தாழ்த்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடு வேண்டுமா?
 தாய் (இந்து) மதத்திற்குத் திரும்புங்கள்
உச்சிக்குடுமி மன்றம் தீர்ப்பு

எந்தவொரு மதத்தையும் பின்பற்றும் உரிமை, அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 25-ன் கீழ் அடிப்படை உரிமையாகும். எனில், மீண்டும் தாய் (இந்து) மதத்திற்குத் திரும்புங்கள் (கர்வாப்சி) எனக் கூறுவது கட்டாயப்படுத்துவதாகாதா? அவ்வாறு திரும்பினால் மட்டுமே தாழ்த்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகளைப் பெறமுடியும் என்று சொல்வது ஆசை வார்த்தை காட்டுவதாகாதா? இவற்றிற்கான தண்டனையை நீதி(காவி)மன்றங்களால் வழங்க முடியுமா!?

கிறிஸ்தவத்திற்கு மதம் மாறிய தாழ்த்தப்பட்ட மக்களுக்கு, 1950-ஆம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டத்தின்படி, தாழ்த்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடு மற்றும் சலுகைகள் கிடையாது. இந்து, சீக்கியம் அல்லது பௌத்தம் தவிர வேறு ஏதேனும் ஒரு மதத்திற்கு மாறினால், தாழ்த்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகள் இரத்தாகும் என்பதை உச்ச நீதி(காவி)மன்றம் சமீபத்திய (24.03.2026) தீர்ப்பில் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

அதாவது, இந்து மதம், சீக்கிய மதம் அல்லது பௌத்த மதம் தவிர்த்து வேறு ஏதேனும் ஒரு மதத்திற்கு மாறினால், சமூக-பொருளாதாரப் பாகுபாடும் தானாகவே நீக்கிவிடுகிறது என்று தனது தீர்ப்பில் கூறியுள்ளது.

இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதங்களுக்கு மாறினால் சமூக-பொருளாதாரப் பாகுபாடும் தானாகவே நீக்கிவிடுகிறது என்ற கருத்தை ஏற்றுக்கொண்டு தீர்ப்பு வழங்கியதற்கு எந்த அறிவியல் ஆதாரத்தையும் காட்டவில்லை. மாறாக, மதம் மாறினாலும் சமூக-பொருளாதாரப் பாகுபாடு தொடர்கிறது. எனவே, தாழ்த்தப்பட்ட கிறிஸ்தவர்களும், தாழ்த்தப்பட்ட இஸ்லாமியர்களும் தங்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த தாழ்த்தப்பட்டவர்களுக்கான உரிமைகளை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாகச் சட்டப் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மேலும், ஆந்திரா, தெலுங்கானா மற்றும் தமிழ்நாடு சட்டமன்றங்களில் இந்தக் கோரிக்கையை அங்கீகரித்தும், ஒன்றிய அரசை மீண்டும் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் தனித் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இவை எதுவும் நீதி(காவி)மன்றத்தின் கண்களுக்கு ஆதாரமாகத் தெரியவில்லை.

ஒன்றியத்தில் ஆட்சி செய்த காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து அரசுகளும் இந்தக் கோரிக்கையை நிறைவேற்றுவதற்குப் பதிலாக, அதிலுள்ள சாத்தியக்கூறுகளை ஆராய்வதாகக் கூறி ஆணையத்தை அமைத்தனர். பின்னர் அதையே காரணமாகக் கூறி தொடர்ந்து தள்ளிப்போட்டுக் கொண்டே வந்துள்ளனர்.

2004-ஆம் ஆண்டு மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு, ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி இரங்கநாத் மிஸ்ரா தலைமையில் ஒரு ஆணையத்தை அமைத்தது. கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாத்திற்கு மதம் மாறிய தாழ்த்தப்பட்டவர்கள் தாழ்த்தப்பட்டவர்களாக அங்கீகரிக்கப்பட வேண்டுமா? வேண்டாமா? என்பதையும், அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதா? வழங்கக் கூடாதா? என்பதையும் ஆய்வு செய்யும்படி கோரியது.

அதனடிப்படையில் 2007-ஆம் ஆண்டு அந்த ஆணையம் ஒரு அறிக்கையை ஒன்றிய அரசுக்கு அளித்தது. அதில், மதம் மாறிய தாழ்த்தப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் என்று அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று கூறியது. அதேபோல், தாழ்த்தப்பட்டவர்கள் என்பதைக் கண்டறிவதற்கு மதத்தை ஒரு அளவுகோலாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும், சாதிய அடையாளத்தை மட்டுமே அளவுகோலாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கூறியது. மேலும், மதம் மாறிய தாழ்த்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்றும் கூறியது.

மன்மோகன் சிங் அரசாங்கம் எதனை ஆராய்வதற்காக ஆணையத்தை அமைத்ததோ, அந்த ஆணையம் ஆராய்ந்து அறிக்கையைக் கொடுத்த பிறகும் அதனைக் கிடப்பில் போட்டது.

அதேபோல், தேசிய சிறுபான்மையினர் ஆணையத்திற்காகச் சதீஷ் தேஷ்பாண்டே மற்றும் கீதிகா பாப்னா ஆகியோர் 2004-05 ஆம் ஆண்டு தரவுகளின் அடிப்படையில் தயாரித்த அறிக்கையில், நகர்ப்புறங்களில் உள்ள தாழ்த்தப்பட்ட முஸ்லிம்களில் 47 சதவீதம் பேர் வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழ்கின்றனர் என்றும், கிராமப்புறங்களில் 40 சதவீத தாழ்த்தப்பட்ட முஸ்லிம்களும், 30 சதவீத தாழ்த்தப்பட்ட கிறிஸ்தவர்களும் வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ளனர் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய தாழ்த்தப்பட்ட மக்களை, தாழ்த்தப்பட்ட மக்கள் என்று அங்கீகரிப்பதற்கான உத்தரவைக் குடியரசுத் தலைவர் வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் சில கிறிஸ்தவ அமைப்புகள் 2004-ஆம் ஆண்டு மனு தாக்கல் செய்தன.

சமீபத்தில் அந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பாஜக ஒன்றிய அரசு மேற்சொன்ன இரங்கநாத் மிஸ்ரா ஆணையத்தின் அறிக்கையை நிராகரித்து விட்டதாகவும், ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன் தலைமையில் வேறொரு புதிய ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த ஆணையத்தின் அறிக்கை வரும் வரை வழக்கை ஒத்திவைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டது.

ஒன்றிய அரசின் இந்தக் கோரிக்கையை உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அமர்வு நிராகரித்தது. இரங்கநாத் மிஸ்ரா ஆணையத்தின் அறிக்கை நிராகரிக்கப்பட்டாலும், அதில் கூறியுள்ள தகவல்களைப் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வதாக உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது.

அதன் பிறகும் ஒன்றிய பாஜக அரசாங்கம், அந்த ஆணையத்திற்கு இரண்டாண்டுகள் கால நீட்டிப்பு வழங்கியுள்ளது. இருந்தும் இன்றுவரை அந்த ஆணையம் எந்த அறிக்கையும் கொடுக்கவில்லை.

மோடி அரசாங்கம் நியமித்த நீதிபதி பாலகிருஷ்ணன் ஆணையத்தின் அறிக்கை வரும் வரை வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என்ற பாஜக-வின் கோரிக்கையை ஒருபுறம் நிராகரிப்பதாகக் கூறிக்கொண்டே, மறுபுறம் இரங்கநாத் மிஸ்ரா ஆணையத்தின் அறிக்கை பாஜக-வால் நிராகரிக்கப்பட்டாலும் அதில் கூறியுள்ள தகவல்களைப் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வதாகக் குறிப்பிட்டதைப் பற்றிப் பொருட்படுத்தாமல், அதாவது பாம்பும் சாகாமல், தடியும் நோகாமல் காவி-பாசிச நடவடிக்கைக்கு ஆதரவாக இந்தத் தீர்ப்பை உச்ச நீதி(காவி) மன்றம் வழங்கியுள்ளது.

நீதி(காவி)மன்றத்தின் தீர்ப்பை ஆதாரமாகக் கொண்டு காவி பாசிஸ்டுகள், “இந்து மதத்தில் மட்டும்தான் சாதியப் பாகுபாடு இருக்கிறது” என்று தூற்றி வருபவர்கள், “இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதங்களிலும் சாதியப் பாகுபாடு இருக்கிறது” என்பதை ஏன் ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள்? என்று கேள்வி எழுப்புகின்றனர்.

இதன்பொருள், “இஸ்லாம், கிறிஸ்தவ மதத்தைப் போன்றதுதான் இந்து மதமும். அவ்வாறிருக்க இந்து மதத்தில் மட்டும்தான் சாதியப் பாகுபாடு இருப்பதுபோல் ஏன் பொய்ப் பிரச்சாரம் செய்கிறீர்கள்?” என்றும், அவ்வாறு மதம் மாறியவர்கள் மீண்டும் தாய் (இந்து) மதத்திற்கே திரும்புங்கள் (கர்வாப்சி) என்றும் காவி பாசிஸ்டுகள் கூறிவருகின்றனர்.

இப்படிக் கூறுவதில் ஏதோ நியாயம் இருப்பதுபோல் தோன்றலாம். ஆனால் உண்மை வேறாக இருக்கிறது. கர்வாப்சி என்பது ஆர்எஸ்எஸ் சித்தாந்தம். அதன் நோக்கம் இந்து இராஷ்டிரத்தை உருவாக்குவது. அதற்கான அரசியல் பிரிவுதான் பாஜக என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை.

தாழ்த்தப்பட்டவர்கள் கிறிஸ்தவர்களாகவும், முஸ்லிம்களாகவும் மாறினாலும், பொருளாதார மட்டத்தில் பின்தங்கிய நிலையில் இருப்பதோடு, அவர்களுக்கு எதிரான சமூகப் பாகுபாடும் தொடர்கிறது. தனி தேவாலயங்கள், மசூதிகள் மற்றும் கல்லறைகளுக்குச் செல்ல அவர்கள் கட்டாயப்படுத்தப்படுகின்றனர் என்ற சமூக யதார்த்தத்தை எண்ணற்ற சமூகவியல் ஆய்வுகளும், கள ஆய்வுகளும் எடுத்துக் காட்டினாலும், அவற்றையெல்லாம் புறந்தள்ளிவிட்டு நீதிமன்றத்தின் மூலம் தீர்ப்புகளைப் பெறுகின்றனர். பின்னர் அத்தீர்ப்புகளையே ஆதாரமாக வைத்து ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்களையே தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

எந்தவொரு மதத்தையும் பின்பற்றும் உரிமை, அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 25-ன் கீழ் அடிப்படை உரிமையாகும். எனில், மீண்டும் தாய் (இந்து) மதத்திற்குத் திரும்புங்கள் எனக் கூறுவது கட்டாயப்படுத்துவதாகாதா? அவ்வாறு திரும்பினால் மட்டுமே தாழ்த்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகளைப் பெறமுடியும் என்று சொல்வது ஆசை வார்த்தை காட்டுவதாகாதா? இவற்றிற்கான தண்டனையை நீதிமன்றங்கள் வழங்குமா?

ஒருபுறம் தாழ்த்தப்பட்ட மக்கள் சமூக-பொருளாதார ரீதியாகப் புறக்கணிக்கப்படுவதைப் பற்றிக் கிஞ்சித்தும் கவலைப்படாத உச்ச நீதிமன்றம், மறுபுறம் பார்ப்பனர்கள் பொருளாதார ரீதியாகப் பின்தங்கியிருப்பதைப் பற்றிப் பொங்கி, அவர்களுக்கு ஒன்றிய அரசுப் பணிகளிலும், கல்வி நிறுவனங்களிலும் 10% இட ஒதுக்கீடு வழங்கியுள்ளது. ஆண்டிற்கு 8 இலட்சம் வருமானமும், 5 ஏக்கர் விவசாய நிலமும், 1000 சதுர அடி குடியிருப்பு வீடும் வைத்திருப்பவர்களை EWS (Economically Weaker Section) என்று வரையறுத்துள்ளது.

அதேபோல், தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டிக் கொழுக்கும் முதலாளிகளுக்கு எதிராக வாய் திறக்காத உச்ச நீதிமன்றம், முதலாளிகளுக்கு ஆதரவான தொழிலாளர்கள் சட்டங்களை நீர்த்துப்போகச் செய்யும் நான்கு சட்டத் தொகுப்புகளைப் பற்றி வாய்கிழியப் பேசி, உழைக்கும் மக்கள் மீதான முதலாளிகளின் பொருளாதாரச் சுரண்டலை நியாயப்படுத்துகிறது.

உழைக்கும் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் சமூக-பொருளாதாரப் பாகுபாடுகளைக் களையாமல் அப்படியே தொடர வேண்டும் என்று விரும்பும் காவி பாசிச நடவடிக்கைகளுக்குக் கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் உச்ச நீதி(காவி) மன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு ஒரு உதாரணம் மட்டுமே.

  • மகேஷ்

 

செய்தி ஆதாரம்

https://thewire.in/caste/explainer-the-controversy-over-scheduled-caste-status-of-christians-and-muslims
https://www.bbc.com/tamil/articles/c03959epgnqo
https://www.bbc.com/tamil/india-63194472

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன