2024 தேர்தலில் மோடி அரசுக்கு சத்தமின்றி அதேசமயம் வலிமையான எதிர்ப்பாக குடிமைச் சமூகம் உருவாகிறது! – பரகலா பிரபாகர்

எவ்வாறாயினும், மோடி அரசைப் பொறுத்தவரை, தற்போதைய ஆட்சியை இழப்பது மிகவும் ஆபத்தானது என்பதால் தோல்வி ஏற்பட்டால் அவர்கள் அமைதியாக பதவியை விட்டு வெளியேற வாய்ப்பில்லை. தோல்வியைத் தடுக்கும் பல நகர்வுகளை அவர்கள் மேற்கொண்டு வருவது நம் கண்முன்னே தெரிகிறது.

 

மோடி ஆட்சியை எதிர்க்கும் பல அரசியல் கட்சிகளும், கூட்டு இயக்கங்களும் இந்தப் பொதுத் தேர்தலில் உறுதியான போராட்டத்தை நடத்திவருகின்றன. ஆனால், இவையெல்லாவற்றையும் விட சத்தமின்றி, அதேசமயம் மிகவும் வலிமையான எதிர்ப்பை குடிமைச் சமூக அமைப்புகள் (மோடி எதிர்ப்பில் முன் நிற்கும் விவசாயிகள், தொழிலாளர் அமைப்புகள், மற்றும் இதர மக்கள் திரள் அமைப்புகள்) முன்வைக்கிறது.

நாடு முழுவதிலுமிருந்து ஏராளமான குடிமைச் சமூக அமைப்புகள், ஆட்சி அதிகாரத்தைப் பெற வேண்டும் என்ற லட்சியம் இல்லாமல், நமது குடியரசின் அடிப்படை மதிப்புகளை மீட்டெடுக்க கற்பனை செய்ய முடியாத ஆர்வத்துடன் செயல்பட்டு வருகின்றன. மோடி ஆட்சியின் தோல்வி அவர்களின் முயற்சியின் பலனாக இருக்கும். எதிர்க்கட்சிகள் அந்த முயற்சிகளின் தற்செயலான பயனாளிகளாக மட்டுமே இருக்கப் போகின்றன.

எவ்வாறாயினும், மோடி அரசைப் பொறுத்தவரை, தற்போதைய ஆட்சியை இழப்பது மிகவும் ஆபத்தானது என்பதால் தோல்வி ஏற்பட்டால் அவர்கள் அமைதியாக பதவியை விட்டு வெளியேற வாய்ப்பில்லை. தோல்வியைத் தடுக்கும் பல நகர்வுகளை அவர்கள் மேற்கொண்டு வருவது நம் கண்முன்னே தெரிகிறது. ஆட்சி பறிபோவது குறித்து அவர்கள் ஏன் கவலைப்பட வேண்டும்? பதவி இல்லை என்றால் என்ன பயம்? அவர்களுக்கு இழப்பதற்கு என்ன இருக்கிறது? இவற்றையெல்லாம் யோசிக்கும் முன் தோல்வியை தடுக்க அவர்கள் இதுவரை மேற்கொண்ட சூழ்ச்சிகளை நாம் நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும்.

இந்த ஆட்சியானது தேர்தல் ஆணையர்களைத் தேர்வு செய்வதிலும், நியமனத்திலும் உச்ச நீதிமன்றத்தின் பங்கை இல்லாதொழித்துள்ளது. மோடி அரசால் நியமிக்கப்பட்ட தேர்தல் ஆணையர்கள், அரசின் ஏவலாளாக செயல்படாமல் தங்கள் கடைமையைச் செய்வார்கள் என்பது சந்தேகமே. ஏனெனில் தேர்தல் ஆணையத்தின் நடுநிலைத் தன்மை தற்போது கேள்விக்குறியாகியுள்ளது என்பது கவலைக்குரிய உண்மையாகும். தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள பகுத்தறிவற்ற, தேவையில்லாத நீண்ட தேர்தல் அட்டவணை கூட ஆளுங்கட்சிக்கு சாதகமாகவும் அதன் விருப்பத்தை நிறைவேற்றும், ஆணையத்தின் நோக்கத்தை வெளிப்படுத்துகிறது. பிரதம மந்திரியும், ஆளும் கட்சித் தலைவர்களும், தேர்தல் நடத்தை விதிகளை வெளிப்படையாக மீறும் போது, அவர்களிடம் காட்டப்படும் அசாதாரணமான கனிவு, தேர்தல் ஆணையத்தின் பாரபட்சமற்ற தன்மையை மேலும் சந்தேகத்திற்குரியதாக்குகிறது.

இந்த ஆட்சியானது, தனது முக்கிய போட்டியாளரான காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகளை முடக்கி, அதனை முடக்கியது. இது ஆட்சியில் உள்ள ஒரு முதல்வரையும், முன்னாள் முதல்வர் ஒருவரையும் சிறையில் அடைத்தது. இந்த இரண்டு தலைவர்களும் தனக்கு எதிராக பிரச்சாரம் செய்வதை தடுத்து எதிர்க்கட்சிகளின் தாக்குதலை மிகவும் பலவீனப்படுத்தியது.

தேர்தல் நடைமுறையையே கேள்விக்குறியாக்கியது. மேலும் தனது வேட்பாளர்களை போட்டியின்றி தேர்வு செய்ய நியாயமற்ற முறையில் செயல்படுவதுடன் தனது அதிகாரத்தையும் பயன்படுத்துகிறது. பிரதான எதிர்க்கட்சி வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் செல்லாதவை என நிராகரிக்கப்படுகின்றன. சிறிய கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் வேட்புமனுக்களை வாபஸ் பெறுமாறு அழுத்தம் கொடுக்கப்பட்டது, சில சந்தர்ப்பங்களில், அவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்வதிலிருந்து தடுக்கப்பட்டனர். ஆளும் கட்சிக்கு எதிராக வாக்களிப்பார்கள் என சந்தேகிக்கப்படும் பல இடங்களில், மக்கள் வாக்களிக்க விடாமல் தடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அரசாங்கத்தின் அமலாக்கதுறையும், புலனாய்வு அமைப்புக்களும் எதிர்க் கட்சிகளின் தலைவர்களை மிரட்டித் தங்கள் பக்கம் சேர நிர்ப்பந்திக்க அனுப்பப்பட்டன. சில பிராந்தியக் கட்சிகளின் தலைவர்கள் ஆளும் கூட்டணியில் சேர பகீரங்கமாகவே மிரட்டப்பட்டனர்.

மோடியோ தான் மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவது உறுதி என அறிவிக்க அரசு மேடைகளைப் பயன்படுத்தினார். அவர் பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது கூட தான் மீண்டும் ஆட்சிக்கு வருவது உறுதி என திட்டவட்டமாக அறிவித்ததுடன், இத்தனை எண்ணம் (400) இடங்களில் வெற்றி பெறுவேன் என பிரகடனப்படுத்தினார். தன் மீதான அதிருப்தியின் காரணமாக, தேர்தலில் மக்களின் வாக்குகளால் தோற்கடிக்கப்பட காத்திருக்கும் ஒரு நொண்டிக் குதிரை என்பதை மறைக்க என்னவெல்லாம் செய்ய முடியுமோ அனைத்தையும் அவர் செய்தார்.

ஆட்சியை இழப்பதன் மூலம் அவர்கள் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் என்ன என்பதை இப்போது பார்ப்போம்.

தேர்தல் பத்திரங்கள் பற்றிய விவரங்கள் பொது வெளியில் வருவதைத் தடுக்க ஆட்சியாளர்கள் மேற்கொண்ட தீவிரமான முயற்சிகள் இப்போது அம்பலமாகியுள்ளன. உச்ச நீதிமன்றத்தின் ஆணை கட்டாயப்படுத்தியதன் காரணமாகத்தான், தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு அளிக்கப்படும் நன்கொடைகளின் விவரங்களை இந்திய ஸ்டேட் வங்கியும் தேர்தல் ஆணையமும் கடைசியில் வெளியிட வேண்டியதாயிற்று. ஆளும் கட்சிக்கும் அதன் நன்கொடையாளர்களுக்கும் இடையே பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு ரகசிய பேரங்கள் எப்படி நடந்தன என்பது இப்போது வெளிப்படையாகியுள்ளன. இந்தச் சூழலில் ஆளுங்கட்சி தோல்வியடைந்தால், அடுத்து வரும் அரசாங்கத்தின் விசாரணை இன்னும் பல மோசமான விவரங்களை வெளிப்படுத்தக்கூடும்.

ஆட்சியை இழந்தால், பிஎம் கேர்ஸ் நிதி விவரங்களும் வெளியாகும் என்று ஆளும் கட்சி கவலைப்பட வாய்ப்புள்ளது. ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான முழுமையான விசாரணையை சீலிடப்பட்ட கவரில் வைத்து உச்ச நீதிமன்ற அமர்வுக்கு அளித்ததன் மூலம் ஆளும் கட்சி அதனை மூடி மறைத்தது. தற்போது இந்த ஒப்பந்தம் தொடர்பான விசாரணை மீண்டும் தொடங்கப்பட வாய்ப்புள்ளது. இராணுவ உளவு மென்பொருளான பெகாசஸைப் பயன்படுத்தியது இன்னும் முழுமையாக விசாரிக்கப்படவில்லை. அந்த மென்பொருளை அரசு வாங்கியதா என்ற கேள்விக்கு அரசாங்கத்திடமிருந்து ஆம் அல்லது இல்லை என்ற எளிய பதிலைக் கூட உச்ச நீதிமன்றத்தால் பெற முடியவில்லை. இனி இது குறித்து விரிவான விசாரணை நடக்கலாம்.

பல பொதுச் சொத்துக்களை அடிமாட்டு விலைக்கு தனது கூட்டாளிகளுக்கு விற்றது எப்படி என்பது வெளியேதெரிந்தால் இந்துத்துவா கும்பலுக்கும் தரகு முதலாளிகளுக்கும் உள்ள உறவு அம்பலப்பட்டுப்போகும். கடந்த 10 ஆண்டுகளில் பாஜக செலவழித்ததற்கும், நன்கொடையாக பெற்றதாக அதிகாரப்பூர்வமாக கூறியதற்கும் இடையே சுமார் 60,000 கோடி ரூபாய் இடைவெளி இருப்பதாக புலனாய்வுப் பத்திரிகையாளர்கள் கண்டறிந்துள்ளனர். இது குறித்து விசாரணை நடத்தப்படலாம் என தற்போதைய ஆட்சியாளர்கள் அஞ்சுகின்றனர்.

மோடி அரசு மீண்டும் ஆட்சிக்கு வரவில்லை என்றால், அதன் பல்வேறு ஊழல்கள், சூழ்ச்சிகள், அது மூடி மறைத்த பல விசயங்கள் மக்கள் மத்தியில் வெளிப்படும். மோடி ஆட்சி அளித்த தவரான தகவல்கள், நடத்திய பணமோசடிகள், ஊழல் பேரங்கள், வெளிநாடுகளில் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் ஆகியவை விசாரிக்கப்படும். அது தற்போதைய ஆளும் ஆட்சியையும் அதனைப் பின்னால் இருந்து இயக்கும் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தையும் நெருக்கடியில் தள்ளிவிடும்.

இந்த தகவல்கள் எல்லாம் வெளியே வந்தால், இழிவுபடுத்தப்பட்டு மக்கள் மத்தியில் அவர்கள் மீதான நம்பிக்கையினை இழக்க நேரிடும். தங்கள் மரியாதையை மீட்டு, மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான வாய்ப்பு அவர்களுக்கு கிடைக்க பல பத்தாண்டுகள் ஆகலாம். மோடி-ஷாவின் அத்துமீறல்கள் அம்பலப்படுவதன் மூலம் இந்துத்துவா சக்திகள் சந்திக்கும் பேரிழப்பு என்பது, மகாத்மா காந்தியின் படுகொலைக்குப் பிறகு அவர்கள் சந்தித்த பின்னடைவுக்கு நிகரானதாக இருக்கும்.

தங்களது மடியில் இவ்வளவு கணத்தைக் கட்டிக்கொண்டிருக்கும் பாஜகவும், ஆர்.எஸ்.எஸ்.சும், தேர்தல் தோல்வி குறித்து பயப்படுவதில் ஆச்சர்யமில்லை. எனவே அவர்கள் அதிகாரத்தைத் தக்கவைக்க தங்களால் முடிந்த அனைத்தையும் செய்வார்கள். அதிகாரத்த இழப்பது என்பது அவர்களது இந்து ராஷ்டிரா கனவிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும். ஆர்.எஸ்.எஸ்.சின் நூற்றாண்டு நிறைவடைய இன்னும் ஒரு வருடம் உள்ள நிலையில், அத்தகைய பின்னடைவை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியாது.

எனவே, இந்தத் தேர்தலைத் தங்களுக்குச் சாதகமாக திருப்புவதற்கு  எல்லாவற்றையும் செய்ய மோடி அரசு முயற்சிக்கும். முந்தைய பொதுத் தேர்தல்களைப் போலன்றி, தற்போதைய தேர்தல் ஜூன் 1 ஆம் தேதி வாக்குப்பதிவு முடிவடைந்து ஜூன் 4 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டதுடன் முடிவடைய வாய்ப்பில்லை.

வாக்கு எண்ணும் நாளைத் தொடர்ந்து கொந்தளிப்பான வாரங்களை இந்தியா எதிர்கொள்ள வேண்டியிருக்கும். தேர்தல் எந்திரத்தில் மக்களின் உண்மையான விருப்பம்தான் பதிவாகியுள்ளதா என்பதை உத்திரவாதப்படுத்துவதற்கு எதிர்க்கட்சிகள் தயாராக இல்லை.

அத்தகைய சந்தர்ப்பத்தில் மக்கள் சமூகம்தான் தனது வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு மோடி அரசு தேர்தலைத் திருடிக் கொண்டு போவதைத் தடுக்கவும், நமது ஜனநாயகத்தை மீட்டெடுக்கவும் தயாராகவும் வேண்டும்.

  • பரகலா பிரபாகர்

(மொழிபெயர்ப்பு – வேந்தன்)

 

நன்றி

  • TheWire.in

(https://thewire.in/government/civil-society-emerges-as-quiet-but-formidable-challenger-to-the-modi-govt-in-the-2024-elections)

 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன