பாசிசம் தனக்கான ஆதரவாளர்களை, அடித்தளத்தை உருவாக்கிக் கொள்வதற்கு, முதலில் ஒவ்வொரு நாட்டிலும் தனக்கான எதிரிகளை வரையறுக்கிறது. தனது செல்வாக்கை நிலைநாட்டிக் கொள்ள எதிரிகளாக வரையறுக்கப்பட்டவர்கள் மீது கேள்விக்கிடமற்ற ஒடுக்குமுறையைக் கட்டவிழ்த்துவிடுகிறது.
ஜெர்மனியில் நாசிக்கள், யூதர்களை எதிரியாக வரையறுத்தார்கள். யூதர்கள் மீதான தாக்குதல்களை, ஒடுக்குமுறைகளை நியாயப்படுத்தினார்கள். அதனைப் பயன்படுத்தி பாசிசப் படைகளைக் கட்டினார்கள். ஆதரவாளர்கள் மத்தியில் தனது செல்வாக்கைப் பாதுகாத்துக் கொள்ள யூதர்களின் ஜனநாயக உரிமைகளை ஒவ்வொன்றாக பறித்தார்கள்.
நம் நாட்டில், காவி கார்ப்பரேட் பாசிசம் இஸ்லாமியர்களையும், ஜனநாயக சக்திகளையும், கம்யூனிஸ்டுகளையும் தங்களது எதிரிகளாக வரையறுத்துள்ளது. அதிலும் குறிப்பாக இஸ்லாமியர்களையே தனது பிரதான எதிரியாக வரையறுத்துள்ளது. அவர்களை வைத்துப் பூச்சாண்டி காட்டித்தான் தனக்கான அடித்தளத்தை உருவாக்கிக் கொண்டுள்ளது. எனவே இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்திக் கொண்டே வருகிறது. அவர்களது ஜனநாயக உரிமைகளை ஒவ்வொன்றாகப் பறித்து வருகிறது.
அதன் சமீபத்திய உதாரணம் தான் ரம்ஜான் கூட்டுத் தொழுகைக்கு எதிராக தொடரப்படும் வழக்குகள். இந்தியா முழுவதும் இஸ்லாமியர்கள் தங்களது ரம்ஜான் மாதத்தில் தராவீஹ் தொழுகை என்ற பெயரில் குர் ஆனில் உள்ள முக்கிய வாசகங்கள் சிலவற்றை வாசித்து தொழுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இது நாட்டின் குடிமக்களாக, இஸ்லாமியர்களின் மத வழிபாட்டு சுதந்திரம், சமத்துவ உரிமை.
இஸ்லாமியர்கள், தங்களது வீட்டில் கூட்டுத்தொழுகை நடத்தினாலே அதை ஒரு குற்றமாக கருதி போலீசு மூலம் நடவடிக்கை எடுக்கிறது காவி பாசிச கும்பல்.
இஸ்லாமியர்கள் தங்களது வீடுகளில் கூட்டுத்தொழுகை நடத்தினால், காவிக் குண்டர்களும், போலீசும் அவர்களது வீட்டுக் கதவை தட்டும் நிகழ்வுகள் பல இடங்களில் நடந்திருப்பது இதற்கு ஒரு துலக்கமான எடுத்துக்காட்டு.
*************
சம்பவம் 1:
உத்தரபிரதேசத்தின் மொராதாபாத்தில் லாஜ்பத் நகரில் ஜாகீர் உசேன் என்பவரது இடத்தில் (30 பேர்) கூட்டுத்தொழுகை நடத்தியுள்ளனர்.
கூட்டாக தொழுகை செய்வது பெரும் மன நிறைவை தரக் கூடியது என்பதாலும் சிலர் இல்லத்தில் தொழுகை நடத்துவதற்கு சிறிய இடம் கூட இல்லாத நிலையிலும் தான் ஜாகீர் உசேன் வீட்டில் இந்த கூட்டுத்தொழுகையை நடத்தியதாக அவர்கள் கூறுகின்றனர்.
இப்பிரார்த்தனை கூட்டம் பற்றி தகவல் கிடைத்ததும் உ.பி மாநில பஜ்ரங்தள தலைவர் சக்சேனா மற்றும் காவி குண்டர்கள் உசேன் வீட்டின் முன்பு திரண்டு கூட்டாக தொழுகை நடத்தும் புதிய பராம்பரியத்தை எல்லாம் அனுமதிக்க முடியாது என பிரச்சனை செய்துள்ளனர்.
மறுநாளும் தொழுகை நடந்ததை ஒட்டி புதிய மரபுகளை உருவாக்க விரும்புவோர் மற்றும் நகரின் அமைதியை சீர்குலைப்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று காவல்துறைக்கு அழுத்தம் கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.
கூட்டுத்தொழுகைக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாவிடில் தாங்கள் போராட்டத்தை அறிவிக்கப் போவதாக பஜ்ரங்தள குண்டர்கள் மிரட்டியதால், உ.பி போலிசும், ‘நான் இனி கூட்டுத் தொழுகை நடத்த மாட்டேன்’ என எழுத்துபூர்வமாக எழுதி வாங்கியுள்ளனர்.
இருந்தும் காவிகும்பல் சமாதானம் அடையாததால், அந்தப் பகுதியிலிருந்த பத்துக்கும் மேற்பட்ட முஸ்லீம்களுக்கு போலீசார் எச்சரிக்கை நோட்டீசு அனுப்பியுள்ளனர். அத்துடன் இனிமேல் எந்த ஒரு கூட்டுத்தொழுகையையும் நடத்தக் கூடாது என்று உசேன் குடும்பத்திற்கு உத்தரவிட்டிருக்கின்றனர்.
மேலும் அப்பகுதியில் அமைதியை சீர்குலைத்ததற்காக தலா 5 லட்சம் ரூபாய் அபராதம் ஏன் செலுத்தக்கூடாது என்றும் இஸ்லாமியர்களை போலீசார் மிரட்டியுள்ளனர்.
உபி போலீசின் எஸ்.பி. மீனாவிடம் பிபிசி நிருபர் இந்து பூஜை (ஜக்ராத்தா) உரிமையின் மீதும் இதுபோல நடவடிக்கை எடுப்பீர்களா? என கேட்டதற்கு ”ஜக்ராத்தா வேறு, வழிபடுவது வேறு. இந்து-முஸ்லிம் பாரம்பரியத்தை ஒன்றாக்குவீர்களா?” என்று எதிர் கேள்வி கேட்டிருக்கிறார்.
*************
சம்பவம் 2 & 3:
நொய்டாவின் ஒரு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் இதே போன்றதொரு சம்பவம் சென்ற வாரம் நடந்திருக்கிறது. வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசிக்கும் இஸ்லாமியர்கள் அங்கு பாதி கட்டப்பட்டு விடப்பட்ட கட்டிடத்தில் கூட்டுத் தொழுகை நடத்தி இருக்கிறார்கள். இதற்கு குடியிருப்பு அதிகாரிகளிடம் முன் அனுமதி பெற்றிருக்கிறார்கள். வெளியிலிருந்தும் சில இஸ்லாமியர்கள் அந்த கூட்டுத்தொழுகைக்கு வந்து செல்கின்றனர்.
இக்கூட்டுத் தொழுகைக்கு எதிராக, அக்குடியிருப்பில் குடியிருக்கும் விசுவ இந்து பரிசத்தின் தலைவன் ரவி வர்மா, கூட்டுத்தொழுகையை நிறுத்துமாறு குடியிருப்பு அதிகாரிகளிடம் சண்டையிட்டுள்ளான். இதற்கு குடியிருப்பு அதிகாரிகள் மறுக்கவே, கூட்டுத்தொழுகையை கலைக்கும் விதமாக ரவிவர்மா மற்றும் சிலர் போட்டியாக ஒலிப்பெருக்கியோடு வந்து ஹனுமான் சாலிசா பாராயணம் செய்துள்ளனர்.
மேலும் காவிக்கும்பல்கள் துணையோடு போலிசு வரவழைக்கப்பட்டு இக்கூட்டுத்தொழுகை நிறுத்தப்பட்டிருக்கிறது.
அக்குடியிருப்பில் வசிக்கும் ஒரு பெண் ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ் செய்தியாளரிடம், “பெரும்பாலான குடியிருப்பாளர்களுக்கு இந்த கூட்டுத்தொழுகையால் எந்த பிரச்சினையும் இல்லை. நான் இச்சம்பவம் நடந்த போது அங்கிருந்தேன். ஒரு சில ஆண்களை தவிர எங்களுக்கு இக்கூட்டுத்தொழுகையால் எந்த பிரச்சினையும் இல்லை” என்று கூறியிருக்கிறார்.
இதே போன்றதொரு சம்பவம் நொய்டாவின் வேறு ஒரு வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் நடந்திருக்கிறது. அங்கும் கூட்டுத் தொழுகை போலிசு துணை கொண்டு நிறுத்தப்பட்டிருக்கிறது.
*************
சம்பவம் 4:
உத்தரகாண்ட் மாநிலம் ஹல்த்வானியில் சித்திக் என்பவரது வீட்டில் நடந்த கூட்டுத்தொழுகையை தடுத்து அத்தொழுகையில் கலந்து கொண்ட இமாம் மற்றும் ஒரு சிலரை பஜ்ரங்தள் காவிக்கும்பல் தாக்கியிருக்கிறது. இத்தாக்குதலின் போது போலிசு கூடவே இருந்ததாக சித்திக்கின் வழக்கறிஞர் கூறியிருக்கிறார். போலிசும் காவிக் குண்டர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக பெயரளவுக்கு கூறிவிட்டு, கூட்டுத் தொழுகையை உடனே நிறுத்துமாறு உத்தரவிட்டு சென்றுள்ளனர்.
கடந்த இருபது ஆண்டுகளாக சித்திக்கின் வீட்டில் கூட்டுத் தொழுகை நடந்து வந்திருக்கிறது. ஆனால் இச்சம்பவத்திற்கு பிறகு , சித்திக்கின் கட்டிடம் புறம் போக்கு நிலத்தில் கட்டப்பட்டு இருப்பதாக கூறி தற்போது மாஜிஸ்திரேட்டு மூலம் அக்கட்டிடத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
*************
இரண்டாம் உலகப்போர் உச்சத்தில் இருந்த போது ஜெர்மனியின் கட்டுப்பாட்டில் இருந்த ஐரோப்பியப் பகுதிகளில் 60 லட்சம் யூதர்களைப் படுகொலை செய்தது யூதர்களின் மீதான நாஜிக்களின் தாக்குதல்களில் உட்சம் என்றால், 1930களில் தொடுக்கப்பட்ட சட்டப்பூர்வமான ஒடுக்குமுறை என்பது பாசிசத்தின் தாக்குதல்களின் தொடக்கம்.
இன்று இஸ்லாமியர்கள் மீது காவி கார்ப்பரேட் பாசிசம் தொடுக்கும் தாக்குதல் என்பது பாசிச ஆட்சியை நிறுவிய பிறகு வரவிருக்கும் ஒடுக்குமுறைக்கான தொடக்கம் என்றுதான் பார்க்க வேண்டும். எனவே இன்றைக்கு இந்த ஒடுக்குமுறைக்கெதிராக முற்போக்கு ஜனநாயக சக்திகள் அனைத்தும் காவி கார்ப்பரேட் பாசிசத்தைத் தடுத்து நிறுத்த ஓரணியில் ஒன்றுதிரண்டு போராட வேண்டியது நமது முதல் கடமையாக உள்ளது.
- தாமிரபரணி.
அருமையான செய்தி நன்றி.