அரசியல் களத்தில் இன்றைய விவாதப் பொருளாக வலம் வரும் சனாதனமானது, வைதீக மரபைக் கொண்ட பார்ப்பன மதம். இதற்கு வெள்ளையன்தான் இந்து மதம் என பெயரிட்டான். ஆங்கிலேயன் போட்டச் சட்டத்திற்கு ஆங்கிலப் பெயரை வைத்தான்.அதை நீக்கி விட்டு இந்திப் பெயரை சூட்டும் ‘சுயமரியாதை’யுள்ள இவர்கள் வெள்ளையன் வைத்த இந்து என்ற பெயரை நீக்கலாமே; நீக்கினால் நரி சாயம் வெளுத்த கதையாக சனாதனம் சந்தி சிரித்து பார்ப்பன சாயம் பூசப்பட்ட இந்து மதம் என்பது வெளுத்து விடும்.
வெள்ளையன் வைத்த பெயரை இவர்கள் ஏற்றுக்கொண்ட அடிப்படையில் பார்ப்பன மதமான, சனாதன இந்து மதம் என்பது ஒரு அஞ்சறைப் பெட்டி. அதில் பிரிக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு சாதி, அதற்கான மூடி தான் இந்து மதம். இந்த சாதிய கட்டுகள் உடைந்தால் பார்ப்பன இந்து மதமாக இல்லாமல் பார்ப்பன மதமாகவே பல்லிளிக்கும், அஞ்சறைப் பெட்டியில் சீரகம், சோம்பு, மிளகு, கடுகு, வெந்தயம் என தனித்தனியாகவுள்ளன இவை ஒன்றுடன் ஒன்று கலக்காமல் இறுக்கமாக இருக்கவே அஞ்சறைப் பெட்டி மூடி. அப்படியே கலந்து விட்டால் மெனக்கெட்டு பிரித்தெடுத்து விடுவார்கள். ஏனெனில் ஒன்றுடன் ஒன்று கலந்து விட்டால் சுவை மாறிவிடுமாம். இதே போல் சாதிகளும் கலந்து விட்டால் புனிதம் கெட்டுவிடும் என்பதே சனாதனம்.
சமூக மக்களை பார்ப்பனன், சத்ரியன், வைசியன், சூத்திரன் என 4 வர்ணங்களாகப் பிரித்து இவற்றில் சூத்திர வர்ணம் மட்டும், மற்ற 3 வர்ணங்களுக்கு சேவை செய்வதற்கான பணியை உருவாக்கி கொடுத்ததே சனாதன இந்து மத பார்ப்பன தர்மம். இந்த சனாதன மரபு தான் இன்று வரை கோலோச்சி வருகிறது. இவைதான் வர்ணப் பிரிவினையில் வராத அவர்ணப் பிரிவினரை தீண்டத் தகாதவர்கள் என அறிவித்து ஊருக்கு வெளியே தள்ளியது. 4 வர்ணங்கள் இழிவாக கருதிய வேலைகளை அவர்ணர்களுக்கு ஒதுக்கியதோடு அவர்களை தீண்டத்தகாதவர்களாகவும் ஒதுக்கி வைத்தது. கிராமங்களையும் ஊர் – சேரி என பிளவுபடுத்தி சேரியை இழிவாக நடத்தி வரும் கொடுமை இன்று வரை நீடிக்கிறது.
4 வர்ணங்களுக்குள் படிநிலை – வேற்றுமை இருப்பினும், வெறுத்து ஒதுக்குவதை விட ஒத்துப் போவது இருக்கும். ஆனால், அவர்ணத்தில் உள்ளவர்களிடம் வர்ணத்தவர்கள் ஒத்துப்போவதைவிட வெறுத்து ஒதுக்குவதே நீக்கமற நிறைந்திருக்கும். இதோடு மட்டும் நிறுத்தாமல் கை, கால்களை வெட்டி ஊனமாக்குது, குற்றுயிர், கொலையுருமாக அறுத்து போடுவது, வீடு புகுந்து தாக்குவது என்ற கொடூரங்களும் அரங்கேறும். தர்மபுரி, வேங்கை வயல், நாங்குநேரி, விழுப்புரம் போன்று இந்திய ஒன்றிய முழுவதும் நடந்தேறும் கொடூரங்களைச் சொல்லி மாளாது. இன்று தமிழக – திமுக அரசால் நினைவூட்டப்படும் இமானுவேல் சேகரன் கொல்லப்பட்டதும் சனாதனத்தால் திணிக்கப்பட்ட ஆதிக்க சாதி வெறிதான். ‘பரியேறும் பெருமாள், திரைப்படம் போல காதல் கல்யாணம் என்ற பெயரில் கொண்டான் – குடுத்தான் போல ஒன்று கலக்க முனையாமல், அவரவர் சாதி அடையாளத்தோடு பழகுவதை நிறுத்திக் கொண்டால் பிரச்சனையில்லை, இதுதான் சனாதனம்.
வேலை பிரிவினையின் அடிப்படையில் அமைந்த மக்கள் பிரிவினரிடம் தீட்டு, தீண்டாமையைப் புகுத்தி, அவற்றை பிறப்பு அடிப்படையில் பாகுபடுத்தி தீண்டத் தகாதவர்களை சேரியாகவும், தீண்டத் தகுந்தவர்களை ஊராகவும் இறுத்தியது, இன்று வரை அந்த அவலம் நீடித்து வருகிறது. இது சனாதன இந்துமத பார்ப்பன தர்மம் இல்லாமல் வேறென்ன? இவ்வளவு கொடுமைகளை அன்றாடம் அரங்கேற்றி வரும் இந்த சனாதன இந்துமத பார்ப்பன தர்மத்தை – அமித்சா திரிப்பதைப் போல இந்து மக்களை அல்ல – அதன் தத்துவத்தை ஒழிக்காமல், அதோடு சேர்ந்து பிறந்த சாதியை, தீட்டை, தீண்டாமையை ஒழிக்க முடியாது.
இந்த சனாதன தத்துவத்தைத் தான் பார்ப்பன பாசிச – ஆர்.எஸ்.எஸ் – பிஜேபி கும்பலும், இவர்கள் தலைமையில் அமைக்கப்பட்ட மோடி ஆட்சியும் ஆதரித்து பிரச்சாரம் செய்கிறது. இந்த சனாதனத்தின் தீண்டாமையை வெறுத்து ஒதுக்குபவர்களின், எதிர்த்து பேசுபவர்களின், விமர்சிப்பவர்களின் தலைக்கும் உயிருக்கும் விலை வைக்கிறது. பணிய மறுத்தால் கல் புர்க்கி, பன்சாரே, தபோல்கர், கௌரி லங்கேஷ் போன்றவர்களை சனாதன சன்ஸ்தா என்கிற அமைப்பை ஏவி கொலை செய்ததைப் போல கொன்றொழிக்கிறது. பசுவதை என்ற பெயரில் தலித் மக்களை, துலுக்கன், அந்நியன் என்ற பெயரில் இஸ்லாமிய மக்களை, கிறிஸ்துவ மக்களை ஆர்எஸ்எஸ் -காலிப் படைகளான வி.எச்.பி, பஜ்ரங்தள், ராமா சேனா, இந்து சேனா, அனுமன் சேனா போன்ற அமைப்புகள் மூலம் கொன்றுக் குவித்துள்ளன, இப்போது சொல்லுங்கள் கொலைவெறி, தீண்டாமை வெறி கொண்ட இந்த சனாதன இந்துமத பார்ப்பனிய தர்மத்தை – தத்துவத்தை ஒழிக்காமல் நாம் உயிர் வாழும் உத்திரவாதத்தை – காலத்தை நீடித்து வைத்துக் கொள்ள முடியுமா?
பகுத்தறிவுள்ள எவராலும், சனநாயகத்தை நேசிக்கும் எவராலும், வாழ்வுரிமைக்குப் போராடும் எவராலும் நீடிப்பதற்கு அனுமதிக்க முடியாது, என்பதோடு இவற்றை (சனாதன ஒழிப்பை) சக உழைக்கும் மக்களிடம், குறிப்பாக ஆதிக்க சக்திகளிலுள்ள “சனநாயக வாதிகளிடம் பிரச்சாரமாக முன்னெடுத்துச் செல்வோம்! தீட்டையும் – தீண்டாமையையும் நியாயப்படுத்தும் சனாதன இந்துமத பார்ப்பனியத்தை ஒழித்துக் கட்டுவோம்!
வள்ளுவம் மீதுப்பற்றுள்ள தமிழ்நாட்டு மக்களை சனாதனத்திற்குள் வளைத்துப்போட வள்ளுவமும் – சனாதனமும் ஒன்றுதான் என்று கயிறுத் திரிக்கின்றனர். சில தினங்களுக்கு முன்பு ஒரு திருமண நிகழ்ச்சியில் சனாதனவாதியான எச்.ராஜா இந்து சனாதன தர்மம் குறித்து பேசும் போது, பகவத் கீதையும், வள்ளுவமும் ஒத்தக் கருத்துடையதாக, “பிறப்போக்கும் எல்லாம் உயிருக்கும் சிறப்பொவ்வா, செய் தொழில் வேற்றுமை யான்” – என்கிற 972 வது குறளை மேற்கொள் காட்டியுள்ளார். அதாவது வள்ளுவமானது செய்யும் தொழில் அடிப்படையில் பெருமை – சிறுமை என்று கூறுவதையே, நான்கு வர்ணங்களாகப் பிரித்து கண்ணபிரான் கூறுவதாக, ஒரு பொய்யை அவிழ்த்து விட்டார். இவர் மேற்கோள் காட்டும் குறள் என்ன சொல்கிறது? எல்லா மக்கள் உயிருக்கும் பிறப்பு இயல்பானது சமமானதே. செய்யும் தொழிலின் வேறுபட்டால் பெருமை – சிறுமை என்று சிறப்பு இயல்புதான் ஒருபோதும் ஒத்துப் போவதில்லை என்கிறது. வேலையின் தன்மையையும், அதற்கேற்ற திறமையையும், அதற்கு அளிக்கப்படும் மதிப்பையும் வைத்தே பெருமை – சிறுமை என்பது தீர்மானிக்கப்படுகிறது. கண்ணபிரானை போல பிறப்பை வைத்து சாதியைத் தீர்மானிக்கவில்லை.
கண்ணபிரான் கூறிய வர்ணத்திற்கு ஒரு வேலை, சாதிக்கு ஒரு வேலை என்கிற கருதுகோளும் ஒன்றா? இது வடிகட்டிய பொய் அல்லவா? தங்கள் கருத்தைத் திணிப்பதற்கு ஏற்றவாறு மற்றவர் கருத்தைத் திரித்து புரட்டும் செயல் அப்பட்டமான அயோக்கியத்தனம் இல்லையா? இப்படிப்பட்டபுளுகினிகளை வள்ளுவர், “பொய்யாமை பொய்யாமை யாற்றி னறம்பிற, செய்யாமை செய்யாமை நன்று” (குறள் 297) என்ற குறளின் மூலம் ஒருவன் பொய் சொல்லாமல் வாழ்வனாக இருந்தால், வேறு எந்த அறங்களையும் செய்யத் தேவையில்லை. இதுவே, அனைத்து அறங்களையும் அவனுக்கு தேடித் தரும் என்கிறார்.
ஆனால் மனுவோ (மனு – த – சாத் – அத்: சுலோ.112) “பல மனைவிகளையுடையவன் அவர்களின் புணர்ச்சிக்காகவும், பசு மாடுகளின் புல்லுக்காகவும், பிராமணர்களைக் காப்பாற்றவும் பொய் சொன்னால் குற்றமில்லை” என்கிறது. இதுதான் இவர்களின் சனாதன லட்சணம். பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்த இந்த புலவர் பெருமான்கள் பொய்யையே திரும்பத் திரும்பச் சொல்லி உண்மையாக்குவதில் கேடிகள். இந்த சனாதன இந்து ராஷ்டிரத்தைத் தான் இந்து, இந்தி (பாரதம்) இந்தியா என்கிற பெயரில் நிறுவத் துடிக்கிறது. இந்த கேடிகளோடு மானமுள்ள, சுயமரியாதையுள்ள, சனநாயக உணர்வுள்ள எவருக்கும் ஒத்து வாழும் எண்ணம் வராது.மாறாக ஒழிக்க வேண்டும் என்ற ரௌவுத்திரம் தான் வரும்.
பெண்களை இழிவு படுத்துவதும், அடிமைப்படுத்துவதும் பிற்போக்கு தன்மையும், செல்வத்தை வைத்துப் பிரித்துப் பார்க்கும் வர்க்க வேற்றுமையும், ஒடுக்குமுறையும், சுரண்டலையும் சனாதன இந்துமத பார்ப்பனியம் உட்பட இதர அனைத்து மதங்களும் அங்கீகரிக்கவே செய்கின்றன. இது போன்று அனைத்து மதங்களின் கருத்துகளும் எதுவும் மாறாதது, நிலையானது என்கிற கருத்து முதல் வாதக் கண்ணோட்டத்தை அடிப்படையாகக் கொண்டதே. இதில் எந்த மதங்களுக்கும் கருத்து வேறுபாடு இல்லை. மக்களின் அறியாமையின் விளைவால் தோன்றிய கடவுள் நம்பிக்கையை அடிப்படையாக – கருவாக வைத்துதான் மத நிறுவனங்கள் கட்டியெழுப்பப்படுகின்றன. இதன் மூலம் மத போதனையை ஊட்டி மக்களை அடிமைப்படுத்துவதை, பகுத்தறிவுள்ள எவராலும் ஏற்க முடியாது. எவரும் ஏற்கவும் கூடாது. அதே வேளையில் எந்த ஒரு மதமும் ஆதிக்கம் செலுத்தி மற்ற மதங்களை ஒடுக்குவதையும், ஒதுக்குவதையும் அவசியம் அனுமதிக்க கூடாது. இந்த கண்ணோட்டம் சனநாயகத்தை நேசிக்கும் அனைவருக்கும் அவசியம். ஆனால் இந்து மத சனாதன தர்மத்தை வரித்துக்கொண்ட சங்கராச்சாரிகளைப் போல வேலைக்குச் செல்லும் பெண்கள் அனைவரும் விபச்சாரிகள் என்று எவரும் கூறுவதில்லை. கிறிஸ்துவ ஏசுவும் சரி, இஸ்லாமிய நபிகளும் சரி, சமண மகாவீரரும் சரி, சீக்கிய குருநானக்கும் சரி தங்களை இறைவனின் (ஒளிமயமாகிய இறைவனின்) தூதுவர்கள் என்கின்றனர். ஆனால் சனாதான இந்து மத பார்ப்பனர்களான – ஆச்சாரியார்கள் தங்களையே கடவுள்களாக அறிவித்துக் கொண்டு இவர்களால் புகுத்தப்பட்ட.கடவுள்களை வழிபடும் சாதிய – மக்களை சடங்கு சாஸ்திரங்கள் மூலம் வசியப் படுத்தி தங்களையே சாமியாக அழைப்பதை வழக்கப்படுத்திவிட்டனர்.
அதாவது, “பார்ப்பனர்களுக்கு வேதங்கள் அடிமை; வேதங்களுக்கு ஆண்டவன் (இறைவன்) அடிமை; ஆண்டவனுக்கு மக்கள் அடிமை” என்பதை நிறுவி இதன் மூலம் பார்ப்பனனுக்கு மக்கள் அடிமை என்பதோடு, அவர்களை மக்கள் சாமி சாமி என்று அழைப்பதை நியாயப்படுத்துகின்றனர்.
இவர்களின் சனாதன தத்துவம் தான் பிறக்கும் ஒவ்வொரு உயிரையும், சாதி முத்திரைக் குத்தி பிளவுபடுத்தி தீண்டாமை – தீட்டைப்புகுத்தி, அவற்றை நியாயப்படுத்தி வருகின்றனர். இந்த சனாதன இந்து மத பார்ப்பனியத்தை பரப்பி வரும் காவிகளும், இவற்றை அங்கீகரித்து வர்க்க ஒடுக்குமுறையை-ஏற்றத்தாழ்வை தீவிரப்படுத்தி வரும் கார்ப்பரேட்டுகளும், ஒரு நாணயத்தின் (பாசிசத்தின்) இரு பக்கங்கள். இவற்றை சனநாயக சக்தியாக கருதி கூடி குலாவினால், தேர்தலில் வாக்களித்து வெற்றிப் பெற செய்தால் ஹிட்லரின் ஆஸ்ட்விச் மரணக் குழி நிச்சயம். இதிலிருந்து மீள ஒரே வழி இக்கும்பலை ஒழித்துக் கட்டுவதே. இதற்கு வீதி, வீதியாக மக்கள் எழுச்சியைக் கட்டியெழுப்புவதே சிறந்த வழி!
- மோகன்