வருமான வரித்துறையையும் அமலாக்கத்துறையையும் பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை “வழிக்கு” கொண்டுவரும் தாக்குதலை மோடி அரசு தமிழ்நாட்டில் மீண்டும் அரங்கேற்றியுள்ளது. தமிழகத்தின் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சரான செந்தில் பாலாஜி தற்போது அமலாக்கத்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த மாதம் முதல் செந்தில் பாலாஜிக்குச் சொந்தமான இடங்களில் அடுத்தடுத்து சோதனை நடைபெற்று வந்த சூழலில் தற்போது 13-ம் தேதி தமிழக அரசின் தலைமைச் செயலகத்திற்குள்ளேயே நுழைந்த அமலாக்கத்துறையினர் அமைச்சர் செந்தில் பாலாஜியின் அறையில் சோதனையிட்டுள்ளனர். அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த போது, வேலை வாங்கித் தருவதாக பணம் வாங்கிக் கொண்டு மோசடி செய்ததாக 2015-ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் தற்போது செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நடவடிக்கையை ஊழலுக்கு எதிரான நடவடிக்கையாக காவிக் கும்பல் முன்னிறுத்துகிறது. ஆனால் ஊழலுக்கு எதிரானது என்பதை விட தனது காவி பாசிச நோக்கங்களுக்கு எதிரானவர்களை மிரட்டிப் பணியவைக்கும் நடவடிக்கையாகவே இதனைப் பார்க்க வேண்டியிருக்கிறது.
இதற்கு முன்னர் தமிழக தலைமைச் செயலகத்திற்குள் ஒன்றிய அரசின் வருமான வரித்துறை சோதனை நடத்திய நிகழ்வு, 2016-ம் ஆண்டு ஜெயலலிதா இறந்த இரண்டு வாரங்களுக்குள்ளாகவே நடந்தது. அப்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்தை மிரட்டிப் பணிய வைக்க அன்றைக்கு அந்தச் சோதனை நடந்தது.
அதே நேரத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் நெருங்கிய கூட்டாளியாக இருந்த சேகர் ரெட்டி வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டு, பெட்டி பெட்டியாக 2000 ருபாய் நோட்டுக்கள் கைப்பற்றப்பட்டன. பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டு மக்கள் 2000 ருபாய் நோட்டுக்காக வங்கி வாசலில் காத்துக் கிடந்த போதுதான் சேகர் ரெட்டி வீட்டில் 24 கோடி ருபாய் அளவிற்கு பணம் கைப்பற்றப்பட்டது.
அன்றைக்கும் இதே போல் ஊழல் ஒழிப்பு வாய்ச்சவடால் அடித்தார்கள். ஆனால் ஓ.பன்னீர்செல்வம் காவிக் கும்பலிடம் சரணாகதி அடைந்தவுடன், சேகர் ரெட்டிக்கு எதிராக போதிய ஆதாரங்கள் இல்லை ஆகையால் வழக்கை முடித்து வைக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் கூறி சேகர் ரெட்டியை சிபிஐ காப்பாற்றியது.
தமிழகத்தில் நடந்ததைப் போன்றே இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் அமலாக்கத்துறையையும் வருமான வரித்துறையையும் பயன்படுத்தி பலரையும் மிரட்டிப் பணிய வைத்துள்ளனர். காங்கிரஸ் பிரமுகர் ஹிமந்த பிஸ்வா சர்மா அக்கட்சியிலிருந்து பாஜகவிற்கு தாவிய பிறகு அவர் மீதான வழக்குகள் எல்லாம் விலக்கிக் கொள்ளப்பட்டு அவர் தற்போது அசாம் மாநில முதலமைச்சராக இருக்கிறார். இதே போன்று மத்திய அமைச்சராக இருக்கும் நாராயண் ராணே, மேற்கு வங்கத்தை சேர்ந்த சுவேந்து அதிகாரி, எனப் பல சம்பவங்களை எடுத்துக் காட்டாக கூற முடியும்.
சமீபத்தில் கூட மராட்டிய மாநிலத்தில் சிவசேனா ஆட்சியைக் கவிழ்க்க, அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்களை அமலாக்கத் துறையையும், வருமான வரித்துறையையும் பயன்படுத்தி மிரட்டியது மோடி அரசு. சிவசேனாவைச் சேர்ந்த எம்.பி. பாவனா காவ்லி, யஷ்வந்த் ஜாதவ், யாமினி ஜாதவ், பிரதாப் சர்நாயக் போன்றவர்கள் மீதான அமலாக்கத்துறை வழக்குகள் அவர்கள் ஏக்நாத் ஷிண்டேவுடன் இணைந்து சிவசேனாவைக் கைப்பற்றியவுடன் கிடப்பில் போடப்பட்டுள்ளன.
பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களில் உள்ள ஆளும்கட்சியைச் சேர்ந்த முக்கிய புள்ளிகளை இது போன்று அமலாக்கத் துறையை வைத்து மிரட்டுவது ஒருபக்கம் என்றால், இன்னொரு புறம் மாநிலக் கட்சிகளுக்கு மக்கள் மத்தியில் ஊழல் கட்சி என்று பதியவைக்கவும் இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்ற்ன.
முதலில் தங்களது சமூக ஊடக, தொலைக்காட்சி, பத்திரிக்கை படைகளை வைத்து பாஜகவிற்கு எதிரான கட்சி தலைவர்களைப் பற்றி அவதூறு பிரச்சாரங்களைக் கட்டியமைப்பது. பின்னர் அமலாக்கத்துறையைப் பயன்படுத்தி அவர்களது இடங்களில் ரெய்டு நடத்துவது, வழக்குப் பதிவு செய்து கைது செய்வது. இந்த வழக்குகளில் பல ஆண்டுகளுக்கு எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் இருந்தாலும், வருடத்திற்கு ஒரு முறை ரெய்டு மட்டும் நடத்திக் கொண்டே இருப்பார்கள், இதன் மூலம் தங்களது பிரச்சாரத்திற்கு வலுச்சேர்ப்பதைத் தொடர்ந்து செய்கிறார்கள்.
திமுகவினரின் ஊழல் பட்டியலை வெளியிடுகிறேன் எனக் கூறி சொத்துப் பட்டியல் வெளியிட்டது தொடங்கி, தொடர்ந்து திமுகவின் ஊழலுக்கு எதிராக போராடுவது போன்றதொரு சித்திரத்தை அண்ணாமலை உருவாக்கி வருகிறார். அண்ணாமலையும், மற்ற பாஜகவினரும் முன்னெடுக்கும் இந்த பிரச்சாரத்திற்கு தினமலர் உள்ளிட்ட பத்திரிக்கைகளும், சவுக்கு சங்கர் போன்ற திடீர் ஊழல் எதிர்ப்புப் போராளிகளும், பல யூடியூப் சேனல்களும், பாஜகவின் ‘பி’ டீம்மான சீமான் கட்சியினரும் வலுச்சேர்க்கும் வேலையைத் திட்டமிட்டுச் செய்து வருகின்றனர்.
அதிகார பலம், ஊடக பலம் என அனைத்தையும் வைத்துக் கொண்டு காவிக் கும்பல் தொடுக்கும் இந்தத் தாக்குதல் செந்தில் பாலாஜி போன்ற அரசியல்வாதிகளோடு நிற்காது. தீஸ்தா செதால்வத், ஹர்ஷ் மந்தேர், சிறீகுமார் போன்ற செயல்பாட்டாளர்களையும், நியூஸ் கிளிக், பிபிசி, அல்ட் நியூஸ் போன்ற ஊடகங்களையும் கூட அமலாக்கத்துறை மூலம் வழக்கு பதிந்து மிரட்டியதைப் போன்று தமிழகத்தில் காவி கும்பலுக்கு எதிராக செயல்படும் செயல்பாட்டாளர்கள் மீதும், சமூக ஊடகங்கள் மீதும் அடுத்ததாக அமலாக்கத்துறையின் கொடுங்கரங்கள் பாயும் என்பதில் சந்தேகம் இல்லை.
பணமோசடி தடுப்பு சட்டம், வருமான வரித்துறை, அமலாக்கத் துறை என ஒடுக்குமுறைக் கருவிகளை வைத்துக் கொண்டு தன்னை எதிர்ப்பவர்களின் குரல்வளையை நசுக்கும் காவி கார்ப்பரேட் கும்பலின் தாக்குதலுக்கு எதிராக அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்று சேர வேண்டும். செந்தில் பாலாஜியின் கைதை ஊழலுக்கு எதிரான நடவடிக்கையாக பார்க்காமல் பாசிசத்தின் தாக்குதலாக கருதிக் கண்டிக்கவேண்டும்.
- அறிவு.