நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களில், தெலுங்கானா தவிர பிற நான்கு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்துள்ளது. குறிப்பாக ஏற்கனவே காங்கிரஸ் ஆட்சியிலிருந்த சட்டீஸ்கர், இராஜஸ்தான் மாநிலங்களை பாஜகவிடம். பறிகொடுத்துள்ளது மத்தியபிரதேசத்தில் பாஜக தன் ஆட்சியை மீண்டும் தக்க வைத்து கொண்டுள்ளது.
பாசிசம், ஏறித்தாக்கும் இன்றைய வேளையில், தேர்தலின் மூலமே பாசிச பாஜக வை முதலில் தோற்கடிக்க வேண்டும்; பின்பு பாசிசத்தை வீழ்த்தலாம் என்றவர்கள், இந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களில் காங்கிரசு வென்று ஆட்சி அமைக்கும்; பாஜகவின் மக்கள் நல விரோத கொள்கையால் பாஜகவும், மோடியும் இத்தேர்தலில் வெற்றி பெற என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கின்றனர்; இத்தேர்தல்கள் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான ஒரு அரையிறுதி என தேர்தல் அரசியலில் பாஜக பாசிசத்தை வீழ்த்தப்போவதாக வரிந்து கட்டிக் கொண்டு பேசினார்கள்.
ஆனால் காங்கிரசு கட்சியின் தோல்வியையும் மக்கள் மத்தியில் அதற்கு செல்வாக்கு இல்லாமல் போனதையும், கண்டு, இக்கணவான்கள், தற்போது வாய் மூடி மெளனமாகி போயுள்ளனர். பாசிசத்தை முதலில் தேர்தல் அரசியலில் வீழ்த்தி, காங்கிரசும் மாநில அரசியல் கட்சிகளும் ஆட்சி அமைத்த பின்பு பாசிசத்தை ஓட ஓட விரட்டலாம் என வாள் சுழற்றிய இக்கணவான்களின் நிலைமையோ இப்போது கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாகிவிட்டது. அடுத்த கட்டமாக இந்தியா கூட்டணியைப் பலப்படுத்த வேண்டும், காங்கிரஸ் கூட்டணி கட்சிகளை மதிக்க வேண்டும் என இப்போது பேச ஆரம்பித்துள்ளனர்.
இச்சட்டமன்ற தேர்தல்களில் ஏன் காங்கிரசு தோல்வியை சந்திந்தது; மக்கள் மத்தியில் ஏன் செல்வாக்கு இழந்தது என்பது பற்றி முதலாளித்துவ பத்திரிக்கைகள் உள்ளிட்டு பலரும் பரிதாபப்பட்டு ஆலோசனைகளை கூறிவருகிறார்கள். ஆனால் பாஜக வெற்றி பெற்றதற்கான பிரதான காரணிகள் எவை? என்பதை நாம் தெரிந்து கொண்டால் தான் தேர்தல் அரசியல் மூலம் ஒருபோதும் பாசிசத்தை வீழ்த்த முடியாது என்பதை புரிந்து கொள்ளமுடியும்.
இலவச திட்டங்கள்தான் இந்த வெற்றியை பாஜகவிற்கு வாங்கிக் கொடுத்ததாக அதனை ஒரு முக்கிய காரணியாக கூறுகின்றனர். தமிழ்நாட்டில் கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக அறிவித்த வாக்குறுதிகளை நகலெடுத்து பாஜக தேர்தல் வாக்குறுதிகளாக கொடுத்ததும், சிலவற்றை தேர்தலுக்கு முன்னரே அமுல்படுத்தியதுமே இந்த வெற்றிக்குக் காரணம் எனக் கூறுகின்றனர். அவர்கள் கூறுவது போல பாஜக வாக்காளர்களை ஈர்ப்பதற்கான முக்கிய சாதனமானங்களான இலவசத் திட்டங்கள், கவர்ச்சி முழக்கங்கள் போன்றவற்றை முந்திக் கொண்டு அறிவித்தது. எரிவாயு உருளை விலை குறைப்பு, விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன், பயிர்களுக்கான குறைந்த பட்ச ஆதார விலை அதிகரிப்பு, விவசாய கடன் தள்ளுபடி, பெண்களுக்கு மாதத்தவணையில் பணம் வழங்குதல், முதியோர் ஓய்வூதிய திட்டம், காப்பீட்டு திட்டங்களுக்கான தொகை அதிகரிப்பு என ஒன்றியத்திலும் தேர்தலைச் சந்தித்த மாநிலங்களிலும் பாஜக பல திட்டங்களை அறிவித்தது. ஆனால் இதுபோன்ற இலவசத் திட்டங்களின் மூலமே பாஜக வெற்றி பெற்றிருக்கிறது என்று இயந்திரகதியில் நாம் இவ்வெற்றியை எடை போட முடியாது.
ஏனெனில் தற்போது ஆட்சியை பறிகொடுத்த சட்டீஸ்கர், இராஜஸ்தானில் காங்கிரசு ஆட்சியில் இருந்த போது, அதன் முதல்வர்களான பூபேஷ் பாகெல், அசோக் கெலாட் மூலம் பல்வேறு இலவசத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு, மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. பாஜக அறிவித்த இலவசத் திட்டங்கள், தற்போதைய தெலுங்கானா சட்டமன்ற தேர்தலிலும். கடந்த கர்நாடக சட்டமன்றத் தேர்தலிலும் பாஜகவிற்கு வெற்றியை கொண்டு வந்துவிடவில்லை.
இதற்கு முன்னர் நடைப்பெற்ற குஜராத், உபி மாநிலங்களில் பெற்ற தேர்தல் வெற்றிகளைப் போலவே இந்த சட்டமன்ற தேர்தல்களிலும், பாஜக வெற்றியடைய, இரண்டு பிரதான காரணிகள் இருக்கின்றன. முதலாவதாக பாஜக மேற்கொள்ளும் இந்துத்துவ கருத்தியல் நிகழ்ச்சி நிரல், அதற்கு பெருகிவரும் மக்கள் ஆதரவு. இரண்டாவதாக மோடியை முன்னிறுத்தும் கவர்ச்சிவாதம் எனும் இழிநிலை அரசியல்.
தேர்தலுக்கு பின்பு நடத்தப்பட்ட பல்வேறு கருத்துக்கணிப்புகளில் இருந்து பார்க்கும் போது, பாஜக பெற்றிருக்கும் இந்துத்துவ கருத்தியல் வாக்கு வங்கி, பசுவளைய மாநிலங்களில் பாஜக வெற்றி பெற வழிகோலுகிறது என்பதைத் தெளிவாக புரிந்துகொள்ள முடிகிறது. இதற்கு உதாரணமாக இராஜஸ்தானின் ‘உயர்’ சாதியினரின் வாக்குகளை காங்கிரசை விட இரண்டுமடங்கு அதிகமாகவும், ம.பியில் 51% அதிகமாகவும் பாஜக பெற்றுள்ளது. இப்பிரிவைச் சார்ந்த பார்ப்பனர்கள், இராஜபுத்திரர்கள், பனியாக்களுக்கு மாநில அரசியலின் பராம்பரியங்கள் இல்லை என்பதோடு இந்துத்துவ பாசிச சக்தியான பாஜகவிற்கு தான் ஓட்டளிக்கின்றனர் என்பதை இச்சட்டமன்ற தேர்தல் ஓட்டு விகிதம் காட்டுகிறது.
சட்டிஸ்கர் மற்றும் இராஜஸ்தானின் காங்கிரசு மாநில முதல்வர்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சார்ந்தவர்களே; மேலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்காக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரி பிரச்சாரத்தில் ஈடுபட்ட காங்கிரசு கட்சிக்கு எந்த பலனும் இச்சட்டமன்றத் தேர்தல்களில் கிடைக்கவில்லை என்பதே அப்பிரிவினர் பாஜகவிற்கு அளித்த ஓட்டு விகிதம் தெள்ளத் தெளிவாக உணர்த்தியுள்ளது. ஆக்சிஸ் இந்தியா டுடே நிறுவனத்தின் தரவுகளின் படி, ஓ.பி.சி பிரிவினரின் வாக்கு விகிதத்தில் பாஜக பெற்றிருக்கும் முன்னிலை இதற்கு சாட்சிகளாக உள்ளன. இராஜஸ்தானில் 26%, சட்டிஸ்கரில் 13%, ம.பியில் 24% ஓபிசி பிரிவினரின் வாக்குகளை காங்கிரசை விட அதிகமாக பாஜக பெற்றிப்பதாக இந்நிறுவனம் கூறுகிறது.
விவசாயிகள் அதிகளவில் நிறைந்திருக்கும் ம.பி, இராஜஸ்தான், சட்டிஸ்கர் போன்றவற்றில் சம்யுக்தா கிசான் மோர்ச்சாவும், காங்கிரசு கட்சியும், அம்மாநிலக் கிராமங்களில் நிலவும் பொருளாதார நெருக்கடி குறித்து பிரச்சாரம் செய்த போதும், விவசாயிகளின் ஓட்டு கணிசமான அளவு பாஜகவிற்கு சென்றுள்ளது. விவசாய சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாய சங்கங்கள் இந்த தேர்தலில் பாஜகவைத் தோற்கடிப்பதற்கு என கவனம் கொடுத்து களத்தில் இறங்கி வேலை செய்தும் அதன் வெற்றியத் தடுக்க முடியவில்லை.
சோயாபீன், கோதுமை மற்றும் பிற பயிர்களுக்கு பெயர் பெற்ற ம.பியின் மால்வா-நிமர் பகுதியில் மொத்தமுள்ள 66 இடங்களில் பாஜக 48 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. கடந்த 2018ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் காங்கிரசு இப்பகுதியில் 36 இடங்களையே வெற்றி பெற்றிருந்தது.
ம.பி, இராஜஸ்தான், சட்டிஸ்கர் போன்ற மாநிலங்களில் விவசாயிகள் மற்றும் விவசாயம் சார்ந்த தொழிலில் ஈடுபடுவர்களின் ஓட்டு விகிதம் கடந்த சட்டமன்ற தேர்தல்களை ஒப்பீடும் போது தற்போது நடந்த தேர்தல்களில் பாஜகவிற்கு முறையே 7.46%, 2.43%, 13.2% ஆக அதிகரித்திருக்கிறது. இதுவே காங்கிரசுக்கு முறையே -0.76%, -1%,-0.5% ஆக குறைந்திருக்கிறது. இதன் மூலம் இந்துத்துவ கருத்தியலை அடிப்படையாக கொண்ட இயல்பான வாக்கு வங்கியே அதற்கு வெற்றியைப் பெற்றுக் கொடுக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும்.
இரண்டாவதாக இந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களில் முதல்வர் வேட்பாளரை அறிவிக்காமலேயே, மூன்று மாநிலங்களில் மோடி எனும் பிம்பத்தை நம்பி, பாஜக வெற்றியும் பெற்றிருக்கிறது. மோடி எனும் பிம்பத்தை வானளாவிய உயரத்திற்குக் கட்டமைத்து அதனை மக்கள் மத்தியில் கொண்டு சென்றிருக்கிறார்கள். சந்திரனுக்கு ராக்கெட் விட்டாலும் மோடி, விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றாலும் மோடி என எதெற்கெடுத்தாலும் மோடியின் பெயர்தான் முன்னிலைக்கு கொண்டுவரப்படுகிறது. உலக அளவில் இந்தியாவின் பெருமையை கொண்டு சேர்த்த தலைவர், நாட்டின் பாதுகாப்பை உறுதிசெய்த தலைவர், வேறு நாட்டுப் பிரதமர் கூட காலில் விழும் அளவிற்கு புகழ்பெற்றவர் என மோடியின் பிம்பம் தொடர்ந்து பரப்பப்படுகிறது.
தனது கார்ப்பரேட் சார்புக் கொள்கைகள், கொண்டு வந்த சட்ட திட்டங்கள் காரணமாக மக்கள் பெரும் துன்பத்திற்கு ஆளானபோதும், அதனை மறைத்து திசை திருப்புவதற்காக அடித்தட்டு மக்களின், குறிப்பாக உதிரித் தொழிலாளர்கள், கிராமப்புற ஏழைகளின் நாயகனாக மோடியை முன்னிறுத்தும் பிரச்சார யுக்திகளை வகுத்து வருகின்றனர்.
தமக்கென்று ஒரு உலகப் பார்வை கொண்ட சித்தாந்தமோ, அதைப் பிரதிநிதிப்படுத்தும் தலைமையையோ உருவாக்கிக் கொள்ள முடியாத இந்த மக்கள் கவர்ச்சிவாதத்துக்குள் மூழ்கி தம்மை அறியாமலேயே இந்த இழிநிலை அரசியலை ஆதரிக்கிறார்கள். மெத்தப்படித்த அறிவாளிகளின் கூட்டமும் இந்த கவர்ச்சி வாத அரசியலை ஆதரிக்கிறார்கள். கும்பலை ஈர்ப்பவர்கள், கவர்ச்சி நிறைத் தலைவர்கள்(charismatic Leaders) தான் இந்த நாட்டை ஆளத் தகுதியானவர்கள், உரிமை உடையவர்கள் என ஒப்புக் கொண்டுவிடுகிறார்கள்.
கவர்ச்சிவாதம் என்று சொல்லும் போது வெறுமனே, வெறுப்பு, விரக்தி அடிப்படையில் கூறவில்லை. மறுகாலனியாக்கத்தில் இந்த கவர்ச்சிவாத அரசியல், ஒரு வகை; வடிவம் என்கிற அர்த்தத்தில் தான் கூறுகிறோம். இந்த வகையில் மோடி எனும் பிம்பம் ஆளும் வர்க்கத்தால் முன்நிறுத்தப்படுகிறது.
இன்றைய மறுகாலனியாக்கத்தின் விளைவாக வாக்குரிமை மட்டுமே மக்களின் ஜனநாயகம் என வெட்டி சுருக்கப்பட்டுள்ளது. எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், இந்த அரசை மறுகாலனியாக்க சுரண்டலுக்கும், ஆதிக்கத்திற்கும் தான் பயன்படுத்த முடியும். வேறு எந்த வகையில் பயன்படுத்தாத படிதான் இந்த மறுகாலனியாக்க கட்டமைப்பு கட்டப்பட்டிருக்கிறது.
தற்போதைய வாக்களிக்கும் உரிமை என்பது மறுகாலனியாக்க வடிவிலான ஆதிக்கத்தையும், சுரண்டலையும் மக்களின் மீது திணித்து எந்த கட்சிக்கு அதிகாரம் கொடுப்பது என்பதாக மாற்றப்பட்டுள்ளது; தேர்தல் அரசியலில் காந்தியம், சோசலிசம், பெரியாரியம், அம்பேத்கரியம் என கொள்கைகளை வைத்து கட்சிகள் மோதுவது என்பதெல்லாம் தற்போது இல்லாமல் போய்விட்டதால், மோடி போன்ற கவர்ச்சி வாத பிம்பம் எளிதாக கோலோச்சுகிறது
இம்மறுகாலனியாதிக்க தேர்தல் அரசியலில் மோடி போன்றவர்கள் வீர வசனம் பேசியே தனக்கு ஆதரவாக ஓட்டுக்களை மாற்றுகின்றனர். கடைசி நிமிடத்தில் ஓட்டுக்களை அளிப்பது பற்றி முடிவெடுப்பவர்களிடையே லோக்நிதி சி.எஸ்.டி.எஸ் எனும் அமைப்பு நடத்திய கருத்துக் கணிப்பை, இந்து ஆங்கில நாளிதழ் பிரசுரித்தள்ளது. அக்கருத்துக் கணிப்பில் கலந்துக் கொண்டவர்களில் ம.பியில் மட்டும் 48% பெண்கள் கடைசி நிமிட முடிவாக, பாஜகவிற்கு ஓட்டளித்ததாக கூறுகின்றனர்
இவையெல்லாம் ஏதோ காங்கிரசின் ஓட்டாண்டித்தனத்தை காட்டவில்லை. மறுகாலனியாக்கத்தின் கீழ் நாடாளுமன்ற தேர்தல் அரசியலை இனிமேலும் நம்பி பயனில்லை என்பதேயே காட்டுகிறது.
ஓட்டுக்கட்சி, நாடாளுமன்ற அரசியலுக்குள்ளேயே பாசிசத்தை முறியடிக்க போவதாக கிளம்பியவர்களால் இந்த ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல்களுக்கு பிறகும் இதை புரிந்து கொள்ள முடியவில்லை;
பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தில் தேர்தல் என்பது ஒரு ஆயுதம் மட்டுமே அதனைப் பிரயோகித்து அதில் வெற்றி பெற வேண்டும் என்றால் கூட மக்கள் மத்தியில் பாசிசத்திற்கு எதிரானதொரு கருத்தியலை மையப்படுத்திப் பிரச்சாரமாக கொண்டு செல்ல வேண்டியிருக்கிறது. பாசிச சித்தாந்தத்திற்கு எதிரான மக்கள் செல்வாக்கை உருவாக்க வேண்டியிருக்கிறது. அதற்கான எந்தவொரு முயற்சியையும் பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தைத் தலைமைதாங்குவதாக கூறிக்கொள்ளும் எந்த ஓட்டுக் கட்சியும் எடுக்கவில்லை, அவர்களை ஆதரிக்கும் சித்தாந்தப் புலிகளும் “ஆலோசனை” வழங்கவில்லை.
மாறாக, இந்துத்துவக் கருத்தியலுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு இருக்கிறது என்பதற்காக தாங்களும் அதே கருத்தைப் பிரச்சாரமாக கொண்டு சென்றார்கள். அதன்மூலம் மக்களின் ஓட்டை வாங்கி தேர்தலில் வெற்றிபெற்றுவிடலாம் என நினைத்தார்கள். மத்தியப் பிரதேசத்தில் பாஜக வெற்றி பெற்றாலும் சரி, காங்கிரசு வெற்றிபெற்றாலும் சரி இந்துத்துவக் கருத்தியலுக்கே வெற்றி எனக் கூறும் அளவிற்கு எதிர்க்கட்சிகள் வெளிப்படையாக இந்துத்துவ கருத்தியலுக்கு ஆதரவாக நின்றார்கள். விளைவு தேர்தல் அரசியலில் தலைகுப்புறக் கவிழ்ந்து மண்ணைக் கவ்வியுள்ளனர்.
பாசிசத்திற்கு வழுவான அடித்தளம் இல்லாத, இன்னும் உருவாகாத தமிழ்நாடு போன்ற மாநில மக்களின் மனநிலையில் இருந்து சிந்திக்காமல், பாசிச பாஜக அரசின் திட்டங்கள் மூலமாகத் தனது வாழ்வாதாரம் பறிபோய் அன்றாட வாழ்க்கைக்கே திண்டாடும் நிலை ஏற்பட்டால் கூட பாஜகவிற்குத்தான் வாக்களிப்பேன் என நினைக்கும் பசுவளைய மாநில மக்களின் மனநிலையினைப் புரிந்து கொண்டால் மட்டுமே, பாசிச சித்தாந்தம் அவர்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தைப் புரிந்துகொள்ள முடியும். அப்படிச் சிந்தித்துப் பார்த்துப் புரிந்து கொள்ள முடியாதவர்களுக்குப் பொட்டில் அடித்துப் புரியவைக்கும் விதமாகத்தான் இந்த சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வந்துள்ளன.
- தாமிரபரணி