2014ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வெற்றியின் மூலம், ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய மோடி தலைமையிலான பாசிசக் கும்பல் கடந்த 8 ஆண்டுகளில், பல்வேறு மாநிலங்களில், சட்டசபைத் தேர்தலில் பெரும்பான்மை பெறாமலே, பல குறுக்குவழிகளில் தங்களது ஆட்சியை நிறுவிவந்துள்ளது. பாஜகவிற்கு பெரிய அளவில் கட்சிக் கிளைகளோ, உறுப்பினர்களோ இல்லாத மாநிலங்களில் கூட பாஜக ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டிருக்கிறது. எம்.எல்.ஏ.க்களை விலை கொடுத்து வாங்குவது, மாநிலக் கட்சிகளை உடைத்து பலவீனப்படுத்துவது, ஆளுநரைப் பயன்படுத்தி ஆட்சிக்கு நெருக்கடி கொடுப்பது, வருமான வரித்துறையையும் அமலாக்கத் துறையையும் பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை முடக்குவது என தன்னை நிலைநாட்டிக் கொள்ள “சாம தான பேத தண்ட” உபாயங்கள் அனைத்தையும் காவிக் கும்பல் பயன்படுத்துகிறது.
முதல் முறை ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு மோடி தலைமையிலான பாசிச பாஜக அரசு பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. என பெரும்பான்மை மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கின்ற, சிறு தொழில்களை அழித்து அதனை நம்பி வாழும் கோடிக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்கிய திட்டங்களை அடுத்தடுத்து அமுல்படுத்தியது. இதன் காரணமாக நாடு முழுவதும் பாஜகவிற்கு எதிரான மனநிலை அதிகரித்தது. 2018 நவம்பர்-டிசம்பர் மாதங்களில் நடைபெற்ற 5 மாநில சட்டசபைத் தேர்தல்களில் பாஜக முற்றிலுமாக தோல்வியடைந்தது. இதனை வைத்து காவி பாசிசத்திற்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு குறைந்துவிட்டது, அதனால் இனி தேர்தலில் வெற்றி பெற முடியாது எனப் பலரும் ஆருடம் கூறினார்கள். ஆனால் 2019ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் இதுவரை இல்லாத அளவிற்கு 300க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று பாஜக ஆட்சியைத் தக்கவைத்தது.
தற்போதும் கூட பாஜக அரசின் கார்ப்பரேட் அடிவருடி திட்டங்களினால் பாதிக்கப்பட்டு, தங்களது வாழ்வாதரத்தை இழந்து வரும் மக்கள் மத்தியிலும், காவிக் கும்பலின் மதவெறி அரசியலால் சிறுபான்மை மக்கள் மத்தியிலும் பாஜக மீதான அதிருப்தி அதிகரித்துக்கொண்டுதான் வருகிறது. இந்த அதிருப்தியை அறுவடை செய்து, பாஜகவிற்கு எதிரான ஒரு பலமான கூட்டணியைக் கட்டி 2024ம் ஆண்டு தேர்தலில் பாஜகவைத் தோற்கடிக்கப்போவதாக காங்கிரஸ் கட்சியின் ராகுல்காந்தி கூறிவருகிறார்.
ஒப்பீட்டளவில் தமிழ்நாட்டில், காவி பாசிஸ்டுகளுக்கு பெரிய அளவில் தேர்தல் வெற்றி கிடைக்கவில்லை என்றாலும் கூட, மாநிலத்தின் பெரிய கட்சியாக இருந்த அதிமுக தற்போது காவிக் கும்பலின் கையசைவிற்கு ஆடும் பொம்மையாக மாற்றப்பட்டுள்ளது. கடந்த சட்டசபைத் தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜக பெற்ற வெற்றி கூட அதிமுகவின் செல்வாக்கினால் கிடைத்த வெற்றிதான். இந்தச் சூழலில் தமிழ்நாட்டிலும் 2024 பாராளுமன்றத் தேர்தல் குறித்த தயாரிப்புகள் தற்போதே ஆரம்பித்துவிட்டன.
காவி கார்ப்பரேட் பாசிசம் நமது நாட்டைக் கவ்விப் பிடித்திருக்கும் இன்றைய சூழலில் பாசிசத்தின் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்துவது எப்படி, அதனை வீழ்த்துவது எப்படி என்கிற கேள்வி புரட்சிகர சக்திகளின் முன் நிற்கிறது. பொதுவான தீர்வாக சி.பி.ஐ. சி.பி.எம் உள்ளிட்ட தேர்தல் பாதையில் பயணிக்கும் இடதுசாரி இயக்கங்கள் அனைத்தும் பாசிசத்திற்கு எதிரான ஐக்கிய முன்னணி கட்டுவது என்ற தீர்வை முன்வைக்கின்றனர். அவர்களைப் பொருத்தவரை பாசிசத்திற்கு எதிரான ஐக்கிய முன்னணி என்பது தேர்தல் கூட்டணி மட்டுமே.
தேர்தலில் பங்கேற்கும் ஓட்டுக் கட்சிகள் மட்டுமன்றி, புரட்சிகர இயக்கங்களில் சிலவும் கூட தேர்தலில் பாஜகவைத் தோற்கடிப்பதன் மூலம் பாசிசத்தின் வெற்றியைத் தடுத்து நிறுத்தி வீழ்த்திவிடலாம் என கூறுகின்றன. பாசிசத்திற்கு எதிராக மக்களைத் திரட்டுவது என்றால் திமுகவிற்கு ஆதரவாக தங்களது நடைமுறையை அமைத்துக் கொள்வது என்று கூறுகிறார்கள். தேர்தல் பங்களிப்பிலும் கூட ஒரு மாற்றை முன்வைக்க வேண்டும் என்ற பொது சூத்திரத்தை வைத்துக் கொண்டு தங்களது திமுக ஆதரவை அவர்கள் நியாயப்படுத்துகின்றனர். பாசிசத்திற்கு எதிராக பலமான தேர்தல் கூட்டணி அமைப்பதன் மூலம் மூச்சுவிடும் அவகாசம் (Breathing Space) கிடைக்கும், என்ற ‘புகழ்பெற்ற’ வாதமும் முன்வைக்கப்படுகிறது.
தேர்தல் மூலம் ஆட்சியைப் பிடித்துள்ள பாசிசக் கும்பலை அதே தேர்தலில் தோல்வியடையச் செய்வதன் மூலம் தடுத்த நிறுத்த முடியும் என இவர்கள் கருதுகிறார்கள். பாசிஸ்டுகள் தங்களது தேர்தல் தோல்வியை ஏற்றுக் கொண்டு அமைதியாக விலகிவிடுவார்கள் என்று நினைக்கிறார்கள்.
ஆனால் வரலாறு வேறு விதமான படிப்பிணையை நமக்குத் தந்துள்ளது. சமீப ஆண்டுகளில் நடந்த இரண்டு உதாரணங்கள் நமக்கு உண்மையை உணர்த்துகின்றன.
ஒன்று அமெரிக்க அதிபராக இருந்த டொனல்ட் ட்ரம்பின் தேர்தல் தோல்வி, இரண்டாவது பிரேசிலின் அதிபராக இருந்த போல்சனாரோவின் தோல்வி.
2017ம் ஆண்டு முதல் அமெரிக்க அதிபராக பதவி வகித்து வந்த டொனால்ட் டிரம்ப், 2020ம் ஆண்டு இறுதியில் நடைபெற்ற தேர்தலில் ஜோ பிடனிடம் தோல்வியடைந்தார். ஆனால் தனது பதவியை இழந்த பிறகும் அதிபர் பதவியை விட்டு விலக மறுத்த டொனால்ட் டிரம்ப், தேர்தல்கள் முடிவுகளை நிராகரிப்பதாக கூறினார். அதே சமயம் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பிடனை அதிபராக அறிவிக்கும் முயற்சிகள் நடந்து வந்தன. இதற்காக நாடாளுமன்றத்திற்குத் தேர்வானவர்களைக் கொண்டு வாக்கெடுப்பு நடத்தப்பட்டு இறுதியாக 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் 6ம் தேதியன்று வாக்குகளை எண்ணி அதிபர் தேர்தல் முடிவுகளை உறுதி செய்வதற்காக நாடாளுமன்றக் கூட்டம் நடந்துகொண்டிருந்தது.
அப்போது நாடு முழுவதிலும் இருந்து திரட்டிவரப்பட்ட டிரம்ப் ஆதரவாளர்கள் நாடாளுமன்றம் கூடும் கேப்பிடல் கட்டிடத்திற்கு உள்ளே புகுந்து தாக்குதல் நடத்தத் தொடங்கினார்கள். நாடாளுமன்றத்துக்கு வெளியேயும், அமெரிக்க தலைநகரின் தெருக்களிலும் டிரம்ப் ஆதரவாளர்கள் நடத்திய கலவரத்தில், வாஷிங்டன் நகரமே போர்க்களம் போலக் காட்சியளித்தது. இந்தக் கலவரத்தில் 4 பேர் கொல்லப்பட்டனர் பலர் படுகாயம் அடைந்தனர்.
தனது ஆதாரவாளர்களை கலவரம் செய்யாமல் கட்டுப்படுத்துவாதாக கூறிக்கொண்டு டிரம்ப் வெளியிட்ட காணொலியில் தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாகவும், தான் ஏமாற்றப்பட்டதாகவும் ஆதாரங்கள் ஏதுமின்றி குற்றஞ்சாட்டி, கலவரத்தை மேலும் தூண்டும் வகையில் பேசினார். டிரம்பின் இந்தக் காணொலியை பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் நீக்கின. டிரம்பின் அதிகாரப்பூர்வ சமூகஊடக கணக்குகள் முடக்கப்பட்டன.
இதையடுத்து டிரம்பின் சொந்தக் கட்சியைச் சேர்ந்த பல நாடாளுமன்ற உறுப்பினர்களும், தலைவர்களும் இந்த கலவரத்தை எதிர்த்தும், பைடனின் வெற்றியை அங்கீகரித்தும் பேசத் தொடங்கினார்கள். டிரம்பின் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷும் இதனைக் கண்டித்தார். தனது சொந்தக் கட்சியிலேயே தனக்கு எதிர்ப்புக் கிளம்பியதை அடுத்து டிரம்ப் தற்காலிகமாக பின்வாங்கினார்.
டிரம்ப் தோல்வியடைந்ததைப் போன்றே பிரேசிலில் சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் போல்சனாரோ தொல்வியடைந்து, தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த லுலா அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தனது தோல்வியை ஏற்க மறுத்த பொலசனாரோ, தேர்தலில் நடந்த முறைகேடுகளே தனது தோல்விக்குக் காரணம் எனக் கூறியதுடன் இதற்கெதிராக போராடுமாறு தனது ஆதரவாளர்களுக்கு வெளிப்படையாக அறைகூவல் விடுத்தார்.
இதையடுத்து, போல்சனாரோ ஆதரவாளர்கள் பிரேசில் முழுவதும் தடையரண்களை ஏற்படுத்திப் பல்வேறு வழிகளில் தொடர்ந்து போராடி வந்தனர். லுலாவை அதிபர் பதவியிலிருந்து தூக்கியெறிய வலியுறுத்தி பிரேசில் நாட்டு இராணுவத் தலைமையகத்தை முற்றுகையிட்டு அங்கேயே தங்கி போராடினார்கள். அதுமட்டுமன்றி பல்வேறு இடங்களிலும் வன்முறைச் சம்பவங்களிலும் கலவரங்களிலும் தீவைப்புகளிலும் ஈடுபட்டனர். அதன் உச்சகட்டமாக கடந்த ஜனவரி 8 அன்று நாடு முழுவதிலும் இருந்து திரட்டி வரப்பட்ட ஆயிரக்கணக்கான போல்சனாரோ ஆதரவாளர்கள் பிரேசிலின் அதிபர் மாளிகை, உச்சநீதிமன்றம் மற்றும் பாராளுமன்றம் ஆகியவற்றை ஆக்கிரமித்து தாக்குதல் தொடுத்தார்கள்.
தீவிர வலது சாரியான போல்சனாரோ அதிபராக இருந்த போது பிரேசிலின் பாசிச இயக்கங்களுடன் நெருக்கம் காட்டினார். முன்னாள் இராணுவ கேப்டனான போலசனாரோ, ஜனநாயகத்தின் மீது தனக்கு எப்போதும் நம்பிக்கையில்லை எனக் கூறி வந்ததுடன் 1985ம் ஆண்டுவரை சுமார் 20 ஆண்டுகள் பிரேசில் மக்கள் மீது கொடுங்கோலாட்சி நடத்திய அமெரிக்க ஆதரவு இராணுவ சர்வாதிகார ஆட்சிதான் மிகச் சிறந்த ஆட்சி என வெளிப்படையாக புகழ்ந்து கூறியிருக்கிறார்.
பாசிஸ்டுகள் என்றைக்கும் முதலாளித்துவத்தின் அடிமைகளே என்பதை நிரூபிக்கும் வகையில் நவீன தாராளவாத கொள்கைகளை பிரேசிலில் மிகத் தீவிரமாக போல்சனாரோ அமுல்படுத்தினார். இதன் காரணமாக பிரேசில் பொருளாதாரம் சீரழிந்து தொழிலாளர்கள் வேலையிழந்து தெருவில் நின்றபோதும் தான் செய்தது சரியே என்று வாதிட்டார்.
சுரங்க மாஃபியா மற்றும் மரம் வெட்டும் நிறுவனங்களின் ஆதரவாளரான போல்சனாரோ, இவர்கள் அமேசான் காடுகளை அழித்த போது, அமேசான் பழங்குடியினர்தான் மேய்ச்சலுக்காகவும், விவசாயத்திற்காகவும் காட்டுத்தீயை உருவாக்குவதாக குற்றஞ்சாட்டினார். இதனை எதிர்த்துப் அமேசான் பழங்குடியினர் போராடியபோது, அவர்களைக் காட்டுமிராண்டிகளாக சித்தரித்து தனது இனவெறியை வெளிப்படையாகக் காட்டினார்.
அதுமட்டுமன்றி மாஃபியா கும்பலைப் பாதுகாக்க, மரங்கள் வெட்டப்பட்டு காடுகள் அழிக்கப்படுவதைத் தடுப்பதற்கும், பருவநிலை மாறுபாடுகளைக் கையால்வதற்கும் பிரேசிலின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கிவந்த இரண்டு நிறுவனங்களைக் கலைத்தார். இதன்மூலம் பூமிப்பந்தின் நுரையீரல் என அழைக்கப்படும் அமேசான் காடுகளின் பெரும்பகுதி மாஃபியா கும்பலால் அழிக்கபடுவதற்கு போல்சனாரோ துணை நின்றார்.
கொரோனா பெருந்தொற்று ஏற்பட்ட போது அதனால் எவ்வித பாதிப்பும் இல்லை எனத் தொடர்ந்து கூறிவந்ததுடன், எவ்வித பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்காமல் இருந்ததுடன் அதற்காக முயன்ற அதிகாரிகளையும், பிற அரசியல் தலைவர்களையும் தனது செல்வாக்கைப் பயன்படுத்தித் தடுத்தார். இதன் மூலம் லட்சக்கணக்கான பிரேசில் நாட்டு மக்கள் கொரோனா பெருந்தொற்றில் பலியாக காரணமாக இருந்தார்.
இதன் காரணமாக மக்கள் மத்தியில் அவரது செல்வாக்கு குறைந்து வந்தது. கடந்த ஆண்டே, அதாவது தேர்தல் நடந்து லுலாவிடம் தோல்வியடைவதற்கு முன்னரே, தான் தோல்வியடைவது தின்னம் என்பதைப் புரிந்து கொண்ட போல்சனாரோ, ஒருவேளை தான் தோல்வியடைந்தால் எதிர்க்கட்சிகளின் மோசடிதான் அதற்குக் காரணமாக இருக்கும் என கூறியதோடு, அவ்வாறு நடந்தால் வன்முறை வெடிக்கும் என எச்சரித்திருந்தார்.
லுலா அதிபராக பதவியேற்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர், தனது ஆதரவாளர்கள் தலைநகரின் இராணுவ தலைமையகத்தை முற்றுகையிட்டு கூடாரமடித்துத் தங்கி போராடிக் கொண்டிருந்த போது, பிரேசிலைவிட்டு வெளியேறிய போல்சனாரோ அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்திற்குச் சென்றுவிட்டார். லுலா பதவியேற்று ஒருவாரம் கழித்து ஆயிரக்கணக்கான போல்சனாரோ ஆதரவாளர்கள் ஆக்கிரமிப்பு போராட்டத்தில் குதித்தனர்.
இராணுவத்திலும், போலீசிலும், இவ்வளவு ஏன் அதிபர் மாளிகைக்கு உள்ளேயும் கூட போல்சனாரோ ஆதரவாளர்கள் ஊடுருவியிருந்தனர். பாதுகாப்பு பணியில் நூற்றுக்கணக்கான போலீசு மற்றும் இராணுவ வீரர்கள் ஈடுபட்டிருந்த போதே எவ்வித எதிர்ப்பும் இன்றி பாராளுமன்றத்தையும், உச்ச நீதிமன்றத்தையும் அவர்கள் கைப்பற்றிக் கொண்டனர். அதிபர் மாளிகையின் கதவுகளைத் திறந்து போராட்டக்காரர்களை உள்ளே அனுமதிக்கும் அளவிற்கு அங்கே போல்சனாரோ ஆதரவாளர்கள் நிரம்பியிருக்கின்றனர்.
இராணுவமும், போலீசும் களத்தில் இறங்கி போராட்டக்காரர்களைக் கைது செய்து போராட்டத்தை முடிவுக்கும் கொண்டு வந்திருந்தாலும், பொல்சனாரோ அமெரிக்காவில் இருந்து கொண்டு மீண்டும் பிரேசில் முழுவதும் தனது ஆதரவாளர்களைக் கொண்டு கலவரம் செய்வார் என்பதில் சந்தேகமில்லை.
போல்சனாரோவிடம் நட்பு பாராட்டிய ஒரு சில உலகத் தலைவர்களில் மோடி மிக முக்கியமானவர். மோடி மீண்டும் வெற்றிபெற்று ஆட்சி அமைத்த பிறகு வந்த முதல் குடியரசு தினத்திற்கு (2020ம் ஆண்டு) போல்சனாரோவைத் தான் முக்கிய விருந்தினராக அழைத்திருந்தார். சமீபத்திய தேர்தலில் போல்சனாரோ தோல்வியடைந்து லுலா வெற்றிபெற்ற போதும், மோடி லுலாவிற்கு சம்பிரதாயத்திற்கும் கூட வாழ்த்துச் சொல்லவில்லை. அந்த அளவிற்கு மோடி போல்சனாரோவிடம் நெருக்கம் காட்டுகிறார்.
ட்ரம்ப், போல்சனாரோ இருவரது தோல்வியும், அதனைத் தொடர்ந்து கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளும் நமக்கு ஒன்றைத் தெளிவாக உணர்த்துகின்றன. பாசிஸ்டுகள் தேர்தலில் தோல்வியுற்றார்கள் என்றால் அவர்கள் தங்களது தோல்வியை அவ்வளவு எளிதில் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள், அதனைப் பயன்படுத்தி நாடு முழுவதும் மிகப்பெரிய அளவில் வன்முறைகளைத் திட்டமிட்டு நடத்துவார்கள்.
டொனால்ட் டிரம்ப் மிகப்பெரிய கோடீஸ்வரராக இருந்தாலும், அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்படும் அளவிற்கு செல்வாக்கு பெற்றிருந்தாலும் அவர் மீதான அதிருப்தி ஏற்பட்ட போது அவரால் அதனைத் திசை திருப்ப இயலவில்லை. அவர் கைக்கொண்ட வெள்ளை இனவெறியை பயன்படுத்தி ஒரு கட்டத்திற்கு மேல் ஆதரவாளர்களைத் திரட்ட இயலவில்லை. அதன் விளைவாக அவரது சொந்த கட்சியால் கைவிடப்பட்டார். ஆனால் தனிநபர் பாசிஸ்டான பொல்சனாரோவிற்கு அவரது கட்சியின் ஆதரவு இருந்ததால் நாடு முழுவதுமான வன்முறையை ஓரிரு வாரங்கள் வரைத் தொடர முடிந்தது. ஆனால் இருவருக்கும் மக்கள் மத்தியில் சமூக அடிப்படை இல்லை. இன்னமும் உருவாக்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
ஆனால் இந்தியாவைப் பொருத்தவரை இங்கே காவி கார்ப்பரேட் பாசிசத்தின் பின்னால் ஆர்.எஸ்.எஸ். என்றதொரு இயக்கம் இருக்கிறது. கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளாக மக்கள் மத்தியில் பாசிசத்திற்கான சமூக அடித்தளத்தை உருவாக்கிட தொடர்ந்து வேலை செய்து வருகிறது. ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தான் நினைத்ததை நடத்தி முடிக்கும் அமைப்பு பலம் கொண்டிருக்கிறது.
1949ல் இந்து சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்ட போதே தலைநகர் புதுதில்லியை மொத்தமாகத் தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து அதனைக் கலவரக்காடாக மாற்றினார்கள். இதற்கென துணை இராணுவப் படைகளை ஒத்த குண்டர் படையைக் கட்டி அவர்களுக்கு ஆயுதப்பயிற்சி அளித்து தயார் நிலையில் வைத்திருக்கிறார்கள்.
இந்த காட்டுமிராண்டிப் படையைக் கொண்டுதான் குஜராத்தில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்களைப் படுகொலை செய்தது, பல லட்சம் இஸ்லாமியர்களின் உடைமைகளைப் பிடுங்கி அவர்களைச் சொந்த நாட்டில் அகதிகளாக முகாம்களில் அடைத்தது இந்த பாசிசக் கும்பல்.
குஜராத் படுகொலை ஒரு எடுத்துக்காட்டுதான், தமிழ்நாட்டில் கோவைக் கலவரம் மண்டைக்காடு கலவரம், மராட்டியத்தில் மும்பைக் கலவரம் போல நாடு முழுவதும் கிட்டத்தட்ட எல்லா மாநிலங்களிலும் கலவரம் செய்துள்ளனர். இதில் தொழில்முறைப் பயிற்சி பெற்ற வானரக் கூட்டத்தை வைத்துள்ளனர்.
தபோல்கர், கல்புர்கி, கௌரிலங்கேஷ் என தனக்கு எதிராக பேசுபவர்களை படுகொலை செய்வதற்கென்று துப்பாக்கிக் குழுக்களை வைத்துக் கொண்டு எந்த மாநிலத்தில் யாரை வேண்டுமானாலும் சுட்டுக் கொல்ல அவர்களால் முடியும்.
மகாராஷ்டிராவில் மாலேகான் மற்றும் நான்டெட், மத்தியப் பிரதேசத்தில் அஜ்மீர், ஆந்திராவில் ஹைதராபாத் மெக்கா மசூதி, கோவாவில் மார்காவோ, என சர்வதேச தீவிரவாத இயக்கங்களைப் போல குண்டுவெடிப்புகளைத் திட்டமிட்டு நடத்தி பல நூறு அப்பாவி மக்களைக் கொன்று குவிக்கவும் தனியாக இயக்கங்களைக் கொண்டிருக்கிறார்கள்.
இப்படிப்பட்ட வழுவான கட்டமைப்பை, நாடு முழுவதும் ஒரு பெரிய வலைப்பின்னலை ஆர்.எஸ்.எஸ். பெற்றிருப்பது ஒருபுறம் என்றால், மறுபுறம் கடந்த 8 ஆண்டுகளில் அரசு துறைகள் அனைத்திலும், பாசிச சித்தாந்தத்தை கொண்டுள்ள ஆட்களைக் கொண்டு நிரப்பியிருக்கிறார்கள். நீதிமன்றம், அரசு நிர்வாகம், போலீசு, இராணுவம், கல்வி நிலையங்கள், ஊடகம் என அனைத்து இடங்களிலும் பாசிச சித்தாந்தம் கோலோச்சுகிறது.
மக்கள் மத்தியிலும் கூட பாசிச சித்தாந்தம் வலுவாக காலூன்ற ஆரம்பித்துள்ளது. சமீபத்தில் நடந்த குஜராத், ஹிமாச்சல் சட்டமன்ற தேர்தல்களும், தில்லி ஊராட்சிமன்றத் தேர்தலும் மக்கள் மத்தியில் இவர்கள் செல்வாக்கு அதிகரித்திருப்பதைக் காட்டுகிறது. தேர்தலில் வெற்றியோ தோல்வியோ முடிவு எதுவாக இருந்தாலும் கடந்த முறை நடந்த தேர்தலில் வாங்கிய வாக்கு சதவீதத்தைவிட பல மடங்கு அதிகரித்துள்ளது.
குஜராத் மாநிலம் மோர்பியில் பாலம் அறுந்து விழுந்து நூற்றுக்கணக்கானவர்கள் பலியான சம்பவத்தில் பாஜக அம்பலப்பட்டு நின்ற போதும் கூட அந்தத் தொகுதியில் பாஜக மீண்டும் பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற முடிந்தது.
பாஜகவின் தீவிர ‘நவீன தாராளவாத’ கொள்கைகளால் விவசாயம் அழிவது, தொழில்கள் நசிந்து போவது, வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு என பலமுனைத்த தாகுதல்களைச் சந்தித்த போதும் குஜராத் மக்கள் மீண்டும் மீண்டும் பாஜகவையே தேர்ந்தெடுத்து வருகின்றனர். குஜராத் மக்களின் இந்த காவி பாசிச சார்பு மெல்ல மெல்ல வடஇந்தியா முழுவதும் பரவி வருகிறது.
தற்போதைய சூழலில் காவி கார்ப்பரேட் பாசிச சக்திகள் நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைய வாய்ப்பில்லை. ஆனால் ஒருவேளை அப்படியொரு அதிசயம் நடந்துவிட்டால், பாசிஸ்டுகள் தேர்தலில் தோல்வியுற்றால் என்ன நடக்கும்? மக்கள் மத்தியில் சமூக அடிப்படை இல்லாத அமெரிக்காவிலும், பிரேசிலிலும் தனிநபர் பாசிஸ்டுகள் தங்களது தேர்தல் தோல்வியைப் பயன்படுத்திக் கலவரம் செய்யும் போது, இந்தியாவில் தான் நினைத்ததை நடத்தி முடிக்கும் வலிமை கொண்ட பாசிச சக்திகள் இதனைப் பயன்படுத்தி நாடு முழுவதும் கலவரத்தில் இறங்குவார்கள். இதையே ஒரு சாக்காக பயன்படுத்தி நாடாளுமன்றத்தைத் தூக்கியெறிந்து, தங்களது பாசிச ஆட்சியை நிறுவவும் செய்வார்கள்.
இதையெல்லாம் எதிர்கொள்ள வெறும் தேர்தல் கூட்டணி மட்டும் போதுமா? தேர்தல் களத்திற்கு வெளியே மக்களை அணிதிரட்டி வைத்திருப்பது அவசியம் இல்லையா?
பாசிசத்தைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றால் அதற்கு எதிரான இயக்கம் ஒன்றைக் கட்டியமைக்க வேண்டும். களத்தில் இறங்கி வேலை செய்ய வேண்டும். ஒவ்வொரு துறையிலும் இறங்கி வேலை செய்ய வேண்டும். பாசிசத்திற்கு எதிரான மக்கள் அடித்தளத்தை உருவாக்க வேண்டும். மக்கள் அடித்தளம் என்பது ஒவ்வொரு தளத்திலும் உருவாக்க வேண்டும். விவசாயிகள், தொழிலாளர்கள் மத்தியில், அறிவுத்துறையினர் மத்தியில், மாணவர் இளைஞர்கள் மத்தியில், சிறு முதலாளிகள் மத்தியில் பாசிச எதிர்ப்புக் கலாச்சாரத்தை உருவாக்க வேண்டும்.
பாசிசத்தை வீழ்த்த வேண்டும் என்றால் விரிவான மக்கள் படையைக் கட்டாமல் எதுவும் செய்ய முடியாது. பாசிச கும்பலைக் களத்தில் எதிர்கொள்ள மக்களைத் தயார்படுத்தாமல் அவர்களை வீழ்த்த முடியாது. தேர்தல் வெற்றியைக் கூடத் தற்காத்துக்கொள்ள முடியாது. வரலாறு நமக்கு வழங்கும் முக்கியமான படிப்பிணை இதுதான்.
நாடு முழுவதும் பரந்த அடித்தளம் வைத்துகொண்டு பாசிச சர்வாதிகாரத்தை நிறுவும் போக்கில் வேகமாக முன்னேறிவரும் காவி கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிக்க வேண்டும் என்றால், வெறுமனே தமிழ்நாட்டு நிலவரத்தை மட்டும் வைத்துக் கொண்டு முடிவெடுக்காமல் பாசிசத்திற்கு எதிரான பரந்து பட்ட மக்கள் இயக்கம் என்ற அடிப்படையில் காவி பாசிசத்தை வீழ்த்த இந்திய அளவில் திட்டமிட்டு, அதை நோக்கியதாக நமது வேலைகளை அமைத்துக் கொள்ள வேண்டும்.
- அறிவு