பாடபுத்தகங்களில் இராமயணமும் மகாபாரதமும்
மாணவர்களிடம் இந்து தேசவெறியை திணிக்கும் காவி பாசிஸ்ட்கள்!

ராமாயணத்தையும், மகாபாரதத்தையும் படித்தால் ராமனையும் கிருஷ்ணனையும் போல சூது-வாதும் வர்ண-சாதி-மதத்திற்காக கொலை செய்வதையும் பல பெண்களோடு கூத்தடிப்பதையும் ஒருவர் கற்றுக் கொள்ள முடியுமே ஒழிய நாட்டுப்பற்று எப்படி உருவாகும்? மாணவர்களிடம் இந்து தேசிய வெறியை தூண்ட முடியுமே ஒழிய இந்திய மக்களின் விடுதலைக்காக மாணவர்களை சிந்திக்க வைக்கமுடியாது.

தேசிய கல்விக் கொள்கை 2020ன் முக்கிய பரிந்துரைகளில் பிரதானமானது பள்ளி கல்வியின் பாடத்திட்டத்தினை மாற்றியமைக்க வேண்டும் என்பது. புதிய நிலைமைகளுக்கு தகுந்தாற் போல பாடத்திட்டத்தினை மாற்ற வேண்டும் என்று மோடி கும்பல் பொதுவெளியில் பேசி வந்தாலும் இந்து தேசிய வெறி கண்ணோட்டத்தை மாணவர்களிடம் ஆழமாக பதிய வைப்பதற்கான வாய்ப்பாகத்தான் ஆர்எஸ்எஸ் பாஜக கும்பல் இதனைக் கருதுகிறது. இந்நோக்கத்திற்காக பாடத்திட்ட தயாரிப்புகளுக்கான கமிட்டிகளில் தங்களுடைய ஆட்களை நிரப்பியுள்ளனர்.  

பாடத்திட்டத்தை மாற்றியமைப்பதற்காக, துறைவாரியான பரிந்துரைகளை வழங்க 25 கமிட்டிகளை தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்(NCERT) அமைத்தது. அதில் சமூக அறிவியல் பாடத்திற்காக அமைக்கப்பட்ட கமிட்டி, 7 முதல் 12 ஆம் வகுப்பு வரை சமூக அறிவியல் பாடத்தில் சேர்க்கப்பட வேண்டிய தலைப்புகள் குறித்த பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை பாடத்திட்டத்தை இறுதி செய்யும் குழுவிடம் (NSTC) சமர்ப்பித்துள்ளது. இதனடிப்படையில் புதிய பாடப்புத்தகத்தை அடுத்த கல்வியாண்டில் கொண்டு வரப்போவதாக NCERT தெரிவித்துள்ளது.

 

 

சமூக அறிவியலுக்கான பாடத்திட்டக் குழு தனது பரிந்துரையில், ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களைப் பாடப் புத்தகங்களில் சேர்க்க வேண்டும், பாடப் புத்தகங்களில் இந்தியா என்று உள்ளதை பாரத் என்று மாற்ற வேண்டும், வகுப்பறைச் சுவர்களில் அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை எழுத வேண்டும் உள்ளிட்ட பலவற்றை பரிந்துரைத்துள்ளது. கூடவே ராமாயணம் மற்றும் மகாபாரதம் போன்றவை இந்தியாவின் செவ்வியல் வரலாறு என்றும் இக்குழு கூறுகிறது.

பத்திரிக்கையாளர்களை சந்தித்த சமூக அறிவியல் பாடத்திட்டக்குழுவின் தலைவர் ஐசக், “சமூக அறிவியல் பாடத்திட்டத்தில் ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களை மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும் என இக்குழு வலியுறுத்தியுள்ளது. டீன் ஏஜ் பருவத்தில் மாணவர்கள் தங்கள் சுயமரியாதை, தேசபக்தி மற்றும் தேசத்தின் பெருமையை வளர்த்துக் கொள்கிறார்கள் என்று நாங்கள் நினைக்கிறோம். ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் நாட்டை விட்டு வெளியேறி, அவர்களுக்குள் தேசப்பற்று இல்லாததால், பிற நாடுகளில் குடியுரிமை பெறுகிறார்கள். எனவே, அவர்கள் தங்கள் வேர்களைப் புரிந்துகொள்வதும், தங்கள் நாட்டின் மீதும் அவர்களின் கலாச்சாரத்தின் மீதும் அன்பை வளர்ப்பதும் முக்கியம்.”  

இந்திய இளைஞர்களிடம் நாட்டுப்பற்று குறைந்து விட்டது. இந்திய மக்களின் வரிப்பணத்தில் படித்து இந்தியாவிற்கு சேவை செய்யாமல் வெளிநாடுகளில் குடியேறுகிறார்கள் என்பதுதான் சங்கிகளின் வழக்கமான டெம்ப்லெட். அதையே இந்து மதவெறியோடு கலந்து உருட்டியிருக்கிறது NCERT அமைத்த ‘கல்வியாளர்கள் குழு’.

ராமாயணத்தையும், மகாபாரதத்தையும் படித்தால் ராமனையும் கிருஷ்ணனையும் போல சூது-வாதும் வர்ண-சாதி-மதத்திற்காக கொலை செய்வதையும் பல பெண்களோடு கூத்தடிப்பதையும் ஒருவர் கற்றுக் கொள்ள முடியுமே ஒழிய நாட்டுப்பற்று எப்படி உருவாகும்? மாணவர்களிடம் இந்து தேசிய வெறியை தூண்ட முடியுமே ஒழிய இந்திய மக்களின் விடுதலைக்காக மாணவர்களை சிந்திக்க வைக்கமுடியாது. இவையெல்லாம் சங்கிகளுக்கு தெரியாமல் இல்லை. இருப்பினும் இதனை பாடத்திட்டத்தினில் வைக்க வேண்டும் என்று துடிக்கின்றனர்.

ஐசக்கின் வாதத்தின் படியே பார்த்தால் இந்தியாவிலிருந்து வெளிநாடுகளில் குடியுரிமை பெறுபவர்கள் யார்? இதற்கு மோடியின் கடந்த ஒன்பதரை ஆண்டு பொற்கால ஆட்சியின் புள்ளிவிவரங்களைக் கொண்டே பார்க்கலாம்.

சில மாதங்களுக்கு முன் வெளிவந்த ஒருஅறிக்கையின் படி, ஜேஇஇ தேர்வில் முதல் 1000 இடங்களை பிடித்து முன்னணியான ஐந்து ஐ.ஐ.டி. களில் படித்த மாணவர்களில் மூன்றில் ஒருவர் வெளிநாடுகளில் குடிபெயர்கின்றனர். இவர்களில் 65% அமெரிக்காவில் குடியேறுவதாகவும் அவ்வறிக்கை கூறுகிறது. எய்ம்ஸ்ல் மருத்துவ படிப்பு படிக்கும் மாணவர்களில் கணிசமானோர் வெளிநாடுகளில் செட்டிலாகிவிடுவதாக மற்றொரு அறிக்கை சொல்கிறது.

ஒவ்வொரு வருடமும் சராசரியாக 5000 கோடீஸ்வர இந்தியர்கள் வெளிநாடுகளில் குடியேறுகின்றனர். 2023ல் மட்டும் 6500 கோடீஸ்வர இந்தியர்கள் வெளிநாடுகளில் குடியேற வாய்ப்பு இருப்பதாக ஒரு அறிக்கை கூறுகிறது. இவர்களில் கணிசமானோர் இராமாயணத்தையும் பகவத் கீதையும் குலநூலக் கொண்டும் இராமனையும் கிருஷ்ணனையும் குலத்தெய்வமாக வழிபடும் உயர் சாதி இந்துக்களே. இவர்களுக்கு ஏன் தேசபக்தி இல்லாமல் போனது? ஆண்டாண்டு காலமாக இங்கேயே உழைத்து வாழும் பல கோடிகணக்கான மக்களுக்கு இராமாயணம். மகாபாரதம் வாயிலாக தேசப்பற்றை ஊட்ட வேண்டிய அக்கறை சங்கிகளுக்கு திடீரென்று ஏன் வந்தது?

ராமாயணம் மற்றும் மகாபாரதத்தை பள்ளிகளில் போதிப்பதன் மூலம் மாணவர்களுக்கு சங்கிகள் ஊட்ட நினைப்பது மக்கள் நலன் சார்ந்த தேசபக்தி அல்ல. மாறாக இவர்களின் நோக்கமே மாணவர்களிடம் இந்து தேசிய வெறியை உருவாக்குவதுதான். சங்கிகளைப் பொருத்தவரை தேசப்பற்று என்பதே இந்து தேசியவெறி தான். ஆகையால் இப்பாடத்திட்டத் திருத்தம் என்பது, மாணவர்கள், இளைஞர்களைத் தங்களைச் சுற்றி நிகழும் மொத்த சமூக நிகழ்வையும் இந்து தேசிய கண்ணோட்டத்தில் இருந்து பார்ப்பதற்கு பழக்குவதற்கான ஒரு சாதகமான நல்வாய்ப்பாகத்தான் ஆர்எஸ்எஸ்-பிஜேபி கும்பல் கருதுகிறது.

உதாரணமாக தற்போது நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா-பாகிஸ்தான் போட்டிகளில் இந்திய ரசிகர்கள் நடந்து கொண்ட விதத்தை பார்த்தாலே இதை ஒருவர் புரிந்து கொள்ள முடியும். பாக்கிஸ்தான் வீரர்களைப் பார்த்து ஜெய் சிறிராம் என்று மொத்த கூட்டமும் கத்தியிருக்கிறது. இந்தியா-ஆஸ்திரேலியா இறுதிப் போட்டியிலே இந்தியா ஜெயிக்க அனுமன் சாலிசாவை ஒரு கும்பல் ஸ்டேடியத்தில் பாடியிருக்குறது. இவர்களெல்லாம் ஆர்எஸ்எஸ்-பாஜக கும்பலால் மதவெறியூட்டப்பட்ட படித்த நடுத்தர வர்க்கப் பின்புலத்திலிருந்து வரும் இளைஞர்கள். தற்போது பாடப்புத்தகங்கள் மூலம் இவற்றை பள்ளி கல்லூரிகளில் ஊட்ட முடியுமென்றால் விளைவுகளை நீங்களே சிந்தித்துப் பாருங்கள்.

 

 

ஒருபுறம் ஏகாதிபத்தியங்களின் கட்டற்ற சுரண்டலுக்கும் கொள்ளைக்கும் நாட்டை திறந்து விடுவது மறுபுறம் இந்து தேசவெறியை மாணவர்கள்/இளைஞர்கள்/மக்களிடம் பரப்புவது தான் காவி கும்பலின் திட்டம். கூடவே தனது இந்துராஷ்டிர கனவிற்காக ஒரு கருத்தியல் சூழலை உருவாக்குவதற்கான ஒரு முக்கிய படியாக பள்ளி பாடத்திட்டங்களை மாற்றுவதை பிஜேபி-          ஆர்எஸ்எஸ் கும்பல் கருதுகிறது.

மேலும் இந்த இதிகாசங்கள் உண்மையான வரலாறு என்பதற்கான வரலாற்று ஆதாரங்கள் எதும் இல்லை. இதனை இந்திய வரலாறு என்று வரலாற்று ஆய்வாளர்கள் யாரும் இதனை ஏற்றுக்கொண்டத்தில்லை. ஒரு பழங்காலக் கதையை உண்மையான இந்திய வரலாறு என்று திணிப்பதற்குப் பின்னால் இருப்பது பார்பனிய மேலாத்திக்கமேயன்றி வேரென்ன இருக்க முடியும்?     

என்ன மாதிரியான பாடத்திட்டம் நமக்கு தேவை?

காவி-கார்ப்பரேட்டுகளுடைய பாசிச நோக்கங்களுக்கு வலுசேர்ப்பதற்காக உருவாக்கப்படும் பாடத்திட்டம் நமக்கு தேவையில்லை. இந்த பாசிஸ்ட்களை வீழ்த்துவதற்காகவும் பெரும்பான்மையான மக்களை இந்தக் கொடிய உழைப்பு சுரண்டில் இருந்து விடுதலை செய்வதற்காகவும் பாட்டாளி வர்க்க விடுதலைக்கான அரசியல்-தத்துவ-பொருளாதார-வரலாற்றுப் பாடங்களை நமது மாணவர்களின் பாடத்திட்டங்களில் வைக்க வேண்டும். இவற்றையே நாம் பள்ளிகளில் போதித்தாக வேண்டும். இவற்றை தொழிலாளர்களிடமும் விவசாயிகளிடமும் குட்டி முதலாளித்துவ பிரிவினரிடமும் நாம் கொண்டு செல்ல வேண்டும். இதுவே காவி-கார்பரேட் பாசிஸ்டுகளை வீழ்த்துவதற்கு உதவியாக அமையும்

அழகு

 

https://www.business-standard.com/education/news/include-ramayana-and-mahabharata-in-the-textbooks-recommends-ncert-panel-123112200205_1.html

https://www.hindustantimes.com/india-news/ncert-panel-recommends-inclusion-of-ramayana-mahabharata-in-school-textbooks-101700567132062.html

https://qz.com/a-third-of-indias-iit-graduates-leave-the-country-1850522071

https://www.moneycontrol.com/news/trends/features/6500-super-rich-indians-will-leave-india-in-2023-and-why-3-10900581.html

 

 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன