காவி-கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்த
தேர்தல் என்பது ஏமாற்று!
தெருவில் இறங்குவதே ஒரே மாற்று!
தமிழகம் தழுவிய பிரச்சார இயக்கம்,
பொதுக்கூட்டம், புரட்சிகர கலைநிகழ்ச்சி
பென்னாகரம்
ஏப்ரல் 14, மாலை 4 மணி
அன்பார்ந்த உழைக்கும் மக்களே, ஜனநாயக சக்திகளே!
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மோடியைத் தோற்கடித்துவிட்டால் “பாசிசம் வீழ்ந்து” வசந்தகாலம் வந்துவிடும் என்பதாக “இந்தியா” கூட்டணி பிரச்சாரம் செய்து வருகிறது. பா.ஜ.க. என்பது மற்ற கட்சிகளைப் போன்ற ஒரு கட்சியுமல்ல; பாசிசம் என்பது வெறுமனே ஒரு கட்சியின் ஆட்சி போய் இன்னொரு கட்சியின் ஆட்சி வருவதுமல்ல.
பாசிசம் என்பது என்ன? அது ஏன் வருகிறது?
பன்னாட்டு, உள்நாட்டு கார்ப்பரேட்டுகள் நமது நாட்டை வரைமுறையின்றிச் சூறையாடுவதற்காக வகுக்கப்பட்டதே தனியார்மய, தாராளமய, உலகமயம் என்ற மறுகாலனியாக்கக் கொள்கையாகும். இதனடிப்படையிலான, தேசிய கல்விக் கொள்கை, வேளாண் சட்டத் திருத்தம், தொழிலாளர் நலச் சட்டங்களை ஒழித்தல், மின்சார சட்டத் திருத்தம் போன்றவற்றை வெறித்தனமாக நடைமுறைப்படுத்தி அவற்றுக்கெதிராக எழும் எதிர்ப்புகளை ஈவிரக்கமின்றி கொடூரமாக அடக்கி ஒடுக்கி அப்பட்டமான முதலாளித்துவ சர்வாதிகாரத்தை நிலைநாட்டுவதற்கே பாசிசம் அணிவகுத்து வருகிறது.
ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க எனும் பார்ப்பனியக் கும்பல் தனது ஜனநாயக விரோதத் தன்மையின் காரணமாக பாசிசத்தை கொண்டு வருகிறது என்பது மட்டுமல்ல; அம்பானி, அதானி போன்ற இந்திய தரகு-முதலாளிகளும், ஏகாதிபத்திய முதலாளிகளும் கேள்விகேட்பாரின்றி உழைக்கும் மக்களைச் சுரண்டுவதற்காக, இருக்கிற கொஞ்ச நஞ்ச ஜனநாயக உரிமைகளையும் இரத்து செய்துவிட்டு, அப்பட்டமான, வெளிப்படையான முதலாளி வர்க்கத்தின் சர்வாதிகார ஆட்சியை நிறுவுவதே பாசிசத்தின் நோக்கமாகும்.
“இந்தியா” கூட்டணியின் பெரும்பாலான கட்சிகள் ஆளும் வர்க்கக் கட்சிகளாக இருப்பதால், இவ்வுண்மையை மக்களிடம் கொண்டு செல்லாமல் மூடி மறைக்கின்றன. இதனால், ஆட்சிக்கு வரும் எல்லாக் கட்சிகளையும் போல பா.ஜ.க.வும் தனது எதிரிகளைப் பழிவாங்குகிறது; எல்லாக் கட்சிகளையும் போலவோ, சற்று அதிகமாகவோ சாதி, மதவெறியைத் தூண்டி தேர்தல் ஆதாயத்திற்காக மக்களைப் பிளவுபடுத்துகிறது; எதிர்க் கருத்துக்களை முடமாக்க பத்திரிக்கையாளர்களை ஒடுக்குகிறது – என்ற வகையில்தான் மக்களாகிய நாமும் பார்க்கிறோம்.
எதிர்க்கட்சிகள் மீதும், சிறுபான்மையினர் மீதும் கூர் தீட்டப்படும் ஆயுதங்களெல்லாம், உழைக்கும் மக்களைப் பதம் பார்ப்பதற்காகவே காத்திருக்கின்றன. சிறுபான்மையினர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தும் இதே பாசிச குண்டர் படைகள்தாம், டெல்லியின் சிங்கு எல்லையில் போராடிய விவசாயிகள் மீதும் போராடும் இதர மக்கள் மீதும் கொலைவெறித் தாக்குதல்களைத் தொடுக்கின்றன. இன்று இசுலாமியர்களின் வீடுகளை இடிக்கும் புல்டோசர்கள், நாளை தனது அடிப்படைத் தேவைக்காகப் போராடும் மக்களின் வீடுகளை இடிக்கவே காத்திருக்கின்றன. பத்தாண்டுகளாக எதிர்க்கட்சிகளை வேட்டையாடிய நிறுவனங்கள்தாம் நாளை உழைக்கும் வர்க்கத்தை வேட்டையாடவுள்ளன.
ஜெர்மனியில் ஹிட்லர் ஆட்சியின் கீழ் இதேபோன்ற நிலைமையை மார்டின் நெய்மொல்லர் பின்வருமாறு எழுதுகிறார்: “முதலில் நாஜிகள் கம்யூனிஸ்டுகளுக்காக வந்தார்கள். நான் பேசவில்லை; ஏனென்றால் நான் ஒரு கம்யூனிஸ்ட் அல்ல. பின்பு தொழிற்சங்கவாதிகளுக்காக வந்தார்கள். நான் பேசவில்லை; ஏனென்றால் நான் ஒரு தொழிற்சங்கவாதியும் அல்ல; பிறகு யூதர்களுக்காக வந்தார்கள். நான் பேசவில்லை; ஏனெனில் நான் ஒரு யூதனும் அல்ல. இப்போது அவர்கள் என்னைத் தேடி வந்திருக்கிறார்கள், எனக்காகப் பேசுவதற்கு யாருமில்லை.” இந்த வரிகளின் வலியை இப்போது நாம் உணரவில்லை எனில் எப்போதுமே உணராமல் போவோம்.
காவி-கார்ப்பரேட் பாசிசத்தைத் தேர்தலில் வீழ்த்த முடியாது
உழைக்கும் மக்கள் மீது அப்பட்டமான சர்வாதிகாரத்தை நிறுவத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க எனும் பாசிசக் கும்பலை எப்படி வீழ்த்துவது?
அண்ணாமலை போன்ற தமிழக பா.ஜ.க.வினரின் கோமாளித்தனங்களை மட்டுமே பார்க்கும் தமிழக மக்களாகிய நாம் பாசிசக் கும்பலைப் பற்றி முழுமையாக உணராதவர்களாகவே இருக்கிறோம். இதுவரை உலகில் இருந்த / இன்று உலகில் உள்ள பாசிச பயங்கரவாத அமைப்புகளிலேயே மிகப்பெரியதும், மிகவலிமையானதும் நூறாண்டு அமைப்பு, இரண்டாயிரம் ஆண்டுகால பார்ப்பனிய சித்தாந்தப் பின்புலமும் கொண்டதுமான கொடிய பாசிச அமைப்புதான் ஆர்.எஸ்.எஸ்.
நாடுமுழுவதும் நூற்றுக்கணக்கான உதிரி அமைப்புகள்; ஆயுதம் தரித்த இரகசிய, அரை இரகசிய பாசிசப் படைகள்; தொண்டு நிறுனவங்கள், கல்வி நிறுவனங்கள் என்ற பெயரிலான 800-க்கும் மேற்பட்ட பிரச்சார அமைப்புகள் – என நாம் எண்ணிப் பார்க்கவே முடியாத அளவுக்கு பலமும் வலைப்பின்னலும் கொண்ட கொடிய பயங்கரவாத அமைப்பாகும். நூறு ஆண்டுகளாக வெறித்தனமான பிரச்சாரம், நடவடிக்கைகளின் விளைவாக பாசிசக் கருத்துக்களுக்கு ஆதரவான ஒரு மனநிலையை நாடு முழுவதிலும் வெற்றிகரமாக உருவாக்கியுள்ளது.
ஆர்.எஸ்.எஸ். மக்கள் மத்தியில் உருவாக்கியுள்ள “இந்துத்துவ” மனநிலையை எதிர்த்துச் செயல்பட முடியாமலும், “தாங்கள்தான் இந்துக்களுக்கு ஆதரவானவர்கள்” என்று இந்துக்களைத் தாஜா செய்தால்தான் ஓட்டுக் கிடைக்கும் என்ற நிலையிலும்தான் எதிர்க்கட்சிகளே இருக்கின்றன. காசுக்கு விலைபோகும் பிழைப்புவாதிகளைத் தாண்டி, கொள்கை ரீதியாகவே ஆர்.எஸ்.எஸ். கருத்துக்களை ஏற்றுக்கொண்ட பலர் அனைத்து ஆளும் வர்க்கப் பிழைப்புவாதக் கட்சிகளிலும் அனைத்து மட்டங்களிலும் நீக்கமற நிறைந்துள்ளனர்.
நாள்தோறும் சாகாக்கள் என்ற பெயரில் பாசிசவெறியூட்டும் வகுப்புகளை நடத்துவது மட்டுமின்றி, துப்பாக்கி சுடுவது, வாள் வீசுவது உள்ளிட்ட ஆயுதப் பயிற்சிகளும் அளிக்கப்பட்டுள்ள ஆர்.எஸ்.எஸ்.ஸின் ஆயுதமேந்திய நிழல் இராணுவங்கள் எப்போது வேண்டுமானலும் உழைக்கும் மக்கள் மீதான தாக்குதலுக்கு இறக்கிவிடத் தயார் நிலையில் உள்ளன. இத்தகைய படைகள்தாம் மக்கள் போராடும்போது உள்ளே புகுந்து அவர்களைப் படுகொலை செய்கின்றன. விவசாயிகள் போராட்டத்திலும், சி.ஏ.ஏ., எதிர்ப்புப் போராட்டத்திலும் நாம் கண்டது இதைத்தான்.
பிற கட்சிகளும் தனக்கான கூலிப்படைகளை வைத்துள்ளன என்பதும் அவற்றை ஏவி போராடும் மக்களை ஒடுக்கியுள்ளன என்பதும் உண்மைதான். ஆர்.எஸ்.எஸ்.ஸின் படையினர் அத்தகைய சாதாரண கூலிப்படைகள் அல்ல. மேலிருந்து கீழ் வரை பார்ப்பனிய சித்தாந்தத்தால் ஆயுதபாணியாக்கப்பட்டு, இரத்தத்தின் ஒவ்வொரு அணுவிலும் பாசிச நஞ்சேற்றப்பட்ட படைகளாகும். உதாரணமாக, உழைக்கும் மக்களின் நலனுக்காகப் போராடிய கல்புர்கி, கெளரி லங்கேஷ் உள்ளிட்டோரைச் சுட்டுக் கொன்றவர்கள் “தன் கையிலிருக்கும் துப்பாக்கி, கிருஷ்ணரின் சக்கரம் போன்றது. அது அரக்கர்களை அழிக்கும்” என்று பகிரங்கமாக வாக்குமூலம் கொடுத்துள்ளதைப் பார்த்தால் இதன் அபாயம் புரியும்.
மேலும், கடந்த பத்தாண்டுகளாக நீதித்துறை, இராணுவம், நிர்வாகம், அனைத்து மாநிலங்களின் போலிசு, அதிகார வர்க்கம் உள்ளிட்ட அரசின் எல்லா உறுப்புகளிலும் பாசிஸ்டுகளை நிரப்பி அவற்றைக் காவிமயமாக்குவதில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளனர். இதன் உச்சமாக தரைப்படை, விமானப்படை, கப்பல்படை என முப்படைத் தளபதிகளும் சந்தித்துக்கொள்ளவே கூடாது என்றிருந்த மரபை உடைத்து, முப்படைக்கும் ஒரே தளபதி என்ற புதிய பதவியை இராணுவத்தில் புகுத்தியுள்ளது. நாளை தேர்தலில் பா.ஜ.க. தோற்கடிக்கப்பட்டாலும் தனது நிழல் இராணுவங்களைக் கொண்டு கலவரத்தை நடத்துவார்கள். இதற்கு இராணுவம் உள்ளிட்ட அரசின் உறுப்புகள் பக்கபலமாக நின்றுகொண்டு ஒரு ஆட்சிக்கவிழ்ப்பு நடத்தப்பட்டு, பாசிச ஆட்சி நிறுவப்படும் அபாயம் நாட்டின் முன் உள்ளது.
இத்தகையதொரு பாசிச அமைப்பை எதிர்கொள்ள எவ்வித ஆயுதமின்றியும் தன்னையே காப்பாற்றிக் கொள்ள முடியாத நிலையிலும்தான் எதிர்க்கட்சிகளே இருக்கின்றன. எனவே, “இந்தியா” கூட்டணிக்கு ஓட்டுப்போட்டால் பாசிசம் ஒழிந்துவிடும் என்று நம்புவது தற்கொலைக்குச் சமமானதாகும்.
பாசிச எதிர்ப்புப் படையின்றி பாசிச எதிர்ப்பு சாத்தியமே இல்லை
ஏகாதிபத்திய நிதிமூலதனத்தின் சுரண்டலுக்காக, அதனால் ஊட்டி வளர்க்கப்பட்டு நாட்டின் மூளை முடுக்கெல்லாம் வேர்பதித்து கிளைபரப்பி, அரசின் அனைத்து உறுப்புகளிலும் ஊடுருவி, மக்களின் ஆகப் பெரும்பாலனோரிடம் வெற்றிகரமாக பாசிசக் கருத்துக்களைப் பரப்பி மிகப்பெரிய கொடிய அமைப்பாக வளர்ந்து நிற்கும் ஆர்.எஸ்.எஸ்.ஸையும் அது கொண்டு வரும் பாசிசத்தையும் ஒரே நாளில் தேர்தலில் ஓட்டுப்போட்டு வீழ்த்த முடியுமா?! உழைக்கும் மக்கள் மீதான அப்பட்டமான சர்வாதிகாரம் நிறுவப்படவிருப்பதை தடுக்க, ஆளும் வர்க்கக் கட்சிகளை நம்பிப் பயன் உண்டா?! சிந்தித்துப் பாருங்கள்! ஓட்டுக் கட்சிகள் பரப்பும் தேர்தல் மாயைகளைப் புறந்தள்ளிவிட்டு, நீண்ட நெடிய விடாப்பிடியான ஒரு போருக்கு உழைக்கும் மக்களாகிய நாம் தயாராக வேண்டும். பாசிசப் படைகளை நேருக்கு நேர் எதிர்நின்று மோதி வீழ்த்த ஒரு படையாக ஒன்றுதிரண்டே தீர வேண்டும். வேறு எளிய, குறுக்கு வழி ஏதுமில்லை.
- காவி-கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்த, ஆளும்வர்க்கக் கட்சிகளின் தேர்தல் பாதையைப் புறக்கணிப்போம்! தெருவில் இறங்கிப் போராடுவோம்!!
- உழைக்கும் வர்க்கமாய் ஒன்றிணைவோம்! மக்களுக்கான உண்மையான அதிகாரத்தைப் படைக்க, புதிய ஜனநாயகக் குடியரசைக் கட்டியமைப்போம்!!
புரட்சிகர மக்கள் அதிகாரம் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
படியுங்கள் : senkanal.com
[pdf-embedder url=”http://senkanal.com/wp-content/uploads/2024/03/Boycott-2024-General-Election-Pamphlet-c.pdf” title=”Boycott 2024 General Election Pamphlet-c”]
Hi
Unable to download the PDF file. Can you please check and rectify it?