பாசிசத்தை வீழ்த்த :
தேர்தல் மாயையை புறக்கணிப்போம்!
பாட்டாளிவர்க்க ஐக்கிய முன்னணியைக் கட்டியமைப்போம்!

 

நடந்து முடிந்த 18-வது நாடாளுமன்ற தேர்தலில் 40-ம் நமதே, நாடும் நமதே என்கிற முழக்கத்தை முன்வைத்து, பிரச்சாரத்தை முன்னெடுத்து வென்றன, திமுகவும், இந்தியா கூட்டணியும். நாடு தமதாகவில்லையென்றாலும், தமிழகத்தில் 40-தையும் சிந்தாமல், சிதறாமல் அள்ளியெடுத்து தமதாக்கிக் கொண்டன. இதையே பாசிசத்திற்கெதிரான பெரும் வெற்றி எனக் கொண்டாடி வருகின்றன. ஆனால் இவை கூட அதிமுக, பாஜகவுடன் கூட்டணியில் சேராமல், புறக்கணித்ததின் விளைவே இந்திய கூட்டணி 40-தையும் தமதாக்கிக் கொள்ள முடிந்தது. இல்லையேல், ஏறக்குறைய 23-இல் இருந்து 27-வரை தான் இந்திய கூட்டணி வென்றிருக்க முடியும். மீதமுள்ளவைகளை என்டிஏ தமதாக்கிக் கொண்டிருக்கும் என்பதை மறுப்பதற்கில்லை.

இந்திய கூட்டணியோ, பாஜக கூட்டணியோ இரண்டில் எது வந்தாலும், வளமோடு வாழப்போவது கார்ப்பரேட்டுகளே என்பது, நடந்து முடிந்த, 18-வது நாடாளுமன்றத் தேர்தலில், வெற்றிப் பெற்ற கோடீஸ்வரர்களான 504 பேரை வைத்தே முடிவு செய்துவிட முடியும்.

மறுக்காலனியாக்கத்திற்கு பிறகு நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும் கோடீஸ்வரர்களது எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிற்து. 2009 நாடாளுமன்றத் தேர்தலின் போது, 315 பேரும் (58%), 2014 தேர்தலில் 443 பேரும் (82%), 2019 தேர்தலில் 475 பேரும் (88%), தற்போது 504 பேரும் (93%) பெரும் கோடீஸ்வர்களாக உள்ளனர். அரசியல்வாதிகள் கார்ப்பரேட்டுகளாகவும், கார்ப்ரேட்டுகள் அரசியல்வாதிகளாகவும் உருமாறியுள்ளனர். கார்ப்ரேட்டுகளால் நிரம்பி வழியும் இந்த நாடாளுமன்ற “ஜனநாயகம்” 99% மக்களுக்கான ஜனநாயகத்தை வழங்குமா? அவர்களுக்கான சட்டத்தையோ, திட்டத்தையோ, பட்ஜெட்டையோ போடத்தான் முடியுமா? ஒருபோதும் முடியாது.

இது முதலாளிகளுக்கு ஜனநாயகத்தை வழங்கும், மக்களுக்கு அடக்குமுறையைச் செலுத்தும் முதலாளித்துவ சர்வதிகாரம். இதனிடம் மக்களுக்கான ஜனநாயகத்தை எதிர்பார்க்க முடியாது. அப்படியே இது வழங்கும் ஜனநாயகம் கூட “நெல்லுக்கு இறைத்த நீர், புல்லும் புசித்தக் கதையாகத்தான் அமையும்”.

இந்த கொஞ்ச நஞ்ச ஜனநாயகத்தைக் கூட, காவி – கார்ப்பரேட் பாசிசம் இன்று பறித்து வருகிறது. இதை முறியடிப்பதற்கு, இந்த 18-வது நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணியை வெற்றிப் பெறச் செய்ய வேண்டும். இதன் மூலம், ஜனநாயகத்தை மீட்டெடுத்து, பாசிச பிடியிலிருந்து மக்களை விடுவிக்க வேண்டுமென பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்து விட்டனர். ஆனால், ஜனநாயகம் நாட்டை தமதாக்கிக் கொள்ளாமல், பாசிசம் தமதாக்கிக் கொண்டது. இருப்பினும், அறுதிப் பெரும்பான்மை இல்லாததால், தெலுங்கு தேசம் – ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் தயவில் காலம் தள்ள வேண்டிய சூழலை பாசிசத்திற்கு உருவாக்கி விட்டது.

இச்சூழலை ஆர்எஸ்எஸ், பிஜேபி கும்பல் நரித்தனத்தைப் பயன்படுத்தி, இவ்விரு கட்சிகளை உடைத்தும், குதிரை பேரம் நடத்தியும் பெரும்பான்மையை செயற்கையாக உருவாக்கி, காவி – கார்ப்பரேட் பாசிசத்தை அரங்கேற்றி விடும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

40-ம் நமதே என முழங்கிய திமுக கூட்டணி தற்போதைய நாடாளுமன்ற தேர்தலில் 40-தையும் தமதாக்கி இருக்கலாம். இவற்றைக் கூட ஆர்எஸ்எஸ் பிஜேபி பாசிசக் கும்பலின் நகர்வுபடி அதிமுக + பாமக + தேமுதிகவுடன் கூட்டணி அமைத்திருந்தால், 40-இல் இருந்து ஏறக்குறைய 17-வரை உருவியெடுத்திருக்கும். இவற்றை இவர்களின் வாக்கு எண்ணிக்கையுடன், திமுக கூட்டணியின் எண்ணிக்கையோடு ஒப்பிட்டுப் பார்த்தால் புரிந்துவிடும். இவை நிறைவேறாமல் போயிருந்தாலும், அதற்கான (ஆர்எஸ்எஸ், பிஜேபி கும்பலுக்கான) அடித்தளத்தை கோடரிக் கொம்புகளான பாமக, புதிய தமிழகம், தமிழகம் மக்கள் முன்னேற்றக் கழகம் போன்ற சாதிய அமைப்புகள் தேர்தல் பிரச்சாரத்தின் மூலம் அமைத்துக் கொடுத்து விட்டன.

அடுத்து வரும், சட்டமன்ற – நாடாளுமன்ற தேர்தலுக்குள்ளாக, எடப்பாடி அதிமுகவை உடைத்து, அதிலிருந்து பெரும்பான்மையை உருவி ஓபிஎஸ், சசிகலா, தினகரன் கும்பலுடன் இணைத்து தன்னுடன் சேர்த்து கொள்ளும். இதன் மூலம், ஏற்கனவே உள்ள கோடாரிக் கொம்புகளுடன் அதிமுக, தேமுதிக, நாம் தமிழர், தமிழக வெற்றிக் கழகம் போன்றவைகளையும் சேர்த்து மெகா கூட்டணியாக்கி, திமுக கூட்டணியை மைனாரிட்டியாக்கி அரசியல் அதிகாரத்தைப் பறித்து திமுகவையே இல்லாமல் செய்யும். திமுக மட்டுமல்ல, தனது கூட்டணிக் கட்சிகளைக் கூட கரையான்களைப் போல கரைத்தெடுத்து, ஒரிசாவை போல, தமிழகத்திலும் குடிகொண்டு விடும். இவை சுயநல, பிழைப்புவாத, சாதியவாத ஆளும் வர்க்கக் கட்சிகளுக்கான இழப்பை விட, உழைக்கும் வர்க்கத்திற்கும் பாட்டாளி வர்க்கத்திற்கும் மாபெரும் இழப்பை ஏற்படுத்தும்.

காவி – கார்ப்பரேட் பாசிசத்தை அடியோடு பிடுங்கி எரியக்கூடிய வலிமையை உழைக்கும் வர்க்கத்தை, பாட்டாளி வர்க்கத்தை மேற்கண்ட கட்சிகளிலிருந்து விடுவிக்க முடியாமல் தடுத்து விடும்.

இந்த கோடாரிக் கொம்புகளை தமிழ்நாட்டிலிருந்து வெட்டி எறிவதோடு, திமுக கூட்டணி உட்பட இவர்களிடம் உள்ள உழைக்கும் வர்க்கத்தையும், பாட்டாளி வர்க்கத்தையும் விடுவித்தாக வேண்டும். இதன் மூலம், காவி – கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிக்கும் வல்லமைப் படைத்த பாட்டாளி வர்க்க முன்னணியை, இதேபோன்று, இதர உழைக்கும் மக்கள் பிரிவுகளிடமும் கட்டியமைத்து, வர்க்கப் போராட்டத்தை தீவிரப் படுத்த வேண்டும். இதை விடுத்து, மோடி வெற்றியை செயற்கையாகக் காட்டி, பங்கு மார்க்கெட் சூதாடிகள், 38 லட்சம் கோடியைச் சுருட்டிய, கோடீஸ்வரர்களுக்கான ஜனநாயகத்திற்கு, மீண்டும், மீண்டும் வாக்களிப்பது தற்கொலைக்குச் சமம். வாக்களித்து விட்டோம். இனி, இராமன் ஆண்டால் என்ன? இராவணன் ஆண்டால் என்ன? என்று, அமைதி காப்பதும் பாசிசம் அரங்கேறுவதற்கு அங்கீகாரம் அளிப்பதற்குச் சமம்.

  • மோகன்

One comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன