போராடும் விவசாயிகள் பற்றிய
காவி பாசிஸ்டுகளின் பொய்கள்!

விவசாயிகளின் போராட்டத்தையும், விவசாயிகளையும் எவ்வளவு கொச்சைப்படுத்த முடியுமோ அவ்வளவு அவதூறுகளை பரப்பி விடுவதே இவர்களின் நோக்கம். முகநூல் வாட்ஸாப் டிவிட்டர் என எல்லா சமூக ஊடகங்களிலும் பதிவுகளாகவும், காணொளிகளாகவும் இந்தப் பொய்கள் தொடர்ந்து பரப்பப்பட்டு வருகின்றன.

 

“தில்லி சலோ” என்ற முழக்கத்துடன் நாட்டின் தலைநகரை முற்றுகையிட்டிருக்கும் விவசாயிகள், தங்களது கோரிக்கைகளை மோடி அரசு நிறைவேற்றாத வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என உறுதியாக நிற்கின்றனர்.

போராடும் விவசாயிகளை தடுத்து நிறுத்த சாலைகளில் ஆணி பதித்து, கான்கிரிட் தடுப்புகளை ஏற்படுத்தி, பேருந்து டாங்கர் லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களை நிறுத்தி, போரில் எதிரியிடமிருந்து கோட்டையை பாதுகாப்பது போல அரணமைத்து தில்லியை விவசாயிகளிடமிருந்து பாதுகாக்கிறது அரசு.

அரசின் தடைகளைத் தகர்த்து எப்படியாவது தில்லிக்குள் நுழைந்து விட வேண்டும் என விவசாயிகள் விடாப்பிடியாக முயற்சிக்கும் போது போலீசாரின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலையும், இரப்பர் குண்டுகள் நிரம்பிய துப்பாக்கியின் மூலம் சுடுவதையும், தண்ணீர் நிரம்பிய பீரங்கியின் மூலம் தாக்குவதையும், டிரோன்கள் மூலம் கண்ணீர் புகைக் குண்டுகளைப் பொழிவதையும், இன்னும் பல அடக்குமுறைகளையும் பாசிச மோடி அரசுபோராடும் விவசாயிகள் மீது ஏவுகிறது.

ஒருபுறம் விவசாயிகள் அரசின் இந்தகைய கடுமையான தாக்குதலுக்கு அஞ்சி ஓடாமல், அடக்குமுறைகளை எதிர்த்து தொடர்ந்து போராடி வருகின்றனர். எனவேதான் மறுபுறம் இணையவெளியில் போராடும் விவசாயிகளின் மீது தங்களது இயல்பிலேயே ஊறிப்போன அவதூறு எனும் அடுத்த தாக்குதல் அஸ்திரத்தை காவிக்கும்பல் கையிலெடுத்துள்ளது.

விவசாயிகளின் போராட்டத்தையும், விவசாயிகளையும் எவ்வளவு கொச்சைப்படுத்த முடியுமோ அவ்வளவு அவதூறுகளை பரப்பி விடுவதே இவர்களின் நோக்கம். முகநூல் வாட்ஸாப் டிவிட்டர் என எல்லா சமூக ஊடகங்களிலும் பதிவுகளாகவும், காணொளிகளாகவும் இந்தப் பொய்கள் தொடர்ந்து பரப்பப்பட்டு வருகின்றன.

“சீக்கியர்களாக வேடமிடும் இஸ்லாமிய தீவிரவாதிகள்”

“தில்லியில் போராடுவது விவசாயிகளே அல்ல. அவர்கள் எல்லோரும் சீக்கிய வேடமிட்டு டர்பன் கட்டி வந்த இஸ்லாமிய தீவிரவாதிகள்” என்று இஸ்லாமியர் ஒருவர் சீக்கியரைப் போன்று தலைப்பாகையைக் கட்டிக் கொண்டு ஊர்வலம் ஒன்றில் கலந்து கொள்வது போன்ற தொரு காணொளியைப் பரப்பி கதையளந்து வருகிறார்கள் இந்த காவிகள்.

அந்தக் காணொளி அன்ண்மையில் சுட்டுக் கொல்லப்பட்ட சீக்கிய பாடகர் மூஸ்வாலாவின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்க வந்த இஸ்லாமியர் ஒருவர் உணர்வு மிகுதியில் தலைப்பாகை கட்டிய போது எடுக்கப்பட்டது. அதனை அப்படியே திரித்து “தில்லி சலோ” போராட்டத்தின் போது நடந்ததாக பொய்யைப் பரப்புகின்றனர்.

காவிக் கும்பல் கூறுவதை உண்மை என்று ஏற்றுக் கொண்டால் கூட, மோடி பிரதமராக பதவியேற்ற பின்னர் இஸ்லாமிய தீவிரவாதிகள் எல்லாம் ஓடி ஒளிந்து கொண்டனர் என்று இதுவரை இந்தக் கும்பல் மார்தட்டியது பொய் என்று ஆகாதா என்ன? நாட்டின் தலைநகரை சீக்கிய வேடமணிந்த இஸ்லாமிய தீவிரவாதிகள் முற்றுகையிட்டிருக்கும் போது 52 இன்ச் மார்பு கொண்ட மாவீரர் போலீசின் இரும்புக் கோட்டைக்கு பின்னால் பதுங்கிக்கிடப்பதுதான் வீரமா?

“இந்துக் கோவிலைத் தாக்கும் சீக்கிய விவசாயிகள்”

வழக்கம் போல இந்து கோயிலைத் தாக்கி விட்டார்கள், தாக்கி விட்டார்கள் என்று விவசாயிகள் பிரச்சனையை இந்து-சீக்கிய மதப் பிரச்சனையாக மாற்றும் வேலையில் இறங்கியுள்ளனர். கையில் வாழேந்திய சீக்கியர்கள் இந்து கோவில் போன்றதொரு தளத்தில் தடுக்கும் காவலர்களை மீறி நுழைவது போன்ற காணொளி இதற்கு ஆதாரமாக பரப்பப்படுகிறது.

அந்தக் காணொளி உண்மையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இரு சீக்கிய பிரிவினருக்கு இடையில் நடந்த மோதலின் போது எடுக்கப்பட்டது. அதனை தற்போது விவசாயிகள் போராட்டத்துடன் இணைத்து விஷமப் பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளனர்.

“காலிஸ்தான் தீவிரவாதிகளின் ஊடுருவல்”

எந்தவொரு மக்கள் போராட்டத்தையும் ஒடுக்குவதை நியாயப்படுத்துவதற்கு இந்தப் பாசிச கும்பல் பயன்படுத்தும் வழமையான பிரச்சாரம் போராட்டத்திற்குள் ஊடுருவிய தீய சக்திகள்.

ஜலலிக்கட்டு போராட்டத்திலும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்திலும் நக்ஸலைட்டுகள் ஊடுருவல், பீமா கொரேகானில் அர்பன் நக்சல்களின் ஊடுருவல், சிஏஏ சட்டத்தை எதிர்த்து தில்லி சாகின்பாக்கில் இஸ்லாமிய பெண்கள் நடத்திய போராட்டத்தில் தீவிரவாதிகள் ஊடுருவல் என இந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

விவசாயிகளுக்கு எதிராக பரப்பப்படும் மற்ற வதந்திகளைப் போல புறக்கடையில் போலியான இணையக் கணக்குகள் மூலமாக இல்லாமல் நேரடியாக ஆளும் வர்க்கத்தின் ஊதுகுழலாக இருக்கும் பத்திரிக்கைகள் மூலமாகவே இந்தப் பிரச்சாரம் கட்டவிழ்க்கப்படுகிறது.

தங்களுக்கும் காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்புகளுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் திரும்பத் திரும்ப பேட்டியளித்தாலும் இவர்கள் தங்களது பிரச்சாரத்தை தொடர்ந்து செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக வாக்களித்துவிட்டு இரண்டு ஆண்டுகளாக அரசு அவர்களை ஏமாற்றி வருவது குறித்து வாய் திறக்காமல், விவசாயிகள் போராடுவதால் தில்லிக்குள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துவிட்டது என செய்தி வெளியிடும் இந்த ஊடகங்களிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்.

“பணக்கார விவசாயிகளே போராடுகின்றனர்”

அடுத்ததாக காவிக் கும்பல் பரப்பும் புரளிகளில் ஒன்று தில்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகள் ஏழைகள் அல்ல பணக்காரர்கள்.

பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலத்து விவசாய குடும்பங்களின் சராசரி மாத வருவாய் குறித்து தேசிய புள்ளியல் நிறுவனம் வெளியிட்ட கடைசிப் புள்ளிவிவரத்தின் அடிப்படையில் பார்த்தால் இம்மாநில மக்களின் சராசரி மாத வருவாய் என்பது பஞ்சாப்பில் தலைக்கு நான்காயிரத்து சொச்சமும், அதுவே அரியானாவில் தலைக்கு மூன்றாயிரத்து சொச்சமும் ஆகும்.

விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதாக மோடி கொடுத்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் இலக்கு ஒவ்வொரு ஆண்டாக தள்ளிப் போடப்பட்டு இறுதியில் அந்த வாக்குறுதியையே அவர்கள் திட்டமிட்டு மறைத்து விட்ட சூழலில் பஞ்சாப் அரியானா மாநில விவசாயிகள் மட்டும் திடீரென பணக்காரர்களான ரகசியம் மோடி அமித்ஷா கும்பலுக்கே வெளிச்சம்.

விவசாயிகளில் ஒரு சிலர் சொகுசு கார்கள் வைத்திருப்பதை காட்டி போராடும் அனைத்து விவசாயிகளும் பணக்காரர்கள் எனக் கதையளக்கின்றனர்.

பயிர் செய்ய வழியில்லாமல் தங்களது நிலத்தின் ஒரு பகுதியை ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு விற்று அதில் தங்களது செலவுகள் போக ஒரு காரை விவசாயிகளில் ஒரு சிலர் வாங்குகின்றனர். அதனை வைத்து விவசாயிகள் எல்லோரும் பணக்காரர்கள் என்று கூற முடியுமா?

விவசாயி என்றால் அரை நிர்வாணமாக எலிக்கறி தின்று கொண்டு தான் இருக்க வேண்டுமா என்ன? ஆண்டுக்குப் பல லட்சம் கோடி ரூபாய் கடன் தள்ளுபடியும், வரிச் சலுகையும் பெறும் முதலாளிகள் என்ன தில்லியின் தெருக்களில் பிச்சையெடுத்தா அலைகிறார்கள். பிரம்மாண்டமான மாளிகையில் குடியிருந்து கொண்டு வகை வகையான ஆடம்பர கார்களில் பவனி வரும் முதலாளிகளுக்கு அரசு சலுகைகளை வாரி வழங்கும் போது நவதுவாரங்களையும் பொத்திக் கொண்டிருக்கும் ஊடகங்கள், விவசாயிகள் தங்களது வாழ்வாதாரத்திற்காக போராடும் போது அவர்களைப் பணக்காரர்கள் என்று கூறுகின்றன.

கடுங்குளிர் வாட்டும் தில்லியின் குளிர்காலத்தில் திறந்த வெளியில் படுத்துறங்கி. குளிர்ந்த நீரில் குளித்துவிட்டு போராட்டக் களம் காணும் விவசாயிகளைப் போல முதலாளிகள், அவதூரைப் பரப்பும் பத்திரிக்கையாளர்கள் என எவரும் எளிமையான வாழ்க்கை வாழ முடியாது.

காவிக் கும்பலின் இத்தகைய பொய்ப் பிரச்சாரத்தின் உண்மை முகத்தினை திரைகிழித்து அம்பலப்படுத்தும் பத்திரிக்கையாளர்களும் இருக்கத் தான் செய்கின்றனர். அல்ட் நீயூசின் முகமது ஜுபைர் போன்ற பத்திரிக்கையாளர்கள் இதற்காக பாசிச மோடி அரசின் ஒடுக்குமுறையை சந்தித்தாலும், தங்களது செயல்பாட்டில் உறுதியுடன் தொடரத்தான் செய்கிறார்கள்.

போராடும் விவசாயிகளின் உறுதியை இந்தப் புரளிகளால் குலைக்க முடியாது. கொதிக்கும் இரும்பின் மீது மோதும் நீர் திவளைகள் ஆவியாவது போன்று விவசாயிகளின் உறுதிக்கு முன்னால் இவை காணாமல் போய்விடும். ஆனால் போராட்டக் களத்திற்கு வெளியே உள்ளவர்களை நோக்கித்தான் இந்த புரளிகள் பரப்பப்படுகின்றன. எனவே இத்தகைய புரளிகளை முறியடிப்பது என்பது பாசிசத்தை முறியடிப்பதற்கு அவசியமானதொரு வினையாகும்.

  • அறிவு

One comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

  1. எப்போதும் பொய்களை மட்டும் நம்பும், அறிவு வளர்ச்சி இல்லாத வட மாநில மக்கள் அதிகம் அதனால் தான் பொய்களை பிரித்து பார்க்க தெரிவதில்லை.