மாபெரும் பிரிட்டிஷ் எதிர்ப்பு போராளி திப்பு சுல்தானை, இந்து மத எதிர்ப்பாளராக சித்தரிக்கும் நிகழ்ச்சி நிரலை மையமாக வைத்து எப்படியாவது நாட்டில் கலவரத்தை உருவாக்கி விட காவி கும்பல் தொடர்ந்து முயன்று வருகின்றது.
கர்நாடகாவில் திப்புவிற்கு எதிரான பிரச்சாரத்தை உருவாக்க இவர்கள் எடுத்த முயற்சிகள் எதுவும் பெரிய அளவில் பயனளிக்காத நிலையில் அதற்கு அண்டை மாநிலமான மராட்டியத்தில் தற்போது அதே உத்தியைப் பயன்படுத்துகின்றனர். ஒரு சிறு துரும்பு கிடைத்தாலும், அதை அனுகுண்டாக்கி, நாட்டில் கலவரத்தை வடிவமைத்து, இந்துமத வெறியை கிளறி விட காத்திருக்கின்றது இந்தக் கும்பல்.
மராட்டிய மாநிலம் கோலாப்பூரில் முகலாய அரசர் ஒளரங்கசிப் மற்றும் திப்பு சுல்தானை புகழ்ந்து ஒருவர் வாட்சப்பில் ஸ்டேட்டஸ் காணொளி வைத்துள்ளார். அது பிரபலமாக, பலரும் தங்களது வாட்ஸாப் ஸ்டேட்டஸ்களில் அதனை வைத்துள்ளனர். இந்தச் சின்ன விசயத்தை அப்படியே ஊதிப் பெருக்கி அப்பகுதியில் கலவரத்தையே உருவாக்கியுள்ளது இந்தக் காவி கும்பல்.
திப்பு, ஒளரங்கசீப் வாட்சப் காணொளியின் மூலம் இந்து மத உணர்வு பாதிக்கப்பட்டதாக கூறி கோலாப்பூரில் பந்த் அறிவித்த காவி கும்பல் இஸ்லாமியர்களின் குடியிருப்புப் பகுதிகளில் கல்வீச்சில் ஈடுபட்டதுடன், இஸ்லாமியர்களின் கடைகளை சூறையாடியும், அவர்களின் சொத்துக்களை சேதப்படுத்தியும் கலவரத்தை உருவாக்கியுள்ளது.
காவி கும்பல் திட்டமிட்டு அரங்கேற்றிய கலவரத்தை தொடர்ந்து அந்தப் பகுதியில் தற்போது இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. ஜுன் 19 வரை 5க்கும் மேற்பட்ட நபர்கள் கூடுவதற்கு இப்பகுதியில் தடை விதிக்கப்பட்டுள்ளன. பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். கலவரத்தை போலிசு கண்ணீர்புகை வீசி கலைத்துள்ளனர்.
பாஜக ஆட்சி செய்யும், பாஜக கூட்டணி ஆட்சி நடைபேறும் மாநிலங்களிலும் தாக்குதல் அரசியல் தான் விரைவான, சாதகமான பலனளிக்கும் என்பதை உறுதிசெய்து கொண்டு, துணிந்து மதவெறியைத் தூண்டும் பாதையில் காவி பாசிஸ்டுகள் முன்னேறுகின்றனர்.
கலவரங்களைத் தூண்டிவிட்டு பின்னால் இருந்து இயக்கும் முக்கியத் தலைவர்களைக் கைது செய்யாமல் அரசு வேடிக்கை பார்க்கிறது. அவர்கள் பகிரங்கமாக இயங்குகின்றனர். ஒப்புக்கு கைதாகும் கலவரத்தின் முக்கியப் பிரமுகர்கள், நீதிமன்றங்களால் விடுதலை செய்யப்பட்டு, தெம்புடன் வலம் வருகின்றனர். ஊடங்களில் அன்றாடம் பேட்டி கொடுக்கின்றனர். கலவரத்தை உருவாக்கிய தலைவர்கள் கொண்டாடப்படுகின்றனர். பாஜக சார்பில் தேர்தலில் போட்டியிடுகின்றனர். பாஜக ஆட்சியில் இல்லாத பிற மாநிலங்களிலும் தன்னுடைய தாக்குதல் அரசியலில் பிற மாநில அரசுகளை பணிய வைக்க முடியும் என்கின்ற நம்பிக்கையோடு காவி பாசிஸ்டுகள் செயல்பட்டு வருகின்றனர்.
மராட்டிய மாநிலத்தை பொறுத்தவரை, சிவசேனாவை உடைத்து, எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி கூட்டணிஆட்சி நடத்தி வரும் பாஜக, கலவரங்களின் மூலம் தனது செல்வாக்கை உயர்த்திக் கொள்ள எத்தனிக்கின்றது.
தான் ஆட்சி அதிகாரத்தில் இருக்கின்றோம் என்ற திமிரோடு, இக்கலவரம் பற்றி காவி பாசிஸ்டுகள் பேசி திரிகிறார்கள். அம்மாநிலத்தின் உள்துறை அமைச்சரும், துணை முதலமைச்சருமான தேவேந்திர பட்னாவிஸ் இக்கலவரம் குறித்து பேசுகையில், “சத்ரபதி சிவாஜியின் மகாராஷ்டிரத்தில் ஒளரங்கசிப் குறித்து பேசினால் கோபம் வருவது இயல்பு தான். தீடீரென ஒளரங்கசிப் மகன்கள் பலர் எப்படி உருவானார்கள்? என்பது குறித்து விசாரிக்க வேண்டிய அவசியம் உள்ளது. மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை வேண்டுமென்றே அவர்கள் கெடுக்க நினைக்கிறார்கள். இந்த சமூக பதட்டத்திற்கு பின்னால் இருப்பது யார்? ” என கலவரத்தை நியாயப்படுத்தியும், எச்சரித்தும், மிரட்டியும் பேசியுள்ளார்.
நாடெங்கும் மதக்கலவரங்கள் தொடர்கின்றன. ஆனால் அதற்கெதிராக குரல் கொடுக்க மறுக்கும் காவி பாசிஸ்டு தலைவர்கள், கலவரத்தை மேலும் தூண்டிவிடும் வகையில் பேசி வருகின்றனர். நாம் ஆட்சி அதிகாரத்தில் இருக்கின்றோம். நம்மை எதிர்க்கும் துணிவு எவருக்கும் இல்லை; நாடு முழுவதும் இந்துத்துவ அலை வீசுகிறது என்கிற திமிரோடு இந்து மத வெறி பாசிஸ்டுகள் செயல்பட துணிந்திருப்பதையே இதை காட்டுகின்றன.
காவி பாசிஸ்டுகள் தாக்குதல் இலக்கு இஸ்லாமியர்களின் உரிமைகளை பறிப்பது மட்டுமில்லை. அனைத்து உழைக்கும் மக்களின் உரிமைகளையும் சேர்த்து பறிப்பது தான் என்ற உண்மையை உணர்ந்து இக்காவி கும்பலை முறியடிக்க நாம் போராட வேண்டும்!
- தாமிரபரணி