கும்பல் கல்வியில் எப்படி காவிமயத்தை புகுத்திவருகிறார்களோ அது போலவே இந்திய குற்றவியல் சட்டங்களை தங்களுடைய ஹிந்து ராஷ்ட்ரா திட்டத்திற்காகவும், இந்திய தரகு முதலாளிகள் மற்றும் நிதி மூலதனங்களின் கட்டற்ற சுரண்டலுக்கு எதிரான போராட்டங்களை ஒடுக்குவதற்காகவும் மொத்தத்தில் காவி கார்ப்பரேட் பாசிச திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குத் தகுந்தபடிதான் பாரதிய குற்றவியல் சட்டத்தினைக் கொண்டுவந்துள்ளது. மாறாக காலனியநீக்கம், அனைவருக்கும் நீதி, மக்களை மையப்படுத்திய சட்டம் என்பதெல்லாம் தேசிய செரிதல்களே அன்றி வேரோன்றும் இல்லை.
- அழகு
நாட்டின் அணைத்து துறைகளிலும் பாசிசம் வேலை செய்கிறது
மூன்று சட்டங்களையும் ரிவைஸ் செய்து இந்தியாவின் கண்டினுக்கு தகுந்தபடி மாற்றி அமைத்தால் மட்டுமே பாட்டாளி வர்க்கம் நன்மை அடையும்.
சட்டங்களை கொடுமையானதாக மாற்றியதும் அதற்கு. இந்தியிலும் பெயர் மாற்றி தனது பாசிச முகத்தை காட்டியுள்ளது மோடி அரசு
முன்பு காலனிச்சட்டம் தற்போது மறுகாலனி சட்டம்.