தேர்தல் பாதையில் காவி பாசிசத்தை வீழ்த்த முடியாது: பாடமெடுக்கும் தேர்தல் முடிவுகள்

காவிக் கும்பலுக்கு போட்டியாக இந்துத்துவக் கொள்கைகளைப் பேசி பாஜகவை வீழ்த்த முடியாது. எதிர்க்கட்சிகள் எல்லோரும் ஒன்று கூடி ஒரு தலைவரைக் கொண்டு வந்து நிறுத்தினாலும், பாஜக செய்தது போல பல நூறு கோடிகளை வாரி இறைத்து, மோடிக்கு நிகரான ஒரு ஆளுமையை, பிம்பத்தைக் கட்டியமைத்தாலும், இந்துத்துவ அரசியலைப் பேசும் வரை அது காவி பாசிச கும்பலுக்கான மக்கள் அடித்தளத்தை மேலும் அதிகரிக்கவே உதவும்.

சமீபத்தில் நடந்த வட மாநில தேர்தல் முடிவுகள் குறித்து பல்வேறு விவாதங்கள் நடந்து வருகின்றன. தமிழகத்தைப் பொருத்தவரை பாஜகவின் எதிரணியில் உள்ள அரசியல் தலைவர்களும் ஊடகங்களும், தேர்தல் முடிவுகள் பாஜகவிற்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு குறைந்து வருவதை காட்டுவதாக கூறுகின்றனர்.

அவர்களது வாதப்படி பாஜக இமாச்சலப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியிடம் ஆட்சியை இழந்துள்ளது, தில்லி உள்ளாட்சித் தேர்தலில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு ஆம் ஆத்மி கட்சியிடம் தோல்வியடைந்துள்ளது. இது தவிர 5 வடமாநிலங்களில் நடந்த இடைத் தேர்தல்களில் உத்திரப்பிரதேசம் உட்பட பல மாநிலங்களில் தோல்வியடைந்துள்ளது. குஜராத்தின் சட்ட பேரவை தேர்தலில் மட்டும் ஆறுதல் வெற்றி பெற்றுள்ளது.

குஜராத்தில் கூட பாஜக எப்படி வெற்றி பெற்றது என்பதற்கு அவர்கள் பல காரணங்களைக் கூறுகின்றனர். ஆம் ஆத்மி கட்சி, தேர்தலில் பாஜக எதிர்ப்பு வாக்குகளைச் சிதறடித்தது முதன்மையான காரணமாக கூறப்படுகிறது.

இதுமட்டுமன்றி பாஜக தனது ஒட்டுமொத்த சக்தியையும் பணத்தையும் இறக்கியே இந்த வெற்றியை அடைந்துள்ளதாக கூறுகின்றனர். தேர்தல் நிதிப் பத்திரங்கள் மூலம் பாஜகவிற்குக் கிடைத்த 95 சதவீதப் பணம் குஜராத்தில் செலவிடப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் அமைச்சர்கள் அனைவரும் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்றுள்ளனர். இவர்கள் 300க்கும் மேற்பட்ட விமானங்களில் பறந்து ஓட்டுக் கேட்டுள்ளனர். 

 

 

மோடி மட்டும் 50 பொதுக்கூட்டங்களில் பேசியுள்ளார், 31 பேரணிகளை நடத்தியுள்ளார். இதுதவிர அமித்ஷா, ஜெ.பி.நட்டா போன்ற மூத்த தலைவர்கள் குஜராத்திலேயே தங்கி தேர்தல் வேலை செய்துள்ளனர். தமிழகத்திலிருந்து அண்ணாமலை சென்று குஜராத்தில் உள்ள தமிழர்கள் மத்தியில் ஓட்டு சேகரித்தது போல பல்வேறு மாநிலங்களில் இருந்து பாஜக தலைவர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

கடந்த குஜராத் சட்டமன்ற தேர்தலில் பாஜகவை எதிர்த்த பட்டேல் சமூகத்தினர், அவர்களது நீண்டநாள் கோரிக்கையான இடஒதுக்கீடு, பாஜக கொண்டுவந்த ‘உயர் சாதி ஏழை’களுக்கான இடஒதுக்கீட்டின் மூலம் நிறைவேற்றப் பட்டுள்ளதாக கூறி இந்த தேர்தலில் பாஜகவிற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். ஹர்திக் பட்டேல் காங்கிரசிலிருந்து வெளியேறி பாஜகவின் இணைந்தது, பூபேந்திர பட்டேல் பாஜகவின் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது ஆகியவை பட்டேல் சமூகத்தின் வாக்குகளை பெற உதவியதாகவும் கூறுகின்றனர்.

அதுமட்டுமன்றி பாஜக தலைவர்களது வெறுப்புப் பேச்சுக்கள், பொதுசிவில் சட்டம் கொண்டுவருவது குறித்த அறிவிப்பு, தேர்தல் ஆணையம் பாஜகவின் அங்கமாக செயல்பட்டது ஆகியவையும் பாஜகவின் வெற்றிக்குக் காரணங்களாக கூறப்படுகின்றன.

 

 

அடுத்ததாக பாஜக இதுவரை தான் எதிர்ப்பதாக கூறிவந்த இலவச அரசியலை கையில் எடுத்ததும் ஒரு காரணமாக கூறப்படுகிறது. ஒரு லட்சம் பெண்களுக்கு அரசு வேலை, பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள், மூதாட்டிகளுக்கு இலவச பேருந்து பயணம், இலவச கேஸ் சிலிண்டர், மாதம் 1000 ருபாய் பணம் கொடுக்கும் திட்டம் என பாஜக இலவச அறிவிப்புகளை அள்ளிவீசியதும் அதன் தேர்தல் வெற்றிக்குக் காரணம் என்கிறார்கள்.

குஜராத்தில் பாஜக அடைந்த வெற்றிக்கும் மேலே கூறப்பட்டுள்ள காரணங்கள் அனைத்தும் உதவின என்பது உண்மைதான் என்றாலும், பாஜகவின் வெற்றிக்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன. அவற்றை இவர்கள் காணத் தவறுகின்றனர். ஒன்று மக்கள் மத்தியில் பாஜகவின் செல்வாக்கு அதிகரித்துள்ளது, இரண்டாவது பாஜகவை எதிர்த்துப் போட்டியிட்ட கட்சிகள் எதுவும் அதன் காவி பயங்கரவாத முகத்தை, கார்ப்பரேட் அடிமைத்தனத்தை  அம்பலப்படுத்தவில்லை. பாஜகவை அம்பலப்படுத்தவில்லை என்பதைவிட தாங்களும் மிதவாத இந்துத்துவவாதிகள் தான் எனக் காட்டிக் கொள்ளவே அவர்கள் பெரிதும் விரும்புகிறார்கள்.

குஜராத்தில் மட்டும் பாஜக 53% ஓட்டு வாங்கியிருக்கிறது. இது கடந்த தேர்தலை விட 4 சதவீதம் அதிகம். கல்வி, ஆரோக்கியம் மற்றும் வாழ்க்கைத் தரம் ஆகியவற்றில் குஜராத் கடந்த 30 ஆண்டுகளில் எவ்வித முன்னேற்றமும் இன்றி மிகவும் பின்தங்கியுள்ளதாக பல்வேறு புள்ளிவிபரங்கள் வெளியாகியுள்ளன. மனித வளர்ச்சி குறியீடு தரவரிசைப் பட்டியலில் 30 மாநிலங்களில் குஜராத் 17வது இடத்தில் இருக்கிறது. என்னதான் தொழிற்துறையில் முன்னேறிய மாநிலமாக காட்டப்பட்டாலும் குஜராத்தில் வேலைவாய்ப்பின்மை சதவீதம் தொடந்து அதிகரித்து கொண்டேதான் வருகிறது. அம்மாநிலத்தில் சிறுதொழில்கள் நசிந்து வருவதே அதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு மற்றும் ஆன்லைன் வர்த்தகத்தை அரசு ஊக்குவிப்பது ஆகிய காரணங்களால் சிறுதொழிற்சாலைகள் தொடர்ந்து மூடப்படுகின்றன.

கடந்த 30 ஆண்டுகளாக குஜராத்தில் ஆட்சியில் இருக்கும் பாஜகவிற்கு எதிராக இத்தனை அம்சங்கள் இருந்தும் மக்கள் பாஜகவிற்கே வாக்களித்துள்ளனர். இவ்வளவு ஏன் தேர்தல் நடப்பதற்கு சிறிது நாட்களுக்கு முன்னர் தொங்கு பாலம் அறுந்து விழுந்து 141 பேர் உயிரிழந்த மோர்பி தொகுதியில் பாஜக மிக அதிக வாக்கு வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றிருக்கிறது. அரசின் கையாலாகத்தனத்தால் 141 பேர் இறந்து போனதை தங்கள் கண்முன்னே கண்டபிறகும் மக்கள் பாஜகவிற்கு வாக்களித்துள்ளனர் என்றால் எந்த அளவிற்கு பாஜகவிற்கு அங்கே செல்வாக்கு அதிகரித்துள்ளது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

இமாச்சல பிரதேச தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்தாலும் வாக்கு சதவீதத்தில் பாஜக 43 சதவீத வாக்குகள் பெற்றுள்ளது. காங்கிரஸ் பாஜகவை விட ஒரு சதவீத வாக்குகள் மட்டுமே அதிகமாக வாங்கியிருக்கிறது. அதாவது வெறும் 37,974 வாக்குகள் மட்டுமே காங்கிரஸ் பாஜகவை விட அதிகமாக வாங்கியிருக்கிறது. தில்லி உள்ளாட்சி தேர்தலில் பாஜக 39% வாக்குகளை பெற்றுள்ளது, இது கடந்த முறை இதே தேர்தலில் பாஜக வாங்கிய வாக்குகளை விட 3 சதவீதம் அதிகம். தில்லியைப் பொறுத்தவரை காங்கிரஸ் 10 சதவீத வாக்குகளை ஆம் ஆத்மி கட்சியிடம் இழந்துள்ளது. இந்த புள்ளி விபரங்கள் குஜராத் மட்டுமன்றி மற்ற மாநிலங்களிலும் மக்கள் மத்தியில் பாஜகவிற்கு செல்வாக்கு அதிகரித்து வருவதையே காட்டுகின்றன.

இது ஒருபுறம் என்றால் மற்றொருபுறம், பாஜகவிற்கு மாற்றாக தங்களை முன்னிறுத்திக் கொள்ளும் எதிர்க்கட்சிகள் எதுவும் பாஜகவின் இந்துத்துவ அரசியலை அம்பலப்படுத்திப் பிரச்சாரம் செய்வதில்லை. அப்படிச் செய்தால் மக்கள் மத்தியில் தங்களுக்கு ஆதரவு கிடைக்காது என அஞ்சுகின்றனர். எனவே அவர்கள் மிதவாத இந்துத்துவாவைக் கையில் எடுக்கின்றனர்.

 

 

2014க்கு முன்புவரை ஊழல் ஒழிப்பு பேசிவந்த ஆம் ஆத்மியின் அரவிந்த் கெஜிரிவால், இப்பொழுது இந்துத்துவ அரசியலை முன்னெடுத்து அலைகிறார். தன்னை அனுமன் பக்தன் என விளம்பரப்படுத்திக் கொள்வது, அயோத்தி யாத்திரைக்கு மானியம் கொடுக்கப்போவதாக அறிவிப்பது, விநாயகர் சதுர்த்திக்கு ஆம் ஆத்மி கட்சி சார்பாக அகமதாபாத் நகரிலேயே மிகப்பெரிய பந்தல் அமைப்பது, இந்துக் கடவுள் படங்களை ருபாய் நோட்டில் அச்சடிக்க கோருவது என கெஜிரிவாலின் கரணங்கள் தொடர்கின்றன. சி.ஐ.ஏ எதிர்ப்புப் போராட்டம் தில்லியில் தீவரமாக நடந்த போதும், அதை ஒடுக்க காவிக் கும்பல் தில்லியில் கலவரம் செய்த போதும் அப்பிரச்சனையிலிருந்து ஒதுங்கியிருந்ததோடு மட்டுமல்லாமல் போராட்டங்களில் பங்கெடுத்த தனது ஆதரவாளர்களைக் கூடக் கட்சியிலிருந்து நீக்கினார் இந்த கெஜிரிவால்.

கெஜிரிவால்தான் இப்படி என்றால் காங்கிரசுக் கட்சியும் மிதவாத இந்துத்துவ அரசியலை முன்னெடுப்பதில் தாங்கள் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறது. ஹிமாச்சலப் பிரதேசத்தில் காங்கிரஸ் முகாமுக்குத் தலைமைதாங்கிய பிரியங்கா காந்தி திரிசூலத்தைக் கையில் ஏந்திப் பிரச்சாரம் செய்தார். வாக்காளர்களைத் தங்கள் பக்கம் இழுப்பதற்காக இந்துத்துவ கோஷம் போடுகிறார்.  ஹிமாச்சலப் பிரதேசத்திலும் சரி, குஜராத்திலும் சரி எங்கேயும் காங்கிரஸ் கட்சி பாஜகவின் இந்துத்துவ அரசியலை அம்பலப்படுத்திப் பிரச்சாரம் செய்யவில்லை.

 

 

தங்களது மிதவாத இந்துத்துவா குஜராத்தில் பாஜகவிற்கு சாதகமாக முடிந்ததை பார்த்த பிறகும் இவர்கள் திருந்துவதாக இல்லை. அடுத்த ஆண்டு வரவிருக்கும் மத்தியபிரதேசத் தேர்தலை மனதில் கொண்டு, இப்பொழுதே பாஜகவை முந்திக் கொண்டு இந்துத்துவ அரசியலைப் பேச ஆரம்பித்துள்ளனர் அம்மாநில காங்கிரஸ் தலைவர்கள். “ஜெய் ஸ்ரீராம்” என்ற முழுக்கத்திற்கு பதிலாக சீதையைப் புகழும் விதமாக “ஜெய் ஷியா ராம்” என்ற புதிய முழக்கத்தை அம்மாநிலத்தில் பாத யாத்திரை நடத்தும் ராகுல் காந்தி முன்வைத்துள்ளார். அத்துடன் தன்னை இந்து என பிரகடனப்படுத்திக் கொண்டுள்ள அவர், அதனை நிரூபிக்க உஜ்ஜைனி மாகாளி கோவில் உட்பட பல இடங்களுக்கு கோவில் கோவிலாக சுற்றிவருகிறார்.

பாஜகவும், பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வருவது, ‘லவ் ஜிகாத்’ தடுப்புச் சட்டம் கொண்டுவருவது, கட்டாய மதமாற்றத்தை தடை செய்கிறோம் என்ற பெயரில் சிறுபான்மையினரின் மத உரிமைகளைப் பிடுங்குவது, அயோத்தி பிரச்சனையைப் போல ஞானவாபி, மதுரா பிரச்சனைகளை ஊதிப்பெருக்குவது என மத்தியபிரதேசம் உத்திரப்பிரதேசத் தேர்தல்களையும் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலையும் குறிவைத்து அடுத்த சுற்றுக்குத் தயாராகிவிட்டது.

தமிழகத்தைப் போல் அல்லாமல் வடஇந்திய மக்கள் மத்தியில் பாஜகவின் இந்துத்துவ கொள்கைகளுக்கு என ஒரு ஆதரவு ஆர்.எஸ்.எஸ். சங்கபரிவாரக் கும்பலால் பல பத்தாண்டுகளாகத் திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளது. அடித்தட்டு உழைக்கும் வர்க்கம் தொடங்கி, தொழிலாளர்கள், சிறு முதலாளிகள் என எல்லோர் மத்தியிலும் மத முனைவாக்கம், இந்து முஸ்லீம் பிரிவினைவாதம் ஆழமாக பரப்பப்பட்டுள்ளது. இதனை எதிர்க்கவோ, அல்லது மாற்றிடவோ பாஜகவை எதிர்க்கும் எந்தக் கட்சிக்கும் துணிவில்லை. மாறாக இதனையே பயன்படுத்தி தேர்தலில் வெற்றி பெற்றுவிடலாம் என அவை நினைக்கின்றன.

அதேசமயம் காவிக் கும்பலுக்கு போட்டியாக இந்துத்துவக் கொள்கைகளைப் பேசி பாஜகவை வீழ்த்த முடியாது. எதிர்க்கட்சிகள் எல்லோரும் ஒன்றுகூடி ஒரு தலைவரைக் கொண்டு வந்து நிறுத்தினாலும், பாஜக செய்தது போல பல நூறு கோடிகளை வாரி இறைத்து, மோடிக்கு நிகரான ஒரு ஆளுமையை, பிம்பத்தைக் கட்டியமைத்தாலும், இந்துத்துவ அரசியலைப் பேசும் வரை அது காவி பாசிச கும்பலுக்கான மக்கள் அடித்தளத்தை மேலும் அதிகரிக்கவே உதவும்.

இந்த அடித்தளம் இருக்கும் வரை ஒரு தேர்தலில் தோல்வியுற்றாலும் பாஜக அடுத்த தேர்தலில் அசுர பலத்துடன் மீண்டு வரும். பாசித்தை முறியடிக்க வேண்டுமானால் முதலில் அதனை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்த வேண்டும். அதன் போலி தேசிய வாத, கபடவேடத்தை திரைகிழித்து, அதன் கார்ப்பரேட் அடிமைத்தனத்தை வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டும். நமது நாட்டைப் பொறுத்தவரை, அதற்கு தேர்தல் பாதை என்றைக்கும் உதவாது. தேர்தல் அரசியலுக்கு வெளியே மக்களை நேரடியாகச் சென்றடையும், அணிதிரட்டிடும் முற்போக்கு, ஜனநாயக சக்திகளின் அரசியல் இயக்கங்கள் மூலமே காவி கார்ப்பரேட் பாசிசத்திற்கு எதிரானதொரு முகாமைக் கட்டியமைக்க முடியும். அதன் மூலமே இந்துமதவெறி அரசியலுக்கு முடிவுகட்ட முடியும்.   

 

  • அறிவு

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன