இனப்படுகொலைக் குற்றவாளிகளை விடுவிப்பது
தங்களது சிறப்புரிமை எனக் கூறும் மோடி அரசு!

இனப்படுகொலையில் ஈடுபட்ட, கர்ப்பிணிப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த, பிஞ்சுக் குழந்தை உட்பட 7 பேரைப் படுகொலை செய்த கொடூர கொலைகாரர்கள் எந்த அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டனர் என கூற முடியாது, அது எங்களின் ‘சிறப்புரிமை’ (privilege) என்று ஒன்றிய அரசும், குஜராத் மாநில அரசும் உச்சநீதிமன்றத்திலேயே கூறுகின்றன.

பில்கிஸ் பானு கூட்டுப் பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளிகளை விடுதலை செய்தது தொடர்பான கோப்புகளை தாக்கல் செய்யக் கோரிய உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை ஒன்றிய அரசும், குஜராத் அரசும் எதிர்த்து மேல் முறையீடு செய்யப் போகின்றன.

இந்த வழக்கில் குற்றவாளிகள் 11 பேரின் தண்டனைக் குறைப்பு தொடர்பான ஆவணங்களை, ‘சிறப்புரிமையைக்’ காரணம் காட்டி, சமர்ப்பிக்க விரும்பவில்லை என்று அரசு உச்சநீதிமன்றத்தில் கூறியுள்ளது.

2002 குஜராத் இனப்படுகொலையின் போது ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானு, இந்துத்துவ வெறியர்களால் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அத்துடன் அவரது மூன்று வயது மகள் உட்பட ஏழு குடும்ப உறுப்பினர்களை இந்துத்துவ வெறியர்கள் கொலை செய்தனர்.

 

 

இனப்படுகொலையின் போது காவி குண்டர்கள் திட்டமிட்டு நடத்திய கொடூர தாக்குதல்களில், இந்த வழக்கில்தான் மிக அரிதாக குற்றம் நிரூபிக்கப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டனர். அதுவும் குற்றவாளிகளுக்கு சாதகமாக மாநில அரசும், போலீசும், நின்ற போதும் அவர்களுக்கு அஞ்சாமல் பில்கிஸ் பானு நடத்திய நீண்ட நெடிய சட்ட போராட்டத்திற்கு பிறகே அவர்கள் தண்டிக்கப்பட்டனர்.

ஆனால் கடந்த ஆண்டு ஆகஸ்டு 15 அன்று இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை அளிக்கப்பட்ட 11 குற்றவாளிகளை குஜராத் அரசு விடுவித்தது. இதனை எதிர்த்து கடந்த ஆண்டு நவம்பரில், பானு உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். குஜராத் அரசு குற்றவாளிகளை விடுதலை செய்தது “சமூகத்தின் மனசாட்சியை உலுக்கிய நடவடிக்கை” என்று அதில் அவர் கூறியிருந்தார்.

பில்கிஸ் பானுவின் மனுவின் மீதான விசாரணையில் கடந்த மார்ச் 27 அன்று உச்ச நீதிமன்றம், தண்டனைக் குறைப்பு தொடர்பான கோப்புகளை தாக்கல் செய்யுமாறு குஜராத் அரசுக்கும், மத்திய அரசுக்கும் உத்தரவிட்டது.

ஆனால் ஏப்ரல் 18 அன்று உச்சநீதிமன்றத்தின் அரசின் (ஒன்றிய அரசு மற்றும் குஜராத் அரசு) சார்பாக ஆஜரான ஒன்றிய அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் எஸ்.வி.ராஜு, குற்றவாளிகளுக்கு நிவாரணம் வழங்கும் முடிவு தொடர்பான அசல் கோப்புகளை சமர்பிப்பதற்கான உத்தரவை மறுஆய்வு செய்ய ஒன்றிய அரசும் குஜராத் அரசும் கோரும் என்று தெரிவித்தார். இது குற்றவாளிகளை விடுவிக்க தங்களுக்கு இருக்கும் “சிறை நன்னடத்தை சலுகை” என்று கூறினார்.

அதாவது இனப்படுகொலையில் ஈடுபட்ட, கர்ப்பிணிப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த, பிஞ்சுக் குழந்தை உட்பட 7 பேரைப் படுகொலை செய்த கொடூர கொலைகாரர்கள் எந்த அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டனர் என கூற முடியாது, அது எங்களின் ‘சிறப்புரிமை’ (privilege) என்று ஒன்றிய அரசும், குஜராத் மாநில அரசும் கூறுகின்றன.

ஏற்கெனவே மலையாள செய்தி நிறுவனமான மீடியா ஒன் சேனலின் ஒளிபரப்பின் மீதான தடை குறித்த வழக்கில், பாதிக்கப்பட்ட மீடியா ஒன் நிறுவனம் தங்கள் மீது ஏன் தடைவிதிக்கப்பட்டது என்று கூட அறிந்து கொள்ள முடியாமல் இருட்டில் வைக்கப்பட்டதை உச்ச நீதிமன்றம் கண்டித்துள்ளது. ரபேல் ஊழல் வழக்கைப் போன்றே மீடியா ஒன் வழக்கிலும் தேசியப் பாதுகாப்பைக் காரணம் காட்டி தடைக்கான காரணத்தைத் தெரிவிக்க முடியாது என ஒன்றிய அரசு கூறிவிட்டது.

வேண்டுமானால் தடைக்கான காரணத்தை சீலிட்ட உறையில் தாக்கல் செய்வதாக கூறியது. இதனை கண்டித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு, சீலிட்ட உறையில் அரசின் வாதங்களைத் தாக்கல் செய்வது இயற்கை நீதிக்கு எதிரானது என்று கூறியுள்ளது.  

அதே போன்று அதானி மீது ஹிண்டன்பெர்க் நிறுவனத்தின் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையம் குறித்த பரிந்துரைகளை சீலிட்ட உறையில் தாக்கல் செய்வதாகக் கூறி உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு வாதிட்டது. அதற்கும் தேசிய பாதுகாப்பு என்று காரணம் கூறியது.

காவி பாசிச கும்பலை அம்பலப்படுத்திய செய்தி நிறுவனத்தை தடை செய்த காரணத்தைக் கூற முடியாது, அதானியைப் காப்பாற்ற அமைக்கப்படும் ஆணையம் குறித்தும் கூற முடியாது அவை தேச நலன், நாட்டின் பாதுகாப்பிறகு அச்சுறுத்தல் என்று வாதிட்ட ஒன்றிய அரசு இன்று கொடூர கொலைக் குற்றவாளிகளை விடுவிப்பது தங்களுடைய சிறப்புரிமை என்று வாதிடுகிறது.

இதனை நீதிமன்றத்திற்கும் ஒன்றிய அரசிற்கும் இடையிலான முரண்பாடாக முதலாளித்துவ ஊடகங்கள் சுருக்கிக் காட்டுகின்றன. ஆனால் உண்மையில் இது இயற்கை நீதிக்கு எதிராக பாசிச சக்திகளின் வெளிப்படையான தாக்குதல்.

காவி பாசிச குண்டர்படையைச் சேர்ந்தவர்கள் எப்பேர்ப்பட்ட குற்றவாளிகளாக இருந்தாலும் விடுவிப்போம் அது எங்கள் உரிமை, உங்களால் என்ன செய்ய முடியும் என்று காவிக் கும்பல் இந்த நாட்டுமக்களைப் பார்த்துக் கேட்கிறது. நாம் என்ன செய்யப் போகிறோம்.

  • அறிவு.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன