ஐ. டி. துறையில் ஆட்குறைப்பு சம்பந்தமான செய்திகள் கடந்த ஒரு மாதமாக பரபரப்புடன் பேசப்பட்டு வருகின்றன. குறிப்பாக Meta (Facebook), Amazon, Twitter, இன்னும் பல பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களது செலவினங்களை குறைப்பதற்காக ஆட்குறைப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதனை மிகவும் ‘நாகரிகமாக’ Cost Cutting என்று கூறி வருகின்றனர்.
பொதுவாக Layoff என்பது, குறிப்பிட்ட நிறுவனம் நட்டத்தில் இயங்கினாலோ, திவால் நிலையை நோக்கி சென்றாலோ ஊழியர்களை தற்காலிகமாக வேலை நீக்கம் செய்யலாம் என்பது தான் அதன் பொருள். ஆனால் மென்பொருள் துறை நிறுவனங்கள் தங்களுக்கென்று ஒரு வரையறையை வகுத்துள்ளனர் அது என்னவெனில் எப்போதெல்லாம் லாபம் குறைகிறதோ அப்போதெல்லாம் பலிகடா ஆக்கப்படுபவர்கள் அந்நிறுவனத்தின் ஊழியர்களே. அதற்காக ஊழியர்களை கட்டாய ராஜினாமா செய்ய வைத்து வெளியேற்றி லாப விகிதத்தை உயர்த்தி கொள்வார்கள்.
அனைத்து நிறுவனங்களும் தாங்கள் ஆட்குறைப்பு செய்வதற்காக இரண்டு காரணங்களைக் கூறுகின்றன, முதலாவதாக, 2020 கொரோனா பேரிடர் காலத்தில் ஆன்லைன் விநியோகம் அதிகரித்திருந்ததாலும், ஆன்லைன் தொடர்பான வேலைகள் அதிகரித்திருந்ததாலும் அதிகமான புதிய ஊழியர்களை வேலைக்கு அமர்த்தி இருந்தது, தற்போது கொரோனா பேரிடர் முடிவுற்றதால் ‘தேவையற்றவர்களை’ வெளியேற்ற வேண்டியுள்ளது என்றும், இரண்டாவதாக உக்ரைன் போர் காரணமாக ஐரோப்பிய நாடுகளில் பொருளாதார நிலைமை மோசமடைந்துள்ளதால் லாப விகிதம் குறைந்துவிட்டதால் ஊழியர்களை வெளியேற்ற வேண்டியுள்ளது என்றும் கூறுகிறார்கள். அதனடிப்படையில் முகநூல் நிறுவனம் கிட்டத்தட்ட 11000 ஊழியர்களை வேலை நீக்கம் செய்துள்ளது. அதேபோல் ட்விட்டர் நிறுவனம் 50 சதவீத ஊழியர்களை வெளியேற்ற உள்ளதாக தகவல் வருகிறது.
ஆனால், லாபவீதம் குறைந்துள்ளதாக இவர்கள் கூறும் காரணம் உண்மையானதா? இல்லை. இதற்கு காரணம் தாங்கள் எதிர்பார்த்த (Forecast Revenue) லாபம் குறைந்துள்ளதேயாகும். இதனை முகநூல் நிறுவனத்தின் CEO-வான மார்க், ‘நாம் எதிர்பாத்த வருமானத்தை விட இவ்வருடத்தின் முதல் காலாண்டின் வருமானம் குறைந்துள்ளதாகவும், மேலும் Family Of Apps (FoA) & Reality Labs-க்கான செயல்பாடுகள் சிறப்பானதாக இருக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
ஆக, லாபம் குறையவில்லை எதிர்பார்த்த வருமானம் தான் குறைந்துள்ளது, அதனால் பங்கு விலை குறிப்பிட்ட அளவு குறைந்து பங்குதாரர்கள் மிகவும் வருத்தப்படுகிறார்கள் என்பதால் ஊழியர்களை வெளியேற்றுகிறார்கள். ‘இந்த துன்பியல் (எதிர்பார்த்த வருமானம் குறைவு) சம்பவத்திற்கு நானே முழு காரணம், அதற்கான முழுப்பொறுப்பையும் நானே ஏற்று கொள்கிறேன்’ என்று கூறுகிறார் திருவாளர் மார்க். மேலும் ‘வெளியேற்றப்படும் சக ஊழியர்களில் ஒவ்வொருவரும் நமது நிறுவனத்தின் மாபெரும் வளர்ச்சிக்கு அவர்களின் அர்ப்பணிப்பையும், உழைப்பையும் நினைத்துப் பெருமைப்படுகிறேன்’ என்று புலகாங்கிதம் அடைகிறார்.
Margin Call என்ற திரைப்படத்தில் – ஒரு நிதி நிறுவன அலுவலகத்தில் பணியாற்றி கொண்டிருக்கும் ஊழியர்கள் அன்றைக்கும் தங்களது அன்றாட வேலைகளைப் பார்த்து கொண்டிருப்பார்கள், திடீரென்று கோட் சூட் போட்ட கும்பல் ஒன்று உள்ளே நுழையும், தங்களது கையில் ஒரு பெயர் பட்டியலை வைத்துக்கொண்டு ஒவ்வொரு ஊழியரிடமும் அவர்களது பெயர்களை கேட்பார்கள், அவர்களின் பெயர் அப்பட்டியலில் இருந்தால், அவர் என்ன வேலை பார்த்துக் கொண்டிருந்தாலும் அப்படியே விட்டுவிட்டு தங்களது உடைமைகளை எடுத்துக்கொண்டு உடனே வெளியேற சொல்லுவார்கள், அதில் Risk Management துறையின் மூத்த ஊழியரும் வெளியேற்றப்படுவார். ‘இன்றைக்கு முடிக்கவேண்டிய முக்கிமான வேலைகள் இருக்கிறது அதை முடித்துவிட்டு செல்கிறேன்’ என்று அவர் கூறும்போது கூட ‘என்னவாக இருந்தாலும் இனி நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்’ என்று கூறிக்கொண்டே அவரின் மூத்த அதிகாரி அவ்ஊழியரை வெளியேறச் சொல்வார். வேலை நீக்கம் செய்யப்பட்ட அவ்ஊழியரின் வயது 45-ஐ தாண்டியதாக இருக்கும், வேலையிழந்த விரக்தியில், எதிர்காலம் பற்றிய பயத்துடன் இரவு முழுவதும் வீட்டிற்கு செல்லாமல் எங்கெங்கோ சுற்றிக் கொண்டிருப்பார்.
ஊழியர்களை வெளியேற்றும் நிகழ்வுகள் முடிந்தவுடன், ஒரு மூத்த ஊழியர் அவரின் மூத்த அதிகாரியைப் (ஊழியரை) பார்ப்பதற்கு அவரது அறைக்கு செல்வார் அவர் மிகவும் சோகத்துடன் அமர்ந்திருப்பார். ‘ஊழியர்கள் பலர் வெளியேற்றப்பட்டதை நினைத்து வருத்தப்பட வேண்டாம், எல்லாம் சரியாகிவிடும்’ என்று ஆறுதல் கூறுவார். ஆனால் அவர் ‘அதற்காக வருத்தப்படவில்லை, மிகவும் செல்லமாக வளர்த்த எனது நாய் உடல் நோயுற்று இறக்கும் தருவாயில் உள்ளது அதனை நினைத்தால் மிகவும் துக்கமாக உள்ளது’ என்பார். அதன் பிறகு அப்படம் வேறொரு திருப்பத்தை நோக்கி செல்லும். நிற்க.
ஆக கார்ப்பரேட்டுகள், வேலை இழப்பிற்கு பிறகான ஊழியர்களின் நிலை பற்றிய எவ்விதமான கவலையும் கொள்வதில்லை. மேலும், சட்ட ரீதியான பணிப்பாதுகாப்பு போன்ற வாய்ப்புகள் கூட அமெரிக்காவில் கிடையாது, ஏனெனில் வேலை நீக்கம் செய்வது அங்கு சட்டத்திற்கு உட்பட்டது தான். இந்தியாவில் ஏட்டளவில் இருந்துவந்த தொழிலாளர் நலச்சட்டங்கள் கூட முற்றிலும் காயடிக்கப்பட்டு நான்கு வரையறை (Code) என்ற புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வேலையில் இருக்கும்வரை ஊழியர்களைக் கசக்கிப் பிழிவதோடு அல்லாமல், இது போன்ற IT நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் ஒரே இடத்தில் பலமணி நேரம் அமர்ந்திருப்பதால் உடல் ரீதியான உபாதைகளும், மூளையுழைப்பு தொடர்பான வேலையென்பதால் அதிகப்படியான மன அழுத்தம் மற்றும் மன உளைச்சலால் உளவியல் தொடர்பான நோய்களும் ஏற்பட்டு மேலும் ஊழியர்கள் நெருக்கடிக்கு தள்ளப்படுகிறார்கள்.
IT துறையில் நுழைந்துள்ள நவீனக் கோமாளி எலான் மஸ்க்:
44 பில்லியன் டாலருக்கு ட்விட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கிய எலான் மஸ்க் சில தினங்களிலேயே, அந்நிறுவனம் தனது 50% ஊழியர்களை வேலை நீக்கம் செய்துள்ளது, குறிப்பாக இந்திய கிளையில் 90% ஊழியர்களை வேலை நீக்கம் செய்துள்ளது. ‘நாளொன்றுக்கு 4 மில்லியன் டாலர் நட்டம் ஏற்படுவதால், வேறு வழியின்றி கட்டாய வெளியேற்றம் செய்ய வேண்டியுள்ளது’ என்று கூறியுள்ளார்.
கடந்த நவம்பர் 18-ம் தேதி வாக்கில் ‘ஊழியர்கள் வேலையில் தொடர வேண்டுமெனில் அதிகப்படியான நேரம் கடுமையாக வேலை செய்வதற்கு ஒப்புக்கொள்ள வேண்டும்’ என்று மின்னஞ்சல் அனுப்பியுள்ளதோடு தனது நிறுவனத்தின் அலுவலகங்களை உறைவிட பணி சூழலுக்கு ஏற்றார் போல் படுக்கை அறைகைளையும் உருவாக்கி வருகிறார். அதாவது ஊழியர்கள் வீட்டிற்கே செல்லாமல் அலுவலகத்தில் வேலை பார்த்துவிட்டு அங்கேயே உறங்குவது, எப்போது வேலை சொன்னாலும் உடனே எழுந்து வேலையை செய்ய வேண்டும். கிட்டத்தட்ட டிவிட்டர் அலுவலகங்களை கொத்தடிமை கூடமாக மாற்றும் நோக்கில் தமது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் நவீனக் கோமாளி எலான் மஸ்க்.
(https://www.washingtonpost.com/technology/2022/11/18/musk-twitter-work-culture/)
கடந்த நூற்றாண்டின் இறுதியில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஆசிய தொழிலாளர்களை கொண்ட ‘வியர்வை கடைகள்’ (Sweat Shop) என்ற ‘பெருமையுடன்’ செயல்பட்டுவந்த பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் தங்கள் தொழிலாளர்களை வேலை செய்யும் இடத்திற்கு அருகிலேயே மிகச்சிறிய அறைகளில் தங்கவைத்து எப்போது வேண்டுமானாலும் தொழிலாளர்களின் உழைப்பை உறிஞ்சி வந்ததோ அதற்கு கிஞ்சித்தும் குறையாமல் குளிர்சாதன வசதியுடன் கூடிய கொத்தடிமைக் கூடத்தை தயார்ப்படுத்தி வருகிறார் எலான் மஸ்க்.
ஒருவேளை Twitter-ன் இத்திட்டம் எவ்வித எதிர்ப்புமின்றி நிறைவேற்றப்பட்டால், ஏனைய பிற நிறுவனங்களும் இதனைப் பின்தொடர வாய்ப்புள்ளது.
முகநூல், ட்விட்டர் நிறுவனங்களை தொடர்ந்து அமேசான் நிறுவனமும் பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை வேலையை விட்டு நீக்கியுள்ளது. மேலும், இன்னும் சில மாதங்களுக்கு புதிய ஊழியர்களை வேலைக்கு எடுக்கப்போவதில்லை என்று இந்நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாக செய்திகள் வருகின்றன. இந்த நிகழ்வுகளுக்கான பிரதான காரணம் Cost Cutting என்று கூறிக்கொண்டாலும், இதன் மூலம் கிடைக்கும் பணத்தைக் கொண்டு நிறுவனத்தின் லாப வீதத்தை உயர்த்தி பங்கு சந்தை முதலைகளின் பசியை போக்குவதே இதன் நோக்கமாகும்.
என்ன தான் தீர்வு?
முதலாளித்துவ சகாப்தம் தோன்றிய காலம் தொட்டு தொழிலாளர்களின் மீதான உழைப்பு சுரண்டலும், வேலையிழப்புக்களும் இன்றுவரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இப் பிரச்சினைகளுக்கு தொழிற்சங்கங்களின் மூலம் சட்டப்போராட்டம் நடத்துவது கூட முதலாளித்துவ முறைக்கு உட்பட்ட சீர்திருத்த நடவடிக்கை தான், இதுவே முழுமையான தீர்வல்ல. மேலும் ஏட்டளவில் இருந்த தொழிலாளர் நலச்சட்டங்கள் அனைத்தையும் கார்ப்பரேட்களின் நலனுக்காக பாசிச மோடி அரசு காயடித்துவிட்டது.
எனவே முதலாளித்துவம் நீடிக்கும் வரை இதுபோன்ற பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கப் போவதில்லை. உலகிற்கு மிகப்பெரிய ஜனநாயகத்தை வழங்குவதாக பீற்றிக்கொள்ளும் இந்த முதலாளித்துவ ஜனநாயகத்தை /போலி ஜனநாயகத்தை வீழ்த்திவிட்டு மக்களுக்கான புதிய ஜனநாயக குடியரசைக் கட்டியெழுப்பாமல் உழைக்கும் மக்களுக்கு தீர்வு ஏற்படப்போவதில்லை.
- பிரபு
தகவல் ஆதாரம்
https://www.cnbc.com/2022/07/27/facebook-parent-meta-earnings-q2-2022.html
https://caknowledge.com/facebook-net-worth/
https://about.fb.com/news/2022/11/mark-zuckerberg-layoff-message-to-employees/