முகமது ஜுபைர்: பாசிச ஒடுக்கமுறையின் சமீபத்திய இலக்கு

ஜுன் 27 ல் ஜெர்மனியில் நடைபெற்ற G7 நாடுகளின் கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் மோடி G7 நாடுகள் சேர்ந்து வெளியிட்ட, கருத்துரிமை மற்றும்   பத்திரிக்கை சுகந்திரத்தை (online&offline) பாதுகாப்பதற்கான பிரகடனத்தை ஆதரித்து  கையெழுத்திட்டார். இதன் மூலம் இந்தியாவிலும் கருத்துரிமை மற்றும் பத்திரிக்கை சுகந்திரம்(online&offline) பாதுகாக்கப்படும் என உறுதியளித்துள்ளார். ஆனால் அதே நாளில்  பத்திரிக்கையாளரும் செய்திகளின் உண்மைத் தன்மையை கண்டறியும் இணைய தளமான AltsNews ன் துணை ஆசிரியருமான முகமது ஜுபைர் நான்காண்டுகளுக்கு முன்பு தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட ஒரு பதிவிற்காக டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டார். ஜுபைரின் கைதுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு தான் மனித உரிமை செயல்பாட்டாளரும் 2002 குஜராத் படுகொலையை அம்பலப்படுத்தியவருமான தீஸ்த சேதல்வாத் குஜராத் போலீசாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

பெயர் முகவரி இல்லாத அனாமதேய நபர் டெல்லி போலீசுக்கு பகிர்ந்த tweet ஐ அடிப்படையாகக் கொண்டு தாமகவே முன்வந்து சட்டப்பிரிவு 193A(மதங்களுக்கிடையே மோதலை உருவாக்குவது), 298(மத உணர்வுகளைப் புண்படுத்துவது) களின் கீழ் ஜுபர் மீது வழக்கு பதிவு செய்தது டெல்லி போலீஸ். 2018 மார்ச் ல் செய்யப்பட்ட இந்த tweet க்கு நான்கு வருடங்கள் கழித்து தற்போது  கைது செய்திருப்பதிலிருந்தே இதில் உள்நோக்கம் இருப்பதை புரிந்துக் கொள்ளலாம். ஜூபைரின் கைதை ஆர் எஸ் எஸ்-பிஜேபி தலைவர்கள்-தேவேந்திர பட்நாவிஸ் தொடங்கி ரிபப்பிளிக் டிவி-அர்னப் கோஸ்சாமி வரை மொத்த சங்கிக் கூட்டமும் கொண்டாடின.

ஆர் எஸ் எஸ்-பிஜேபி கும்பலின் பொய்களையும் மதவிரோதக் கருத்துக்களையும் ஜுபைரும் அவர் பணியாற்றுகின்ற Altnews ஊடகமும் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகின்றன. இதனால் எரிச்சலடையும் சங்கி கும்பல் சமூக வலைதளங்களில் தனது வலைபின்னலைக் கொண்டு ஜுபைரையும் Altnews ன் மற்றொரு நிறுவனராக ப்ரதிக் சின்ஹா வையும் வழக்குகளில் சிக்க வைப்பதற்காக தொடர்ந்து முயற்ச்சித்து வருகின்றனர். இது குறித்து விரிவானக் கட்டுரையை தி வொயர் இணையதளத்தில் வெளிவந்துள்ளது. சங்கிகளின் பொய்குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஜூபைர் மீது ஏற்கனவே சில வழக்குகள் உள்ளன. ஆனால் ஜுபைரின் சமீபத்திய கைது ஞன்வபி மசூதி பிரச்சனையில் ஆர் எஸ் எஸ்-பிஜேபி கும்பலை அம்பலப்படுத்தியதின் விளைவாகும்.

 

2018 மார்ச்-ல் ஜுபைர் தனது டிவிட்டரில் வெளியிட்ட பதிவு.  இதில் 2014 க்கு முன்பு ஹனிமூன் ஹோட்டல் 2014 பிறகு ஹனுமன் ஹோட்டல் என ஜுபைர் பதிவிட்டிருந்தார்.

ஞன்வபி மசூதிக்குள் சிவலிங்கம் இருப்பதாக எழுந்த சர்ச்சையை ஒட்டி டைம்ஸ் நவ் தொலைக்காட்சி விவாதத்தில் கலந்து கொண்ட பிஜேபியின் செய்தித் தொடர்பாளர் நிபுர் சர்மா முகமது நபி குறித்தும் குரான் குறித்தும் மிகவும் மோசமாக பேசியிருந்தார். இந்த காணொலியை தனது டிவிடர் பக்கத்தில் ஜூபைர் பதிவிட்டிருந்தார். இந்தியாவிலும் சர்வதேச அரங்கில் இருந்தும் நிபுர் சர்மாவின் பேச்சுக்கு மிகக் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இதை ஒட்டி நாடு முழுக்க பல போராட்டங்களும் ஒரு சில இடங்களில் கலவரங்களும் ஏற்பட்டன.

இந்நிகழ்வு பிஜேபின் முஸ்லீம் வெறுப்பு-இந்துமதவெறி அரசியல் நடவடிக்கையை வெளிஉலகுக்கு  அம்பலப்படுத்தியது. நிலைமையை சமாளிக்க  நிபுர் சர்மாவை கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்வதாக பிஜேபி  அறிவித்தது. நிபுர் சர்மாவின் பேச்சுக்கு குவைத், சவுதி அரேபியா, UAE, துருக்கி, ஈரான் நாடுகளிடமிருந்து எதிர்ப்புக்கள் வர ஆரம்பித்தன. இஸ்லாமிய நாடுகளுடனான பொருளாதார நடவடிக்கைகளை கணக்கில் கொண்டு மேற்கூறிய நாடுகள் உள்ளிட்ட 17 நாடுகளிடம் நிபுர் சர்மாவின் பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து விளக்கம் அளித்தது மோடி அரசு.

ஜூபைரின் பதிவில் சட்டத்திற்கு எதிரான எந்தவொரு கருத்தும் இல்லை. சொல்லப்போனால்  1983 வெளியான ஹிந்தி படத்தின் தலைப்புதான்(Kissi Se Na Kehna) அந்த பதிவில் இருந்தது. தி ஒயர் இணயதளத்திற்கு பேட்டியளித்திருந்த உச்சநீதிமன்ற முன்னாள் நிதிபதி தீபக் குப்தா, 40 வருடங்களாக எந்த பிரச்சனையையும் உண்டாக்காத ஒரு சினிமா போஸ்டர் ஆறு மாதத்திற்குள் மத மோதல்களுக்கு காரணமாக எப்படி மாறியது? இந்த வழக்கில் டெல்லி போலீஸ் முன்முடிவோடு செயல்படுகிறது. ஜுபைரின் டிவிட்டர் பதிவு கிரிமினல் சட்டத்திற்கு எதிராக இருப்பதாகத் தெரிவில்லை’ என்று கூறியுள்ளார்.

ஆனால் இந்த டிவிட்டர் பதிவை காரணம் காட்டி உத்திரபிரதேசத்த காவல் துறை ஜூபைர் மீது பல வழக்குகளை பதிவு செய்தது. சீத்தாபூர், லக்கிம்பூர், ஹர்தாஸ், முசாபர் நகர், காசியாபாத் உள்ளிட்ட ஐந்து இடங்களில் அடுத்தடுத்து வழக்குகளை பதிவு செய்தது. ஒரு வழக்கில் பிணை கிடைப்பதற்குள்ளாகவே மற்றொரு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைப்பது என்ற முறையில் உ.பி. போலீஸ் செயல்பட்டுள்ளது.  ஜுபைரின் வழக்குகளை விசாரிப்பதற்காக சிறப்பு புலனாய்வு குழுவையும்(SIT) உ.பி. அரசு அமைத்தது.

டெல்லியில் போடப்பட்ட வழக்கில் பிணை பெறுவதற்கான வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே சீதாபூரில் பதியப்பட்ட வழக்கிற்கு பதினான்கு நாட்கள் சிறையில் அடைக்க சீதாபூர் நீதிமன்றம் உத்தரவிடுகிறது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பிணை வாங்கும் போது லக்கிம்பூரில் பதியப்பட்ட வழக்கிற்காக பதினான்கு நாட்கள் சிறையில் அடைக்க தீர்பளிப்பது என்று ஜூபைரை பழிவாங்கியது மோடி-ஆதித்திய நாத்தின் காவல்துறையும் நீதிமன்றமும். தொடர்ச்சியான சட்டப்போராட்டத்திற்கு பிறகு உ.பி. ல் போடப்பட்டுள்ள ஆறு வழக்கையும் ஒரு வழக்காக மாற்றி கடந்த வாரம் பிணை வழங்கியுள்ளது  உச்சநீதி மன்றம்.

பிஜேபி/ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட இந்து மதவெறிக் கூட்டத்தின் பொய்களையும் மதவெறி பிரச்சாரங்களையும் அம்பலப்படுத்தியதற்காக தன்னுடைய இணைய வானரக்கூட்டங்களை கொண்டும் போலீசு நீதிமன்றம் போன்ற அரசு இயந்திரத்தின் துணையோடும் ஜூபைரை பழிவாங்கிய மோடி அரசு, சர்வதேச அளவில் இந்தியாவிற்கு அவப்பெயரை ஏற்படுத்திய உள்நாட்டில் கலவரங்கலுக்கு காரணமான நிபுர் சர்மாவை இன்றுவரை கைது செய்யவில்லை. நடைபெற்ற மொத்த நிகழ்வுகளுக்கும் நிபுர் சர்மாவை மட்டும் காரணம் எனக்கூறி ஆர் எஸ் எஸ்-பிஜேபி கும்பலை காப்பாற்றியது மட்டுமில்லாமல் நிபுர் சர்மா தன்னுடைய தவறுக்கு மன்னிப்புக் கோரினால் போதும் என்று உச்சநீமன்றம் கூறியுள்ளது. மேலும் தன்னுடைய உயிருக்கு ஆபத்திருப்பதாக நிபுர் சர்மா கொடுத்த புகாரின் அடிப்படையில் அவருக்கும் அவரது குடுபத்தினரும் பாதுகாப்பு கொடுத்துள்ளது டெல்லி போலீஸ். மோடியின் பாசிச ஆட்சியில் கருத்து சுகந்திரத்திற்கு இலக்கணம் இதுதான் போல.

பீமாகொரேகான் வழக்கில் சிறையில் உள்ள சமூக செயல்பாட்டாளர்கள்

கருத்துரிமையின் குரல்வலையை நசுக்குவது சங்கப்பரிவாரங்களுக்கு ஒன்றும் புதிதள்ள, அது அவர்களின் பாசிச நடவடிக்கைகளின் ஒரு அங்கம். கடந்த எட்டு ஆண்டுகளில் ஆர் எஸ் எஸ்-பிஜேபின் காவி மற்றும் கார்பரேட் திட்டங்களை அம்பலப்படுத்திய/அதற்கெதிராக போராடிய எண்ணிலடங்கா பத்திரிக்கையாளர்களையும் சமூக செயற்பாட்டாளர்களையும் பேராசிரியர்களையும் மாணவர்களையும் பொய்வழக்களில் கைது செய்து சிறையில் அடைத்துவருகிறது மோடி அரசு. பல்கலைக்கழகங்கள் மீதான தாக்குதல், பீமா கொரேகான் வழக்கு, CAA-NCR-டெல்லி கலவர வழக்கு, இந்துத்துவா-மாட்டுகறி ஒட்டிய வழக்குகள், ஜுபைர் கைது என பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இக்கைதுகள் நடவடிக்கைகள் அனைத்தும் ஜோடிக்கப்பட்ட ஆதாரங்களைக் கொண்டும் சட்ட மரபுகளை மீறியும் சங்கப்பரிவார கும்பல்-காவல் துறை-நீதிமன்றங்களின் கூட்டுசெயல்பாடுகளின் மூலமே அரங்கேறுகின்றன என்பது ஒவ்வொரு வழக்கிலும் துலக்கமாகவே தெரிகிறது. காவிருள் நம்மை மிக வேகமாக சூழ்ந்து வருகிறது. இதனை முறியடிப்பது மிகவும் அவசியமானதாகும்.

அழகு

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன