இரண்டரை ஆண்டுகள் கழித்து பழிவாங்கும் ஹூண்டாய் :
உரிமை கேட்ட தொழிலாளர்கள் மீது
அராஜக நடவடிக்கை

பணியின் போது உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு வேலை கொடுக்க வேண்டும் எனக் கேட்டுப் போராடிய தொழிலாளர்கள் மீது, இரண்டரை ஆண்டுகள் கழித்து ஹூண்டாய் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளதைப் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது. ஒழுங்கு நடவடிக்கை என்ற பெயரில் எடுக்கப்பட்டுள்ள பழிவாங்கும் நடவடிக்கையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறது.

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி


கண்டன அறிக்கை

13 ஏப்ரல் 2026

ஹூண்டாய் கார் நிறுவனம், தனது சென்னை, இருங்காட்டுக்கோட்டை உற்பத்தி நிலையத்தில் பணிபுரிந்து வந்த தொழிலாளர்களைத் திடீரென பணியிலிருந்து நீக்கியிருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற ஒரு போராட்டத்தில் கலந்துகொண்டதைக் காரணமாகக் கூறி, இந்தப் பணிநீக்கத்தை ஹூண்டாய் நிர்வாகம் நியாயப்படுத்துகிறது.

சென்னையில், இருங்காட்டுக்கோட்டையில் செயல்பட்டு வரும் ஹூண்டாய் கார் உற்பத்தி நிலையத்தில் பணிபுரிந்து வந்த பூபதி என்ற தொழிலாளி, கடந்த 2023ஆம் ஆண்டு தொழிற்சாலையில் பணிபுரிந்து கொண்டிருந்த போதே மாரடைப்பால் மரணமடைந்தார். பணியின் போது மரணமடைந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு வேலை வழங்கக் கோரி, அந்த ஆலையில் செயல்பட்டு வரும் சிஐடியு தலைமையிலான ஹூண்டாய் மோட்டார் இந்தியா தொழிலாளர் சங்கத்தைச் (HMIEU) சேர்ந்த தொழிலாளர்கள், 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் போராட்டம் நடத்தினார்கள்.

அந்தப் போராட்டம் நடந்து இரண்டரை ஆண்டுகள் கழித்து, தற்போது, அதில் ஈடுபட்ட 78 தொழிலாளர்கள் மீது ஹூண்டாய் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த வாரம், இந்தத் தொழிலாளர்களுக்கு “ஏன் தண்டனை வழங்கக்கூடாது?” என விளக்கம் கேட்டு குறிப்பாணை (Show Cause Notice) அனுப்பிய நிர்வாகம், உரிமைகளைக் கேட்பதில் முன்னணியாகச் செயல்பட்டு வந்த 10 தொழிலாளர்களிடம், “உங்களை ஏன் பணிநீக்கம் செய்யக்கூடாது?” எனக் காரணம் கேட்டிருந்தது.

தொழிலாளர்கள் விளக்கம் அளிக்க நிர்வாகம் கொடுத்திருந்த 48 மணி நேரக் கெடுவிற்குப் பிறகு, 78 தொழிலாளர்கள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக ஹூண்டாய் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதில், முன்னணியாகச் செயல்பட்டு வந்த 10 தொழிலாளர்களை நிரந்தரமாகப் பணிநீக்கம் செய்வதாகவும், 68 தொழிலாளர்களை ஒருமாத காலத்திற்கு இடைநீக்கம் செய்வதாகவும் அறிவித்திருக்கிறது.

போராட்டம் நடைபெற்று 2.5 ஆண்டுகள் கழித்து, தற்போது திடீரெனத் தொழிலாளர்கள் மீது ஹூண்டாய் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

பணியின் போது உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு வேலை கொடுக்க வேண்டும் எனக் கேட்டுப் போராடிய தொழிலாளர்கள் மீது, இரண்டரை ஆண்டுகள் கழித்து ஹூண்டாய் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளதைப் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது. ஒழுங்கு நடவடிக்கை என்ற பெயரில் எடுக்கப்பட்டுள்ள பழிவாங்கும் நடவடிக்கையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறது.

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன