நாடாளுமன்றத்தில் வண்ணகுப்பி புகைவீச்சு: மக்கள் எழுச்சி மட்டுமே பாசிசத்தை வீழ்த்தும்!

நாடாளுமன்ற கட்சிகள் உண்மையில் பகத்சிங்கை வருடா வருடம் சிறப்பிப்பது நடிப்பாக இல்லாமல் இருந்தால் இந்நேரம் இளைஞர்களின் செயலை அங்கீகரித்து வரவேற்று இருக்க வேண்டும். மேலும் இளைஞர்களின் முழக்கத்தின் நியாயத்தை அங்கீகரித்து அதற்காகப் போராடி இருக்க வேண்டும். அதை விடுத்து பாதுகாப்பு இல்லை, பாதுகாப்பு இல்லை என்று அலறி, ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள்

நாடாளுமன்றம் இல்லையில்லை ‘காவி – கார்ப்பரேட்டுகளின் மன்றத்தில்’ ஜனநாயகம் இல்லை; ஜனநாயகம் இல்லை; என்று ஒவ்வொரு கூட்டத் தொடர்களிலும் காங்கிரஸ் – கம்யூனிஸ்ட் கட்சிகள் உட்பட இதர எதிர்க் கட்சிகள் அனைத்தும் புலம்பிக் கொண்டிருப்பதை கேட்டு, கேட்டு காது புளித்துப் போனதை எவராலும் மறுக்க முடியாது.

அதே வேளையில், புலம்பிக் கொண்டு இராமல் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளி பகத்சிங் வழியை ஏந்திய 6 இளைஞர்கள், தங்களை அமைப்பாக்கிக் கொண்டு மக்கள் விரோதக் கொள்கைகளை அரங்கேற்றி வரும், அன்றாடம் ஏறிவரும் விலையேற்றத்தை, நீடித்து வரும் வேலையில்லாத் திண்டாட்டத்தை, நிலைகுலைந்து வரும் வாழ்வுரிமை மீட்புகான போராட்டத்தை ஒடுக்கி வரும் பாசிச மோடி அரசிடம் புலம்பி பயனில்லை. இதன் செவிட்டு காதுகளுக்கு உரக்கச் சொல்லும் வகையில் அதாவது, கேளாத செவிகள் கேட்கட்டும் என்கிற பகத்சிங் வழயைத் தெரிவு செய்து, ஜனநாயக குரல்வளை நெறிக்கப்பட்டு சர்வதிகாரம் அரங்கேறுவதை சகித்துக் கொள்ள முடியாது என்று முழக்கமிட்டபடியே புகைக் குண்டுகளை வீசியுள்ளனர்.

 

 

இந்த முழக்கத்திலுள்ள சமூக கொடுமையின் அவலத்தை, உண்மையை மன்றத்தின் எதிர்க்கட்சி உறுப்பினர்களால் எவராலும் உணர முடியவில்லை. கார்ப்பரேட்டுகளாக மாறிவரும் இவர்களால் உணர முடியாது. அதனால்தான், பிரிட்டிஷ் மன்ற உறுப்பினர்கள் செய்யாத அசிங்கத்தை புகைக் குப்பிகளை வீசிய இளைஞர்களை இன்றைய மன்ற உறுப்பினர்கள் கடுமையாக தாக்கியது மூலம் அரங்கேற்றியுள்ளனர். இது ஒன்றும் 2001-ல் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு ஒப்பானது அல்ல. மாறாக ,உள்நாட்டு சமூக கொடுமைகளை பகத்சிங் வழியில் மன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்று பாசிச மோடி அரசை அம்பலப்படுத்தப் புகைக் குண்டுகளை வீசியுள்ளனர். நாடாளுமன்ற கட்சிகள் உண்மையில் பகத்சிங்கை வருடா வருடம் சிறப்பிப்பது நடிப்பாக இல்லாமல் இருந்தால் இந்நேரம் இளைஞர்களின் செயலை அங்கீகரித்து வரவேற்று இருக்க வேண்டும். மேலும் இளைஞர்களின் முழக்கத்தின் நியாயத்தை அங்கீகரித்து அதற்காகப் போராடி இருக்க வேண்டும். அதை விடுத்து பாதுகாப்பு இல்லை, பாதுகாப்பு இல்லை என்று அலறி, ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள்.

பகத்சிங் வழியில் போராடிய இளைஞர்களில் லலித்ஜா என்பவருடைய தந்தை தேவானந்தாஜா “இந்த தேசத்தில் வேலையின்மை என்பது பெரும் பிரச்சனையாக இருக்கிறது என்று குரல் எழுப்புவது தேசத் துரோகக் குற்றமா” என்ற கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் அவருடைய (மகனுடைய) நடைமுறை சரியானதாக இல்லாமல் போகலாம். ஆனால் அவன் எழுப்பிய பிரச்சனை நியாயமானது. அவன் திருடவோ, கொலைச் செய்யவோ, கொள்ளையடிக்கவோ இல்லை. அவன் குற்றவாளியும் இல்லை” என்றும் கூறியுள்ளார். இதற்காக அவரை நாடாளுமன்றத் தாக்குதலின் மாஸ்டர் மைண்ட் என்று முத்திரை குத்தி பாசிச மோடி அரசு சிறையில் அடைத் துள்ளது. இந்த கொடுமையைக்கூட கண்டிக்கவோ, இவரை விடுதலை செய் என்று குரல் எழுப்பவோ, போராடுவோ, ஆர்ப்பாட்டம் செய்யவோ எதிர்க் கட்சிகளுக்கு துப்பில்லை.

தேவானந்தஜாவின் நியாயத்தை, உண்மையை அவருக்கு இழைக்கப்பட் டக் கொடுமையை பகத்சிங் வழிமுறையைப் பின்பற்றிய இளைஞர்களின் செயலை அங்கீகரிக்க தவறிய இவர்களால் எப்படி உணர முடியும். ஆனால் இவர்கள் ஜனநாயகம் இல்லை, ஜனநாயகம் இல்லை என்று அலறுவதும், ஆர்ப்பாட்டம் செய்வதும் எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்

எதுடா சாக்கு என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த பாசிச மோடி அரசுக்கு பழம் கனிந்து பாலில் விழுந்த கதையாக பாதுகாப்பு இல்லை; பாதுகாப்பு இல்லை; என்று அழுது புலம்பிய எதிர்க்கட்சி மன்ற உறுப் பினர்கள் போராட்டம் அமைந்து விட்டது. இதை சாக்காக வைத்து மன்ற உறுப்பினர்கள் 148 பேரை இடைநீக்கம் செய்து விட்டது. இதன் மூலம் மக்கள் விரோத மசோதாக்களான புதிய குற்றவியல் சட்ட மசோதாக்கள், ஒன்றிய சரக்கு – சேவை வரி 2-வது திருத்த மசோதா, தொலைதொடர்பு மசோதா உட்பட மொத்தம் 18 மசோதாக்கள் எவ்வித விவாதங்களும் இல்லாமல் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றி விட்டது.

பாசிச மோடி தலைமையிலான காவி – கார்ப்பரேட் பாசிசக் கும்பல், தனது சர்வதிகார நடவடிக்கையை சட்டப் பூர்வமாகவே நிறைவேற்றி வருகிறது. அதனால், மற்றவர்களின் விமர்சனங்கள், கருத்துக்கள் அனைத்தையும் கழிப்பறைக் காகிதமாக்கி வருகிறது. “விவாதம் இல்லாமல் மசோதாக்கள் நிறைவேற்றுவது ஜனநாயகம் ஆகாது என்பது உச்ச நீதிமன்ற கருத்து; டாக்டர் அம்பேத்கர் அவர்களின் கருத்து நாடாளுமன்றம் என்பது எதிர்க்கட்சிகளுக்கானது; தேர்ந்தெடுக்கப்பட்ட சர்வாதிகாரம் என்கிற மேலைநாட்டு ஊடகங்களின் விமர்சனம்; கேலிக்கூத்தாகி வரும் நாடாளுமன்ற ஜனநாயகம் என்கிற ஊடகங்களின் விமர்சனம் ஆகியவைகள் அனைத்தும் பாசிச மோடி அரசை பொருத்தவரை கழிப்பறைக் காகிதங்களே.

 

 

ஆட்சியாளர்களை, குறிப்பாக பாசிச ஆர்எஸ்எஸ், பிஜேபி, மோடி, அமித்ஷா கும்பலை விமர்சித்தால் மன்ற உறுப்பினர்கள் பதவி பறிக்கப்படும். அதாவது வழக்குப் போட்டு செயல்பாடுகளை முடக்கும். காவி – கார்ப்பரேட்களின் பாசிச மன்றமாக மாறி வருகிறது. இவற்றில் மீண்டும், மீண்டும் பங்கேற்பது மூலம் ஜனநாயகத்தை மீட்டெடுத்து விடலாம் என்பது வெறும் கனவாக இருக்கலாமே தவிர நடைமுறைக்கு உதவாது. இதை நம்பி மீண்டும் வாக்களிப்பதும் நம் தலையில் நாமே கொள்ளி வைத்துக் கொள்வதற்கு சமம்.

இது ஒரு புறம் இருப்பினும், ஜனநாயகம் இல்லை, ஜனநாயகம் இல்லை என்று புலம்புவதும், நாடாளுமன்றத்திற்கு எதிராக உட்கார்ந்து கொண்டு, பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுத்துக் கொண்டும் பொழுதைப் போக்குவது கதைக்கு உதவாது. உண்மையில் மக்கள் மீது அக்கறை யிருக்குமானால் எதிர்க்கட்சிகள், அதன் மன்ற உறுப்பினர்கள் – ஊழியர்கள் அனைவரும், பிரதமர் உட்பட இதர அனைத்து அமைச்சர்கள் வீடுகளை முற்றுகையிடுவதும்; பாசிச மோடி அரசின் பாசிச நடவடிக் கைகளை, ஜனநாயக விரோத செயல்களை நாடு முழுவதும் தெருத் தெருவாக, வீடு வீடாக அனைத்து தரப்பு மக்களிடம் கொண்டு சென்று நாடு தழுவிய அளவில் பாசிச எதிர்ப்பு மக்கள் எழுச்சியை உருவாக்குவது மூலமே ஜனநாயகத்தை மீட்டெடுக்க முடியுமே தவிர உட்கார்ந்த இடத் திலேயே ஊளையிட்டுக் கொண்டு அழுவதும், அலறுவதும், ஆர்ப்பாட்டம் செய்வதும் வேலைக்காகாது. பாசிச மோடி அரசின் ;பாசிச நடவடிக்கைகளை முறியடிக்கவும் முடியாது. மேலும் நாடாளுமன்றத்திற்கு வெளியே இயங்கி வரும் ஜனநாயக – முற்போக்கு – புரட்சிகர சக்திகளும் காவி – கார்ப்பரேட் பாசிசத்திற்கு எதிராக தங்களை அமைப்பாக்கிக் கொண்டு களத்தில் இறங்கி போராடி மக்கள் எழுச்சியை உருவாக்குவது அவசியம்..

  • மோகன்

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன