காவிக்கும்பல்கள் கூறும் காப் பஞ்சாயத்து, கவுண்டில்யனின் அர்த்தசாஸ்திரம், குடவோலை முறை, சமஸ்கிருத இலக்கியத்தில் ஜனநாயக மரபுகள், பகவத் கீதையின் இலட்சிய அரசு ஆகியவை கூறூம் ஜனநாயகத்தின் இலட்சணம் என்ன என்று நாம் ஆராய வேண்டியுள்ளது. வர்ணாசிரம அடிப்படையில் அமைந்த பார்ப்பனிய சாதிய கொடுங்கோன்மையும், சுரண்டலையும் இவைகள் முன்வைத்தன என்பதை கீழ்கண்ட உதாரணங்களிலிருந்து புரிந்து கொள்ள முடியும் என நம்புகிறோம்.
காப் பஞ்சாயத்து:
ஜனநாயகத்தின் ஒரு மரபு என காவிகள் கூறும் காப் பஞ்சாயத்து என்பது பார்ப்பனிய சாதியமைப்பும், சுரண்டலையும் பாதுகாக்கின்ற காட்டுமிராண்டித்தனத்தின் வடிவம். அதன் தலைவர்கள் பார்ப்பனிய சாதியமைப்பை பாதுகாக்கும் காட்டுமிராண்டிகள். இவர்கள் வைத்ததுதான் சட்டம். இந்திய சட்டங்கள் எதுவும் அங்கு செல்லுபடியாகாது. உதாரணமாக, ஹரியானா மாநிலம் ரோத்தக் மாவட்டத்திற்கு அருகில் உள்ள கர்னவதி என்ற கிராமத்தைச் சார்ந்த தர்மேந்தர் என்பவர் ஜாட் சாதியைச் சேர்ந்த நிதி இருவரும் காதலித்து திருமணம் கொண்டனர். நிதியின் பெற்றோரும் உறவினர்களும் தர்மேந்தரை சித்தரவதைச் செய்து கொலை செய்து உடலை தர்மேந்தர் வீட்டு வாசலில் எறிந்துள்ளனர். இக்கொடூரத்தை காப் பஞ்சாயத்துக்கள் ஆதரித்தன. 2002-ல் ஹரியானாவில் மாட்டுத்தோலை உரித்ததற்காக தலித்துகளை படுகொலை செய்தவர்களை காப் பஞ்சாயத்துகள் ஆதரித்தன.
உத்தரபிரதேசத்தின் முசாபரில் உள்ள 64 கிராமத்தின் காப் பஞ்சாயத்துக்கள் பெண்கள் ஜீன்ஸ் உடையணியக்கூடாது, மொபைல் போன் பயன்படுத்தக்கூடாது எனவும். பெண்கள் ஜீன்ஸ் உடையணிந்தால் அது சமூகத்தை பால்படுத்திவிடும் என காப் பஞ்சாயத்து தலைவர்கள் தெரித்துள்ளனர். பெண்களை அடிமைகளாக நடத்தும் நாட்டில் பார்ப்பனிய சாதி கொடுங்கோன்மையின் வடிவமான காப் பஞ்சாயத்துகள், பெண்களுக்கு என்ன விடுதலையை/உரிமையை தரப் போகிறது? இதுவா நாம் பின்பற்றபடவேண்டிய ஜனநாயகம்?
முசாஃபர்நகர் கலவரத்திற்கு அடித்தளமிட்ட மகா காப் பஞ்சாயத்தில் கட்சி வேறுபாடின்றி அனைத்து ஓட்டுக் கட்சிகளும் பங்கேற்றனர். இந்து மதவெறியும், ஜாட் சாதி வெறியும் ஒன்றொடு ஒன்று பின்னிப் பிணைவதற்கும் இந்த காப்பஞ்சாயத்துக்கள் முக்கிய காரணம்.
வெறும் பார்ப்பனிய சாதிய கட்டமைவை பாதுகாப்பது மட்டுமில்லாமல் பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவாகவும் இந்த காப் பஞ்சாயத்து செயல்பட்ட நிகழ்வுகளும் உண்டு. ஹரியானாவின் மானேசர் தொழிற் பேட்டையில் செயல்படும் மாருதி நிறுவனம் அங்கு பணிபுரியும் தொழிலாளர்களை கடுமையாகச் சுரண்டுவதை எதிர்த்து தொழிலாளர்கள் போராடினர். அப்போராட்டத்தில் ஈடுபட்டத் தொழிலாளர்களை மாநில அரசும் மாருதி நிர்வாகமும் வன்முறையாளர்களாக சித்தரித்ததோடு மட்டுமில்லாமல் அவர்களை கடுமையான சட்டங்களைக் கொண்டு ஒடுக்கவும் செய்தன. அப்போது மாருதி முதலாளிகளுக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றி, தொழிலாளர்களை தங்கள் வாடகை வீட்டில் இருந்து வெளியேற்றின இந்த காப் பஞ்சாயத்துகள்.
ஜாட் சாதிவெறி கொண்ட, பெண்களின் உரிமைகளுக்கு எதிரான, முதலாளிகளின் அடியாட்படையாக உள்ள இந்த காப் பஞ்சாயத்துக்களை தான் இந்திய ஜனநாயகத்தின் உன்னத வடிவம் என்கிறது காவிக்கும்பல்கள்.
குடவோலை முறை:
குடவோலை முறையை பழங்கால ஜனநாயகத்திற்கு உதாரணமாக வரலாற்று பாடப்புத்தகங்களில் நீண்ட காலமாக சொல்லித் தருகிறார்கள். ஆனால் குடவோலை முறையென்பது, ஊர்சபையில் சொத்துள்ள பார்ப்பனர்களில் இருந்து அவர்களுக்கான பிரதிநிதியை பார்ப்பனர்கள் தேர்ந்தெடுப்பதற்கு நடத்தப்படும் ஊட்டெடுப்பு முறையாகும்.
ஊர்ச்சபைகளைத் தேர்ந்தெடுக்க ஓலைகளில் வேட்பாளர்கள் பெயர்கள் எழுதப்பட்டு ஒரு குடத்துக்குள் அவ்வோலைகள் போடப்பட்டு பார்ப்பனச் சிறுவனைக் கொண்டு எடுக்கப்படும் ஓலையில் வரும் பெயருக்குரியவர் சபைக்கு தேர்வு செய்யப்படுவார். இந்த திருவுளச்சீட்டு ஜனநாயகத்தில் வேட்பாளாரக நிற்பதற்கு வேதம் கற்றிருக்க வேண்டும், நில உடைமையாளராக இருக்க வேண்டும் என்ற இரு தகுதிகள் வைக்கப்பட்டிருந்தன.
இதை உள்ளாட்சித் தேர்தல் முறை, மறைமுகத் தேர்தல் முறை, வாக்குப்பதிவு, மக்களாட்சி என்றெல்லாம் சொல்வதற்கு காவிக்கும்பல்கள் வெட்கப்படுவதில்லை. இதில் ஒரு குறிப்பிட்ட சாதிக்கு மட்டுமே போட்டியிடும் உரிமை இருந்தது என்பதை காவிகள் சொல்லுவதில்லை. சாதிய அடிப்படையிலான ஓட்டெடுப்பு முறைகளை ஜனநாயகத்தின் வடிவங்களாக மாணவர்களிடம் பொய்சொல்லுகின்றனர் காவி பாசிஸ்டுகள்.
பார்ப்பனியத்தின் ஸ்ருதி – ஸ்மிருதி:
புராணங்கள் முன்வைக்கும் மாமனிதர்களான அரசர்களால் ஆளப்படும் மக்களை சாமர்த்தியமாக எப்படி தன் பிடிக்குள் வைத்திருக்க வேண்டும் என்று வழிகாட்டுவதுதான் ஸ்ருதி-ஸ்மிருதியின் அடிப்படை. எளிய விளக்கத்தின் படி ஸ்ருதி நிலையானது. அடிப்படை ‘அறங்’களையும், தத்துவங்களையும், எப்போதும் மாற்ற முடியாது, மாற்றக் கூடாது என்பதால் அவை ஸ்ருதி. அந்த ஸ்ருதியின் நடைமுறை சார்ந்த விதிகள், நடவடிக்கைகள் ஸ்மிருதி என்று அழைக்கப்படுகின்றது. இது காலந்தோறும் மாறிக்கொண்டே இருக்கும். இவற்றுக்கு இன்னும் பல்வேறு விளக்கங்களை பார்ப்பனிய சித்தாந்தவாதிகள் அளிக்கிறார்கள். இறைவன் அருளிய நேரடி குரல் ஸ்ருதி என்றும், ஞானிகளின் நினைவில் கூறப்படுபவை ஸ்மிருதி என்றும் கூறுகிறார்கள்.
ஒரு சமூக பயன்பாட்டில் ஸ்ருதி, ஸ்மிருதியின் பொருள் என்ன? இருப்பவன், இல்லாதவன் என்று, உலகம் உடைமை வர்க்கங்களாய் பிரிக்கப்பட்ட பிறகு அந்த வேறுபாட்டை அரசு, அரசன், படை, தருமம் கொண்டு விதி போல நிலை நிறுத்த வேண்டியிருக்கிறது. இப்படி பிரிந்திருப்பதே நிலையானது என்பதால் அது ஸ்ருதி என்றால், அந்த மாறா நிலையை, மாற்றக் கூடாத நிலையை அமல்படுத்தும் அல்லது ஒடுக்குமுறை மூலம் நிலைநாட்டும் வன்முறையை ஸ்மிருதி என்றும் அழைக்கலாம்.
அந்த வன்முறையின் வடிவங்கள், விளக்கங்கள் நேற்று போல இன்றிருக்கத் தேவையில்லை. அதைத்தான் ஸ்மிருதி, மாறுவது என்கிறார்கள். ஆனால் ஸ்மிருதியின் வடிவங்கள் மாறுமே அன்றி உள்ளடக்கம் மாறாது. அது போல ஸ்ருதியின் உள்ளடக்கம் மாறாதே அன்றி அதன் விளக்கங்கள் காலந்தோறும் மாறலாம். இப்படி இரண்டிலும் மாறும், மாறாது என இரண்டும் சேர்ந்தும் பிரிந்தும் இருக்கின்றன.
இதையே சாணக்கியர் அர்த்தசாஸ்திரத்தில் “சாம, தான, பேத, தண்ட” என்று விளக்குகிறார். ஒடுக்குமுறையை நிலைநாட்ட அமைதி வழி, தானம் கொடுத்து வழிக்கு வரவைத்தல், ஒதுக்கி, பிரித்து எச்சரிக்கை விடுத்தல் இறுதியில் தண்டனை, போர் மூலம் செய்தல் – இவையே இந்த நான்கிற்கும் தரப்படும் விளக்கம்.
அர்த்த சாஸ்திரம்:
அர்த்தசாஸ்திரம் கூறும் விதிகளை நாம் இப்படிப் புரிந்து கொள்ளலாம். 1. உடல் உழைப்புக்கு முதலிடம் தரக்கூடாது 2. பெருவணிகர்களை வளர்த்தெடுக்க வேண்டும் 3. இறக்குமதியை ஊக்குவிக்க வேண்டும். 4. மக்களை மதம், கோயில், கடவுள் என்று மயக்கத்திலேயே ஆழ்த்தி வைத்திருக்க வேண்டும்.
மக்களை சுரண்டி அரசு ஈட்டும்”வருவாய் வழிவகைகள்” குறித்து நிறையவே அர்த்த சாஸ்திரத்தின் ஆசிரியர் சாணக்கியர் சொல்கின்றார். நேரடி வரி, மறைமுக வரி தவிர, மக்களிடம் ஆசையைத் தூண்டி, அவர்களைச் செலவழிக்கச் செய்து, அதன்மூலமும் அரசின் வரவைக் கூட்டிக் கொள்ளலாம் என்று கூறுகின்றார். அது எப்படி? இதோ இப்படித்தான் – “அற்புதம் நிகழ்வது போல் உடனடியாகக் ஒரு கோயில் அல்லது புகலிடத்தை உருவாக்கி, அங்கே தெய்வம் எழுந்தருளியிருப்பதாகச் செய்தியைப் பரவ விடுவது. வணிகப் பொருட்காட்சி, விழா என்று தொடங்கிக் கொண்டாட்ட உணர்வை ஏற்படுத்தி விடுவது. ஒரு பருவத்தில் பூக்கின்ற பூவை, பழுக்கின்ற பழத்தை, திடுதிப்பென்று தோன்றச் செய்து, இது தெய்வத்தின் அருளால் நடந்திருப்பதாக மக்களை நம்பச் செய்வது” இவையெல்லாம் சாணக்கியர் பணத்தைப் பெருக்கச் சொல்லித்தரும் வழிகள். இப்படியெல்லாம் செய்தால், வியப்பிலும், பூரிப்பிலும் மக்கள் பணத்தைக் கொண்டுவந்து கொட்டுவார்கள் என்கிறார்.
அர்த்த சாஸ்திரம் குடிப்பழக்கத்தை அறம் சார்ந்து மட்டும் பார்க்காமல் அதன் பொருளாதாரம் பற்றி சிந்தித்து வணிக நடவடிக்கையாக அதை மாற்றியது. அர்த்த சாஸ்திரம் நூலில் குடி பற்றி சாணக்கியர் கூறும் போது மதுபானங்கள வடித்து எடுக்கும் உரிமையும், அதனை கோட்டைக்கு உள்ளும் வெளியிலும் விற்கும் பொறுப்பும் அரசுக்கு மட்டுமே உண்டு. தனியார் யாரும் மது விற்கக் கூடாது. அரசுக்குத் தெரியாமல் மது காய்ச்சி விற்பவர்களை சுராதயக் ஷா’ – அதயாக் ஷா குழு கண்டுபிடித்து அரசரின் முன்னால் நிறுத்த வேண்டும். அரசர் அவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும். மது அருந்தும் உயர் குடியினர், கண்காணிப்பாளரிடம் அனுமதி பெற்று தங்களுக்கு தேவையானவற்றை வீட்டில் சேகரித்து கொள்ளலாம். மற்றவர்கள் மது அருந்துவதற்காக அரசாங்கம் கட்டித் தந்துள்ள கட்டிடங்களில் மட்டுமே குடிக்க வேண்டும். மற்ற இடங்களில் குடிப்பவர்கள் தண்டனைக்கு உரியவர்கள். அந்நியர்கள் தங்குவதற்காக விடுதி கட்டியவர்கள், அங்கு மது விற்கக் கூடாது. இதற்கு பதிலாக அந்த விடுதியின் ஒரு பகுதியில் அரசே மது விற்பனை செய்ய வேண்டும்.
திருவிழா காலங்களில் நான்கு நாட்களுக்கு மட்டும் வீட்டிலேயே மதுவை காய்ச்சி குடிக்கலாம். ஆனால், அப்போதும் பொது இடங்களில் அனுமதி பெறாமல் காய்ச்சக் கூடாது. அர்த்த சாஸ்திரத்தில் உள்ள மது தொடர்பான இந்த கட்டளைகள், மவுரியப் பேரரசின் கஜானாவை நிரப்பின. விளைவு, அடுத்தடுத்து வந்த அனைத்து பேரரசுகளும் இந்த வழிமுறைகளையே கடைப்பிடிக்க ஆரம்பித்தன. அந்த வகையில் பிற்கால சோழர்களின் காலத்தில் வசூலிக்கப்பட்ட ‘ஈழப் பூச்சி வரி’யும், குடிக்கு உரியதுதான்.
மக்களை என்னென்ன வழிகளிலெள்ளாம் வரி என்ற போர்வையில் சுரண்டலாம் என்றும் அவர்களை அடிமைகளாக வைத்திருப்பதற்கு என்னென்ன செய்யவேண்டும் என்று அரசர்களுக்கு போதிப்பதே அர்த்தசாஸ்திரத்தின் அடிப்படை. இதன்படி குடிக்கும் டீ க்கு வசூலிப்பதும் ஊரெங்கும் டாஸ்மாக் திறப்பது சரியானது. மக்களை அடிமைகளாக வைத்திருப்பதற்கு அவர்களின் மத உணர்வைத் தூண்டுவது சரியான நடவடிக்கைதான். இதுவே RSS-BJP ன் ஜனநாயகம்.
சாணக்கிய நீதி:
சாணக்கிய நீதி என்பது சமஸ்கிருத ஸ்லோகங்கள் ஆகும். இது பார்ப்பனர்களுக்கும் வேதங்களுக்கும் மிகவும் உயர்ந்த இடத்தைத் தருகிறது. உழைக்கும் மக்களையும், பெண்களைக் இழிவாகப் பார்க்கிறது.
பார்ப்பனர்களே உயர்வானவர்கள் என்பதைத் தொடக்கம் முதலே பதிவு செய்கிறது இந்நூல். “கால்நடைகளை வளர்த்து வருகிற பார்ப்பானும் நிலம் திருத்திப் பயிர்த் தொழில் செய்கிற பார்ப்பானும் வைசிய பார்ப்பான் என்று அறியப்படுவான்” “லக்ஷாதி தைலம், அவுரிச் செடி, பூ, தேன், நெய், மது, இறைச்சி மற்றும் அதிலிருந்து பெறப்படும் பொருட்கள் ஆகியவற்றை விற்று சம்பாதிக்கிற பார்ப்பனன் சூத்திரன் என்று அறியப்படுவான். பிற தொழிகள்களைச் செய்து மனிதன் பிழைத்தால் அவர்கள் சூத்திரர்கள், இழிவானர்கள் இதுவே சாணக்கிய நீதி! எப்பேர்ப்பட்ட ஜனநாயகம்!
பெண்களை பற்றி இழிவாக சாணக்கிய நீதியில் எழுதப்பட்டுள்ளது. பித்தளை சாம்பலால் மெருகூட்டப்படுகிறது, செம்பு புளியால் சுத்தம் செய்யப்படுகிறது; ஒரு பெண், அவளது மாதவிடாய் மூலமும், ஒரு நதி அதன் ஓட்டத்தாலும் மெருகூட்டப்படுகிறது. நேர்மையின்மை, ஆரோக்கியமின்மை, தந்திரம், முட்டாள்தனம், பேராசை, தூய்மையின்மை, மற்றும் கொடூர எண்ணம். இந்த ஏழு குணங்கள்தான் பெண்களிடம் இருக்கும் இயற்கை குறைபாடுகள் ஆகும்.
பெண்களை கருணையற்ற முறையில் வெறுப்புணர்வோடு அடிமைப்படுத்தவும், எதிர்காலத்தில் அவர்களுக்கு எந்த வித உத்தரவாதமில்லாமல் ஆக்கவும், கூலியில்லாத வேலைக்காரியாக மாற்றுவதற்கும், பெண்களின் அடிமைத்தனத்தால் அவர்களுக்கு ஏற்படும் கசப்புணர்வை மட்டுப்படுத்தவும் காலங்காலமாக அடியெடுத்துக் கொடுத்த இந்த நூலையும் அது முன்வைக்கும் ஒடுக்கு முறைகளையுமே உன்னத ஜனநாயகம் என்கிறது காவிக் கும்பல்.
பகவத் கீதை
இரண்டு நாட்களுக்கு முன்பு ஹரியானாவில் நடைபெற்ற சர்வதேச கீதை திருவிழாவை தொடக்கி வைத்துப் பேசிய ஜனாதிபதி திரௌபதி முர்மு “ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் பாரதம் தந்த ஆன்மீகப் பரிசு பகவத் கீதை; நடைமுறை வாழ்வில் எழும் அனைத்து சந்தேகங்களுக்கும் கீதையின் போதனைகள் தீர்வளிக்கின்றன” என்று பேசியுள்ளார். மோடியோ பகவத் கீதையை இந்தியாவின் தேசிய நூல் எனப் பேசிக் கொண்டும் பள்ளி கல்லூரிகளில் பாடமாக திணித்தும் வருகிறார். பகவத் கீதையை அம்பலப்படுத்தி ஏராளாமன ஆய்வு நூலகளும் கட்டுரைகளும் வந்துந்துள்ளன. ஆசிரியர் வீரமணி எழுதியுள்ள கிதையின் மறுபக்கம், பிரேம்நாத் பஷாஸ் எழுதிய இந்திய வரலாற்றில் பகவத் கீதை ஆகிய நூலகள் கீதையை முழுமையாக அமபலப்படுத்தியுள்ளன. சிவாஜி நடித்திருந்த கர்ணன் படத்தினை பார்த்தாலே கிருஷ்ணன் எவ்வளவு பெரிய ‘யோக்கியவான்’ என்றும் வர்ணத்தைக் காப்பாற்ற அவன் செய்யும் சூழ்ச்சிகளையும் புரிந்துகொள்ள முடியும். நாலு வர்ணத்தையும் நானே படைத்தேன்; அவரவர் வர்ணத்திற்கான கடமையை செய்வதே மோட்சத்திற்கான வழி என்றான் கிருஷணன். இதுவே கீதை முன்வைக்கும் ஜனநாயகத்தின் கருப்பொருள்..
கீதை முட்டாள்களின் பிதற்றல் என்றார் அம்பேத்கார். சங்கிகள் கொண்டாடும் விவேகானந்தரே கீதையின் காலக்கட்டம் அதன் கதாப்பாத்திரங்கள் குறித்து சந்தேகங்கள் எழுப்பியுள்ளார். கீதை வாழ்வின் துன்பங்களுக்கு ஆலோசனை வழங்குவதாக முர்மு பெருமைப்படுகிறார். ஆனால் கீதையின் போதனைகள் இன்று சட்டமாக இருந்திருந்தால் முர்மு குடியரசு தலைவராகியிருக்க முடியாது. அவருடைய வர்ண்-சாதிக்குறிய வேலைகளே செய்ய வேண்டியிருந்திருக்கும்.
வருண-சாதிய ஒடுக்குமுறைகளே RSS-BJP கும்பல் முன்வைக்கும் ஜனநாயகம் என்பதை மேற்சொன்ன உதாரணங்களிலிருந்தே ஒருவர் புரிந்துகொள்ள முடியும் என நம்புகிறோம். தாங்கள் சொல்வது தவறென்று தெரிந்திருந்தும் பொய்களை வரலாற்றுப் புரட்டுகளை மீண்டும் மீண்டும் பரப்புவதின் மூலம் மக்களை தங்களுடைய பாசிசத் திட்டத்தினை ஏற்றுக் கொள்ளவைக்க முறச்சிக்கின்றனர் காவி கும்பல்கள். இந்த பார்பனியமாக்கல் நடவடிக்கைகளுகுப் பின்னால் நிதி மூலதனம் மற்றும் தரகு முதலாளிகளுக்குமான சேவை என்பது ஒளிந்துள்ளதை நாம் மறுத்துவிட முடியாது.
— தொடரும்