தகவல் தொழில்நுட்ப விதிமுறைகள் திருத்த மசோதா :
சமூக ஊடகங்கள் மீதான கண்காணிப்பைத் தீவிரப்படுத்தும்
மோடி கும்பல்
மக்கள் நீண்ட வரிசையில் காலியான காஸ் சிலிண்டர்களோடு நின்ற காட்சிகளைப் பரவலாக செய்தி ஊடகங்களில் பார்த்திருப்போம். காஸ் பற்றாக்குறை காரணமாக உணவுப் பொருட்களின் விலை உயர்வு மற்றும் சிறு-குறுத் தொழில்களும் பாதிப்புக்குள்ளாகி உள்ளன. ஆனால் மோடி அரசாங்கமோ, காஸ் தட்டுப்பாடே இல்லை, அது மக்களின் பீதியால் உருவானது என்கிறது. இதனை விமர்சித்துப் பிரபலக் கார்டூனிஸ்ட் மஞ்சுள் வரைந்த கார்ட்டூனை எக்ஸ், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலிருந்து நீக்கியது மோடி கும்பல்.
அதேபோல், இரஷ்யாவிடமிருந்து 30 நாட்களுக்கு இந்தியா கச்சா எண்ணெய் வாங்கிக் கொள்ள அனுமதிப்பதாக டிரம்ப் பேசியதையும் மோடி அரசாங்கம் அதைக் கண்டிக்காமல் ஏற்றுக்கொண்டதையும் பலரும் விமர்சிக்கத் தொடங்கியதையடுத்து பேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டாகிராம், இணையதள செய்தி ஊடகங்களில் (Molitics, National Dastak, satirist Rajeev Nigam) பகிரப்பட்ட கார்ட்டூன்கள், காணொலிகளை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் நீக்கியது. மேலும் புல்கிட் மணி என்ற யூடியூப்பர், மோடியின் சுயமோக வழிப்பாட்டை கிண்டலடித்து வெளியிட்ட காணொளி உலகளவில் கவனத்தைப் பெறவே அதையும் ஒன்றிய அமைச்சகம் நீக்கியது. கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் நூற்றுக்கணக்கான சமூக வலைதளப் பதிவுகளை நீக்கியுள்ளது மோடி கும்பல்.
உயர்சாதியினருக்கு ஆதரவான UGC-இன் சுற்றரிக்கை, அமெரிக்கா உடனான ஒப்பந்தத்தில் இந்தியாவின் நலனை காவு கொடுத்திருப்பது, கச்சா எண்ணெய் இறக்குமதியில் டிரம்பின் அடியாள் போல நடந்து கொள்வது, ஈரான் தலைவர் காமெனி கொல்லப்பட்டதை கண்டிக்காதது, ஈரான்-இஸ்ரேல் போரில் அடாவடியாக நடந்து கொள்ளும் இஸ்ரேல், அமெரிக்காவுக்கு வெளிப்படையாக ஆதரவளிப்பது, பெட்ரோல்-டீசல்-காஸ் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு விசயங்களில் மோடி அரசாங்கத்தின் பார்ப்பன ஆதரவு, அதானி, அம்பானி போன்ற தரகு முதலாளிகள் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு சொம்பு தூக்குகின்ற நிலைப்பாடுகள் மக்கள் மத்தியில் அம்பலமாகி வருகின்றன.
மோடி கும்பலின் செயல்பாடுகளினால் மக்கள் கடுமையாகப் பாதிப்படைந்து வருகின்ற போதும் செய்தி ஊடகங்களோ அரசாங்கத்தின் நிலைப்பாட்டுக்கு ஆதரவான செய்திகளை மட்டுமே வெளியிடுகின்றன. மோடி கும்பலின் செயல்பாடுகளுக்கு எதிரான கடுமையான விமர்சனங்கள் சமூக ஊடகங்களிலும், இணைய செய்தித் தளங்களிலும் மட்டுமே வெளிவருகின்றன. எனவே தான், செய்தி ஊடகங்களைக் கட்டுப்படுத்தியது போல சமூக ஊடகங்களையும் முழுமையாக தனது தணிக்கைக்குள் கொண்டு வந்து, அதனைக் கட்டுப்படுத்துவதற்கு மோடி கும்பல் தொடர்ந்து முயற்சித்து வருகிறது. மூன்றாவது முறையாக மோடி பதவியேற்று ஒரு வருடத்திற்குள் சராசரியாக ஒருநாளைக்கு 290 சமூக வலைதளப் பதிவுகளை நீக்கியுள்ளதாக உள்துறை அமைச்சகமே கூறுகிறதென்றால் சமூக வலைதளங்கள் மீதான மோடி அரசாங்கத்தின் தீவிர கண்காணிப்பை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
திங்களன்று, தகவல் தொழில்நுட்ப (இடைத்தரகர் வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் ஊடக நெறிமுறைகள்) விதிகள், 2021–சட்டத்தில் [Information Technology(Intermediary Guidelines and Digital Media Ethics Code) Rules, 2021] புதிய விதிகளைச் சேர்த்து கருத்துக் கேட்புக்காக வெளியிடுள்ளது மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்.
புதிய விதிகளின் படி,
- அரசின் கொள்கைகளை விமர்சித்தோ அல்லது பிரதமருக்கு எதிராக விமர்சனங்களைப் (அல்லது நகைச்சுவையான) பதிவிடும் இணைய செய்தி நிறுவனங்கள், content creators மற்றும் அதைப் பகிரும் சாமானிய மக்கள் உட்பட அனைவரின் பதிவுகளும் நீக்கப்படும். வெளியிட்ட அல்லது பகிர்ந்த பதிவில் தவறுகள் இருப்பின் சம்பந்தப்பட்டவர்கள் மன்னிப்புக் கோரவேண்டும். பழைய விதிகளின்படி, தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் நீக்க வேண்டிய பதிவுகள் குறித்து சம்பந்தப்பட்ட சமூக வலைதள நிறுவனங்களுக்கு (FB, X, Insta, YouTube) தெரிவிக்கும். அதனடிப்படையில் அப்பதிவுகளும் நீக்கப்படும். புதிய விதிகளின் படி, சமூக வலைதளங்களில் பதிவிடும் சாமானிய மக்களுக்கு கூட நோட்டிஸ் அனுப்ப முடியும்.
- சமூக ஊடக நிறுவனங்கள் பதிவுகளை நீக்குவதற்கான காலக்கெடுவை 24-36 மணி நேரத்திலிருந்து 2-3 மணி நேரமாகக் குறைத்துள்ளனர்.
- பதிவுகளை நீக்குவதற்கான அதிகாரம் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திடம் மட்டுமே இருந்தது. அதை தற்போது கூடுதலாக ஐந்து அமைச்சகங்கள் பதிவுகளை நீக்குவதற்கான ஆணைகளை வழங்கலாம் என்று திருத்தியுள்ளனர்.
சர்ச்சைக்குரிய பதிவு என சந்தேகிக்கும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட அமைச்சகமோ, மாநில அரசுகளோ அல்லது துறை சார்ந்த அதிகாரிகளோ மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திற்கு தகவல் தெரிவிக்கும். தகவல் தொழில்நுட்ப அமைச்சகமே அப்பதிவுகளை நீக்குவதற்கான ஆணையை சமூக வலைதள நிறுவனங்களுக்கு அனுப்பும்.
தற்போது மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மட்டுமல்லாது பாதுகாப்பு துறை, உள்துறை, வெளியுறவுத் துறை, செய்தி ஒளிபரப்பு துறை மற்றும் செபி ஆகிய அமைச்சகங்களும் சமூக வலைதள நிறுவனங்களுக்கு பதிவுகளை நீக்குவதற்கான ஆணைகளை நேரடியாக வழங்குவதற்கான அதிகாரத்தை இப்புதிய திருத்தங்கள் வழங்குகிறது. இதை இன்னும் சற்று விரிவாக பார்ப்போம்.
தற்போது, இந்தியாவில் சமூக வலைதளப் பதிவுகளை நீக்குவதற்கு இரண்டு சட்ட வழிமுறைகள் உள்ளன. ஒன்று தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 69 (A) – இன் (இச்சட்டம் 2000-இல் கொண்டு வரப்பட்டது) படி, தேசியப் பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கைக்கு அச்சுறுத்தலாக இருக்கும் உள்ளடக்கங்களைக் கொண்ட சமூக வலைதளப் பதிவுகள் குறித்த தகவல்களை, பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் மாநில அரசுகள் சேகரித்து, தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திற்கு அனுப்பும். இப்பதிவுகளை பரிசீலித்தப் பிறகு அதனை நீக்குவதற்கான இறுதி ஒப்புதலை, சம்பந்தப்பட்ட சமூக வலைதள நிறுவனத்திற்கு, தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வழங்கும் மற்றொரு வழிமுறை தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 79 (3)(b)-இன் (இச்சட்டம் 2021-இல் அமல்படுத்தப்பட்டது) படி, மத்திய மாநில அரசுகள் மற்றும் அதன் அமைச்சகங்கள் பதிவுகளை நீக்குவதற்கான உத்தரவை உள்துறை அமைச்சகம் தலைமையிலான சஹ்யோக் இணையதளம் (Sahyog portal) வழியாக அனுப்ப முடியும்.
சஹ்யோக் இணையதளத்தைப் பயன்படுத்தி மத்திய மற்றும் மாநில அளவிலான பல்வேறு முகமைகள் சமூக ஊடக நிறுவனங்களுக்கு பதிவுகளை நீக்குவது அல்லது சமூக வலைதளக் கணக்கை முடக்குவதற்கான உத்தரவுகளை அனுப்ப முடிவதைப் போலவே, பிரிவு 69 (A)-வை பயன்படுத்தியும் மத்திய மற்றும் மாநில முகமைகள் பதிவுகளை நீக்குவதற்கான அதிகாரத்தை இப்புதிய சட்டத்திருத்தம் வழங்குகிறது.
செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி தவறான/பொய்யான பல செய்திகள் சமூக வலைதளங்களில் பகிரப்படுவது அதிகரித்துள்ளதால் அதனை கண்காணிப்பதற்கும் நீக்குவதற்கும் இச்சட்ட திருத்தம் தேவைப்படுகிறது என்கிறார் ஒன்றிய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்.
சமூக வலைதளங்களில் பல ஆயிரக்கணக்கான போலி கணக்குகளை (fake ids) பாஜகவும் ஆர்எஸ்எஸ்–இம் அதன் ஆதரவு அமைப்புகளும் வைத்துள்ளன. இதன் மூலம் மோடி அரசாங்கத்திற்கு ஆதரவாக பல பொய்யான தகவல்களை திட்டமிட்டே பரப்புகின்றனர். இதை தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் கண்டுகொள்வதே இல்லை. முஸ்லீம் வெறுப்பை பரப்புவது, மத மோதல்களைத் தூண்டுவது மற்றும் கலவரங்களை தூண்டும் நோக்கத்தில் ஆர்எஸ்எஸ்-பாஜகவினர் பகிரும் காணொளிகள் மற்றும் பதிவுகளை ஒன்றிய அரசு நீக்குவதும் இல்லை. அதை பகிர்கின்றவர்கள் மீது நடவடிக்கையயும் எடுப்பதில்லை.
அதே வேளையில் மோடியை விமர்சிக்கின்ற, மோடி கும்பலின் காவி-கார்ப்பரேட் சட்டங்களையும் நடவடிக்கைகளையும் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்துகின்ற இணைய செய்தி ஊடகங்கள், யூடியூபர்கள். சமூக வலைதளங்களில் எழுதுபவர்களின் பதிவுகள் மட்டும் தொடர்ந்து நீக்கப்படுவதும், சமூக வலைதளக் கணக்குகள் முடக்கப்படுவதும் கைது செய்யப்படுவதும் ஏன் என்று அமைச்சர் தான் பதில் சொல்ல வேண்டும்.
தற்போது நடைமுறையில் உள்ள சட்டங்களைக் கொண்டே சமூக வலைதளங்களில் தவறான செய்திகள் பரவுவதைக் கட்டுப்படுத்த முடியும். அவ்வாறு கட்டுப்படுத்த வேண்டுமென்றால் முதலில் பாஜக-ஆர்எஸ்எஸ் ஆதரவு சமூக வலைதளக் கணக்குகளைத் தான் முடக்க வேண்டி வரும். ஆனால் மோடி அரசாங்கம் கட்டுப்படுத்த நினைப்பது சமூக வலைதளங்களில் பரவும் தவறான/பொய்யான செய்திகளை மட்டுமல்ல. சமூக வலைதளங்களில், மோடியின் காவி-கார்ப்பரேட் செயல்பாடுகளை அம்பலப்படுத்தும் அனைவரையும் ஒடுக்க வேண்டும் என்பதே காவி கும்பலின் நோக்கம். அதிலிருந்தே தகவல் தொழில்நுட்ப விதிமுறைகளை மேலும் கடுமையாக்கியுள்ளனர்.
- மாணிக்கம்
https://thewire.in/rights/modi-criticism-satire-cartoon-takedown-blocked
https://thewire.in/rights/is-the-freedom-to-express-oneself-in-india-going-down-the-toilet
