நவம்பர் 7, 1917
பூவுலகில் முதல் சோசலிச நாடு தோன்றிய நாள்!
ஏகாதிபத்தியம் காகிதப்புலியே என தோலுரித்துக்காட்டி காலனிய மக்களின் மளங்களில் விடுதலைக் கனலை ஏற்றி வைத்த நாள்! முதலாளித்துவ சகாப்தம் முடிந்து, சோசலிச சகாப்தம் தொடங்கிவிட்டது என்பதை சாற்றிய சரித்திர நாள்!
அந்த நவம்பர் புரட்சி நாளுக்கு இன்று 106வது பிறந்த நாள்!
இன்று முன்னாள் சோசலிச நாடுகளில் முதலாளித்துவ மீட்சி நடந்து அவைகள் முதலாளித்துவ நாடுகளாகிவிட்டன. இதை முதன் முதலில் சுட்டிக்காட்டியவர்கள் உலகெங்கிலும் இருந்த கம்யூனிசப் புரட்சியா ளர்களே. சோசலிச சமுதாயம் கம்யூனிச சமுதாயமாக வளர்கின்ற பாதை பின்னடைந்துள்ளது; உலகப் பாட்டாளிவர்க்க இயக்கம் தற்காலிக தோல்வியைத் தழுவியுள்ளது என்ற உண்மையை கம்யூனிசப் புரட்சியாளர்களே எடுத்துரைத்தனர்.
ஆனால், முதலாளித்துவ நாடுகளாக மாறிவிட்ட ரசியா போன்ற நாடுகளை வளர்ந்த சோசலிச நாடுகள் என்றே குருசேவும் அவருடைய சர்வதேச சிஷ்யகோடிகளும் சித்தரித்து வந்தனர். ஏகாதிபத்திய முதலாளித்துவ அறிஞர்களும் அவர்களுடைய தாசர்களுமோ இன்னும் ஒரு படி மேலே போய் அவைகளை கம்யூனிச நாடுகள் என்றே வர்ணித்தனர்.
இன்று அந்த நாடுகள் யாவருக்கும் புரியும்படியான முதலாளித்துவ வடிவங்களை எடுத்தவுடன், ”அதோ பார்த்தீர்களா, நாங்கள் கணித்தபடி கம்யூனிசம் காலாவதியாகி விட்டது” என்ற தீர்ப்பை வழங்கி அகமகிழ்ந்து போகிறார்கள் முதலாளித்துவ அறிஞர்கள்.
பழ மரம் முதன் முதலில் காய்க்கும் போது எல்லா பூக்களும் பழமாகிவிடுவதில்லை. அடுத்தடுத்த காய்ப்புகளில் தான் நிலையான விளைச்சல் இருக்கும்.
மனித வரலாற்றிற்கும் இது பொருந்தும். மனித சமுதாய வரலாற்றில் ஒரு புதிய வரலாற்றுக் கட்டம் தோன்றி அப்படியே நிலைத்துவிடுவதில்லை. பின்னடைவுகள், தோல்விகள் ஏற்பட்டு ஏற்ற இறக்கத்திற்குப் பின்தான் நிலைபெறுகிறது. முதலாளித்துவ கட்டத்திற்குள் மனித வரலாறு நுழைந்தபோதும் இப்படித்தான் நடந்தது. வரலாறு, ரம்பத்தின் பற்கள் போன்று ஏற்ற இறக்கம் கொண்டு ஆனால் அதே சமுதாயத்தில் ஏறு முகத்தில் முன்னேறுகிறது. வரலாற்றின் விதி இதுவே. முதலாளித்துவத்திலிருந்து கம்யூனிசத்திற்கு சமுதாயம் மாறி வளர்ந்து செல்வதிலும் இந்த விதியே இயங்குகிறது. எனவே, கம்யூனிசத்திற்கு தற்காலிக பின்னடைவுகள், தோல்விகள் ஏற்படுவது இயல்பே.
* சோசலித்திற்கு முன்வரை, சமுதாயம் ஒரு வரலாற்றுக் கட்டத்திலிருந்து இன்னொரு கட்டத்திற்கு முன்னேறிய போது, ஒரு சிறு பிரிவினர் பெரும்பான்மையினரை அடக்கி ஒடுக்கிச் சுரண்டுவதை ஒழிக்கவில்லை . மாறாக, ஒரு சுரண்டலாளர்களின் தொகுதியினிடத்தில் இன்னொரு சுரண்டலாளர்களின் தொகுதியையே கொண்டு வந்தது. வரலாறு முன்னேற, முன்னேற அதிக அளவில் உழைக்கும் மக்கள் சுரண்டப்பட்டார்கள். ஆனால் சோசலிச சமுதாயமோ மனிதனை மனிதன் சுரண்டுவதையே முற்றாக ஒழிப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு சமுதாய அமைப்பாகும். எனவே, இந்த சமுதாய அமைப்பை நிலைநிறுத்த ஒப்பீட்டு வகையில் நீண்டநாள் பிடிக்கும். அதற்கான போராட்டம் கடுமையானதாக இருக்கும்.
* சோசலிசத்திற்கு முன்புவரை, சுரண்டலாளர்களை ஒடுக்க சுரண்டுபவர்கள் வன்முறைக் கருவியான அரசு எந்திரத்தை பிரயோகித்து வந்தனர். சோசலிசப் புரட்சிக்கு முன்பு நடந்த புரட்சிகள் அனைத்தும் இந்த அரசு எந்திரத்தை செழுமைப்படுத்தியே – நவீனப்படுத்தி, பெரிதாக்கியே வந்திருக்கின்றன. ஆனால் சோசலிசப் புரட்சியோ இந்த அரசு எந்திரத்தையே உலர்ந்து உலரச் செய்கின்ற வரலாற்றுப் பணியை நோக்கமாகக் கொண்டதாகும்.
இதுவரை ஒடுக்கப்பட்டு, இருட்டில் வைக்கப்பட்டிருந்த பாட்டாளிகளை ஆளுகின்ற வர்க்கமாக மாற்ற நவீன கல்வி, நிர்வாக முறைகளில் பயிற்றுவிக்க வேண்டிய பிரம்மாண்டமான பணியை எதிர்கொண்டுள்ளது.
* சோசலிசத்திற்கு முன்பு மாபெரும் சாதனைகளை மனித நாகரிகம் சாதித்துள்ளது; ஆனால் மனிதனின் மிகவும் கீழ்மையான இயல்புணர்வுகளையும், உணர்ச்சி வெறிகளையும் தூண்டிவிட்டுத்தான் நாகரிகம் இச் சாதனைகளைச் சாதித்தது. மனிதனின் மற்ற எல்லாத் திறன்களும் பாதகம் அடையும் வண்ணம் அவற்றை வளர்த்துத்தான் அச்சாதனைகளை வளர்த்தது. ஆனால், சுரண்டலையும் ஒடுக்குமுறையையும் பூண்டோடு ஒழிப்பதை தனது நோக்கமாகக் கொண்ட சோசலிச நாகரிகமோ மனிதனின் மேன்மையான, ஆரோக்கியமான, ஆக்கபூர்வமான, உணர்வுகளைத் தூண்டித்தான் இச்சாதனைகளைச் சாதிக்க வேண்டும். ஆயிரக்கணக்கான ஆண்டுகள் இழிந்த குண நலன்களால் தூண்டப்பட்டு வளர்ந்து வந்திருக்கிற கோடிக்கணக்கான மக்களை சமத்துவம், பரஸ்பர உதவி, பொதுமை நலம், உழைத்து உண்ணுதல் போன்ற குணநலன்கள் கொண்ட மனிதர்களாக மாற்றும் சிக்கலும் கவனமும் நிறைந்த பிரம்மாண்டமான பணியை சோசலிசம் எதிர்கொண்டுள்ளது.
எனவே, பொருளாதார சுரண்டல், அரசியல் அடக்குமுறை, இழிந்த குண நலன்களைத் தூண்டிவிடுகிற நாகரிகம் ஆகியவைகளை அடிப்படையாகக் கொண்ட முதலாளித்துவ சமுதாயத்திலிருந்து சுரண்டலை பூண்டோடு ஒழித்தல், அரசு எந்திரத்தையே ஒழித்தல், பாட்டாளி வர்க்கத்தை ஆளும் வர்க்கமாக வளர்த்தல், உழைப்பு – பொதுமை நலம் என்ற நாகரிகம் ஆகிய கூறுகளைக் கொண்ட கம்யூனிச சமுதாயத்திற்கு மாறுகின்ற ஓர் இடைநிலைக் கட்டமே சோசலிசமாகும்; இறுதிக்கட்டம் தான் கம்யூனிச சமுதாயமாகும்.
எனவே, சோசலிச சமுதாயத்தில் கம்யூனிச அம்சங்கள் முதலாளித்துவ அம்சங்கள் இரண்டும் இருக்கும்; கம்பூனிச அம்சங்கள் ஆதிக்கத்தில் இருக்கும்; ஆனால் இதுவே அதன் இறுதி வெற்றிக்கான உத்திரவாதமாகி விடுவதில்லை . மக்களின் எதிரிகளை ஒழிப்பதிலும் மக்களுக்கிடையிலான முரண்பாடுகளைக் கையாள்வதிலும் தவறுகள் இழைக்கப்பட்டால் அது முதலாளித்து அம்சங்கள் மேலோங்கி சமுதாயம் முதலாளித்துவமாக மாறிவிடுவதில்தான் கொண்டுபோய் விடும்.
எனினும் இது வரலாற்றின் போக்கை மாற்றி விடுவதில்லை; ஏனெனில், முதலாளித்துவம் எப்போது ஏகாதிபத்தியமாக மாறியதோ அப்போதே முதலாளித்துவம் அழுகத் தொடங்கிவிட்டது. அதன் விதி முடிந்து விட்டது.
எனவே ஒரு சோசலிச நாட்டிலோ, அல்லது ஒரு சில சோசலிச நாடுகளிலோ முதலாளித்துவம் திரும்பவும் நிலைநாட்டப்படுவது கம்யூனிசத்தின் தற்காலிக தோல்வியே;
கம்பூனிசம் தோற்றுவிட்டது என முதலாளித்துவ அறிஞர்கள் கொக்கரிப்பதும் தற்காலிகமே; அவர்களது மகிழ்ச்சியும் அற்ப மகிழ்ச்சியே.
மீண்டும் நவம்பர்கள் தோன்றும், ஏகாதிபத்தியம் வீழ்த்தப்படும்; கம்யூனிசம் வெல்லும்!
- 1989ம் ஆண்டு நவம்பர் மாத புதிய ஜனநாயகம் இதழில் வந்த கட்டுரை.