2030ம் ஆண்டுக்குள் தமிழகத்தை ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றப் போவதாக கூறிவரும் திமுக அரசு அதற்கு விலையாக தொழிலாளர்களின் உரிமையைக் கொடுக்கப்போகிறது. தமிழகத்தை கார்ப்பரேட் நிறுவனங்கள் தொழில் தொடங்க விரும்பும் இடமாக மாற்றிட பல்வேறு சலுகைகளை இதுவரை அறிவித்து வந்த மாநில அரசு தற்போது கார்ப்பரேட்டுகளின் மிக முக்கியமான கோரிக்கையான தொழிலாளர் நலச் சட்ட திருத்தத்தை அறிவித்துள்ளது.
தமிழ்நாடு தொழிற்சாலைகள் சட்டத்தில் (Factories Act 1948) திருத்தங்களைச் செய்யும் சட்ட முன்வரைவு தமிழக அரசால் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதன் படி தொழிற்சாலைகள் சட்டத்தில் உள்ள தொழிலாளர்களின் வேலை நேரத்தைத் தீர்மானிக்கும் சரத்துகளை ஒரு நிறுவனத்திற்கோ அல்லது சில நிறுவனங்களின் குழுவிற்கோ அல்லது ஒரு குறிப்பிட்ட தொழிற்பிரிவிற்கோ விலக்களிக்க தமிழக அரசிற்கு அதிகாரம் வழங்கும் வகையில் திருத்தங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
தற்போது திருத்தப்படும் சரத்துக்கள் 51,52,54, 55,56,59 ஆகியவை வேலை நேரம், கூடுதல் வேலை நேரம், கூடுதல் வேலை நேரத்திற்கான ஊதியம், கூடுதல் வேலைக்கான ஈடுகட்டும் விடுமுறை, பணியின் இடையே விட வேண்டிய ஓய்வு நேரம் போன்ற அடிப்படையான உரிமைகள் சம்மந்தப்பட்டவை.
பிரிவு 51ன் படி, எந்த ஒரு வாரத்திலும் 48 மணிநேரத்திற்கு மேல் ஒரு தொழிற்சாலையில் தொழிலாளி வேலை செய்ய தேவையில்லை. பிரிவு 52ன் படி எந்த ஒரு தொழிலாளியும் வாரத்தின் முதல் நாளில் (ஞாயிறு) வேலைசெய்யத் தேவையில்லை. பிரிவு 54ன் படி எந்த நாளிலும் ஒன்பது மணிநேரத்திற்கு மேல் தொழிற்சாலையில் வேலை செய்யத் தேவையில்லை. பிரிவு 55 இன் படி, எந்தவொரு தொழிலாளியும் குறைந்தபட்சம் அரை மணி நேர இடைவெளி இன்றி ஐந்து மணிநேரத்திற்கு மேல் வேலை செய்யக்கூடாது.
பிரிவு 59ன் படி, ஒரு தொழிலாளி ஒரு தொழிற்சாலையில் ஒரு நாளில் ஒன்பது மணிநேரத்திற்கு மேல் அல்லது வாரத்தில் 48 மணிநேரத்திற்கு மேல் வேலை செய்யும் போது, அந்த கூடுதல் நேர வேலைக்கு தொழிலாளியினுடைய சாதாரண ஊதியத்தை விட இரண்டு மடங்கு ஊதியம் வழங்கப்பட வேண்டும்.
இவையெல்லாம் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகள். தமிழக சட்டமன்றத்தில் தாக்கலாகியிருக்கும் மசோதா நடைமுறைக்கு வந்தால் தொழிலாளி வர்க்கம் போராடிப் பெற்ற இந்த உரிமைகள் அனைத்தும் பறிக்கப்படும்.
தற்போது இந்த திருத்தங்களைக் கொண்டுவர வேண்டியதன் அவசியம் குறித்து பேசும் போது “பல்வேறு தொழிற்சாலைகள் மற்றும் முதலாளிகள் கூட்டமைப்பின் பிரதிநிதிகளின் கோரிக்கைகளை தொடர்ந்தே இந்த திருத்தம்” என சட்ட முன்வரைவிலேயே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த மாதம் கர்நாடக மாநில அரசும் தொழிலாளர் நலச் சட்டத்தில் இதே போன்ற திருத்தத்தைக் கொண்டு வந்துள்ளது. பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களின், குறிப்பாக ஆப்பிள் – பாக்ஸ்கான் நிறுவனங்களின், கோரிக்கைகளுக்கு இணங்கவே கர்நாடக மாநில அரசு அந்த திருத்தங்களைக் கொண்டு வந்தது. தற்போது கர்நாடகத்தின் அடியொற்றி தமிழ்நாடும் தொழிலாளர் நலனைப் பறிக்கும் வேலையில் இறங்கியுள்ளது.
தமிழகத்தில் பாக்ஸ்கான் நிறுவனம் தனது ஆலையை விரிவாக்கம் செய்யப்போவதாக அறிவித்து 60,000 பேர் தங்கக்கூடிய அளவிற்கு பிரம்மாண்ட விடுதியையும், தொழிற்சாலைகளையும் கட்டி வருகிறது. சீனாவிலிருந்து ஐபோன் உற்பத்தியை மொத்தமாக இந்தியாவிற்குக் கொண்டுவர ஆப்பிள் மற்றும் பாக்ஸ்கான் நிறுவனங்கள் முடிவெடுத்துள்ளன. எனவே அவர்களது விருப்பத்திற்கேற்ற வகையில் தொழிலாளர் சட்டங்களை இம்மாநில அரசுகள் திருத்தி வருகின்றன.
ஒரு நாளிற்கு 8 மணி நேர வேலை, வாரத்திற்கு 48 மணி நேரம் மட்டுமே வேலை, வேலைக்கு நடுவே ஒய்வு, வாரத்தில் ஒரு நாள் விடுமுறை, கூடுதல் நேர வேலைக்கு கூடுதல் சம்பளம் ஆகியவை எல்லாம் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எட்டிக்காயாய் கசக்கின்றன. இவற்றையெல்லாம் நீக்கிவிட்டு, 12 மணி நேரம் வரை, ஓய்வின்றி, வாரத்தின் எல்லா நாளும், கூடுதல் சம்பளம் இன்றி தொழிலாளியைக் கசக்கிப் பிழியவே அவை விரும்புகின்றன.
மோடி அரசால் முன்மொழியப்பட்டு நடைமுறைக்கு கொண்டுவர காத்திருக்கும் “பணியிடப் பாதுகாப்பு, உடல் நலம் மற்றும் பணி நிலைமைகள் குறித்த தொகுப்பு – 2020”ன் பிரிவு 127 – வேலை நேரம் குறித்த சட்ட விதிகளில் விலக்களிக்க மாநில அரசுகளுக்கு உரிமை வழங்குகிறது.
“ஒன்றிய அரசால் முன்மொழியப்பட்டுள்ள தொகுப்பானது இன்றும் நடைமுறைக்கு வராத நிலையில் தொழிலாளர்கள் மற்றும் முதலாளிகளின் நலன் பாதிக்கப்படக் கூடாது என்ற காரணத்தால் தமிழ்நாடு அரசால் இந்தச் சட்ட திருத்தம் கொண்டுவரப்படுகிறது” என சட்ட முன்வரைவில் கூறப்பட்டுள்ளது. அதாவது ஒன்றிய அரசு கொண்டுவரவிருக்கும் சட்டங்கள் தாமதமாவதால் மாநில அரசே தொழிலாளர்களின் உரிமைகளைப் பறிக்கும் வேலையில் இறங்கியுள்ளது. இதன் மூலம் கார்ப்பரேட் சேவையில் காவிக்கு கருப்பு சளைத்ததல்ல என்று நிறுவியிருக்கிறது திமுக அரசு.
காவி கார்ப்பரேட் பாசிச கும்பலான, பாஜக, ஆர்.எஸ்.எஸ்சை திமுக எதிர்ப்பதாக கூறுகிறது. அதேசமயம் பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தில் உறுதியான, தலைமைதாங்கும் சக்தியான தொழிலாளி வர்க்கத்தின் உரிமைகளைப் பறிக்கும் வகையில் சட்டங்களைத் திருத்துகிறது. இது பாசிசத்திற்கு சேவை செய்வதே அன்றி வேறில்லை. பாசிச எதிர்ப்புக்கு திமுக செய்கின்ற துரோகம் இது.
- அறிவு