பிரிட்டிஷ் காலனியாதிக்கவாதிகள் தனது சாம்ராஜ்ஜியத்தின் நிர்வாக வசதிக்காக உருவாக்கப்பட்ட நாடாளுமன்ற அமைப்புமுறையை “ஜனநாயக ஆட்சி முறையின் ஆன்மா” என்றும், ஜனநாயகத்தின் கோயில்” என்றும், “மக்களுக்கான மன்றம்” என்றும் கடந்த மே 28-க்கு முன்புவரை இந்திய நாடாளுமன்றவாதிகளால் அலங்கரிக்கப்பட்டு வந்துள்ளது.
இவர்கள் சொல்லும் அர்த்தத்தில் இந்திய நாடாளுமன்றம் செயல்பட்டிருந்தால் கடந்த 75 ஆண்டுகளில் ஆகப் பெரும்பான்மையாக உள்ள ஏழை, எளிய, நடுத்தர மக்களின் வாழ்வு உயர்ந்திருக்க வேண்டும். ஆனால் நடந்தது என்ன ஆகச் சிறுபான்மையாக உள்ள கார்ப்பரேட்டுகளும், உள்நாட்டு தரகுமுதலாளிகளும், அதிகார வர்க்கத்தினரும்தான் உயர்ந்துள்ளனர்.
அப்படியென்றால் அதன் உண்மையான பெயர் “மக்களின் மன்றமா” அல்லது “முதலாளிகளின்” மன்றமா? எளிமையாக சொல்வதானால் ஒரு அமைப்பு யாரைப் பிரதிநிதித்துவம் செய்கிறதோ அவர்களுக்கான மன்றமாகத்தானே இருக்க முடியும். மாறாக ஒரு சில சாமானியர்கள் இம்மன்றத்தில் பங்கெடுப்பதனாலேயே “மக்களுக்கான மன்றமாக” ஆகிவிடுமா என்ன? எதார்த்தத்தில் அவ்வாறு இல்லை என்பதை விளக்கத் தேவையில்லாத அளவுக்கு புழுத்து-நாரிக்கிடக்கிறது.
இது ஒருபுறம் இருக்க, 2014-ல் மோடி-அமித்ஷா கும்பல் ஆட்சிக்கு வந்ததில் இருந்து தனது தலைமை பீடமான ஆர்எஸ்எஸ்-சின் சித்தாந்தத்தை அதாவது தனது நூற்றாண்டு கனவான இந்து சாம்ராஜ்ஜியத்தை நிறுவுவதற்கான அனைத்து முஸ்தீபுகளையும் ஜனநாயக வழிமுறைகளின் மூலமாகவே தொடர்ந்து செய்துவருகிறது. அதனால் தான் என்னவோ பாசிச எதிர்ப்பு பேசுபவர்களும், பாஜக-வை எதிர்ப்பதாக கூறிக்கொள்பவர்களும் இந்தப் பாராளுமன்றப் பன்றித் தொழுவத்திற்கு உட்பட்டே புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை முர்முவை வைத்து திறக்கவில்லை என முணுமுணுக்கிறார்கள். இவர்கள் நம்பும் நாடாளுமன்ற சனநாயகத்தை பெரும்பான்மையான எதிர்கட்சிகள் புறக்கணிப்பதினாலேயே ஆர்எஸ்எஸ்-பாஜக நம்பும் நாடாளுமன்ற ச(னாதனம்)னநாயகம் மக்களால் கேள்விக்கு உள்ளாக்கப்படும் என்று நம்புவது பாமரத்தனமானது.
ஒருவேளை, உண்மையிலேயே பாசிச பாஜக-வை எதிர்ப்பதாக இருந்தால் குறைந்த பட்சம் நாடாளுமன்றத்தின் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களிடம் சென்று நாடாளுமன்றத்தில் சொல்லிக் கொள்ளப்படும் ஜனநாயகமும் சுத்தமாகத் துடைத்தெரியப்பட்டு, ஆர்எஸ்எஸ்-சின் பாசிச சித்தாந்தத்தை நிறுவுவதற்கான ஏற்பாடே இந்த புதிய நாடாளுமன்றம் என்பதை அம்பலப்படுத்தி நாடு முழுவதும் பிரச்சாரமும், போராட்டமும் செய்திருக்கவேண்டும்.
அதில், பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, பெட்ரோல்-டீசல் விலையுயர்வு, ரூ.2000 திரும்பப்பெறுவது என அனைத்து நடவடிக்கைகளும் மக்களின் இயல்பு வாழ்க்கையை வெகுவாக பாதித்துள்ள போது அதற்காக சிறு துரும்பையும் நகர்தாமல், எதிர்காலத் தேவைக்கு ஏற்ப எனக்கூறி மக்கள் வரிப்பணத்தில் ரூ.971 கோடிக்கு புதிய நாடாளுமன்றம் கட்டியது அவசியமா என்றும்,
ஆர்எஸ்எஸ்-பாஜக-வின் குருவான விநாயக் தாமோதர் சாவர்க்கரின் 140-வது பிறந்த நாளான மே 28-ம் தேதியைத் தெரிவு செய்துள்ளது உள்நோக்கம் கொண்டது. அதாவது பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான தனது போராட்டத்தைக் கைவிட்டு, தன்னை அந்தமான் செல்லுலர் சிறையிலிருந்து விடுதலை செய்ய வேண்டும் என்று பல கருணை மனுக்கள் மூலம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க வெள்ளையரின் தயவில் விடுதலையானார். அதன்பின்னர் இந்துத்துவா என்னும் சித்தாந்தத்தை நிறுவி, முஸ்லீம்களுக்கு எதிராகப் போராடுவதில் தன் கவனத்தைச் செலுத்தினார். ஆர்எஸ்எஸ்-பாஜக-வினர் இவரது இந்துத்துவா கொள்கையை ஏற்றுக்கொண்டதுடன், இதன் அடிப்படையில் இந்து ராஷ்ட்டிரத்தை அமைப்பது என்ற தங்களது பெருங்கனவை நினைவாக்குவதற்காகவே மே 28-ம் தேதியை தேர்தெடுக்கப்பட்டுள்ளதை அம்பலப்படுத்தியிருக்க வேண்டும்,
இப்படி விடுதலைப் போராட்டத்திற்குத் துரோகம் இழைத்து, மக்களைப் பிளக்கும் பார்ப்பன பாசிஸ்ட் சாவர்க்கரின் பிறந்தநாளில் “ஜனநாயக ஆட்சிமுறையின் கோயிலான” புதிய நாடாளுமன்றக் கட்டிடம் ஆதினங்கள் மந்திரங்கள் ஓதி, இந்துமதச் சடங்குகளுடன் திறந்து வைக்கப்படுவதை அம்பலப்படுத்தியிருக்க வேண்டும்,
மக்கள் விரோதச் சட்டங்கள் விவாதம் இல்லாமல் நிறைவேற்றப்படும் அயோக்கியத்தனத்தையும், ஆளுநர்கள், துணைநிலை ஆளுநர்கள் மூலம் மாநில அரசு அதிகாரிகளைத் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொண்டு தேர்தல் ஜனநாயகத்தின் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசாங்கங்களின் அனைத்து அதிகாரங்களும் முடக்கப்படுவதை, நசுக்கப்படுவதை, கேலிக் கூத்தாக்கப்படுவதை கண்டித்து அதன் பாசிச நடவடிக்கையை அம்பலப்படுத்தியிருக்க வேண்டும்,
எதிர்க்கட்சிகளைப் பேசவிடாமல் கூச்சல் போடுவது, விவாதிக்க விடாமல் முடக்குவது, இதன்மூலம் ஜனநாயகத்தின் கூறான கேள்வி கேட்கும் சுதந்திரத்தைப் பறிப்பது, பண மசோதா என்ற பெயரில் சட்டங்களை நிறைவேற்றுவது, நாடாளுமன்ற நிலைக்குழுவை அமைக்க மறுப்பது போன்ற ஜனநாயக விரோத நடவடிக்கைகளை அம்பலப்படுத்தியிருக்க வேண்டும்,
மாறாக, இந்தியக் குடியரசின் தலைவராகவும், நாடாளுமன்றத்தின் தலைவராகவும் இருக்கின்ற திரௌபதி முர்முவை ஓரங்கட்டிவிட்டு பிரதமர் நரேந்திர மோடி புதிய நாடாளுமன்றத்தைத் திறந்து வைப்பது அரசமைப்புச் சட்டத்தின்படி முறைகேடானது என்று எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தது இம்மன்றத்தை தான் நம்புவது மட்டுமில்லாமல் தனக்கு வாக்களித்த மக்களையும் மீண்டும் மீண்டும் நம்பவைப்பது அம்மக்களுக்கு செய்கின்ற துரோகமாகும்.
திரௌபதி முர்முவுக்கு வராத அவமானமும், மனக்கஷ்டமும் எதிர்கட்சிகளுக்கு வந்ததில் வியப்பொன்றும் இல்லை. இருவரும் தங்களது இருப்பை உறுதி செய்வதற்குத்தானேயன்றி வேறொன்றும் இல்லை.
எனவே கடந்த மே 28-ம் தேதிக்கு முன்பு ஏதோ ஜனநாயகம் இருந்தது போல நாடாளுமன்றவாதிகள் பேசுவதில் உண்மையில்லை. ஏனென்றால் ஆர்எஸ்எஸ்-பாஜக தமது இந்து இராஷ்டிரக் கனவை நிறைவேற்ற இவர்கள் பயன்படுத்தும் அதே ஜனநாயகத்தைக் கொண்டுதான் புதிய நாடாளுமன்றத்தைக் கட்டி எழுப்பியிருக்கிறார்கள். ஜனநாயகத்தின் யோக்கியதை அவ்வளவுதான்.
பாசிஸ்டுகள் ஒரு பொய்யை உண்மையென நம்பவைப்பதற்காக அதே பொய்யை பல நூறுமுறை பல்வேறு வகைகளில் கூறுவது அவர்களது இயல்பு எனவேதான் தனது காவி-கார்ப்பரேட் பாசிசத்தின் புதிய கூடாரத்தை ஜனநாயகத்தின் கூடாரமாக காட்டிக்கொள்வதற்கு அவர்கள் செய்த ‘மோடி’ வித்தைகள் அனைத்தும் அம்பலப்பட்டு நிற்கிறது.
தமிழ்நாட்டைக் குறிவைத்து செங்கோல் அரசியலைக் கையில் எடுத்த மோடி-அமித்ஷா கும்பல் தனது திட்டத்திற்கு ஏதுவாக தஞ்சையில் உள்ள ஆதின மடத்தைச் சேர்ந்தவர்கள் நேரடியாகவே மரியாதை நிமித்தமாக சந்தித்து செங்கோலை வழங்கி தங்களது மகிழ்ச்சியைத் தெரிவித்த விசயத்திற்கு காது, மூக்கு வைத்து, பாதி உண்மையுடன் பாதிப் பொய்யைக் கலந்து அதையே திரும்பத் திரும்பப் பிரச்சாரம் செய்து உண்மையாக்கும் வேலையை பாசிச மோடி-அமித்ஷா கும்பல் செய்துவந்தது.
அதன் தொடர்ச்சியாகவே, ஒன்றிய உள்துறை அமைச்சர், அமித் ஷா, சுதந்திரம் பெற்ற காலத்தில், ஆட்சி அதிகாரம் மாறுவதைக் குறிக்கும் விதத்தில் வைஸ்ராய் மவுண்ட் பேட்டன் பிரபுவால் ஜவஹர்லால் நேருவிடம் ஒப்படைக்கப்பட்டிருந்த ‘செங்கோல்’ தற்போது நாடாளுமன்றத்தின் உள்ளே நிறுவப்படும் என்று அறிவித்ததின் பின்னால் உள்ள பொய்யை தீக்கதிர் நாளிதழ் (https://theekkathir.in/News/articles/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95/gurumurthy’s-charads-and-history-of-rss-bjp-tribute) அம்பலப்படுதியுள்ளது.
இதற்குப் பிறகும் தமிழ்நாட்டு மக்களின் கோடாரிக் கொம்புகளான இளையராஜா, ஆதீனங்கள் இன்னும் பல அல்லக்கைகளை கொண்டு தமிழ்நாட்டு செங்கோல் நாடாளுமன்றத்தில் வைக்கப்படுவது கவுரவம் என்று சிறிதும் கூச்சமின்றி பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்துவிட்டது மோடி-அமித்ஷா கும்பல்.
அதேபோல், தருமபுர ஆதீனத்தை வைத்து “செங்கோல் மேல் பகுதியில் வைத்திருக்கும் நந்தியானது மதத்தின் அடையாளம் அல்ல; தர்மத்தின் அடையாளம்” எனவே, செங்கோலை நாடாளுமன்றத்தில் வைப்பது கவுரவம் என்று கூறியுள்ளது மோடி-அமித்ஷா கும்பல்.
இத்துடன் பாசிச மோடியும் தனது பங்கிற்கு “உலகின் பழமையான மொழி தமிழ்; ஒவ்வொரு இந்தியரின் மொழியும் தமிழ்” என்று கொஞ்சம் கூட கூச்சமின்றி புளுகியுள்ளார்.
எனவே புதிய நாடாளுமன்றம் இந்தியருக்குப் பெருமை என்று மோடி கூறுவது ஒரே மொழி, ஒரே நாடு, ஒரே ஆட்சி, ஒரே பண்பாடு, ஒரே மதம் என்பது போல ஒரே நாடாளுமன்றம் அதாவது காவி-கார்ப்பரேட் பாசிசத்திற்கான புதிய கூடாரம்.
- மோகன்