ஞானவாபி: மதவெறியைத் தூண்டி சமூகத்தைத் துண்டாட துடிக்கும் காவிகள்

இந்துக்களும் முஸ்லீம்களும் ஒற்றுமையாக இருந்தால் அவர்களது பாசிச சித்தாந்தம் என்றைக்கும் காலூன்ற முடியாது. மதவெறியைக் கொண்டு சமூகத்தை இரண்டாகப் பிளப்பதுதான் அவர்களது நோக்கம். நாட்டை பதற்றத்திலேயே வைத்திருப்பதன் மூலம் அவர்கள் எப்போதும் வெற்றியடைகிறார்கள்.

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்வது, அயோத்தியில் ராமர் கோவிலைக் கட்டுவது, பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது என்ற இந்துத்வாதிகளின் அரசியல் முழக்கங்களில், முதல் இரண்டையும் காவி பாசிஸ்டுகள் நடத்தி முடித்துவிட்டனர், பொது சிவில் சட்டத்தை கொண்டு வருவதற்கான வேலைகளையும் பல்வேறு மாநிலங்களில் தொடங்கிவிட்டனர்.

இனி அடுத்த தேர்தலைச் சந்திக்கும் போது இந்துக்களின் வாக்குகளை அறுவடை செய்வதற்கு அவர்களுக்கு இது போல இன்னும் சில முழக்கங்கள் தேவைப்படுகின்றன. அயோத்தியில் ராமருக்குக் கோவில் கட்டியதைப் போல மதுராவில் கிருஷ்ண ஜென்ம பூமியை மீட்பதும், காசியில் ஞானவாபி மசூதியைக் கைப்பற்றி பழைய காசி விஸ்வநாதர் கோவிலை மீட்பதையும் தங்களது லட்சியமாக காவி பாசிஸ்டுகள் முழங்கி வருகின்றனர்.

இந்திய தொல்லியல் ஆய்வுத் துறை முதல், நீதிமன்றங்கள் வரை அனைத்து அரசு உறுப்புகளும் காவி பாசிஸ்டுகளின் பிரச்சாரத்திற்கும், செயல்பாடுகளுக்கும் உதவிவருகின்றனர்.

வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோவிலுக்கு அருகில் உள்ள ஞானவாபி மசூதி, பழைய காசி விஸ்வநாதர் கோவிலை இடித்துக் கட்டப்பட்டது என்றும் அதனை இந்துக்களிடன் ஒப்படைக்க வேண்டும் என்றும் காவிக் கும்பல் நீதிமன்றத்திற்குச் சென்றது. 1993ம் ஆண்டு முதலே இந்த விசயம் நீதிமன்றத்தில் இருந்தாலும், 2019ம் ஆண்டு அயோத்தி பாபர் மசூதி வழக்கில் தங்களுக்குச் சாதகமாக தீர்ப்பு வந்த பிறகு காவிகள் ஞானவாபி பிரச்சனையை தூசு தட்டிக் கையில் எடுத்தனர்.

வாரணாசி நீதிமன்றத்திலும், அலகாபாத் உயர்நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் காவிகள் தரப்பிலும், இஸ்லாமியர் தரப்பிலும் அடுத்தடுத்துத் தொடுக்கப்பட்ட வழக்குகளை எல்லாம் கடந்து, கடந்த ஆண்டு மே மாதத்தில் வாரணாசி சிவில் நீதிமன்றம் ஞானவாபி மசூதி வளாகத்தில் இந்திய தொல்லியல் துறை ஆய்வு செய்யவும் அதனை காணொளியில் பதிவு செய்யவும் உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வின் போது பதிவு செய்யப்பட்ட காணொளி ஊடகங்களில் கசியவிடப்பட்டது. அதில் மசூதியின் உள்ளே இருந்த செயற்கை நீரூற்று லிங்க வடிவத்தில் இருந்ததை வைத்துக் கொண்டு மசூதியே கோவிலின் மீதுதான் கட்டப்பட்டுள்ளது உறுதியாகிவிட்டதாக காவிக் கும்பல் பிரச்சாரம் செய்தது.

 

 

கடந்த ஜனவரி 24ம் தேதியன்று தனது ஆய்வு முடிவுகளை இந்திய தொல்லியல் துறை சமர்பித்தது. நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இந்த ஆய்வு முடிவுகள் ஊடகங்களில் பரவலாக பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தப்பட்டது. அதில் மசூதியின் அடித்தளத்தில் கோவில் இருந்ததற்கான ஆதாரங்கள் தங்களது ஆய்வில் கிடைத்திருப்பதாக தொல்லியல் துறை கூறியிருந்தது.

இதனைத் தொடர்ந்து ஜனவரி 31 அன்று ஞானவாபி மசூதியின் அடித்தளத்தில் இந்துக்கள் வழிபாடு நடத்த அனுமதி அளித்து வாராணாசி நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை பிறபித்த வாரணாசி மாவட்ட நீதிமன்ற நீதிபதி அஜய் கிருஷ்ண விஷ்வேசருக்கு அன்றுதான் நீதிபதியாக பணிபுரியும் கடைசிநாள். தான் ஓய்வு பெரும் நாளன்று இப்படிப்பட்டதொரு தீர்ப்பினை அந்த நீதிபதி பிறபித்துள்ளார்.

நீதிமன்ற உத்தரவு வந்த அன்றே வாரணாசி மாவட்ட நிர்வாகம் மசூதியின் அடித்தளத்தில் பூசை நடத்தும் ஏற்பாடுகளைத் தொடங்கியது. இரவோடு இரவாக போலீசார் குவிக்கப்பட்டு மாவட்ட நிர்வாகத்தின் மொத்த அதிகாரிகளும் மசூதியருகில் வந்து சேர்ந்தனர். மசூதியின் அடித்தளம் திறக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு மறுநாள் அதிகாலை 3:30 மணிக்கு பள்ளிவாசலின் அடித்தள அறையில் காசி விஸ்வநாதர் கோவில் அர்ச்சகர் தலைமையில் பூசைகளைச் செய்து முடித்தனர்.

 

 

அத்துடன் நிர்க்காமல் இஸ்லாமியர்கள் தினமும் ஐந்து வேளை தொழுவதைப் போல தாங்களும் தினமும் ஐந்து வேளை பூசை செய்யப்போவதாக அறிவித்துள்ளனர்.

தங்கள் கண் முன்னரே மசூதியினைக் காவிகள் கைப்பற்றியதைத் தடுக்க முடியாமல், உயர்நீதிமன்றத்திற்கும் உச்சநீதிமன்றத்திற்கும் நடையாய் நடந்தும் எதையும் சாதிக்க முடியாத இஸ்லாமிய அமைப்புகள் கையறு நிலையில் உள்ளன. மாவட்ட நீதிமன்றத்தில் தங்களது தரப்பினை எடுத்துரைக்க போதுமான வாய்ப்புகள் வழங்கப்படவில்லை எனக் கூறி அவர்கள் தொடுத்த மேல்முறையீட்டு மனுவை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம், உயர்நீதிமன்றத்தை அணுகும் படிக் கூறியது. அலகாபாத் உயர்நீதிமன்றமோ அவர்களது மனுவைத் தள்ளுபடி செய்தது.

தற்போது இஸ்லாமியர்கள் தரப்பும், இந்துக்கள் தரப்பும் ஞானவாபி மசூதிக்குள் வழிபாடு நடத்துவதற்குப் போட்டி போட்டுக் கொண்டு கூட்டம் கூட்டமாகச் சென்று வருகின்றனர்

இரண்டு தரப்பினருக்கும் எப்போது வேண்டுமானாலும் மோதல் நிகழலாம் என்பதால் அந்தப் பகுதி முழுவதும் கலவரத் தடுப்புப் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஞானவாபியில் நடக்கும் எந்தவொரு அசம்பாவிதமும் நாடு முழுவதும் பெரும் பதற்றைத்தை ஏற்படுத்தும் என்பது நிச்சயம்.

 

 

ஆனால் காவி பாசிஸ்டுகள் இதைத்தான் விரும்புகிறார்கள். இந்துக்களும் முஸ்லீம்களும் ஒற்றுமையாக இருந்தால் அவர்களது பாசிச சித்தாந்தம் என்றைக்கும் காலூன்ற முடியாது. மதவெறியைக் கொண்டு சமூகத்தை இரண்டாகப் பிளப்பதுதான் அவர்களது நோக்கம். நாட்டை பதற்றத்திலேயே வைத்திருப்பதன் மூலம் அவர்கள் எப்போதும் வெற்றியடைகிறார்கள்.

ஞானவாபியைத் தொடர்ந்து மதுராவின் கிருஷ்ண ஜென்மபூமி கோவில் வளாகத்தில் இருந்த கேசவ்தேவர் கோவிலை இடித்து விட்டு அந்த இடத்தில் அவுரங்கசிப் மசூதி ஒன்றினைக் கட்டியதாக இந்தியத் தொல்லியல் துறை தற்போது தெரிவித்துள்ளது.

அதே சமயம் ஞானவாபி மசூதியைத் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர காவிகள் கையாண்ட வழிமுறையைக் கூர்ந்து கவனித்தால் அதில் இந்தியத் தொல்லியல் துறை, நீதிமன்றம், மாவட்ட நிர்வாகம், போலீசு, மத்திய மாநில அரசுகள், முன்னணி தேசிய ஊடகங்கள் என அரசுக் கட்டமைப்பு முழுவதும் பாசிஸ்களோடு தோளோடு தோள் நின்று சிறுபான்மையினருக்கு எதிராகச் செயல்பட்டிருப்பது தெளிவாக தெறிகிறது.

அயோத்தியில் பாபர் மசூதியை இடித்து அங்கே ராமர் கோவிலைக் கட்டுவதற்குக் காவிக் கும்பலுக்குப் பல தசாப்தங்கள் தேவைப்பட்டது. ஆனால் இன்று யாரும் நினைத்துக் கூடப் பார்க்க முடியாத வேகத்தில் ஓரிரு ஆண்டுகளுக்குள்ளாகவே ஞானவாபி மசூதியைத் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதில் காவி பாசிஸ்டுகள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். இன்றைக்கு இஸ்லாமியருக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டிருக்கும் இதே வழிமுறை நாளை காவி கார்ப்பரேட் பாசிஸ்டுகளுக்கு எதிராகப் போராடும் உழைக்கும் மக்கள் மீதும் கட்டவிழ்த்து விடப்படும் என்பது நிச்சயம். ஏனெனில் காவி கார்ப்பரேட் பாசிஸ்டுகள் சிறுபான்மையினருக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த உழைக்கும் மக்களது நலனுக்கும் எதிரானவர்களே.

  • அறிவு

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன