குஜராத் சட்டப்பேரவைக்கு வரும் டிசம்பர் 1 மற்றும் 5 தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மோடி, பிரச்சாரக் கூட்டத்தில் ”நான் உருவாக்கிய குஜராத்” என பிரச்சார முழக்கத்தை அறிவித்திருக்கிறார்.
மோடி பெருமையாக கூறுவது போல ”நான் உருவாக்கிய குஜராத்” எனும் முழக்கம் மோடி ஆட்சிக்கு வந்த பின்பு, இத்தனை ஆண்டுகாலம் உருவாக்கிய சாதனை என்ன?
மோடியின் சாதுர்யத்தால் அசாத்திய வளர்ச்சியடைந்திருப்பதாகப் பீற்றிக் கொள்ளப்படும் குஜராத்தின் சாதாரண உழைக்கும் மக்களுக்கு அது என்ன சமூக வளர்ச்சியை கொண்டு வந்தது?
மோடியும் ஆர்.எஸ்.எஸ் சங்கிகளும் தற்போது தவறியும் குஜராத் ஒளிர்கிறது என்று சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தில் கூறுவதில்லை. அதற்கு மாறாக, இந்தத் தேர்தலில் “குஜராத், பிரிவினைவாத சக்திகளை ஒழிக்கும்”, “கடந்த 20 ஆண்டுகளாக மாநிலத்தின் பெருமையை சிதைக்க முயன்ற சக்திகள் இந்தத் தேர்தலிலும் வீழ்த்தப்படுவார்கள்”, “இந்தத் தேர்தலில் கடந்த சாதனையை வீழ்த்தி பாஜக வெற்றி பெறும்”, “ஒவ்வொரு குஜராத்தியும் முழு தன்னம்பிக்கையுடன் உள்ளனர்”, “இதயங்களில் இருந்து ஒருமித்த குரல் கேட்கிறது”, “ஆம் இது நீங்கள் உணர்வதுபோல் நான் உருவாக்கிய குஜராத்” என குஜராத் மக்களின் ஒற்றுமைக்கு பாடுபடுவது போல பம்மாத்து காட்டுகிறார் மோடி.
மக்களிடம் மதப் பிரிவினையைத் தூண்டும் காவி பாசிச கும்பல்கள், பிரிவினையை தூண்டும் சக்திகளை ஒழிப்பதாக கூறுவது கேலிக்கூத்து.
குஜராத் மாடல் வளர்ச்சி என்று பல ஆண்டுகளாக காவி கும்பல் கட்டுக்கதைகளைப் புனைகிறது. ஆனால் யதார்த்த நிலைமைகள் குஜராத் உழைக்கும் மக்களின் வளர்ச்சிக்கு எதிராகத் தான் இருக்கிறது என புள்ளி விபரங்கள் காட்டுகின்றன.
மனித வளர்ச்சி குறியீடு (Human Development Index) என்பது மூன்று முக்கிய காரணிகளான கல்வி, ஆரோக்கியம் மற்றும் வாழ்க்கைத் தரம் ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படுகிறது. இந்த தரவரிசை மதிப்பீட்டில் குஜராத் 2019 ஆம் ஆண்டில் 30 மாநிலங்களில் 17 வது இடத்தில் இருக்கிறது. இதே குஜராத் 1990 ஆம் ஆண்டின் போது 16 வது இடத்தில் இருந்தது. இத்தரவரிசையில், கடந்த முப்பது ஆண்டுகளாக பெரிய அளவில் ஏதும் முன்னேற்றம் இன்றி தேங்கி நிற்கிறது மோடி உருவாக்கிய குஜராத்.
பெண் கல்வியை எடுத்துக் கொண்டால், ஆறு வயதுக்கு மேற்பட்ட பெண் குழந்தைகள் பள்ளிக்குச் செல்வது 2005-06-இல் 65.3 சதவீதமாக இருந்து பெரிய அளவில் முன்னேற்றமின்றி, அது 2019-20-இல் 72.9% உள்ளதோடு நாட்டின் முப்பது மாநிலங்களில் 19 வது இடத்தை மோடி உருவாக்கிய குஜராத் பெற்றிருக்கிறது.
இளவயது பெண் திருமணங்களின் சதவீதம் குஜராத்தில் 2019-20 ஆம் ஆண்டில் 21.8 சதவீதமாக உள்ளது. இதில் மொத்தமுள்ள 30 மாநிலங்களில் 20 வது இடத்தில் குஜராத் உள்ளது.
பிறந்த குழந்தைகள் இறப்பு விகிதத்தில் கூட மோடி உருவாக்கிய குஜராத் இந்தியாவின் மற்ற மாநிலங்களை ஒப்பீடும் போது 31.2 சதவீதம் பெற்று 2019-20 ஆம் ஆண்டில் 19 வது இடத்தில் தான் இருக்கிறது.
வயதுக்கேற்ற உயரத்துடன் உள்ள குழந்தைகள் மதிப்பீட்டில் குஜராத் 2019-20 ஆம் ஆண்டில் மொத்தமுள்ள 30 மாநிலங்களில் 26வது இடத்தை பெற்று பரிதாப நிலையைப் பெற்றுள்ளது.
உயரத்துக்கேற்ற எடை இல்லாத (low weight for height) குழந்தைகள் மதிப்பீடு மற்றும் வயதுக்கேத்த எடை இல்லாத (under wait for age) குழந்தைகளின் மதிப்பீடு என்ற இரண்டிலும் மோடி உருவாக்கிய குஜராத் 2019-20 ஆம் ஆண்டில் 30 மாநிலங்களில் 29 வது இடத்தை பெற்று சாதனை செய்துள்ளது.
ஸ்வச் பாரத் என்று மார்தட்டி கொண்ட மோடி உருவாக்கிய குஜராத் எப்படி இருக்கிறது என்று பார்க்கும் போது, மேம்பட்ட சுகாதார வசதியை பயன்படுத்தும் மக்கள் தரவரிசையில் நாட்டில் 18 வது இடத்தில் தான் இருக்கிறது. அபாயகரமான கழிவுகளை உருவாக்கும் தரவரிசையில் நாட்டில் மொத்தமுள்ள 30 இடங்களில் 28 வது இடத்திலும், பிளாஸ்டிக் கழிவுகளை உருவாக்கும் தரவரிசையில் நாட்டில் 27 வது இடத்திலும், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரிய விதிகளின் படி கழிவு நீர் சுத்திகரிப்புக்கு இணங்கும் தொழிற்சாலைகளின் தரவரிசையில் 24 வது இடத்திலும் தான் இருக்கிறது.
இதை தவிர மாணவர்கள் கல்வியில் பார்க்கும் போது, பதினெட்டு முதல் இருபத்திமூன்று வயது உள்ள உயர்கல்விக்கான மாணவர் சேர்க்கை விகித தரவரிசையில் 23வது இடத்தில் இருக்கிறது. ஆரம்பக் கல்வியின் நிகர சேர்க்கை விகித தரவரிசையில் 21வது இடத்திலும், இடைநிலைப் பள்ளியின் மாணவர்கள் இடைநிற்றல் வருடாந்திர விகித தரவரிசையில் 24 இடத்திலும், உயர்நிலைப்பள்ளி சேர்க்கை தரவரிசை மதிப்பீட்டில் 24வது மாநிலமாக உள்ளது. மாணவர்களின் கல்விக்கான தரவரிசையில் மற்ற மாநிலங்களை விட மோடி உருவாக்கிய குஜராத் பின் தங்கியுள்ளது.
இதற்கு அப்பால் காவி கும்பல் பீற்றித்திரிவது போல உற்பத்தி துறையின் வேலை வாய்ப்பு விகித தரவரிசை மதிப்பீட்டில் குஜராத் நாட்டின் மொத்தமுள்ள 30 மாநிலஙகளில் 2 வது இடத்தை பெற்றிருப்பது உண்மைதான். ஆனால் கல்வித்திறனற்ற, சுகாதாரமற்ற தொழிலாளர் சந்தையை கொண்டு உற்பத்தி துறை செயல்படுகிறது என்பதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக மோடி உருவாக்கிய குஜராத் விளங்குகிறது.
இவற்றையெல்லாம் குழிதோண்டிப் புதைத்துவிட்டு பிரச்சாரக் கூட்டத்தில் ”நான் உருவாக்கிய குஜராத்” என வாய்ச்சவடால் அடிக்கிறார் மோடி.
மோடியும் ஆர்.எஸ்.எஸ்.-ம் குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் யாருடைய வளர்ச்சி என்று அழுகிறார்கள்? இங்கு நாம் குறிப்பிட்டுள்ள புள்ளிவிவரங்களெல்லாம் குஜராத் மக்களின் சமூக நிலை அவலங்கள் குறித்துக் காட்டுகின்றன. குஜராத் மக்களின் சழூக வளர்ச்சிக்கு இத்தனை ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்த மோடியும் அவருக்கு பின் வந்த பா.ஜ.க முதல்வர்களும் செயல்படாமல் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு தான் படி அளந்துள்ளனர் என்பதை மக்கள் கண்கூடாக உணர்ந்து வருகின்றனர்
குஜராத் உழைக்கும் மக்களின் தங்களது சமூக பொருளாதார வளர்ச்சிக்கு காவி பாசிஸ்டு கும்பல்களை வீழ்த்தாமல் தீர்வு இல்லை
-தாமிரபரணி
செய்தி ஆதாரங்கள்:
The Hindu – Leading in economic measures, Lagging on social measures : Nov 14 -2022