பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி பாசிச மோடி மூன்றாவது முறையாக நாட்டின் பிரதமராக பதவியேற்க உள்ளார். இந்த தேர்தலில் பாஜக அறுதிப் பெரும்பான்மை பெற முடியாமல் தற்போது கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைக்கவிருக்கிறது. 400 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் எனப் பிரச்சாரம் செய்துவிட்டு, பாராளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மை பெறும் அளவு தொகுதிகளில் கூட வெற்றி கிடைக்கவில்லை என்பது, பத்தாண்டுகாலம் பிரதமராக ஆட்சி செய்து, தன்னை தன்நிகரற்ற தலைவராக, விஷ்வகுருவாக, இறுதியில் கடவுளின் வடிவமாக முன்னிறுத்திய மோடிக்கு, தனிப்பட்ட ரீதியில் பெரும் பின்னடைவுதான்.
கடந்த பத்தாண்டுகால ஆட்சியில் பாசிச மோடி அரசின் கொள்கைகள் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்த கிராமப்புற விவசாயிகளின் வாக்குகள் எதிர்க்கட்சிகளுக்குச் சென்றதே மோடியின் பின்னடைவுக்குக் காரணமாக உள்ளது. ராஜஸ்தான், ஹரியாணா மற்றும் உத்திரப்பிரதேசத்தில், தான் எதிர்பார்த்த அளவிற்கான வெற்றிகளை பாஜகவால் பெற முடியவில்லை. குறிப்பாக உத்திரப்பிரதேசத்தில் பாஜக கணிசமான அளவு தொகுதிகளை இழந்துள்ளது.
மறுபுறம் காங்கிரஸ் கட்சியும், அது அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணியின் பிற கட்சிகளும் கடந்த முறையைவிட தற்போது அதிக எண்ணிக்கையில் வெற்றிபெற்றுள்ளன. தமிழ்நாடு புதுவையில், 40 தொகுதிகளையும் இந்தியா கூட்டணிக் கட்சியினர் வென்றுள்ளனர். உ.பி., மேற்கு வங்கம் மற்றும் மகாராஷ்டிர மாநிலங்களில் இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் பாஜகவை விடக் கூடுதலான இடங்களைப் பெற்றுள்ளன.
பாஜக தற்போது ஆட்சியமைக்க, தனது கூட்டணிக் கட்சிகளான சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியையும், நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கட்சியையும் நம்பியிருக்க வேண்டிய சூழலுக்குள் தள்ளப்பட்டுள்ளது. இதனை பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தின் வெற்றி என இந்தியா கூட்டணிக் கட்சியினர் மட்டுமன்றி போலிப் புரட்சியாளர்கள் சிலரும் கொண்டாடுகிறார்கள்.
இதற்கு முன்பு இரண்டு முறை ஆட்சியமைத்த போதும் அறுதிப் பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களை வென்ற பாஜகவிற்கு கூட்டணிக்கட்சிகளின் ஆதரவு தேவைப்படவில்லை. பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, விவசாய சட்டதிருத்தம், 370 நீக்கம் என எந்த விசயத்திலும் பாஜக தனது கூட்டணிக் கட்சிகளைக் கலந்தாலோசிக்கவில்லை. அதேசமயம் 2020ல் விவசாய சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராடிய போது, தங்களது மாநிலத்தில் இது தங்களுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என பாஜக கூட்டணிக் கட்சியில் இருந்த சிரோமணி அகாலி தளம் கட்சி, விவசாய சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரியபோது, பாஜக அதனை ஏற்கவில்லை. இதனால் அக்கட்சி பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது.
ஆனால் தற்போது நிலைமை மாறியிருக்கிறது பீகாரில் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தி அதன் அடிப்படையில் இடஒதுக்கீடு கொடுக்க அனுமதிக்க வேண்டும் என நிதிஷ்குமார் கோருகிறார். ஆந்திர மாநிலத்தில் இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு கொடுப்பதை தொடரப்போவதாக தெலுங்கு தேசம் கட்சி அறிவித்துள்ளது. இவை பாஜகவின் இந்துத்வ கொள்கைகளுக்கு எதிரானதாக இருந்தாலும் அவற்றை பாஜகவால் எதிர்க்க முடியாமல் ஆதரிக்கவேண்டிய நிலையில் அது தற்போது இருக்கிறது.
அதேபோல வருமானவரித்துறை, அமலாக்கத்துறை, சிபிஐ போன்றவற்றை எதிர்க்கட்சிகளின் மீது மட்டுமல்ல தனது கூட்டணிக் கட்சிகளின் மீதும் பாஜக பயன்படுத்தியது. மகாராஷ்டிராவில் சிவசேனா, தமிழ்நாட்டில் அதிமுக என தனது கூட்டணியில் இருந்த கட்சிகளைக் கூட பாஜக உடைத்தது. அதுவும் தற்போது மாறியிருக்கிறது. அமலாக்கத்துறை உள்ளிட்ட அரசுத் துறைகளை இனி பாஜக கூட்டணிக் கட்சிகளின் மீது ஏவமுடியாது.
ஆனால் இவற்றை மட்டும் வைத்து பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தில் வெற்றி பெற்றுவிட்டதாக கூற முடியுமா? வடமாநிலங்களில் அப்பாவி இஸ்லாமியர்கள் பசுக் குண்டர்களால் கொல்லப்படுவதை, இந்தியா கூட்டணியினர் பெற்றுள்ள தேர்தல் வெற்றியால் தடுக்க முடியுமா? இதே அமலாக்கத்துறையையும், சிபிஐயையும் பாசிசத்திற்கு எதிராக போராடும் ஜனநாயக சக்திகளுக்கு எதிராக பயன்படுத்துவதை தடுக்க முடியுமா? இன்னும் சொல்லப்போனால், குறைந்தபட்சம் தங்களுக்கு எதிராக அவற்றைப் பயன்படுத்துவதைக் கூட எதிர்க்கட்சிகளால் தடுக்க முடியாது.
2019 பாராளுமன்றத் தேர்தலுடன் ஒப்பிடும்போது 63 தொகுதிகளை இழந்துள்ள அதேசமயம் பாஜகவின் வாக்கு சதவீதம் பெரிய அளவில் குறையவில்லை என்பதையும் பார்க்க வேண்டும். 2019 தேர்தலில் 37.7 சதவீத வாக்குகளைப் பெற்ற பாஜக 2024ல் 36.56 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது. அதாவது வெறும் 1 சதவீத வாக்குகளை மட்டுமே பாஜக இழந்துள்ளது. மேலும் மத்தியப் பிரதேசம், ஹிமாச்சல பிரதேசம், தில்லி, உத்ரகாண்ட், திரிபுரா ஆகிய மாநிலங்களின் அனைத்து இடங்களையும் பாஜக வென்றுள்ளது. ஒரிசாவில் பெரும் வெற்றியை ஈட்டியுள்ளது. கிராமப்புறங்களில் பாஜக பின்னடைவைச் சந்தித்திருந்தாலும் நகர்புறங்களில் அதன் செல்வாக்கு குறையவில்லை.
தென்மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ள தெலுங்கானாவில் அதற்கு சரிசமமாக 8 இடங்களில் பாஜக வென்றுள்ளது, ஆந்திராவில் பாஜக கூட்டணி மாநில சட்டமன்றத்தைக் கைப்பற்றியிருப்பதுடன், பெரும்பான்மையான பாராளுமன்றத் தொகுதிகளையும் வென்றிருக்கிறது. கேரளத்தில் ஒரு தொகுதியில் வென்றிருப்பதன் மூலம் அம்மாநிலத்தில் பாஜக காலூன்றத் தொடங்கியிருக்கிறது.
இந்த பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளின் படி 96 தொகுதிகளில் தொடர்ச்சியாக மூன்று முறைக்கும் மேலாக வெற்றி பெற்றதன் மூலம் 96 புதிய கோட்டைகளை பாஜக உருவாக்கியிருக்கிறது. இதற்கு முன்பு பாஜகவின் கோட்டைகளாக இருந்த 94 தொகுதிகளில் 80ல் மீண்டும் பாஜக வெற்றிபெற்றுத் தக்கவைத்திருப்பதால் அவற்றுடன் கூட்டிப் பார்க்கும் போது நாடுமுழுவதும் உள்ள 543 தொகுதிகளில் 176 தொகுதிகள் பாஜகவின் கோட்டைகளாக உள்ளன.
மொத்தமாக பார்க்கும் போது, தன்னை ஒரு மாபெரும் தலைவராக நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும் என்ற மோடியின் விருப்பத்தின் மீது இந்தப் பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் இடியென இறங்கியுள்ளன. அதேசமயம் பாசிசத்திற்கு எதிரான மனநிலையோ, பாசிசத்தின் ஆபத்து குறித்த புரிதலோ கூட மக்கள் மத்தியில் இன்னமும் ஏற்படவில்லை என்பதையும் இது தெளிவாக காட்டுகிறது.
ஜூன் 9ம் தேதி மோடி பிரதமராக பதவியேற்றாலும், கூட்டணிக் கட்சிகளை ஒருங்கிணைத்து அவரால் ஆட்சி செய்ய முடியாது. தேர்தலில் குறைந்த இடங்களை வென்ற காரணத்தால் தனது பாசிச திட்டங்களை முடக்கிவைத்து அடங்கி போய் ஐந்து ஆண்டுகளுக்கு ஆட்சி செய்ய வேண்டும் என்பதை மோடி நிச்சயம் விரும்ப மாட்டார்.
சமீபத்தில் கரண் தாப்பருடனான நேர்காணல் ஒன்றில் பேசும் போது மோடியின் சுயசரிதையை எழுதிய நிலஞ்சன் முகோபாத்யாய், மோடியின் இயல்பு பற்றிக் கூறும்போது “தான் மட்டுமே எப்போதும் முக்கியத்துவம் பெறுபவராக இருக்க வேண்டும், மற்றவர்கள் எல்லாம் தனது கட்டளைக்குக் கீழ்படிந்து பணியாற்றுபவர்களாக இருக்க வேண்டும் என்பது தான் மோடியின் இயல்பு…. தன்னை யாரும் விமர்சனம் செய்வதை அவரால் தாங்கிக்கொள்ள முடியாது…. இஸ்லாமியர்களுக்கு எதிராகப் பேசுவதும் செயல்படுவதும் மோடியின் ரத்தத்திலேயே ஊறியிருக்கிறது அதனை கூட்டணிக் கட்சிகளுக்காக மாற்றிக்கொள்ள அவரால் முடியாது…. இப்படிப்பட்ட ஒரு நபரால் கூட்டணிக் கட்சிகளை ஒருங்கிணைத்து ஒரு ஆட்சியை வழிநடத்திச் செல்லவே முடியாது” என்று கூறுகிறார். “அனுசரித்துப் போக வேண்டும் என மோடியின் மூளை கூறினாலும், அவரது இயல்பு அதனை அனுமதிக்காது” என்றும் கூறியிருக்கிறார்.
துருக்கி நாட்டு பாசிஸ்டான எர்டோகனை உதாரணமாக காட்டி “வலிமையான ஒருவர் பலவீனமாக உணரும் போது நிலமைகள் மிகவும் ஆபத்தானதாக மாறும்” என்று தி வையர் இணையதளத்தில் தனது கட்டுரையில் எச்சரிக்கிறார் மூத்த பத்திரிக்கையாளர் சித்தார்த் வரதராஜன்.
நாமும் அதைத்தான் கூறுகிறோம். அறுதிப் பெரும்பாண்மை கிடைக்காமல், கூட்டணிக் கட்சிகளின் தயவில் ஆட்சி செய்வது பாசிஸ்டின் இயல்புக்கு எதிரானது. அப்படிப்பட்டதொரு நிர்பந்தத்தில், ஒரு பாசிஸ்டை வைத்திருப்பது என்றைக்குமே ஆபத்துதான். மோடி நீண்ட நாட்களுக்குத் தனது ஆட்சி பறிபோவது குறித்த திகிலில் இருப்பதை விரும்பமாட்டார். தனது பலவீனமான நிலையை எதிர்க்கட்சிகள், கூட்டணிக் கட்சிகள் மட்டுமின்றி தனது சொந்த கட்சியில் இருப்பவர்களே பயன்படுத்திக் கொள்வதை அவரால் ஏற்றுக் கொள்ள முடியாது. மோடி இந்தப் பாராளுமன்றத்தைக் கலைத்துவிட்டு பாசிச ஆட்சியை நிறுவுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.
எனவே பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் பாசிசத்திற்கு எதிரான போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியல்ல, பாசிசத்தின் தாக்குதலுக்கு தற்காலிகப் பின்னடைவைக் கூட இந்த தேர்தல் முடிவுகள் ஏற்படுத்தியிருப்பதாகக் கருத முடியாது ஏனெனில் பாசிச ஆட்சி எந்த நேரத்தில் வேண்டுமானாலும் நிறுவப்படலாம் என்ற நிலையையே இது ஏற்படுத்தியிருக்கிறது. இந்த பேராபத்தை மக்கள் மத்தியில் எடுத்துச் சென்று பாசிசத்தின் அபாயத்தை உணரச் செய்து அவர்களை அணிதிரட்ட வேண்டியது இன்றைக்கு அவசியமாக உள்ளது.
உண்மையான சரியான பார்வை.