சீமானின் வாக்குறுதிகள் : ஒரே ஓட்டில் வேலை, மின்சாரம், தமிழ்தேசியம் — Terms & Conditions Apply!

ஏப்ரல் 8, 2026
ஏப்ரல் 23, 2026 அன்று தமிழ்நாட்டிற்கான 17-வது சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஆளும் தி.மு.க. உட்பட அனைத்துக் கட்சிகளும் தங்களது தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டுள்ளன. அவற்றின் உள்ளடக்கம் பெரும்பாலும் இலவசங்களை (உரிமைகள் என்றழைக்கப்படுகின்றன) முன்னிறுத்தியே உள்ளன. ”நாம என்ன பிச்சைக்காரங்களா சேலை, வேட்டி வாங்குவதற்கு, வேலை வெட்டி கேளுங்கையா. வேலை வெட்டி கெடச்சா சேலை, வேட்டி நாமளே வாங்கலாம்” – என்று இலவசம் பற்றி ரஜினிகாந்த் நடித்த வள்ளி திரைப்படத்தில் ஒரு வசனம் வரும். இந்தப் […]

ஏப்ரல் 23, 2026 அன்று தமிழ்நாட்டிற்கான 17-வது சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஆளும் தி.மு.க. உட்பட அனைத்துக் கட்சிகளும் தங்களது தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டுள்ளன. அவற்றின் உள்ளடக்கம் பெரும்பாலும் இலவசங்களை (உரிமைகள் என்றழைக்கப்படுகின்றன) முன்னிறுத்தியே உள்ளன.

”நாம என்ன பிச்சைக்காரங்களா சேலை, வேட்டி வாங்குவதற்கு, வேலை வெட்டி கேளுங்கையா. வேலை வெட்டி கெடச்சா சேலை, வேட்டி நாமளே வாங்கலாம்” – என்று இலவசம் பற்றி ரஜினிகாந்த் நடித்த வள்ளி திரைப்படத்தில் ஒரு வசனம் வரும். இந்தப் படம் திரைக்கு வந்து சுமார் 25 ஆண்டுகள் கடந்துவிட்டன. இன்று இலவசங்கள் இந்தியாவின் வேறு சில மாநிலங்களிலும் கோலோச்சி வருகின்றன. எனவே இது எதனால் என்கின்ற கேள்வியும், அதற்கான பதிலும் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகின்றன.

அதேபோல், அனைத்து அலுவலகங்களுக்கும் சொல்லாமல் கொள்ளாமல் முதலமைச்சரே சென்று, அங்கு தப்பு செய்யும் அதிகாரிகளை எந்தவிதக் கேள்வியுமின்றி உடனடியாகத் தண்டனை வழங்குவது போன்ற காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். இது முதல்வன் என்ற திரைப்படத்தில் அர்ஜூன் ஒரு நாள் முதல்வராக நடிக்கும் காட்சிகளாகும். அதாவது, ஒரு நாளில் இத்தனை நடவடிக்கைகள் எடுக்க முடியும் என்றால், ஏற்கனவே இருந்த முதல்வர்கள் ஆண்டாண்டு காலமாக என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்ற கேள்வியையும், அதற்கு விடையாக அர்ஜூன் போன்றவர்கள் முதல்வராக வந்துவிட்டால் தங்களது கஷ்டங்கள் அனைத்தும் தீர்ந்துவிடும் என்ற கருத்தும் மக்கள் மத்தியில் விதைக்கப்பட்டன. இந்தப் படமும் திரைக்கு வந்து கால் நூற்றாண்டுகள் கடந்துவிட்டன.

மேற்குறிப்பிட்ட இரண்டு படங்களின் வசனங்களைக் கேட்பதற்கும், பார்ப்பதற்கும் மக்களுக்கு மிகவும் நெருக்கமானதாக அன்றும், இன்றும் இருக்கிறது. ஏனென்றால் ரஜினி, அர்ஜூன் போன்ற ஒரு மீட்பர் தங்களின் வாழ்க்கையை மாற்ற ஒருநாள் வருவார் என்ற நம்பிக்கையுடன் மக்கள் காத்துக்கிடக்கிறார்கள்.

இந்த அவலநிலையை மீட்பதற்கான ஒரே மீட்பர் ”நான்” தான் என்று நாம் தமிழர் கட்சியின் (நா.த.க) ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் மேடைதோறும் படம் காட்டி வருகிறார். இது நிழல்படம் அல்ல, நிஜப்படம். அதாவது, மேற்குறிப்பிட்ட படங்களை இன்றைய சூழலுக்கு ஏற்ப கதை, வசனம் எழுதி காட்சிப்படுத்தினால் மக்களிடம் எளிதாகச் சென்றடைய முடியும் என்ற முடிவுடன், தனது கட்சிக்கான 2026-ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையைப் படமாக எடுத்து மக்களுக்குத் திரையிட்டும், வசனம் பேசியும் வருகிறார். இது அவரது கற்பனைத் திறனுக்கான மிகச் சிறந்த சான்று என்றால் மிகையாகாது.

இந்த நேரத்தில், ஆமைக்கறி சாப்பிட்டது, அதிநவீன துவக்குகளைச் சுடுவதற்குப் பழகியது, பிரபாகரனுடன் போட்டோ எடுத்துக்கொண்டதாகச் சொன்ன புகைப்படம் என அத்தனையும் பொய்; இது உடனிருந்தவர்கள் அவரிடம் கூறியதைக் கேட்டு, அவையெல்லாம் தனக்கு நடந்ததாகக் கற்பனை செய்துகொண்டு பரப்புரை செய்ததை ஒருமுறை நினைவுபடுத்திக்கொள்ளவும்.

இவையெல்லாம் பொய்யாகக்கூட இருக்கட்டும். சீமான் சொல்வதுபோல் இலவசங்களைக் கொடுத்து மக்களின் உரிமைகள் அனைத்தையும் தமிழ்நாட்டை ஆண்ட இரண்டு திராவிடக் கட்சிகளும் பறித்துக்கொண்டது உண்மைதானே. எனவே, அவர் கூறுவதுபோல் தமிழ்தேசிய அரசியல் அமைந்துவிட்டால், குடிக்கக் குடிநீர் இலவசம், சுகாதாரம் (மருத்துவம்) இலவசம், கல்வி இலவசம் – இவை மூன்றையும் தவிர மற்றவையெல்லாம் காசுக்குத்தான். காஸ் தட்டுப்பாடின்றியும், மின்சாரம் தடையின்றியும் வழங்கப்படும். இவையிரண்டும் மாடு, ஆடு சாணத்தில் இருந்து சொந்தமாக உற்பத்தி செய்வேன் என்று கூறுகிறார். அனைவருக்கும் அரசு வேலை என்று கூறுகிறார். இது மாதிரியெல்லாம் மற்ற யாரும் தேர்தல் வாக்குறுதியாகக்கூட கொடுக்கவில்லையே! அனைவரும் இலவசம், இலவசம் என்று மட்டும்தானே கூறுகிறார்கள்.

சீமான் சொல்வதுபோல் அனைத்துக் கட்சிகளும் போட்டிபோட்டுக்கொண்டு இலவசங்களையே தங்களது தேர்தல் அறிக்கைகளாகக் கொடுத்துள்ளனர் என்பது எப்படி ஒரு அப்பழுக்கற்ற உண்மையோ, அதேபோல் இந்தியத் தேர்தல் ஆணையம் நடத்தும் தேர்தலில் பங்கெடுத்துக்கொண்டு, போட்டியிடுகின்ற மற்ற கட்சிகளைவிட அதிகமான வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றால், தனது தலைமையில் ஒரு தமிழ்தேசிய அரசு அமைந்துவிடும் என்று கூறுவது ஒரு அப்பழுக்கற்ற பொய்யே.

இந்தியத் தேர்தல் ஆணையம் அரசியலமைப்பின் Article 324 மூலம் அதற்கு வழங்கப்பட்ட அதிகாரம் காரணமாக, இந்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மாநிலங்களுக்குத் தேர்தலை நடத்துகிறது. கட்சிப் பதிவு, கட்சிச் சின்னம், அங்கீகாரம் பெறுவதற்கான நிபந்தனைகள், தேர்தல் விதிமுறைகள் எனப் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கிறது. இந்தக் கட்டுப்பாடுகளை எல்லாம் ஏற்றுக்கொண்டுதான் சீமான் தேர்தலில் களம் காண்கிறார். எனவே, தேர்தல் ஆணையம் நடத்தும் தேர்தல், தமிழ்தேசிய அரசில் யார் முதலமைச்சர் என்பதற்கான தேர்தல் அல்ல; மாறாக, இந்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழ்நாடு என்ற மாநிலத்திற்கான முதலமைச்சரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் மட்டுமே.

இந்த அடிப்படை உண்மையை மறைத்துவிட்டு, கற்பனையாகத் தான் கட்டியெழுப்பும் தமிழ்தேசியத்தில் மக்களுக்குக் கிடைக்கக்கூடிய பலன்களாக உலகின் பல்வேறு நாடுகளில் நடந்த நிகழ்வுகளை அங்கொன்றுமாக, இங்கொன்றுமாக எடுத்து, தனது கற்பனைத் திறனைக்கொண்டு காணொளிகளாகத் தொகுத்துள்ளார்.

இதனை ஏன் கற்பனை என்று கூறுகிறோம் என்றால், சீமானின் கூற்றுப்படியே சிங்கப்பூர், நெதர்லாந்து, கியூபா, அமெரிக்கா என அனைத்தும் நாடுகள். அதாவது, அந்த நாடு தனது எல்லைக்கு உட்பட்டு முடிவெடுக்கும் அதிகாரம் கொண்டது என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இந்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மாநிலமான தமிழ்நாட்டிற்கு, இந்தியத் தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் தேர்தலில் பங்கெடுத்துக்கொண்டு, இந்த நாடுகளைப் போல் சுயாதீனமாக முடிவு செய்வேன் என்று கூறுவது கற்பனையா? அல்லது நிஜமா?

”நாம் தமிழர் அரசு அடிப்படை மாற்றம், அமைப்பு மாற்றம், அரசியல் மாற்றம் ஆகியவற்றினை உயிர்மூச்சாகக் கொண்டு இலட்சிய அரசாகச் செயல்படும். நாங்கள் வீட்டினைப் புதுப்பித்து வெள்ளையடிக்க வந்த சீர்திருத்தலாளர்கள் அல்லர்; வீட்டையே இடித்துவிட்டுப் புதிதாகக் கட்டவந்த புரட்சியாளர்கள் என்பதை மக்களுக்கு நாம் தமிழர் அரசு பெருமிதத்தோடு பறைசாற்றுகிறது.” (பக்கம் 35, NTK-2026 Manifesto)

இந்தியத் தேர்தல் ஆணையம் நடத்துகின்ற தேர்தலில் பங்கெடுத்து வெற்றிபெற்றால் போதும், சீமானின் இலட்சிய அரசு அமைந்துவிடும். அதில் இந்திய அரசுக்குக் கட்டுப்படாமல், தான் விரும்புகின்ற ஒரு அரசை – அதாவது நிலவுகின்ற தமிழ் மாநில அரசை இடித்துவிட்டுப் புதிதாகத் தமிழ்தேசிய அரசைக் கட்டியெழுப்புவோம் என்று கூறுவது கற்பனையா? அல்லது நிஜமா?

ஒருவேளை சீமானின் கூற்றுப்படி சாத்தியம் என்று வைத்துக்கொள்ளுங்கள். தான் கட்டியெழுப்பும் தமிழ்தேசிய அரசு என்பது இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு மாநிலமாகத் தொடருமா? அல்லது ஒரு தனி நாடாக இருக்குமா?

முதல் கேள்விக்குச் சாத்தியமில்லை என்பதை ஏற்கனவே கூறிவிட்டோம். அதனடிப்படையில் இரண்டாவது கேள்வியே தவறுதான். ஒருவேளை நித்தியானந்தா கைலாசாவை ஒரு தனி நாடாக அறிவித்துக்கொண்டது போல், சீமான் தமிழ்தேசியத்தை அறிவிக்க முயற்சித்தால், இந்திய அரசு அவரைக் கைது செய்து சிறையில் அடைத்துவிடும். ஏனென்றால் இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி, இந்திய அரசின் எல்லைக்குட்பட்ட ஒரு இடத்தைத் தன்னுடைய நாடு என்று உரிமைகோர முடியாது. இந்தியாவை தேசிய இனங்களின் சிறைச்சாலை என்று கூறுவதற்கான காரணம், ஒரு மாநிலம் இந்தியாவுடன் சேர்ந்திருக்கவோ, பிரிந்து செல்லவோ முடிவெடுக்கும் அதிகாரமில்லை என்பதனால்தான்.

இவையெல்லாம் தற்காலிகமாக எழுப்பப்படும் கேள்விகள் மட்டுமே. சீமான் தமிழ்தேசியத்தை ஒரு தனி நாடாகக் கூறவில்லை. அது இந்தியாவிற்கு உட்பட்ட மாநிலமாகத்தான் இருக்கும் என்று கூறியுள்ளார்.

”… மக்கள் தொகை நான்கு மடங்காக உயர்ந்துள்ள நிலையில், மூன்று சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒரு நாடாளுமன்றத் தொகுதி என மாற்ற வேண்டும். இந்த மாற்றத்திற்காக வேண்டி நாம் தமிழர் அரசு மற்ற மாநிலங்களுடன் சேர்ந்து ஒன்றிய அரசை வலியுறுத்தும். மாற்றம் கொண்டுவரும்வரை போராடுவோம்.” (பக்கம் 37, NTK-2026 Manifesto)

இதுமட்டுமல்ல, இன்னும் ஒருபடி மேலே சென்று கூறியிருப்பதாவது:

”… ‘தற்போது இருக்கிற தேசிய இன மக்களின் உரிமைகளைக் கருத்தில் கொண்டு, இந்திய ஒன்றிய அரசியலமைப்புச் சட்டத்தைத் தற்கால அரசியல், சமூக, சூழல்களுக்கும் உலக ஒழுங்கிற்கும் ஏற்றாற்போல மாற்றி அமைக்க வேண்டும்’ என்ற கோரிக்கையை நாம் தமிழர் கட்சி வலியுறுத்துகின்றது.” (பக்கம் 39, NTK-2026 Manifesto)

”… எனவே, நாம் தமிழர் ஆட்சியில் ‘ஒன்றியத்தில் கூட்டாட்சி, மாநிலத்தில் தன்னாட்சி’ என்ற முழக்கத்தோடு, அனைத்து வகையான துறைகளுக்கும் சட்டமியற்றும் அதிகாரம் மாநில அரசிற்கு உண்டு என்கிற வகையில் இந்திய ஒன்றிய அரசியலமைப்புச் சட்டத்தில் உரிய மாற்றம் கொண்டுவரப் பாடுபடுவோம்.” (பக்கம் 41, NTK-2026 Manifesto)

தினமும் ஊடகங்களுக்குச் சூரப்புலி போல் பேட்டி கொடுக்கும் சீமான், தனது தேர்தல் அறிக்கையில் தமிழ்தேசிய உரிமையை வென்றெடுக்கக் கோரிக்கை வைப்பாராம். அதுவும்கூட அவர் பொதுவில் ‘தேசிய இன மக்களின் உரிமைகள்’ என்றுதான் கூறியுள்ளார். மேலும், அனைத்துத் துறைகளுக்கும் சட்டமியற்றும் அதிகாரம் மாநில அரசிற்கு உண்டு என்கிற வகையில் இந்திய ஒன்றிய அரசியலமைப்புச் சட்டத்தில் உரிய மாற்றம் கொண்டுவரப் பாடுபடுவாராம். இதெல்லாம் தேர்தலில் வெற்றிபெற்று முதலமைச்சராக அமர்ந்த பிறகு நடக்கக்கூடியவை. அதற்கு முன்னதாக, அனைத்திற்கும் சட்டமியற்றும் அதிகாரம் தனக்கு இருக்கிறது என்று பேசித்திரிவது வாய்ச்சவடால் அன்றி வேறொன்றுமில்லை.

அதேபோல், கடந்த மாதம் மின்னம்பலம் தொலைக்காட்சியில் நடைபெற்ற IAS/UPSC தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுடனான கலந்துரையாடலில், சீமான் பேசிய சில கருத்துகள் சமூக ஊடகங்களில் வைரலானது.

அதில் ஒரு மாணவர், ”தமிழகத்திற்கு ஒன்றிய அரசு முறையாகப் பணம் கொடுப்பதில்லை. ஒருவேளை நீங்கள் ஆட்சி அதிகாரத்தில் இருந்தால் எப்படிக் கையாண்டிருப்பீர்கள்?” என வினவினார்.

அதற்குப் பதிலளித்த சீமான், ”ஒன்றிய அரசுக்கு ஜி.எஸ்.டி பணம் கொடுக்க முடியாது என்று சொல்வேன். வெள்ளைக்காரனிடம் மட்டும்தான் வரிகொடா இயக்கம் நடத்த முடியுமா? இந்தக் கொள்ளைக்காரனிடமும் வரிகொடா இயக்கம் நடத்துவோம்” என அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். மேலும், ”கொடுக்க வேண்டியதை முறையாகக் கொடுக்காவிட்டால், நெய்வேலி மின்சாரத்தைத் துண்டித்துவிடுவேன்” எனவும் மிரட்டினார்.

அப்பேர்ப்பட்ட சீமான் தனது தேர்தல் அறிக்கையில் வரிகளைப் பற்றி என்ன கூறியிருக்கிறார் என்பதை நீங்களே படியுங்கள்:

”… ஊராட்சி வரிகள், விற்பனை வரி, சுங்க வரி, கலால் வரி, பருவ வரி, சரக்கு மற்றும் சேவை வரி (GST) போன்ற பல்வகை வரிகளை ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் 50:50 என்கிற வகையில் கையாளுகின்றன. இந்த முறையை மாற்ற வேண்டும். அந்தந்த மாநிலத்தில் பெறப்படும் வரிகளில் 75 விழுக்காடு மாநில அரசுக்கும், 25 விழுக்காடு ஒன்றிய அரசுக்குமாகப் பிரித்துக்கொள்ளும் வகையில், மற்ற மாநில அரசுகளுடன் இணைந்து நாம் தமிழர் அரசு போராடும்.” (பக்கம் 43, NTK-2026 Manifesto)

IAS/UPSC தேர்வுக்குத் தயாராகும் மாணவரின் கேள்விக்குப் பதில் அளித்ததற்கும், அறிக்கையில் எழுதியுள்ளதற்கும் ஏதாவது பொருத்தப்பாடு இருக்கிறதா? ஒருவேளை இருந்தால், தமிழ்தேசியமோ அல்லது இந்திய தேசியமோ என்பதுதான் வாய்ச்சவடாலான சீமானின் அரசியல் நிலைப்பாடு.

மற்ற கட்சிகள் எல்லாம் இலவசங்கள் கொடுப்பதாகச் சொல்லி ஓட்டு வேட்டை நடத்திவரும் தேர்தல் களத்தில், சீமான் தன்னுடைய கற்பனைத் திறனைக் கொண்டு காணொளிகளை உருவாக்கி, அதில் வரும் காட்சிகளுக்கு ஏற்ப வாய்ச்சவடால் அடித்து மக்களிடம் ஓட்டு வேட்டை நடத்திவருகிறார். ”அதில், தான் கட்டியமைக்க இருக்கும் தமிழ்தேசிய அரசில் அனைவருக்கும் அரசு வேலை, குடிநீர், மருத்துவம், கல்வி இலவசம் என்று கூறமாட்டேன்; இது ஒரு அரசின் கடமை என்றுதான் சொல்வேன்” என்று வாய்ச்சவடால் அடிக்கிறார். கழுதை விட்டையில் முன்விட்டையென்ன பின்விட்டையென்ன.

  • மகேஷ்

செய்தி ஆதாரம்:

NTK-2026-Manifesto

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன