நேற்று விளையாட்டு வீரர்களுக்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டன. தமிழகத்தைச் சேர்ந்த செஸ் வீரர் பிரக்ஞானந்தா, துப்பாக்கி சுடுதல் வீராங்கனை இளவேனில் மற்றும் மாற்றுத் திறனாளி பாட்மிடன் வீராங்கனை ஜெர்லின் அனிகா ஆகியோருக்கு அர்ஜூனா விருதுகளும், டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமலுக்கு தயான் சந்த் விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விருதுகள் “தமிழ்நாட்டில் இருந்து மேலும் பல திறமையாளர்கள் மின்னுவதற்கு ஊக்கமும் நம்பிக்கையும் அளிக்கும்” என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார். ஆனால் தேசிய விருதுகள் அறிவிப்பு வந்த சில மணிநேரங்களிலேயே சென்னையைச் சேர்ந்த கால்பந்து வீராங்கனை பிரியா அரசு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தவறான சிகிச்சியின் காரணமாக உயிரிழந்த செய்தியும் வெளியாகி நம்மை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த பிரியா, ராணி மேரி கல்லூரியில் விளையாட்டுப் பிரிவில் படித்து வந்தார். இவர் கால்பந்து போட்டிகளில் மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் விளையாடி வந்தார். பிரியாவின் தந்தை ரவிக்குமார் ஒரு அபார்மெண்டில் காவலாளியாக வேலை பார்க்கிறார். மிகவும் எளிய பின்னணியில் பிறந்திருந்தாலும், கால்பந்து விளையாட்டில் தனது திறமையை நிரூபிக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட பிரியாவின் கனவு நினைவாகமலே போய்விட்டது.
பிரியாவிற்கு கால்பந்து பயிற்சியின் போது வலது கால் மூட்டில் தசை கிழிவு ஏற்பட்டுள்ளது. இதனால் வலியால் அவதிப்பட்ட அவர் சிகிச்சைக்காக தன் வீட்டின் அருகிலிருக்கும் சென்னை கொளத்தூர் பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு சென்ற போது அங்குள்ள மருத்துவர்கள் பிரியாவின் வலது காலில் அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும் என்றிருக்கிறார்கள். இரண்டாவது மருத்துவரின் ஆலாசனையைப் பெறும் பொருட்டு ராஜீவ் காந்தி மருத்துவமனையை அனுகியிருக்கிறார்கள். அங்குள்ள மருத்துவர்களும் அறுவை சிகிச்சையை பரிந்துரைக்க, தனியார் மருத்துவமனைக்கு செல்ல வசதியில்லாத பிரியா அருகிலிருக்கும் கொளத்தூர் அரசு மருத்துவமனையிலேயே அறுவை சிகிச்சை செய்துகொண்டார்.
அந்த அறுவை சிகிச்சையின் போது மருத்துவர்கள் செய்த தவறால் பிரியாவிற்கு காலில் வலி அதிகமாக, மீண்டும் கொளத்தூர் அரசு மருத்துவமனைக்கே செல்கிறார். அங்கிருக்கும் மருத்துவர்கள் ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்று கூறிவிட்டனர்.
ராஜீவ் காந்தி மருத்துவமனையில் பிரியாவைப் பரிசோதித்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சையினால் அவரது வலது காலில் உள்ள திசுக்கள் மடிந்து விட்டன. இதனால் பிரியாவின் உயிருக்கு ஆபத்து விளையும். இதை தடுக்கும் பொருட்டு, அவரது காலை எடுக்க வேண்டும் என்று பரிந்துரைத்தனர்.
ஒரு கால்பந்து வீராங்கனையாக வெற்றிபெற வேண்டும் என நினைத்தவர், தன் காலில் ஏற்பட்ட பிரச்சனைக்கு சிகிச்சை பெற போய், காலையே எடுக்க வேண்டும் என்ற நிலை வந்ததை எங்கனம் தாங்கிக் கொண்டிருப்பார் என நினைக்கும் போதே நெஞ்சம் கணக்கிறது.
ராஜீவ் காந்தி மருத்துவமனையில் காலை அகற்றிய பிறகும் பிரியாவின் உடல்நிலையில் முன்னேற்றமில்லை, சிறுநீரகம், கல்லீரல் போன்றவை செயல்படாமல் நின்று இறுதியாக பிரியா நேற்று உயிரிழந்துவிட்டார்.
அவரது மரணத்தையடுத்து மாநில சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், தவறான சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தமிழக அரசின் சார்பில் பிரியாவின் குடும்பத்திற்கு ரூ 10 இலட்சம் அளிக்கப்படும் என்றும் பிரியாவின் சகோதரருக்கு அரசு வேலை அளிக்கப்படும் என்றும் கூறியிருக்கிறார். எதிர்க்கட்சிகளும் இழப்பீட்டுத் தொகையை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையோடு நின்றுவிட்டனர்.
ஆனால் பிரியாவை போன்று, வசதி வாய்ப்புகள் இல்லாமல் கனவுகளோடு நாட்டில் எண்ணற்ற பல விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் இருக்கிறார்கள். பயிற்சிக்கும், சத்தான உணவிற்கும், போட்டிகளில் கலந்துகொள்ள செல்லும் செலவுகளுக்கும், மருத்துவ சிகிச்சைகளுக்கும் ஆதரிப்பார் இன்றி தங்களது சொந்த உழைப்பை அல்லது குடும்பத்தினரின் சொற்ப வருமானத்தை சார்ந்திருக்கின்றனர்.
இந்தியாவின் அரசியல் அதிகார வர்க்கத்தினரின் பிடியில் சிக்குண்டு கிடக்கும் விளையாட்டுத் துறையில் நடுத்தர வர்க்கக் குடும்பப் பின்னணியிலிருந்து வருபவர்களே கூட தடுமாறும் சூழலில் பிரியா போன்ற உழைக்கும் மக்களுக்கோ இந்தக் கனவுகள் கற்பனைக்கெட்டாதவை.
இந்திய உழைக்கும் மக்களுக்கு அன்றாட பிழைப்பு நடத்தவே போராட வேண்டியதாயிருக்கிறது. இச்சூழலில் விளையாட்டுக்களில் பங்கேற்க வாய்ப்பு, அவர்களுக்கான வசதி, நேரம் எப்படியிருக்கும்?
தரமான விளையாட்டுப் பயிற்சியாளர்கள், உள்கட்டமைப்பு வசதிகள் எதுவும் நம் நாட்டில் கிடையாது. திறமையும் வலிமையும் கொண்ட உள்ள கிராமப்புற இளைஞர்கள், பெண்கள், தங்களது திறமைகளை வளர்த்துக் கொள்ள வசதி வாய்ப்புகள் கிடைப்பதில்லை
இத்தனை தடைகளையும் தாண்டி விளையாட்டுக்களில் ஒரு சிறந்த நட்சத்திமாய் ஒளிவீசத் துவங்க, சாதாரண உழைக்கும் வர்க்க பின்னணி கொண்ட பிரியா போன்ற வீரர்கள், வீராங்கனைகள், தமது வாழ்வின் மிக முக்கியமான இளமைப் பருவத்தை விளையாட்டுக்காக அர்ப்பணிக்கின்றனர். நாம் சாதிக்க வேண்டும் என்ற கனவோடு அல்லும் பகலும் இயங்குகின்றனர்.
இதோடு சேர்த்து மொத்த சமூகமும் பார்ப்பனிய ஆணாதிக்க விழுமியங்களில் ஊறிப் போயிருக்கும் நிலையில் சாதாரண உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த பெண்கள் விளையாட்டுக்களில் பங்கேற்பது என்பதே கற்பனைக்கும் எட்டாத விசயம்.
இந்த பார்ப்பனிய சமூக அமைப்பு முறை பெண் விளையாட்டு வீராங்கனைகளை நோக்கி எழுப்பும் கேள்வியை, தன் காலால் எட்டி உதைத்து கால்பந்து மைதானத்திற்கு வருவது, பிரியா போன்ற இந்திய சமுகத்தை சார்ந்த பெண்களுக்கு தினமும் ஒரு போராட்டமே.
அத்தனை தடைகளையும் தாண்டி வந்தபோதும், சரியான மருத்துவ வசதிகள் இல்லாமல் போனதால் இன்று பிரியா உயிருடன் இல்லை.
பிரியா போன்ற உழைக்கும் வர்க்கத்திலிருந்து வந்த விளையாட்டு வீரர்கள் வீராங்கனைகளுக்கு, ஆக்கமும் ஊக்கமும்; உதவியும் அளித்து சர்வதேச தரத்திற்கு நிகராக விளையாட்டு வீரர்களின் ஆற்றலை வளர்த்தெடுக்க நேர்மையான அமைப்புகள் ஏன் இங்கு இல்லை?
சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா பின் தங்கியே இருப்பதற்கான காரணங்கள் பல இருக்கின்றன. அவற்றில் முதன்மையானது போட்டியாளர்களைத் தேர்ந்தெடுப்பதில் இருக்கும் சாதிய – வர்க்கப் பாகுபாடுகள். அடுத்ததாக பிற எல்லா துறைகளைப் போலவே விளையாட்டுத்துறையிலும் ஊறிப் போயிருக்கும் இலஞ்ச ஊழல்.
இது போக ஆளும் வர்க்கம், உழைக்கும் மக்களுக்கு உற்பத்தியில் ஈடுபடும் நேரம் போக விளையாட்டில் ஈடுபடுவதை முற்றிலுமாக பல வழிகளில் இல்லமால் செய்து வருகிறது. தொழிலாளி வர்க்கம் உழைப்பு சாதனங்களில் இருந்து அந்நியமாகிவிட்டது போல இந்தியாவில் உள்ள தொழிலாளர்கள் விளையாட்டில் இருந்து அந்நியமாகிவிட்டனர்.
விளையாட்டை தன்னுடைய சந்தையின் வளர்ச்சிக்காக ஒரு சரக்காக மாற்றி, தொழிலாளி வர்க்கத்தையும் இந்திய இளைஞர்களையும் பழக்குகிறது ஆளும் வர்க்கம். சந்தைக்காக, கிரிக்கெட் மோகம் திட்டமிட்டு புகுத்தப்படுகிறது. விளையாட்டு என்பது நாம் ஆடும் களம் என்பதை மாற்றி தொலைக்காட்சியிலும், செல்போனிலும் பார்த்து இரசிப்பது என்ற வரம்புக்குள் மக்களை ஆழ்த்துகிறது.
விளையாட்டு மனித சமூகத்தின் ஒரு அங்கம் என்பதை நாம் உருவாக்க வேண்டும். அதற்கு, உழைக்கும் மக்களாகிய நாம், முதலில் தடம் பதித்து ஆட வேண்டிய களம் அரசியல் மைதானம். நம் எதிர் அணி புரையோடிப் போயிருக்கும் பார்ப்பனிய சாதிய கொடுங்கோன்மையும், வர்க்க சுரண்டலும் உள்ள இந்த அரசமைப்பு. இதனை மாற்றியமைக்கும் போதுதான் பிரியா போன்று சாதிக்க பிறந்த விளையாட்டு வீரர்களின் வீராங்கனைகளின் மரணத்தை நாம் தடுக்க முடியும். அவரைப் போன்றவர்களின் திறமைக்கு நாம் அங்கீகாரம் கொடுக்க முடியும்.
- தாமிரபரணி.