சமீபத்தில் பிரதமர் மோடி தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டில் “நான் உயிரியல் ரீதியில் பிறக்கவில்லை”- “கடவுள் தான் என்னை பூமிக்கு அனுப்பியுள்ளதாக கருதுகிறேன்” என்று கூறியிருப்பதன் மூலம் இந்தியாவின் நிரந்தரப் பிரதமராக தன்னை அறிவித்துள்ளார். ஒருவேளை மோடி அரசுக்கு தோல்வி ஏற்பட்டால் அவர்கள் அமைதியாக பதவியை விட்டு வெளியேற மாட்டார்கள் என்பது பாசிஸ்டுகளுக்கே (Fascist) உரித்தான பண்பாகும், அதேபோல் மோடி தன்னை முன்நிறுத்துவதற்கு பல கோடி மக்கள் வரிப்பணத்தை செலவு செய்து தான் ஒரு சுயமோக (Narcissist) பண்பு கொண்டவர் என்பதை பல நிகழ்வுகளில் வெளிப்படுத்தியுள்ளார்.
இத்தகைய பண்புகளைக் கொண்டவர்கள் தங்களது ஆளுமை குறித்து வானளாவிய மாயைகளைக் கட்டமைத்துக்கொள்வார்கள், தங்கள் சாதனைகளை மிகைப்படுத்திக் காட்டுவார்கள், அதிகாரத்தைக் குவித்துக்கொள்வதில் கவனம் செலுத்துவார்கள், எப்படியேனும் வெற்றிபெறவேண்டும் என்ற பதற்றத்துடன் இருப்பார்கள். இதன் சமீபத்திய வெளிப்பாடுதான்
“என் அம்மா உயிருடன் இருந்தபோது, நான் உயிரியல் ரீதியாக பிறந்தேன் என்று நம்பினேன். அவர் மறைந்த பிறகு, என்னுடைய எல்லா அனுபவங்களையும் யோசித்துப் பார்த்தபோது, கடவுள்தான் என்னை அனுப்பியிருக்கிறார் என்று நான் உறுதியாக நம்பினேன். இந்த ஆற்றல் என் உயிரியல் உடலில் இருந்து இருக்க முடியாது, ஆனால் கடவுளால் எனக்கு வழங்கப்பட்டது. கடவுள் எனக்கு ஒரு நோக்கத்திற்காக திறன்கள், உத்வேகம் மற்றும் நல்ல நோக்கங்களைக் கொடுத்துள்ளார் என்று நான் நம்புகிறேன். நான் ஒரு கருவியைத் தவிர வேறில்லை. அதனால்தான், நான் எதையும் செய்யும்போதெல்லாம், கடவுள் என்னை வழிநடத்துகிறார் என்று நம்புகிறேன்.” என்று மோடி கூறியிருப்பதாகும்.
‘இந்த வேலையை செய்வதற்கு கடவுள் என்னை பணியமர்த்தியிருக்கிறார். கடவுளின் துணையோடு இந்த வேலையை செய்கிறேன் என்கிறார் பாசிஸ்ட் மோடி. இவர் ’கடந்த பத்தாண்டுகளாக செய்துள்ள வேலைகள் என்ன?
விவசாயிகளுக்கு எதிராக விவசாய சட்டங்களை திருத்தி அவர்களை மேலும் ஓட்டாண்டிகளாக்கி அவர்களை தற்கொலையை நோக்கி தள்ளியது
வரிவிதிப்பில்/வசூலிப்பதில் (ஜிஎஸ்டி) சட்டத்திருத்தம் கொண்டுவந்து சிறு மற்றும் குறு தொழில் நடத்துபவர்களை முற்றிலுமாக தொழிலில் இருந்து வெளியேற்றி அவர்களை அரை பட்டினி தொழிலாளர்களாக மாற்றியது
தொழிலாளர் நலச் சட்டத் திருத்தங்கள் மூலம் தொழிலாளர்களை வரைமுறை இன்றி பெரும் முதலாளிகளும் நிதி மூலதன கும்பல்களும் பன்னாட்டு நிறுவனங்களும் தங்களுடைய தொழிற்சாலைகளில் பணிபுரிகின்ற தொழிலாளர்களை கசக்கி பிழிவதை (12 மணிநேர வேலை) சாத்தியமாக்கியது.
படித்த இளைஞர்களுக்கான வேலையின்மையின் விகிதத்தை அதிகப்படுத்தியது.
மணிப்பூரிலும் இந்தியாவின் மற்ற இடங்களிலும் பாஜக மற்றும் அதன் ஆதரவினால் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்படுவதை உத்தரவாதப்படுத்தியது.
இந்து மத உணர்வுகளை தூண்டி கலவரங்களை உருவாக்கி முஸ்லீம்களைப் படுகொலை செய்வது மற்றும் இந்து தேசியவெறியை தூண்டிவிடுவது.
தேசிய இனங்களின் அடையாளங்களை அழித்து பிராமண மதமே (வேதமதம்/சனாதனம்) இந்தியாவின் அடையாளம் என மாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவது.
இப்படியாக இந்தப் பட்டியல் இன்னும் நீளமானது.
கடவுளின் வழிகாட்டுதலில் மோடி செய்துள்ள வேலைகளின் விளைவு என்ன? இத்தனை புண்ணியச் செயல்களையும் பாசிஸ்ட் மோடி யாருக்காக செய்தார்? முதலாளிகளுக்காக. அதிலும் குறிப்பாக பார்பன-பனியா-குஜராத்தி-மார்வாடி முதலாளிகளுக்காக
உலக சமத்துவமின்மை ஆராய்ச்சி மையம்: இந்தியாவில் வருவாய் மற்றும் சொத்து சமத்துவமின்மை அறிக்கையை மார்ச்சில் வெளியிட்டது. அதன்படி கடந்த நூறு ஆண்டுகளில் (1922-2023) “இந்தியாவின் நவீன முதலாளித்துவத்தின் தலைமையிலான ‘கோடீஸ்வர ராஜ்’ இப்போது காலனித்துவ சக்திகளின் தலைமையிலான பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தை விட சமமற்றதாக உள்ளதாக” கூறுகிறது.
இந்தியாவில் 1% மக்கள் (சுமார் 9.2 மில்லியன் மக்கள்), மொத்த வருமானத்தில் 22.6 சதவிகிதத்தை பெறுகிறார்கள். மேலும் மொத்த செல்வத்தில் 40% க்கும் அதிகமான செல்வம் இவர்களிடம் உள்ளது. இது பிரிட்டீஷ் ஆட்சி காலத்தில் இருந்த ஏழை பணக்காரன் இடையிலான சமத்துவமின்மையைக் காட்டிலும் அதிகம் என அறிக்கைக் கூறுகிறது. இந்த பொருளாதாரச் சமத்துவமின்மை தனியார்மய தாராளமயக் கொள்கைகள் அறிமுகப்படுத்தப்பட்ட காலமான 1990 களிலிருந்து அதிகரித்து வந்தாலும் மோடி ஆட்சியில் உட்சத்தைத் தொட்டுள்ளதாக அறிக்கையில் உள்ளது.
மோடி ஆட்சியில் அதானியின் வளர்ச்சி மிகவும் அபரிமிதமானது என்பது அனைவரும் அறிந்ததே. அதானி-அம்பானி நிறுவனங்கள் கால்பதிக்காத துறைகளே இல்லை என்ற அளவிற்கு மோடியின் ஆதரவினால் வளர்ந்துள்ளனர். இவர்கள் மட்டுமில்லாது சில புதிய நபர்கள் பெரும் முதலாளிகளாக வளர்ந்து வருவதாக ஃபுளூம்பெர்க் சுட்டிக்காட்டுகிறது. “மோடி மூன்றாவது முறையாக ஆட்சியில் வெற்றி பெற்றால், அவரது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் முகேஷ் அம்பானி மற்றும் கௌதம் அதானி போன்ற பெரும் புள்ளிகளைப் போலவே இந்த புதிய பணக்காரர்களில் சிலர் முக்கியமானவர்களாக இருப்பார்கள்” என்கிறது. அதாவது அதானி, அம்பானிக்கு கொட்டிக் கொடுத்ததைப் போலவே தேசவளர்ச்சி, இந்தியா மூன்றாவது பெரிய பெருளாதார நாடாக வளர்கிறது, உள்கட்டமைப்பை மேம்படுத்துகிறோம், இந்தியாவில் உற்பத்தி செய்வோம் போன்ற வாய்ச்சவடால்களை அடித்து மேலும் சிலரை ஆசியாவின் பெரும் பணக்காரர்களாக்கப்போகிறார் மோடி என்பது தான் இதன் அர்த்தம். அதற்கு வாய்ப்புள்ள ஒருசிலரின் விவரங்களை பட்டியலிட்டுள்ளது ஃபுளூம்பெர்க்.
- மேகா இஞ்சினியரிங் மற்றும் இன்ஃப்ராஸ்டிரக்சர் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கிருஷ்ணா ரெட்டி உடைய சொத்து மதிப்பு 8.3 பில்லியன் டாலர். 2015 இல் 2 பில்லியன் டாலராக இருந்த கிருஷ்ணா ரெட்டி குடும்பத்தின் சொத்து மதிப்பு கடந்த எட்டு ஆண்டுகளில் 8 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. மோடியின் கடைக்கண் பார்வை இதற்கு காரணம். மோடி அரசாங்கம் அறிவித்துள்ள மிக முக்கியமான உள்கட்டுமான திட்டங்கள் மேகா நிறுவனத்திற்கு கொடுத்துள்ளனர். உதாரணமாக போலவரம் இரிகேசன் ப்ராஜெக்ட், மும்பை மாநகரத்தில் புல்லட் ரயிலுக்காக மலையை குடைந்து ரயில் நிலையம் அமைப்பது, ஜோலிஜா டனல் திட்டம் போன்ற மத்திய அரசினுடைய பல திட்டங்களை இவர்கள் எடுத்து செய்கின்றனர்.
பாஜகவிற்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிக நிதி (584 கோடி) வழங்கியவர்களில் மேகா நிறுவனமும் ஒன்று. தானே-பொரிவாலி இரட்டை டனல் வழித்தடம் அமைப்பதற்கான 14,400 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தத்தை மோடி அரசாங்கம் இந்நிறுவனத்திற்கு வழங்கியது. அடுத்த மாதமே 140 கோடியை இந்நிறுவனம் நிதி பத்திரம் மூலம் பாஜக வுக்கு வழங்கியுள்ளது.
- சத்திய நாராயணன், சோலார் இண்டஸ்ட்ரீஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் தலைவர். இவருடைய சொத்து மதிப்பு 6.9 பில்லியன் டாலர். இராணுவத்திற்குத் தேவையான கருவிகளை செய்து கொடுப்பது மற்றும் வெடி மருந்துகள் தயாரிப்பது இவருடைய பிரதான தொழில். இந்தியாவில் உள்ள நிலக்கரி சுரங்கங்களுக்கு தேவையான வெடி மருந்துகள் இவருடைய நிறுவனங்களில் இருந்து செல்கிறது. இந்நிறுவனம் 75 நாடுகளுக்கு வெடி மருந்துகள் விற்பனை செய்வதாக ஃபுளூம்பெர்க் பத்திரிக்கை கூறுகிறது.
- கர்சன்பாய் பட்டேல், குஜராத்தைச் சேர்ந்த இவர் நிர்மா நிறுவனத்தின் தலைவர். இவரின் சொத்து மதிப்பு 6.6 பில்லியன் டாலர் என ஃபுளூம்பெர்க் கணக்கிட்டுள்ளது ஆரம்பத்தில் சோப்பு பவுடர் தயாரிக்கும் பிரதானமான தொழிலைச் செய்து வந்தாலும் பிறகு இரசாயனங்கள் உற்பத்தி செய்யும் தொழிலையும் (அல்கையில் பென்ஸின், சோடியம் சிலிகேட், சோடா ஆஸ்) செய்துவருகிறார். 2014-ல் இருந்து சிமெண்ட் தொழிலிலும் ஈடுபட்டு வருகிறார்.
- சந்துரு ரகேஜா. இவருடைய சொத்து மதிப்பு 3.6 பில்லியன் டாலராகும் ரியல் எஸ்டேட் ஹோட்டல் போன்ற தொழில்களில் இவரது நிறுவனமான பிரஹேஜா கார்ப்பரேஷன் ஈடுபட்டுள்ளது.
- ஆச்சார்ய பாலகிருஷ்ணா, பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர். இவருடைய சொத்து மதிப்பு ஏறத்தாழ 3.8 பில்லியன் பாபா ராம்தேவும் ஆச்சாரியாவும் சேர்ந்து தான் பதஞ்சலி நிறுவனத்தை ஆரம்பித்தனர் ராம்தேவ் 2014-க்கு முன்பு ஊழல் ஒழிப்பு என்ற போர்வையில் மோடிக்கு ஆதரவாக மிகத் தீவிரமாக பிரச்சாரம் செய்து வந்தார். மோடியின் ஆட்சி ஒன்றியத்தில் அமைந்த பிறகு ஆயுர்வேதத்திற்கென்று தனி அமைச்சகமே உருவாக்கப்பட்டது. இது பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்தின் வளர்ச்சிக்கு மிகவும் சாதகமாக அமைந்தது. கிட்டத்தட்ட ஹிந்துஸ்தான் யுனிலிவர் நிறுவனத்திற்கு போட்டியாக வரும் அளவிற்கு பதஞ்சலி நிறுவனம் கடந்த 10 ஆண்டுகளில் வளர்ந்துள்ளது.
- ஆயுர்வேதப் பொருட்கள் தயாரிப்பதில் தொடங்கி சோப்பு, ஷாம்பு அழகு சாதப்பொருட்கள், உணவுப்பொருட்கள், சமையல் எண்ணெய் உற்பத்தி, பக்தி தொலைக்காட்சி என பல தொழில்களில் பதஞ்சலி ஈடுபட்டுள்ளது. மோடி அரசாங்கத்தின் உதவியின்றி இவ்வளவு பெரிய சாம்ராஜ்யத்தை ராம்தேவால் கட்டியிருக்க முடியாது. சில ஆண்டுகளுக்கு முன்பு திவாலான ருச்சி சோயா நிறுவனத்தை மோடியின் உதவியுடன் அடிமாட்டு விலைக்கு பதஞ்சலி வாங்கியது. இதன் மூலமே சமையல் எண்ணெய் உற்பத்தியில் கால்பதித்தது
ஒருவேளை மோடியின் தாயார் இன்று உயிரோடு இருந்திருந்தால், மோடி மனிதப் பிறவியா அல்லது குந்தி கர்ணனை பெற்றெடுத்தது போல பிறந்த தெய்வப் பிறவியா அல்லது பிள்ளையாரைப் போல வேதகாலத் தொழில்நுட்பத்தினால் (பிளாஸ்டிக் சர்ஜெரி) உருவாக்கப்பட்ட அதிசயப் பிறவியா என்று கேட்டுத் தெரிந்திருக்கலாம். இப்போதும்கூட மோடியின் உடன் பிறந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். இருந்தபோதிலும் பெரும்பான்மையான உழைக்கும் மக்களை கசக்கி பிழிந்து அவர்களுடைய இரத்தத்தை பெரும் முதலாளிகளின் லாபமாக மாற்றுவதற்காகவும், காவி-கார்பரேட் பாசிச திட்டத்தை அமல்படுத்துவதற்காகவும் எடுத்துள்ள இழிபிறவியை கடவுள் தனக்கு வழங்கியிருக்கும் சக்தியாக நம்புவது சுயமோகிகளுக்கே (Narcissist) உரிய பண்பாகும். இதனை ஆகப் பெரும்பான்மையான உழைக்கும் மக்கள் நன்கு அறிந்திருப்பதினால் மோடி ஒரு பாசிச பிறவி என்றே நம்புகிறார்கள்.
”மதம் ஒரு அபின் (போதை வஸ்து)” என்றார் காரல் மார்க்ஸ். மக்கள் தங்களது துன்பங்களிலிருந்து விடுபடுவதற்கு கடவுள்கள் ஒருபோதும் பயன்படுவதில்லை. மேலும் மதம் மக்களை அறியாமைக்குள் தள்ளி, நிரந்தரமாகச் சுரண்டுவதற்கான ஒரு தந்திரமேயாகும். அதுபோலவே ‘தெய்வப்பிறவியான’ மோடியும் நாடுமுன்னேற்றம், பொருளாதார சீர்திருத்தம், உள்நாட்டில் உற்பத்தி (Make in India), சனாதன தர்மம் என்று சொல்வதெல்லாம் மக்களை ஓட்டச் சுரண்டுவதற்கும், புதிய பெரும்முதலாளிகளை உருவாக்குவதற்கும் தான். எனவே மக்கள் நலனுக்கு பயன்படாமல் முட்டுக்கட்டையாக இருக்கும் இவை இரண்டையும் (மோடியும்-கடவுளும்) ஒழித்துக் கட்டாமல் உழைக்கும் மக்களுக்கு விடிவில்லை.
- அழகு