வெனிசுலா, ஈரானை அடுத்து கியூபாவைக் குறிவைக்கும் டிரம்ப்
கடந்த ஆண்டில் உலகின் பல்வேறு நாடுகள் மீது வரி விதிப்புகள் என்ற பெயரில் வர்த்தகப் போரைத் தொடுத்து அவற்றைத் தனது மேலாதிக்கத்தை ஏற்கச் செய்யும் வேலையில் ஈடுபட்ட அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்த ஆண்டு தொடக்கம் முதலே நேரடியான இராணுவத் தலையீடுகள் மூலமாகத் தனது மேலாதிக்கத்தை நிறுவும் வேலையில் இறங்கியிருக்கிறார்.
முதலில் வெனிசுலாவிற்குள் நுழைந்த அமெரிக்க இராணுவம் அந்நாட்டு அதிபர் மாதுரோவைக் கடத்திச் சென்றது. பிறகு இஸ்ரேலுடன் கூட்டுச் சேர்ந்து ஈரானின் உச்ச தலைவர் கமேனியைக் கொன்றதுடன் அந்நாட்டின் மீது தொடர் தாக்குதல்களைத் தொடுத்தது. தற்போது அடுத்த கட்டமாக கியூபாவில் நுழைந்து அந்நாட்டு அதிபர் மிகெல் டியாஸ் கானெல்லைப் பதவியில் இருந்து அகற்ற அமெரிக்கா தயாராகி வருகிறது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் சமீபத்தில் அளித்திருக்கும் பேட்டி ஒன்றில் தான் ‘கியூபாவைக் கைப்பற்றும் பெருமையை அடைய விரும்புவதாக’ கூறியிருக்கிறார். மேலும் தான் நினைத்தால் கியூபாவை விடுவிக்கவோ அல்லது ஆக்கிரமிக்கவோ, என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும் என்று திமிராகக் கூறியிருக்கிறார்.
இந்த ஆண்டின் தொடக்கம் வரை கியூபாவின் எரிபொருள் இறக்குமதியில் 44% பங்கினை அளித்துவந்த மெக்சிகோ, அமெரிக்க அரசின் நிர்ப்பந்தம் காரணமாக கச்சா எண்ணெய் வழங்குவதை முற்றிலுமாக நிறுத்திக் கொண்டது. வெனிசுலா அதிபர் மாதுரோவைக் கைது செய்ததற்குப் பிறகு அந்நாட்டிலிருந்து கியூபாவிற்கு கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்வதை அமெரிக்கா தடை செய்தது.
ஏற்கெனவே அமெரிக்காவின் தடையின் காரணமாக மற்ற உலக நாடுகள் கியூபாவிற்கு எண்ணெய் வழங்க மறுத்துவந்த நிலையில், கியூபாவிற்கு ஆதரவாக வெனிசுலா மட்டுமே நின்றது. கியூபாவின் அதிபராக இருந்த பிடல் காஸ்ட்ரோவும், வெனிசுலா அதிபராக இருந்த ஊகோ சாவேசும் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி எண்ணெய் வர்த்தகம் இத்தனை ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.
பணத்திற்கு பதிலாக கியூபாவின் மருத்துவர்கள், ஆசிரியர்கள், பாதுகாப்புத் துறை ஆலோசகர்கள் உள்ளிட்டவர்களின் சேவையைப் பெற்றுக் கொண்டு அந்நாட்டிற்கு கச்சா எண்ணெயை வெனிசுலா ஏற்றுமதி செய்தது. ஒரு கட்டத்தில் அமெரிக்கத் தடையின் காரணமாக பொருளாதார நெருக்கடியைச் சந்தித்த கியூபாவிற்கு உதவும் வகையில் அந்நாட்டின் தேவையை விடப் பல மடங்கு கச்சா எண்ணெயைக் கொடுத்து, அதனை கியூபா மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருவாய் ஈட்டவும் வெனிசுலா உதவியது.
அத்தகைய நட்பு நாடான வெனிசுலாவைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்ததன் மூலம், கியூபாவில் எரிபொருள் தட்டுப்பாட்டை அமெரிக்கா திட்டமிட்டு உருவாக்கியிருக்கிறது. இது கியூபாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால் அந்நாடு முழுமையாக இருளில் மூழ்கியிருக்கிறது. சில மாகாணங்களில் நாளொன்றுக்கு 20 மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. மின்சாரம் இல்லாததால் நீரேற்று நிலையங்கள் செயல்படாமல் மக்களுக்குக் குடிநீர் விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனைகளில் பல இலட்சம் அறுவை சிகிச்சைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. அவசர சிகிச்சைப் பிரிவுகளும், தீவிர சிகிச்சைப் பிரிவுகளும் கிடைக்கும் எரிபொருளைக் கொண்டு ஜெனரேட்டர்களை இயக்கி தற்காலிகமாக இயங்கிக் கொண்டிருக்கின்றன. மருந்துகளும், தடுப்பூசிகளும் குளிரூட்டும் வசதி இல்லாமல் பாழாகிவருகின்றன.
பள்ளி கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுவிட்டன. உள்ளூர் போக்குவரத்துகள், பேருந்துகள், இரயில்கள் இயக்கப்படாமல் முடங்கிவிட்டன. வெளிநாடுகளுக்குச் செல்வதற்கான விமானங்களும் கூட இரத்து செய்யப்பட்டுவிட்டன.
விவசாயப் பொருட்கள் அறுவடையும், விநியோகமும் நடைபெறவில்லை. உணவுப் பொருட்கள் பதப்படுத்துவதும் இயலாத நிலை ஏற்பட்டுள்ளதால் கியூபா மிகப்பெரிய உணவுப் பஞ்சத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கிறது.
கியூபாவின் மிகப்பெரிய தொழிற்துறையான நிக்கல் சுரங்கத் தொழில் உள்ளிட்ட அனைத்து தொழிற்சாலைகளும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
மொத்தத்தில் அமெரிக்கா ஏற்படுத்தியுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக கியூபா மிகப்பெரிய பொருளாதார மற்றும் மனிதாபிமான நெருக்கடியைச் சந்தித்து வருகிறது.
இவ்வாறு நெருக்கடியில் தள்ளுவதன் மூலம் அந்நாட்டினைப் பணிய வைக்க முடியும் என அமெரிக்கா நினைக்கிறது. அந்நாட்டின் அதிபரை மாற்றி விட்டு அந்த இடத்தில் அமெரிக்காவின் கைப்பாவை ஆட்சியை நிலைநாட்ட விரும்புகிறது. வெனிசுலா, ஈரானைத் தொடர்ந்து கியூபாவிலும் ஒரு ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் அமெரிக்கா இறங்கக் கூடும் என்பதையே டிரம்ப் அளித்துள்ள பேட்டி காட்டுகிறது.
ஆனால் வெனிசுலாவிலும், ஈரானிலும் அமெரிக்காவின் யுக்தி பலிக்கவில்லை. அமெரிக்க நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் இருந்த வெனிசுலாவின் எண்ணெய் உற்பத்தி நிலையங்கள் ஊகோ சாவேஸ் அந்நாட்டு அதிபராக இருந்த போது நாட்டுடைமையாக்கப்பட்டுவிட்டன. தற்போது அந்நாட்டு அதிபராக இருக்கும் மாதுரோவைக் கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்திவிட்டால், நாட்டுடமையாக்கப்பட்டுள்ள அந்நாட்டு எண்ணெய் உற்பத்தி நிலையங்களை, மீண்டும் அமெரிக்க நிறுவனங்களின் கையில் ஒப்படைக்க முடியும் என டிரம்ப் நினைத்தார்.
மாதுரோவிற்குப் பிறகு வெனிசுலாவை ஆட்சி செய்து வரும் துணை அதிபர் டெல்சி ரோட்ரிகோஸின் இடைக்கால அரசு அமெரிக்காவின் நிர்ப்பந்தம் காரணமாக எண்ணெய் உற்பத்தியில் தனியார் நிறுவனங்கள் ஈடுபட அனுமதிக்கும் சட்டம் ஒன்றைக் கொண்டு வந்தது. ஆனால் இந்தச் சட்டத்திற்கு எதிராக அந்நாடு முழுவதும் மிகப்பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
எண்ணெய் உற்பத்தி நிலையங்களில் வேலை செய்யும் தொழிலாளர்கள் உட்பட அனைத்துத் துறைத் தொழிலாளர்களும் அமெரிக்காவின் அச்சுறுத்தலுக்கு அடிபணிந்த இடைக்கால அரசைக் கண்டித்துப் போராடி வருகின்றனர். அதுமட்டுமன்றி தினந்தோரும் நடைபெறும் மக்கள் போராட்டங்கள், இடைக்கால அரசு அமெரிக்காவிற்கு ஆதரவாக செயல்பட்டால் அதனைத் தூக்கியெறிய மக்கள் தயாராக இருப்பதை அமெரிக்காவிற்கு உணர்த்தியிருக்கிறது. இதனைக் கண்டு அஞ்சிய அமெரிக்க நிறுவனங்கள், அவர்களைப் பாதுகாப்பதாக டிரம்ப் வாக்களித்த பிறகும் கூட, வெனிசுலாவில் முதலீடு செய்ய முன்வரவில்லை.
வெனிசுலாவில் இப்படி என்றால் ஈரான் விஷயத்தில், அமெரிக்கா இப்போது, தான் வைத்த பொறியில், தானே சென்று மாட்டிக் கொண்டு விழிக்கிறது. ஈரானின் இஸ்லாமிய அடிப்படைவாத ஆட்சிக்கு எதிராக அந்நாட்டு மக்கள் நடத்திய போராட்டங்களைக் கண்ட பிறகு, அந்நாட்டின் உச்ச தலைவர் கமேனியைக் கொன்றுவிட்டால் அந்நாட்டில் மீண்டும் அமெரிக்க அடிவருடியான ஷாவின் ஆட்சியைக் கொண்டுவந்துவிடலாம் என டிரம்ப் நினைத்தார்.
ஆனால் அமெரிக்க இஸ்ரேல் படைகளின் கூட்டுத் தாக்குதலில், ஈரானின் ஒட்டுமொத்த இராணுவத் தலைமையும், அரசியல் தலைமையும் படுகொலை செய்யப்பட்ட பின்பும் கூட அமெரிக்கா நினைத்தது போல அங்கே ஒரு ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவர முடியவில்லை. ஈரான் அமெரிக்க தாக்குதல்களைத் தாக்குப் பிடித்தது மட்டுமல்லாது, திருப்பித் தாக்கவும் தொடங்கி விட்டது. அமெரிக்காவுடன் நட்புக் கொண்டிருக்கும் வளைகுடா நாடுகள் மீது ஏவுகணைகளை வீசித் தாக்குதல் தொடுத்ததன் மூலம் அந்நாடுகளுக்கு போர் காலத்தில் அமெரிக்காவால் உதவ முடியாது என்பதை ஈரான் உணர்த்தியிருக்கிறது. இதன் மூலம் பாதுகாப்பிற்காக, இராணுவ ரீதியில், அமெரிக்காவைச் சார்ந்திருக்கும் நிலை குறித்து வளைகுடா நாடுகள் மறுபரிசீலனை செய்யத் துவங்கியிருக்கின்றன.
அதே போல ஹார்மூஸ் நீரிணையை மூடியதன் மூலம் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் எரிபொருள் நெருக்கடியை ஈரான் உருவாக்கியிருக்கிறது. அதிலும் குறிப்பாக அமெரிக்காவின் நட்பு நாடுகளுக்கு வளைகுடாவில் இருந்து கச்சா எண்ணெய், எரிவாயு உள்ளிட்டவை செல்லாமல் ஈரான் தடுத்து நிறுத்தியிருக்கிறது. அமெரிக்காவின் தாக்குதல்கள் ஒவ்வொன்றிற்கும் பதிலடியாக வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்காவின் நிறுவனங்களையும் தொழிற்சாலைகளையும் ஈரான் தாக்கி அழித்து வருகிறது.
ஈரானின் பதிலடியை அமெரிக்காவால் சமாளிக்க முடியவில்லை என்பது அப்பட்டமாகத் தெரிகிறது. ஒருதலைப்பட்சமாக தாக்குதலை நிறுத்துவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்திருப்பதற்கு இதுதான் முக்கிய காரணம். தற்போது தாக்குதல் நிறுத்தத்தை 5 நாட்களில் இருந்து 10 நாட்களாக அதிகரித்திருக்கும் டிரம்ப் ஈரானுடனான பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்து வருவதாக கதையளக்கிறார்.
வெனிசுலாவிலும், ஈரானிலும் சூடுபட்டது போதாதென்று தற்போது கியூபாவிற்குள் நுழைய நினைக்கிறார் டிரம்ப். ஆனால் கியூபாவின் மக்கள் ஏற்கெனவே அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்து முறியடித்திருக்கிறார்கள் என்ற வரலாற்றை டிரம்ப் மறந்துவிட்டார். பல பத்து ஆண்டுகளாக அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள், அரசியல் அழுத்தங்கள், தனிமைப்படுத்தல்கள் ஆகியவற்றை எதிர்கொண்டு வந்த கியூபா, வெளிநாட்டு அழுத்தத்துக்கு தலைகுனியும் நாடல்ல என்பதை நிரூபித்துள்ளது. என்னதான் ஆட்சியாளர்கள் அமெரிக்காவின் அச்சுறுத்தலுக்கு அடிபணிந்தாலும் வெனிசுலா நாட்டு மக்களைப் போல கியூபாவின் உழைக்கும் மக்களும் அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை முறியடித்துத் தக்க பதிலடி கொடுக்கத்தான் போகிறார்கள்.
- அறிவு
