தமிழ்நாட்டை கலவர பூமியாக்கி வரும் RSS – BJP பாசிசக் கும்பல்!

 

 

கர்நாடகாவில் பிஜேபி கூட்டணி வெற்றிப் பெறவில்லையெனில் கலவரம் நடக்கும் என கலவரக்குரல் எழுப்பினார் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா. இதற்காகவே இவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்க வேண்டும். என்ன செய்வது? ஒன்றியத்தை ஆள்வது அவர்களாக இருப்பதால் அது நடக்கவில்லை. ஒரு மாநில தோல்விக்கே இந்த கலவரக் குரல் என்றால் நடைபெறவிருக்கும் 5 மாநில தேர்தலில் தோல்வியடைந்தால் கலவரத்தை நடத்தியே முடிப்பார்கள் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. ஒரு வேலை வெற்றி பெற்றால் கலவரத்திற்கு விலக்களிக்கலாம். ‘எல்லாம் வதை கடவுளான எம்பெருமான் ஆர்எஸ்எஸ் விட்ட வழி’.

இது ஒரு புறமிருக்க, தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான அரசு அமைக்கப்பட்டதிலிருந்து பாசிச மோடி அரசு, ஆளுநர் கங்காணி ஆர்.என்.ரவியின் மூலம் குடைச்சலைக் கொடுத்து வருவதோடு, நீட் தேர்வு விலக்கு உட்பட 20க்கும் மேற்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க விடாமல் கிடப்பில் போட்டு திமுக அரசின் செயல்பாட்டை முடக்கி வருகிறது. சிபிஎம் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யாவுக்கு மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் வழங்கவிருந்த டாக்டர் பட்டத்திற்கான கோப்பில் கையொப்பமிடாமல் மறுத்து வருவதோடு, டிஎன்பிஎஸ்சி தலைவராக முன்னாள் டிஎஸ்பி.சைலேந்திரபாபுவை நியமித்த தமிழ்நாட்டு அரசு முடிவுக்கு ஒப்புதல் தராமல் இழுத்தடித்தும் வருகிறது. மேலும், காந்தியைக் கொன்ற கோட்சேயின் வாரிசான ஆர்.என்.ரவி, காந்தியும் தமிழ்நாட்டில் பிறந்திருந்தால் சாதி தலைவராக்கி இருப்பார்கள் என்று வாய்க்கு வந்தபடியாக அவதூறு பிரச்சாரத்தை ஆர்.என்.ரவியின் மூலம் மக்களிடம் பரப்ப வைத்து, திமுகவின் மீதான வெறுப்பை விதைத்து வருகிறது.

இவற்றை எதிர்த்து முறியடிக்க தனது கோடிக்கணக்கான உறுப்பினர்களை களத்தில் இறக்கி ஒன்றிய அரசையும், அதன் கங்காணியான ஆர்எஸ்எஸ் ஆர்.என்.ரவியையும் மக்கள் விரோதியென, மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தி, தனிமைப்படுத்தி தமிழ்நாட்டை விட்டு (ஜெயலலிதா சென்னா ரெட்டியை ஓட விட்டது போல) இந்நேரம் ஓட விட்டிருக்க வேண்டும். இதற்கு துப்பில்லாத திமுக கூட்டணி மீண்டும், மீண்டும் மாநிலங்களின் சனநாயக உரிமையை கேலிக் கூத்தாக்கி வரும் பாசிச மோடி அரசிடமே ஆர்.என்.ரவியை திரும்ப பெறு, திரும்ப பெறு என மண்டியிடுவது கேவலம். கொட்டக் கொட்ட குனிவதன் விளைவே பாசிச ஆர்எஸ்எஸ் – பிஜேபி கும்பல் ஏறி தாக்கி வருகிறது. கலவரத்திற்கான கருத்துப் பிரச்சாரத்தை, அவதூறுப் பிரச்சாரத்தை தொடர்ந்து பரப்பி வருகிறது. அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு அதன் காவிகளை வானரப்படைகளை களத்தில் இறக்கிவிட்டு ஊர்வலங்கள் நடத்துவது, அனுமதி இல்லாமல் கொடிக் கம்பங்களை நடுவது வாயிலாக கலவரங்களுக்கு வித்திடுகிறது. ஆர்எஸ்எஸ் பிஜேபி கும்பல்கள் நடத்தும் வெட்டுக்குத்து தகராறுகள், அதையொட்டிய கொலைகள், இன்றைய தினம் ஆளுநர் மாளிகைக்கு முன்பு நடத்தப்பட்ட பெட்ரோல் குண்டு வீச்சு போன்றவைகளை முன்னிறுத்தி கலவரங்களை அரங்கேற்றுவதை துவங்கி வருகிறது.

இவற்றையெல்லாம் காரணமாக முன்னிறுத்தி தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்து விட்டது என்று (எடப்பாடியும், அண்ணாமலையும், வானதி சீனிவாசனும் பிரச்சாரம் செய்வது போல) அவதூறு பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்து விடுவதையும், பிஜேபி தலைமையைக் கொண்டு பிஜேபியினர் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக அவதூறைப் பரப்பி – ஆய்வு குழுவை அமைத்து, அதன்மூலம் அவர்கள் கட்சிகளிடமே கருத்துக் கேட்பதை முடித்து தமிழ்நாட்டை கலவர பூமியாக அறிவித்து 365-ஐ அரங்கேற்றி திமுக அரசைக் கலைக்கவும் செய்யலாம். நூற்றுக்கணக்கான ஊர்வலங்களை நடத்துவது மூலம், நூற்றுக்கணக்கான கொடிக்கம்பங்களை நடுவதும் மூலம், கிறிஸ்தவர்கள் – இஸ்லாமியர்கள் – தலித் மக்கள் மீதான தாக்குதலை நடத்துவது மூலம் கலவரத்தை செயற்கையாக உருவாக்கி மணிப்பூரைப் போல பிளவுபடுத்தி சிதைக்கவும் செய்யலாம்.

தேர்தலுக்கு முன்பே ஆர்எஸ்எஸ் – பிஜேபி பாசிஸ்டுகள் துவங்கி இருக்கும் இக்கலவரத்தை கூட்டணியின் அணிகளையும் மக்கள் சக்தியையும் – அதாவது, மக்கள் திரளையும் கொண்டு எதிர்வினையாற்றி முறியடிக்க முனையாமல் தேர்தல் வரும் வரை காத்திருப்பது – இருப்பதையும் இழப்பதோடு, காவிகளின் வானரப்படைகள் ஆக்டோபஸ்-ஸாக தமிழ்நாட்டை சுற்றி வளைப்பதை வேடிக்கை தான் பார்க்க முடியும். இதற்கேற்பவே தமிழ்நாட்டு அரசில் முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட ஆர்எஸ்எஸ் சித்தாந்தவாதிகளான நைசியமாக உள்ளே நுழைப்பதையும் ஏற்கனவே உள்ள அதிகாரிகளை வளைத்துப் போடுவதையும் மேற்கொண்டு வருகிறது. மேலும் அடிமட்டத்திலும் பாசிச அடியாட்கள் – பாசிச கும்பல்கள் அடங்கிய பல்வேறு பயங்கரவாத அமைப்புகளை உருவாக்கி பயிற்சியும் அளித்து உறுதிப்படுத்தி வருகிறது. இவற்றை உணராமல் தடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளாமல் “ஆளுநர் மாளிகையே அடக்கு வாயை” – “நீட் விலக்கு நமது இலக்கு”, “பாஜக பருப்பு தமிழ்நாட்டில் வேகாது” என்று வாயில் வடை சுட்டால் மட்டும் போதாது.

  • மோகன்

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன