2002 குஜராத் இனப்படுகொலையில் நரோடா காம் பகுதியில் பாஜக-ஆர்எஸ்எஸ் கும்பல் 11 முஸ்லீம்களை படுகொலைச் செய்த வழக்கில், குற்றச்சாட்டப்பட்ட 67 பேரையும் நிரபராதிகள் என சிறப்பு SIT நீதிமன்ற நீதிபதி எஸ் கே பக்சி தீர்ப்பளித்துள்ளார். இவ்வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டவர்களில் பாஜக முன்னாள் எம்.எல்.எ மாயா கோட்னானி, பஜ்ரங்தள் தலைவர் பாபு பஜ்ரங்கி, விஷ்வ ஹிந்து பரிசத் தலைவர் ஜெயதீப் படேல் ஆகியோரும் அடக்கம். தீர்ப்பைக் கேட்ட உடன் “ஜெய் சிரிராம், பாரத் மாத கி ஜெய்” என்று பலத்த முழக்கங்கள் எழுப்பப்பட்டதாம். பாஜக-ஆர்எஸ்எஸ் கும்பல் தான் குற்றவாளிகள் என்பதற்கு இதைவிட வேறு என்ன ஒப்புதல் வேண்டும்.
பாஜக-ஆர்எஸ்எஸ் கும்பலால் அரங்கேற்றப்பட்ட 2002 குஜராத் இனப்படுகொலையை ஒட்டி தொடரப்பட்ட பலவழக்குகளில் ஒன்பது வழக்கை உச்சநீதி மன்றம் சிறப்பு விசாரணை குழு மூலம் நேரடியாக விசாரித்தது. இவ்வழக்குகளை விசாரிக்க நிறப்பு நீதிமன்றமும் அமைக்கப்பட்டன. அதில் ஒரு வழக்குதான் நரோடா காம் பகுதியில் 11 முஸ்லீம்கள் கொல்லப்பட்டதையொட்டிய வழக்காகும். பாஜக-ஆர்எஸ்எஸ் காலிகள் 11 முஸ்லீம்களை உயிரோடு தீ வைத்துக் கொளுத்தினர். அப்பகுதி முஸ்லீகளின் வீடுகளும் உடைமைகளும் தீக்கரையாக்கினர். 13 வருடங்களாக நடைபெற்ற இவ்வழக்கில் தற்போது இந்துத்துவ காலிகள் அனைவருமே விடுவிக்கப்பட்டுள்ளனர். பில்கீஸ் பானு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவருமே “பிராமணர்” என்ற ‘உயர் தகுதியின்’ காரணமாக மோடி அரசால் விடுவிக்கப்படும் போதும் நாரோடா பாடியா கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் சுதந்திரமாக திரியும் போது நரோடா ஹாம் படுகொலை ஒட்டிய சிறப்பு நீதிமன்றம் மட்டும் குற்றவாளிகளைத் தண்டிக்கவா போகிறது.
மோடி ஆட்சிக்கு வந்த பிறகு குஜராத் படுகொலையில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் அல்லது தண்டனை பெற்றவர்களில் பெரும்பான்மையினர் நிரபராதிகள் என விடுவிக்கப்பட்டுவிட்டனர். மாயா கோட்னானியும் பாபு பஜரங்கியும் நரோடா பாடியா பகுதியில் 97 முஸ்லீம்கள் கொல்லப்பட்ட சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள். அகமதாபாத் நகரின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள முசுலீம்களின் காலனியான நரோடா பாட்டியாவில் கொல்லப்பட்ட 97 பேரில் 30 பேர் ஆண்கள்; 32 பேர் பெண்கள்; 35 பேர் குழந்தைகள் மற்றும் சிறுவர் சிறுமியர். இப்படுகொலையில் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டவர்களில் 20 நாட்களே ஆன ஒரு பச்சிளங்குழந்தையும், ஒன்பது மாத நிறை கர்ப்பிணியான கவுசர் பானுவும் அடக்கம்.
நரோடா பாடியா படுகொலையை விசாரித்த சிறப்பு விசாரணை நீதிமன்றம் மாயா கோட்னானி மற்றும் பாபு பஜரங்கிக்கு ஆயுள் தண்டனை வழங்கியது. இத்தீர்ப்பை எதிர்த்து உயர்நீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் மாய கோட்னானியை விடுதலை செய்தும் பாபு பஜரங்கிக்கு ஆயுள் தண்டனையை உறுதி செய்தும் தீர்ப்பளித்தது குஜராத் உயர் நீதிமன்றம். உடல்நிலையைக் காரணம் காட்டி, பாபு பஜ்ரங்கிக்கு பிணை வழங்கும்படி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதனை விசாரித்த உச்சநீதிமன்றம் பஜ்ரங்கி மற்றும் இவ்வழக்கில் தண்டனை பெற்ற நால்வரையும் பிணையில் விடுவித்தது. தற்போது நரோடா காம் படுகொலை வழக்கிலிருந்தும் இவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
குஜராத் இனப் படுகொலையில் சம்பந்தப்பட்ட பலரும் விடுதலை ஆகிவிட்டனர். அதில் பலர் மந்திரிகளாகவும் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களாகவும் பதவி பெற்றுள்ளனர். 2002 இனப்படுகொலையை தலைமை தாங்கி நடத்திய அப்போதைய குஜராத் முதல்வர் மோடி தற்போது நாட்டின் பிரதமர், மோடியைக் காப்பற்றுவதற்காக பல போலி மோதல் கொலைகளை திட்டமிட்டு நடத்திய அப்போதைய குஜராத் உள்துறை அமைச்சர் அமித்ஷா தற்போது நாட்டின் உள்துறை மந்திரி, குஜராத் இனப் படுகொலையில் சம்பந்தப்பட்ட பலர் குஜராத்தின் முன்னாள்/இன்னாள் சட்ட மன்ற உறுப்பினர்கள். இவ்வழக்குகளில் இருந்து காவி பாசிஸ்ட்களை காப்பாற்றிய அப்போதைய நீதிபதிகள் தற்போது ஆளுநர்களாகவும் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் பிற உயர் பதவிகளிலும் உள்ளனர். காவி பாசிஸ்ட்களை ஆதரித்து பேசிய எழுதிய அறித்துறையினர் பலர் தங்களது ஜல்ராவுக்கு கைமாறாக தற்போது மத்திய மாநில அரசுகளின் பல முக்கியப் பொறுப்புகளில் உள்ளனர். ஆனால் பாதிக்கப்பட்ட மக்களோ ஏறத்தாழ இரண்டாம்தர குடிமக்களை போல மாற்றப்பட்டுள்ளனர்.
2002 குஜராத் இனப்படுகொலைக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை சட்ட ரீதியாக நிறுவ திட்டமிட்டு காய்நகர்த்துகிறது பாஜக கும்பல். குஜராத் கலவரம் தொடர்பான விசயங்கள் பாடபுத்தகங்களில் கூட இருக்கக் கூடாது என்று பயந்து புத்தகங்களிலிருந்து அப்பகுதிகளை நீக்குகின்றனர். சமூக ஊடகங்கள் மற்றும் தொலைக்காட்சிகளின் வாயிலாக இந்துத்துவா நடவடிக்கைகளுக்கு ஆதரவான கண்ணோட்டத்தை மக்களிடம் உருவாக்குவதற்கு மிகத் தீவிரமாக முயற்சிக்கின்றனர். ஏறத்தாழ இந்த மொத்தக் கட்டமைப்புமே இந்த காவி பாசிஸ்ட்களின் இந்துத்துவா நடவடிக்கைகளுக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆதரவாகவே உள்ளது. இதனை ஒழிக்காமல் பாதிக்கப்பட்ட அப்பாவி முஸ்லீம்களுக்கு நீதி கிடைக்கப்போவதில்லை.
- அழகு