பரகலா பிரபாகரின் கட்டுரையைத் திரிக்கும் தீக்கதிர்:
பாசிச எதிர்ப்பில் மக்கள் மீது நம்பிக்கையற்று,
ஆளும் வர்க்கக் கட்சிகளிடம்
சரணடைந்து கிடப்பதன் வெளிப்பாடே!

“அத்தகைய சந்தர்ப்பத்தில் [அதாவது அந்த அமளிதுமளியான வாரங்களில்] மக்கள் சமூகம்தான் தனது வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு மோடி அரசு தேர்தலைத் திருடிக் கொண்டு போவதைத் தடுக்கவும், நமது ஜனநாயகத்தை மீட்டெடுக்கவும் தயாராகவும் வேண்டும்”

 

 

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவரும், மோடி அரசைத் தொடர்ந்து விமர்சித்து வரும் முக்கியமான முதலாளித்துவ அறிவுஜீவியுமான பரகலா பிரபாகர் கடந்த மே 9 ஆம் தேதி தி வயர் இணையதளத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கட்டுரையை எழுதியுள்ளார். “தேர்தலில் பாசிசத்தை வீழ்த்திவிடலாம்” அல்லது “ஜூன் 4-க்குப் பிறகு மோடி தோற்றால் மூச்சுவிடவாவது அவகாசம்” கிடைக்கும் என்று நம்பிக்கொண்டிருந்தவர்கள் மத்தியில் ஒரு மெளனமான பூகம்பத்தை நிகழ்த்தியுள்ளது, அக்கட்டுரை. அதை சி.பி.எம். கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான தீக்கதிர் மே 13 ஆம் தேதி மொழி பெயர்த்து பிரசுரித்துள்ளது. பரகலா பிரபாகரின் கட்டுரையில் உள்ள கருத்துக்களைத் திரித்தும், அவர் கூற வருவதைத் தவறாக வியாக்கியானப்படுத்தியும், தமக்கு ஒவ்வாத சில முக்கியமான பகுதிகளை வெட்டியெறிந்தும் பிரசுரித்துள்ளது.

பரகலா பிரபாகர் கட்டுரையை தமிழ் வாசகர்கள் பலர் படித்திருக்க வாய்ப்பில்லை என்பதால், அதன் சாரம்சத்தை மிகச் சுருக்கமாகக் கூறுகிறோம்:

2024 தேர்தலில் மோடி அரசு தோல்வியுற்றால் அத்தோல்வியை ஒப்புக் கொண்டு அவர்கள் பதவியில் இருந்து விலக மாட்டார்கள். கடந்த பத்தாண்டுகளில் மோடி அரசு பல்வேறு ஊழல்கள், முறைகேடுகள், தில்லுமுல்லுகள் செய்துள்ளது. எதிர்க்கட்சிகளின் கூட்டணி அமைந்தால் இந்த முறைகேடுகள், தில்லுமுல்லுகள் எல்லாம் அம்பலமாகும். காந்தி கொல்லப்பட்ட பிறகு ஆர்.எஸ்.எஸ்.ஸுக்கு ஏற்பட்ட பின்னடைவைப் போன்ற ஒரு பின்னடைவை இது உருவாக்கிவிடும். அவர்கள் இத்தகைய நிலையைக் கண்டு அஞ்சுகிறார்கள். ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் ஜூன் 4 ஆம் தேதியோடு முடிவடைந்துவிடும் வழக்கமான ஒரு தேர்தல் அல்ல. தேர்தல் முடிவுகளைத் திருடிக் கொள்ள மோடி கும்பல் எந்த எல்லைக்கும் செல்லும் என்பதுமட்டுமல்ல, ஜூன் 4 ஆம் தேதிக்குப் பிறகு இந்தியா அமளிதுமளியான (tumultuous) வாரங்களைக் காணலாம்.

எதிர்க்கட்சிகள் இத்தகைய நிலையை எதிர்கொள்ள தயாரிப்பின்றி (ill-prepared) உள்ளனர். இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் கூட அந்த வெற்றி இந்தியா கூட்டணியின் பயனால் கிடைத்த வெற்றியல்ல. தேர்தலில் குறைவான ஆதாயத்தை எதிர்பார்க்கும் பல்வேறு குடிமைச் சமூக அமைப்புகள் செய்த பெருமுயற்சியின் வெற்றிதான். அந்த முயற்சியின் தற்செயலான பயனாளிகள்தான் (incidental beneficiaries) இந்தியா கூட்டணியினர். எனவே, அத்தகைய அமளிதுமளியான வாரங்களில் மக்கள் தான் தனது வேட்டியை மடித்துக் கட்டி (roll up its sleeves) தேர்தலை மோடி கும்பல் திருடாமல் இருப்பதற்காகவும் நமது ஜனநாயகத்தைக் காப்பதற்காகவும் நெஞ்சுரத்தோடு தயாராக வேண்டும்.

இதுதான் அவர் கட்டுரையின் சாரம்சம்.

அதாவது ஜூன் 4 ஆம் தேதிக்குப் பிறகு மோடி கும்பல் பதவியை விட்டு இறங்காமல் வன்முறை செய்தால், எதிர்க்கட்சிகளால் அதை  எதிர்கொள்ள முடியாது; மக்கள்தான் களத்தில் வேட்டியை மடித்துக் கட்டி நெஞ்சுரத்தோடு இறங்கி நிலவும் ஜனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டும் என்பதைத்தான் பரகலா பிரபாகர் கூறுகிறார்.

இந்த உள்ளடக்கத்தை அப்படியே திரித்து, முக்கியமான பகுதிகளை வெட்டியெறிந்து மொழிபெயர்ப்பு என்ற பெயரில் வெளியிட்டுள்ளது சி.பி.எம். நாளேடு.

இதைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

“Scores of civil society organisations from across the country with little ambition to gain office are working with unimaginable zeal to rescue the core values of our Republic. The likely defeat of the Modi regime will be more of an outcome of their efforts. Opposition parties are merely going to be the incidental beneficiaries of those efforts.”

பரகலா பிரபாகரின் இவ்வரிகளை நாம் அப்படியே வரிக்கு வரி மொழிபெயர்த்தால் பின்வருமாறுதான் வர வேண்டும்:

“அதிகாரத்தை அடைய வேண்டுமென்ற நோக்கம் மிகச் சிறிய அளவில் மட்டுமே உள்ள [அதாவது பெரிய அளவில் அதிகார ஆசையற்ற] எண்ணற்ற குடிமைச் சமூக அமைப்புகள், நமது குடியரசின் விழுமியங்களை மீட்டெடுக்க நாடுமுழுவதும் கற்பனைக்கெட்டாத வகையில் வேலைசெய்து வருகின்றன. மோடி அரசின் வீழ்ச்சி என்ற நாம் விரும்பும் நிகழ்வானது அவர்களது பெருமுயற்சியின் விளைவாகவே இருக்கும். எதிர்க்கட்சிகளெல்லாம் வெறுமனே (merely) அத்தகைய [குடிமைச் சமூக அமைப்புகளின்] பெருமுயற்சியின் எதேச்சையான பயணாளிகளாகத்தான் இருக்கப் போகிறார்கள். (Opposition parties are merely going to be the incidental beneficiaries of those efforts.)”

இந்த வரிகளை பின்வருமாறு மொழிபெயர்த்துள்ளது தீக்கதிர்

“இந்தியா முழுவதும் ஏராளமான மக்கள்  சமூக அமைப்புகள் ஆட்சி அதிகார ஆசைகள் இன்றி குடியரசின் அடிப்படையான மதிப்புகளை மீட்க, யாரும் கற்பனை செய்ய முடியாத அளவு வைராக்கியத்துடன் வேலை செய்து வருகின்றனர். மோடி ஆட்சியை வீழ்த்த இவர்களது  முயற்சி பெரும் பலனை கொடுக்கும். மோடியை வீழ்த்தப் போராடிவரும் எதிர்க்கட்சிகளின் கூட்டணி இந்த குடிமைச் சமூகத்தின் உதவியில் நல்ல பலனை அடைய உள்ளன. (அழுத்தம் எமது)

பரகலா பிரபாகர் கூற வருவது என்ன?

மோடியின் வீழ்ச்சி எண்ணற்ற குடிமைச் சமூக அமைப்புகள் செய்த முயற்சிகளின் விளைவே. எதிர்க் கட்சிகள் செய்த முயற்சிகளின் விளைவல்ல. எதிர்க் கட்சிகள் அத்தகைய பெருமுயற்சியின் தற்செயலான பயனாளிகள்தான்.

தீக்கதிர் கூறுவது என்ன?

குடிமைச் சமூக அமைப்புகள் செய்துவரும் வேலைகள் மோடி ஆட்சியை வீழ்த்த பெரும் பயனைக் கொடுக்கும். எதிர்க்கட்சிகள் இந்த முயற்சியால் பலனடைய உள்ளனர்.

“Merely” = “வெறுமனே” “incidental beneficiaries” = “எதேச்சையான பயனாளிகள்”  போன்ற வார்த்தைகளைத் தவிர்த்தது மட்டுமல்ல. எதிர்க்கட்சிகளுக்குப் பல விசயங்கள் உதவி செய்தது போல குடிமைச் சமூக அமைப்புகளின் முயற்சிகளும் உதவியுள்ளன என்று திரித்து எழுதியுள்ளனர். இதற்குப் பெயர் மொழிபெயர்ப்பா? அயோக்கியத்தனமா?

மேலும்,

“India may have to brace up for tumultuous weeks following the counting day. Opposition political parties seem ill-prepared to ensure that the will of the people is faithfully reflected in the voting machines.”
“In the event, it is the civil society that will have to roll up its sleeves and be prepared to rescue our democracy and prevent the current regime from stealing this election.”

இவ்வரிகளை அப்படியே வரிக்கு வரி மொழிபெயர்த்தால் பின்வருமாறுதான் வர வேண்டும்.

“ஓட்டு எண்ணிக்கைக்கு [ஜூன் 4] நாளுக்கு அடுத்து இந்தியா ஒரு அமளிதுமளியான வாரத்தை எதிர்கொள்ள நெஞ்சுரத்தோடு தயராக வேண்டியிருக்கலாம். தேர்தல் எந்திரத்தில் மக்களின் உண்மையான விருப்பம்தான் பதிவாகியுள்ளதா என்பதை உத்திரவாதப்படுத்துவதற்கு எதிர்க்கட்சிகள் மோசமான தயாரிப்பில் (ill-prepared) உள்ளதாகத் தெரிகிறது”

“அத்தகைய சந்தர்ப்பத்தில் [அதாவது அந்த அமளிதுமளியான வாரங்களில்] மக்கள் சமூகம்தான் தனது வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு மோடி அரசு தேர்தலைத் திருடிக் கொண்டு போவதைத் தடுக்கவும், நமது ஜனநாயகத்தை மீட்டெடுக்கவும் தயாராகவும் வேண்டும்”

ஆனால் தீக்கதிர் இதைப் பின்வருமாறு மொழிபெயர்த்துள்ளது

“வாக்கு எண்ணிக்கைக்கான நாள் நெருங்க நெருங்க மிக மோசமான கலவரங்களை எதிர்கொள்ளக்கூடிய நாட்களை இந்தியா சந்திக்க வேண்டி இருக்கும். வாக்குப்பதிவின் போது தங்களுக்கு விருப்பமான கட்சிக்குத் தான் மக்களின் வாக்குகள்  போய்ச் சேருகிறதா என்பதை உறுதி செய்திட எதிர்க்கட்சிகள் இன்னும் கூடுதல் விழிப்புடன் இருக்க வேண்டியது மிக மிக அவசியம்.” 

அதாவது இங்கும் எதிர்க்கட்சிகளை “மோசமான தயாரிப்பில் உள்ளனர்” என்று பரகலா பிரபாகர் விமர்சிக்கும் பகுதிகளை திட்டமிட்டு தீக்கதிர் வெட்டியெறிந்துள்ளது. அதைவிட முக்கியமாக, மக்கள்தான் களத்தில் இறங்க வேண்டும் என்ற பொருளில் civil society that will have to roll up its sleeves என்று பரகலா பிரபாகர் எழுதியுள்ள பகுதிகள் முற்றிலும் காணவில்லை.

000

சி.பி.எம்.இன் அதிகாரப் பூர்வ ஏடாக வெளிவரும் தீக்கதிர் மேற்கூறிய தவறுகளை தெரியாமல் செய்யவில்லை. தவறுதலாக சில விடுபடல்கள், குறைபாடுகள் என்று அவற்றைப் பார்க்க முடியாது. எதிர்க்கட்சிகளை பரகலா பிரபாகர் கடுமையாக விமர்சிக்கும் பகுதிகளும், ஜனநாயகத்தைக் மீட்டெடுக்க மக்கள்தான் களத்தில் இறங்க வேண்டும் என்ற பகுதிகளும் மிகத் தெளிவாக திட்டமிட்டு நீக்கப்பட்டுள்ளன. திரிக்கப்பட்டுள்ளன.

பின்னர் தீக்கதிர் இவ்வாறு செய்யக் காரணம்தான் என்ன?

பா.ஜ.க.வை தேர்தலின் மூலம் ஆட்சியதிகாரத்தில் இருந்து இறக்கிவிட்டால் எல்லாம் மாறிவிடும், பாசிசம் வீழ்ந்துவிடும் என்று சி.பி.எம். உள்ளிட்ட எல்லா இந்தியா கூட்டணி கட்சிகளும் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இன்று இந்திய அளவில் முக்கியமான ஒரு அறிவுஜீவி அதைக் கேள்விக்குள்ளாக்கும் வகையில் ஒரு கட்டுரையைப் பிரசுரிக்கிறார். மோடி கும்பலின் நடவடிக்கைகள், தேர்தலில் தோற்றால் அதற்கு ஏற்படவிருக்கும் நெருக்கடி போன்றவற்றைக் கொண்டு அவர் மேற்படி கருத்துக்களைக் கூறுகிறார்.

நமது இணையதள வாசிகள் போல இந்தியா கூட்டணிக்கு எதிராக யார் என்ன பேசினாலும் அது பா.ஜ.க.வுக்கு சாதகம் என்ற பிரமையெல்லாம் அவருக்கு இல்லை. இந்தியா கூட்டணியின் வலிமையை சரியாக அறிந்தே வைத்துள்ளார். அந்த அடிப்படையில் அக்கூட்டணியின் வலிமையை வெளிப்படையாகக் கேள்விக்குள்ளாக்குகிறார். ஜூன் 4-க்குப் பிறகு மோடி கும்பல் அத்தகைய கலவரத்தைக் கட்டவிழ்த்துவிட்டால் அதை இந்தியா கூட்டணியால் எதிர்கொள்ள முடியாது என்ற உண்மையைப் போட்டுடைக்கிறார். மிக முக்கியமாக, முதலாளித்துவ அறிஞரான அவர் மக்களின் மீது நம்பிக்கை வைத்து மக்களைக் களத்தில் இறங்குமாறு அழைக்கிறார்.

சி.பி.எம். உள்ளிட்ட இந்தியா கூட்டணியினர் மக்கள் மத்தியில் விதைத்து வந்த பிரமைக்கும், பொய் நம்பிக்கைக்கும் நேரெதிரான கருத்தாக இது உள்ளது. அதேசமயம் இக்கருத்தைக் கூறிய நபரான பரகலா பிரபாகர் அறிவுத் தளத்தில் தவிர்க்க முடியாத ஒருவருமாகவும் உள்ளார்.

எனவே பரகாலா பிரபாகரின் கருத்துக்கள் இவர்களை அச்சுறுத்துகின்றன. இந்த சுடுகின்ற எதார்த்த உண்மையை நேர்மையுடன் பரிசீலிக்க இவர்கள் தயாராக இல்லை. தமக்கு விருப்பமாக இல்லாத அதேசமயத்தில் உண்மையாக உள்ள ஒரு கருத்தை எதிர்கொள்வதே அவர்களுக்கு அச்சமாக உள்ளது.

மிக முக்கியமாக பாசிசத்தை எதிர்ப்பது என்ற பெயரில் ஆளும் வர்க்கக் கட்சிகளிடம் சரண்டைந்துள்ள தமது உண்மை முகம் அம்பலமாகும்; குறைந்தபட்சம் கேள்விக்குள்ளாகும்; மக்கள்தான் ஜனநாயகத்தை மீட்க வேண்டுமென்றால் மக்களைத் திரட்டியாக வேண்டும்; ஆனால் சி.பி.எம். உள்ளிட்ட எந்த இந்தியா கூட்டணிக் கட்சிக்கும் மக்களைத் திரட்டுவதில் எள்முனையளவும் நம்பிக்கையில்லை.

இவையெல்லாம்தான் சி.பி.எம். கட்சியின் தீக்கதிர் ஏடு இவ்வாறு கட்டுரையை வெட்டியும் திரித்தும் வெளியிடக் காரணமாகும். ஒருபுறம், பாசிசத்தை எதிர்ப்பது என்ற பெயரில் ஆளும் வர்க்கக் கட்சிகளிடம் சரணடைந்து கிடக்கும் சி.பி.எம். போன்ற போலி கம்யூனிஸ்டு கட்சிகள், மறுபுறம் மக்களைத் திரட்டாமல் இருப்பது மட்டுமல்ல, மக்களைத் திரட்டுவதில் நம்பிக்கையற்றும் நிற்கின்றன. இவர்களிடம் வேறென்ன எதிர்பார்க்க முடியும்.

நாம் விரும்பும்படி சமூக நிகழ்வுகள் நடப்பதில்லை; இருப்பதில்லை; இந்தியா கூட்டணி வென்று அமைதியான சூழல் ஏற்படவில்லை என்றாலும் “மூச்சுவிடும் அவகாசமேனும் கிடைக்கலாம்” என்று பலர் விரும்பலாம்; மோடி கும்பல் தோல்வியை ஒப்புக் கொண்டு கீழிறங்க வேண்டுமென்று விரும்பலாம். ஆனால் நமது விருப்பங்கள் புறநிலை உண்மையாக இருக்க வேண்டிய அவசியமில்லை.

பாசிசத்தை வீழ்த்த வேண்டுமென்று கருதுபவர்கள் தமது விருப்பத்தின் அடிப்படையில் அல்ல, புறநிலை உண்மைகளின் அடிப்படையிலிருந்து தமது பணிகளைத் தொடங்கியாக வேண்டும். அச்சமூட்டும் நடைமுறை உண்மைகளின் மீது அலட்சியமாகவும் பாராமுகமாகவும் இருப்பது மக்களை மரணக்குழியில் தள்ளுவதில்தான் போய் முடியும்!

பாசிசத்தை வீழ்த்த வேண்டுமெனக் கருதுபவர்கள் தேர்தல் மாயைகளை விட்டொழித்தாக வேண்டும். மக்களைத் திரட்டி பாசிசத்தை முறியடிக்க வேண்டிய பாதைக்கு அணி திரண்டே தீர வேண்டும். வேறு குறுக்கு வழிகள் ஏதுமில்லை!

  • ரவி

 

காண்க :

Civil Society Emerges as Quiet but Formidable Challenger to the Modi Govt in the 2024 Elections, Parakala Prabhakar

நாட்கள் நெருங்க நெருங்க பாஜக கொடூரமானதாக மாறும்! – பரக்கலா பிரபாகர்
 

One comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

  1. நேற்று இந்த தீக்கதிர் கட்டுரை படித்தேன். என்னடா இது குழப்பமாக இருக்கிறதே என்று நினைத்தேன், தற்போது தெளிவு பெற்றேன் நன்றி.