மணிப்பூரில் நடைப்பெற்ற கலவரம் குறித்து விவாதிக்க, எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் அமளி செய்து கொண்டு இருக்கிறார்கள். ஆனால் காவி பாசிஸ்டுகளோ, தாம் கட்டவிழ்த்து விடும் மத, இனவெறிப் படுகொலைகள் மணிப்பூர் மாநிலத்தோடு மட்டும் நின்று விடக்கூடியவை அல்ல, இது நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் பரவும் என நிருபிக்கும் வகையில், ஹரியானாவில் அடுத்த மதக்கலவரத்தை தொடங்கியிருக்கிறார்கள்.
ஆர்.எஸ்.எஸ் இன் கிளை அமைப்பான விசுவ இந்து பரிஷத்தும், பஜ்ரங்தளமும், ஹரியானாவில் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் நூஹ் எனும் பகுதியில் மத ஊர்வலத்தை அறிவித்தது. இந்த ஊர்வலத்தின் போது காவி கும்பல், கலவரத்தை தூண்டும் வகையில் திட்டமிட்டு ஆயுதங்களோடு வந்து ஐந்து முஸ்லீம்களை கொன்று குவித்ததோடு மட்டுமில்லாமல், அப்பகுதியிலுள்ள கடைகளை தீயிட்டு கொளுத்தியது. பஜ்ரங்தள் குண்டர்களே இக்கலவரத்தை முன்னின்று நடத்தியிருக்கிறார்கள்.
இந்த ஊர்வலம் நடப்பதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்பு, ஹரியானாவின் பசு பாதுகாவல் பிரிவைச் சார்ந்த மோனு மானேசர் எனும் காவி கிரிமினல், இந்த ஊர்வலத்தில் தான் கலந்து கொள்ளப் போவதாக வீடியோவை வெளியிட்டிருந்தான். பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் பல முஸ்லீம்களின் மீது தாக்குதல் நடத்துவதே இவன் தொழில். இராஜஸ்தானிலும் இரண்டு முஸ்லீம் இளைஞர்களை கொலை செய்த விவகாரத்தில் அம்மாநில போலீசால் தேடப்படும் கிரிமினல் குற்றவாளி தான் இந்த மோனு மானேசர். இவன் ஊர்வலத்தில் கலந்து கொண்டான் என்ற செய்தி பரவியதை தொடர்ந்தே கலவரம் பரவியது.
இக்கிரிமினலின் முக்கிய தாக்குதல் இலக்கு, ஹரியானாவில் இஸ்லாமிய மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் நூஹ் எனும் பகுதி. கடந்த ஜனவரி மாதம் இப்பகுதியில் மூன்று முஸ்லீம் இளைஞர்களை தாக்கும் ஒரு வீடியோவை இவன் பதிவேற்றியிருந்தான். சில நாட்களில் இம்மூன்று பேரில் ஒருவரான வாரிஸ் கான் என்பவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். வீடியோ ஆதாரம் இருந்த போதிலும் இக்கொலைக்கு மோனு காரணமில்லை என்றும் வாரிஸ் கான் கார் விபத்தில் இறந்தார் என்றும் ஹரியானா போலீசு கதை கட்டியது. இம் மூன்று பேரின் உறவினர்களோ தங்களிடம் மாடுகளே இல்லை என மன்றாடினர். கொலைக்கு காரணமான மோனுவிற்கு ஆதரவாக போலீசு செயல்படுவதாக குற்றம் சாட்டினர்.
இக்கொலை நடந்து ஒரு மாதம் கழித்து, பிப்ரவரி மாதம் இராஜஸ்தான் மாநிலத்தை சார்ந்த ஜூனைத் மற்றும் நசீம் என்ற இரு முஸ்லீம் இளைஞர்கள் ஹரியானாவில் ஒரு காரில் கருகி இறந்து கிடந்தனர். இம்முறையும் கொல்லப்பட்ட முஸ்லீம் இளைஞர்களின் உறவினர்கள் மோனு மீது குற்றம் சாட்டினர். ஆனால் மோனுவை கைது செய்ய ஹரியானா போலீசு எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக மோனுவிற்கு இந்துத்துவா குழுக்களிடமிருந்து ஆதரவு பெருகியது. இவனுக்கு ஆதரவாக பஞ்சாயத்துக்கள் நடத்தப்பட்டன. ஒரு பஞ்சாயத்து நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர், மோனுவை கைது செய்ய இராஜஸ்தான் போலீசு ஹரியானா மண்ணில் கால் வைத்தால் அவர்கள் ஊர் திரும்ப மாட்டார்கள் என்று அறிவித்திருக்கிறார். சமுதாயத்தின் நச்சான மோனு மானேசர் போன்ற கிரிமினல்களுக்கு, காவிகளின் ஆட்சியின் கீழ் தனிப்பட்ட கெளரவம் கொடுக்கப்படுகிறது. இக்கேடிகள், பொறுக்கிகள் செய்யும் செயல்கள், பதிவேற்றும் காணொளிகள் அறிவுடைய செயலாக, திறமையாக போற்றப்படுகிறது.
ஹரியானாவில் மோனு மானேசர் போன்று ஆயிரக்கணக்கான இந்து வெறியர்கள், பசுபாதுகாப்பு அமைப்பு (கோ ரக்ஷா தளம்) எனும் அமைப்பில் செயல்படுகிறார்கள். அங்கு மாவட்டந்தோறும் பல கோ ரக்ஷா குழுக்கள் இயங்குகின்றன. இந்த அமைப்பிற்கென சுமார் 60 கார்கள், 60 முதல் 70 வரை துப்பாக்கி உரிமங்கள் உள்ளதாகவும், வாகனங்களின் எரிபொருட்களுக்காக மட்டும் மாதம் ரூ.30,000 செலவு செய்யப்படுவதாகவும், வாகனங்களுக்காக மட்டுமே ஆண்டிற்கு சுமார் ரூ2 கோடி வரை செலவழிப்பதாக கேரவன் பத்திரிக்கை 2016 ஆம் ஆண்டிலேயே அம்பலப்படுத்தியது.
இரவு நேரங்களில் தடிகள், லத்திகள், ஹாக்கி, பேஸ்பால் மட்டைகள், கற்கள் போன்ற ஆயுதங்களை மட்டுமின்றி சில நேரங்களில் துப்பாக்கியை கூட இப்பசுக்குண்டர்கள் ஏந்திக் கொண்டு நெடுஞ்சாலைகளில் லாரிகளில் மாடுகள் ஏற்றிச் செல்லப்படுகிறதா, இஸ்லாமிய மக்களை தேடிச் சென்று தாக்கலாமா என்று அலைந்து திரிகிறார்கள்.
பசுப்பாதுகாப்பு என்ற பெயரில் தாங்கள் நடத்தும் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களை வீடியோவாக எடுத்து அவ்வப்போது பதிவேற்றம் செய்து வருகின்றனர் இப்பசுக்குண்டர்கள். இவ்வாறு பதிவேற்றிய சில காணொளிகள், மாட்டிறைச்சிக்காக மாடுகளை லாரியில் கொண்டு சென்றவர்களின் வாயில் மாட்டு சாணத்தை ஊட்டுவதையும் ஒரு மாற்றுத்திறனாளி முகத்தில் சிறுநீர் கழிப்பதையும் காட்டுகிறது.
2016 ஆம் ஆண்டு ஹரியானாவில் கோ ரக்ஷா தளத்தின் தேசிய தலைவராக இருந்த சதீஷ் என்பவன் கலவரம், மிரட்டி பணம் பறித்தல், இயற்கைக்கு மாறான வல்லுறவு போன்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டதாக கேரவன் பத்திரிக்கை நிருபர் கூறுகிறார்.
கோ ரக்ஷா தளம் போன்ற இந்துத்துவா குழுக்கள், பசுக்களை தெய்வமாக கற்பிப்பதற்கு இந்து இளைஞர்கள் மத்தியில் வேலை செய்கின்றன. இந்த இளைஞர்கள் பசுக்களை காப்பதற்காக மற்றவர்களை கொலை செய்யவும், தான் இறப்பதற்கும் தயாராக இருக்க வேண்டும். இவர்களுக்கு ஆயுதங்கள், வாகனங்கள், சம்பளம், நிதி போன்றவை வழங்கப்பட்டு மாடுகளை கடத்துபவர்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் இஸ்லாமியர்களையும், தலித்துகளையும் வேட்டையாட அனுப்பி வைக்கப்படுகிறார்கள்
பாஜக ஒன்றிய அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, இப்பசுக்குண்டர்களின் காட்டுமிராண்டித்தனங்கள் மிகவும் மூர்க்கமாகி வருகிறது. இப்பசுக்குண்டர்களை ஒருங்கிணைப்பதற்காக அடையாள அட்டையை வழங்கி இவர்களை தனது சட்டப்பூர்வமான அடியாள் படையாகவே பாஜக மாநில அரசுகள் மாற்றியுள்ளன.
மோடி குஜராத்தின் முதல்வராக இருந்த போது, பசுப்பாதுகாப்பிற்காக 150 கோடி வரை செலவு செய்ததாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழ் குறிப்பிடுகிறது. 2011 முதல் 2014ம் ஆண்டு வரை 1394 பசுக்குண்டர்களுக்கு ரூ.75 இலட்சம் ரொக்கப் பரிசினை வழங்கியது மட்டுமில்லாமல் சிறந்த பசுக்குண்டர்களை ஊக்குவிப்பதற்காக இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பசுப்பாதுகாவலர் விருதையும், ரூ 3.75 இலட்சத்தையும் வழங்கியது மோடியின் குஜராத் அரசு.
2014ம் ஆண்டு ஹரியானாவில் பாஜக ஆட்சிக்கு வந்த பின்பு மாட்டிறைச்சிக்கு தடை, ஏன் மாட்டிறைச்சியை வைத்திருந்தாலே ரூ 30,000 முதல் ரூ 1 இலட்சம் வரை அபராதம், மூன்று முதல் பத்தாண்டுகள் வரை சிறைத்தண்டனை என சட்டம் இயற்றப்பட்டன. மாட்டிறைச்சிக்கான சோதனையில் ஒரு சப் இன்ஸ்பெக்டர்க்கு மேற்பட்ட அதிகாரி தான் சோதனை செய்யமுடியும் என்ற வரையறையை மாற்றி. ஒரு சிறப்பு ஐ.பி.எஸ் அதிகாரி தலைமையில் பசுப் பாதுகாப்பு பணிக்குழுக்கள் (cow task force) உருவாக்கப்பட்டன. ஹரியானாவின் ஒவ்வொரு காவல் நிலையத்திலும் ஒரு போலீசு அதிகாரி, மூன்று கான்ஸ்டபிள்கள், தனி வாகனம் என இப் பசுப் பாதுகாப்பு பணிக்குழுக்கள் பசுக்குண்டர்களோடு ஒருங்கினைப்பதற்காக உருவாக்கப்பட்டது. ரோந்து பணியின் போது பல தகவல்கள் இவர்களுக்குள் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன.
இம்மாநிலத்தில் பசுபாதுகாப்பு என்ற பெயரில் கோ ரக்ஷா தளத்திற்கு அதிக நிதி ஒதுக்கப்படுகிறது. ஒவ்வொரு கிராமத்திலும் பல ஏக்கர் நிலங்கள் இந்த அமைப்பிற்கு வழங்கப்பட்டுள்ளது. அடையாள அட்டையைப் பெற்றுக் கொண்ட சட்டபூர்வ பசுக்குண்டர்கள, மாநில அரசு இயந்திரத்தை பயன்படுத்தி கொண்டு பாஜக அரசின் முழு ஒத்துழைப்புடன் காட்டுமிராண்டித்தனங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இம்மாநிலத்தின் 21 மாவட்ட கிளைகளில், 18 முதல் 40 வயது வரையிலான சுமார் 5000 மேற்பட்ட பசுக்குண்டர்கள் கோ ரக்ஷாவில் இயங்கி வருகிறார்கள்.
தங்களது கார்களை கொண்டு லாரிகளை வேகமாக முந்திசென்று அதை மடக்குவது, வாகனத்தில் மாடுகள் ஏற்றிச்செல்லப்படுகிறதா என்ற சந்தேகத்தின் பெயரில் ஓட்டுநரை துன்புறுத்துவது, வாகனத்தின் மேற்கூறையில் ஏறி நிற்பது, வாகனத்தை லத்தியால் தாக்குவது போன்ற அடாவடி செயல்களை பசுக்குண்டர்கள், ரோந்துகளின் போது செய்து வருகின்றனர். இஸ்லாமிய இளைஞர்கள் விரைவில் பணம் சம்பாதிப்பதற்காகவே மாடுகளை கொல்லுகிறார்கள் எனும் விஷம எண்ணத்தை தன் தேடுதல் வேட்டையின் போது இப்பசுக்குண்டர்கள் வெளிப்படுத்துகிறார்கள். மாடுகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் இக்குண்டர்களால் பறிமுதல் செய்யப்பட்டு, போலீசிடம் ஒப்படைக்கப்படுகிறது. போலீசு போன்று இப்பசுக்குண்டர்கள் சட்டத்தையெல்லாம் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை. இப்பசுக்குண்டர்களுக்கு தகவல் தொழில் நுட்ப வலைப்பின்னலும், ஒருங்கிணைப்பும் போலீசுப் படையை மிஞ்சும் அளவிற்கு இருக்கின்றன.
மாவட்ட கோரக்ஷா தளத்தின் கிளைகள் பற்றி ஹரியானாவின் உள்ளூர் கேபிள் டிவிக்கள், செய்தித்தாள்களில் பரந்த அளவில் விளம்பரப்படுத்தப்படுவதன் மூலம் உள்ளூர் மீடியாக்கள், இப்பசுக்குண்டர்களுக்கு ஆதரவாகவே செயல்படுகிறது
தற்போது ஹரியானாவில் பசுக்குண்டர்களின் காட்டுமிராண்டித்தனங்கள் எல்லை மீறி வருகின்றன என்பதற்கான ஒரு உதாரணமே மோனு செய்த படுகொலைகள், இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல்கள் அவனின் இந்து மத வெறிக் காணொளிகள்
திரியை உருவினால் வெடிக்கத் தயாராகும் கையெறி குண்டுகள் போல உத்தரவிட்டால் உடனடியாக கலவரத்தை உருவாக்க இது போன்ற கிரிமினல்களை, பாசிச கும்பல், தயாரித்து வைத்துக் கொண்டு தனது தேவைக்கேற்ப பயன்படுத்தி வருகிறது.
பாசிச கும்பலால் ஊட்டி வளர்க்கப்படும் இந்தப் பசுக் குண்டர்களின் காட்டுமிராண்டித்தனத்தை எவரும் எதிர்க்க முடியாது. இக்கும்பலை எதிர்க்கும் எவர் ஒருவரும் இயல்பாகவே சட்டப்பூர்வ ரெளடியான போலீசை எதிர்ப்பவராய் கருதப்படுவார். இந்த இரண்டு கும்பலும் ஒன்று சேர்ந்து எதிர்ப்பவரை ஒழிப்பதில் முன்நிற்கின்றன.
இஸ்லாமிய மக்களை ஒடுக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக மோனு மானேசர் போன்ற பொறுக்கிகள், கிரிமினல்கள் மற்றும் பசுக்குண்டர்களுக்கு உதவும் வேலையை ஹரியானா போலீசும், பாஜக அரசும் செய்கிறது. அதற்காக இக்குண்டர்களை தனது அடியாட்படையாக உருவாக்கி வைத்திருக்கிறது. சமுதாயத்தின் நச்சுக்களான இக்கிரிமினல்களோடு போலீசுத்துறை அதிகாரிகள், அரசியல் வாதிகள் சிறிது கூட கூச்சமின்றி புகைப்படம் எடுக்கிறார்கள். அவர்களோடு வலம் வருகிறார்கள்.
நாட்டில் காவி பாசிஸ்டுகள் தூண்டிவிட்டு முன்னின்று நடத்தும் கலவரத்தை எதிர்த்து முறியடிக்க வேண்டுமானால், இது போன்ற சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட பசுக்குண்டர்கள், அவர்களுக்கு வலுவாக பாதுகாப்பு கொடுக்கும் ஆயுதம் தாங்கிய போலீசு, இவர்களை உருவாக்கி ஊட்டி வளர்க்கும் பாசிச கும்பலை எதிர்த்து முறியடிக்க வேண்டும். அதற்கு நாம் வலுவான அமைப்பாக அணி திரள வேண்டும்.
- தாமிரபரணி