மலக்குழி மரணங்கள் – இதுவே வல்லரசு இந்தியாவின் சாதனை!

விஸ்வகுரு, தற்சார்பு இந்தியா, 2047-இல் வல்லரசு இந்தியா, உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரம், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு, செயற்கை நுண்ணறிவில் ஜாம்பவான், செல்போன் உற்பத்தியில் முதலிடம், அந்நிய முதலீடுகளின் சொர்க்கம் என்று பெருமைப்பட்டுக் கொள்ளும் மோடி கும்பலும் அதற்கு ஆதரவு ஓதும் இந்திய ஆளும் வர்க்கமும், மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளும் காட்டுமிராண்டித்தனமான நடைமுறையை இன்னும் ஒழிக்காமல் இருப்பதைச் சாதனையாக எண்ணி ஒருவர் முகத்தில் ஒருவர் என அவர்களே காரி உமிழ்ந்து கொள்வதே சரியாக இருக்கும்.

“தூய்மை இந்தியா” என்ற திட்டத்தைப் பற்றி ஞாபகம் இருக்கிறதா? கையால் மலம் அள்ளுவது மற்றும் சாக்கடைகளில் இறங்கி சுத்தம் செய்வதை ஒழிப்பது, அனைத்துக் குடும்பங்களுக்கும் நவீன கழிப்பிடங்களைக் கட்டித்தருவது என்று சொல்லி 2014-இல் இத்திட்டத்தைத் தொடங்கினர். இங்கொன்றும் அங்கொன்றுமாக கழிப்பறைகள் கட்டியதாக போட்டோவுக்கு போஸ் கொடுத்தார்களே ஒழிய, இத்திட்டம் தொடங்கப்பட்டு பதினோரு ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் மலக்குழி மரணங்களை இவர்களால் ஒழிக்க முடியவில்லை.

2017 முதல் 2026 வரை கழிவு நீர் கால்வாய்கள் மற்றும் மலக்கழிவுத் தொட்டிகளில் (sewer and septic tanks) சுத்தம் செய்யும் போது 622 துப்புரவுத் தொழிலாளர்கள் இறந்துள்ளதாக மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருக்கிறார். இதில் உத்தரப்பிரதேசத்தில் 86 பேரும் மகாராஷ்டிராவில் 82 பேரும் தமிழ்நாட்டில் 77 பேரும் குஜராத்தில் 73 பேரும் இறந்துள்ளனர்.

மேலும், மனிதக்கழிவுகளை கையால் அள்ளும் முறை (Manual Scavenging) முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டதாகவும் மனிதக் கழிவுகளைச் சுத்தம் செய்வது என்பது சாதி அடிப்படையிலான வேலை (Caste based work) இல்லை என்றும் பேசியிருக்கிறார் பாஜக-வின் தலித் முகமான அத்வாலே.

ஆனால் 2025 ஜூலையில், துப்புரவுத் தொழிலாளர்களின் உரிமைகளுக்காகப் போராடி வரும் தலித் ஆதிவாசி சக்தி அதிகார அமைப்பு (Dalit Adivasi Shakti Adhikar Manch) வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில், மனிதக் கழிவுகளை கைகளினால் சுத்தம் செய்யும் வேலையில் 2024 இல் 116 பேரும் 2025-இன் பாதிவரை 42 பேரும் இறந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

சஃபாய் கரம்சாரி அந்தோலன் (SKA) அமைப்பு தரும் புள்ளிவிவரங்களின் படி (2024), 2000-ஆம் ஆண்டிலிருந்து சமூக உலர் கழிப்பறைகளை (Dry latrines) சுத்தம் செய்வதில் 26,00,000 பேரும், கழிவுநீர்க் குழாய்களைச் சுத்தம் (Sewer cleaning) செய்வதில் 7,70,000 தொழிலாளர்களும், ரயில் நிலையங்களில் மனிதக் கழிவுகளை அகற்றும் பணியில் (Manual scavenging) 36,176 பேரும் ஈடுபட்டுள்ளதாகவும் இந்த நச்சு வாயுக்களால் கிட்டத்தட்ட 1,760 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கூறுகிறது.

மனிதக்கழிவுகளை கையால் அள்ளும் முறை முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டதாக அமைச்சர் கூறுகிறார். ஆனால் அதற்கெதிராகப் போராடும் அமைப்புகளோ இவ்வேலையினால் நூற்றுக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளதாக ஆதாரங்களோடு கூறுகின்றன.

தலித் சமூகப் பின்புலத்திலுள்ளவர்களே இப்பணிகளில் ஈடுபட்டிருப்பதும் மறுக்க முடியாத உண்மையாகும். இந்த உண்மைகளை ஏற்றுக்கொள்ள மறுக்கும் மோடி கும்பல் தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் மனிதக் கழிவுகளை கைகளினால் அகற்றும் முறை ஒழிக்கப்பட்டுவிட்டதாகவும் கழிவுகளை அகற்றும் பணிக்கும் சாதிக்கும் தொடர்பில்லை என்றும் வாய் கூசாமல் பொய் சொல்லுகிறது.

மேற்கண்ட தரவுகளை ஒப்புக்கொண்டால் இந்து மதத்தில் சாதியப் பாகுபாடுகளும் அதனடிப்படையிலான வேலைப்பிரிவுகளும் உள்ளதென்பதை ஒப்புக்கொள்ள நேரிடும். இது பாஜக பேசிவரும் சனாதன கருத்துக்கே எதிராகப் போய் முடியும். பாஜக-வைப் பொறுத்தவரை சனாதனம்/இந்து மதம் என்பது சாசுவதமானது, பிழையற்றது. இதில் சாதி, ஏற்றத்தாழ்வு என்பதெல்லாம் முகலாய மற்றும் ஐரோப்பியர்களால் புகுத்தப்பட்டதாகும்.

எனவேதான் மோடி தனது புத்தகமான கர்மயோகில், தலைமுறைத் தலைமுறையாக கழிவறைகளைச் சுத்தம் செய்யும் வேலைகளில் ஈடுபட்டு வரும் வால்மீகி சமூகத்தினரைக் குறிப்பிட்டு, அது அவர்களுடைய வேலை என்பதைத் தாண்டி ஒரு ஆன்மீக அனுபவத்தைப் போன்ற ஒரு செயலாக உணருகின்றனர் என்று எழுதியிருந்தார். 2019 இல், நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு, நடந்த கும்பமேளாவில் கலந்து கொண்டு ஒரு சில துப்புரவு பணியாளர்களின் காலைக் கழுவி நாடகம் ஆடினார். தூய்மை இந்தியா திட்டத்தில் கூட, சுகாதாரமான கழிப்பிட வசதி என்று பிரச்சாரம் செய்தார்களே ஒழிய, யதார்த்தத்தில் கழிவுகளைச் சுத்தம் செய்வதென்பது சாதி அடிப்படையிலான வேலையாக உள்ளதென்பதையும் அவர்களுக்கான மறுவாழ்வுத் திட்டங்கள், சாதி ஒழிப்புக்கான போராட்டங்கள் தூய்மை இந்தியாவின் ஒரு அங்கம் என்பதையும் அங்கீகரிக்க மறுத்தனர்.

கையால் மலம் அள்ளுவதையும் கழிவு நீர் தொட்டிகளில் இறங்கி சுத்தம் செய்வதையும் அகற்றுவதற்கான பல்வேறு சட்டங்கள் இயற்றப்பட்டாலும் அவற்றை அரசாங்கங்களே முழுமையாகக் கடைப்பிடிப்பதில்லை. கருவிகளைக் கொண்டு கழிவுகளை அகற்றுவதற்கான திட்டங்கள் இருந்தாலும் அதற்கான முழுமையான நிதியையும் ஒதுக்குவதில்லை. போர்க்கால அடிப்படையில் அமல்படுத்த வேண்டும் என்ற சமூகக் கடப்பாடும் இந்திய ஆளும் வர்க்கத்திடம் இல்லை. பார்ப்பனர்களே பூஜைக்குத் தகுதியானவர்கள் என்பதை எப்படிப் பெரும்பான்மையான மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனரோ அதுபோலவே கழிவுகளை அகற்றுவதென்பது தாழ்த்தப்பட்டவர்களுக்கான வேலை என்று பெரும்பான்மை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். இந்த பார்ப்பனியக் கண்ணோட்டத்தை இந்திய ஆளும் வர்க்கமும் பிரதிபலிப்பதனால் கழிவு நீர் தொட்டி/மலக்குழி மரணங்களை இன்றும் ஒழிக்க முடியாமல் உள்ளது.

விஸ்வகுரு, தற்சார்பு இந்தியா, 2047-இல் வல்லரசு இந்தியா, உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரம், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு, செயற்கை நுண்ணறிவில் ஜாம்பவான், செல்போன் உற்பத்தியில் முதலிடம், அந்நிய முதலீடுகளின் சொர்க்கம் என்று பெருமைப்பட்டுக் கொள்ளும் மோடி கும்பலும் அதற்கு ஆதரவு ஓதும் இந்திய ஆளும் வர்க்கமும், மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளும் காட்டுமிராண்டித்தனமான நடைமுறையை இன்னும் ஒழிக்காமல் இருப்பதைச் சாதனையாக எண்ணி ஒருவர் முகத்தில் ஒருவர் என அவர்களே காரி உமிழ்ந்து கொள்வதே சரியாக இருக்கும்.

  • மாணிக்கம்

 

https://thewire.in/caste/622-sanitation-workers-have-died-since-2017-govt-tells-lok-sabha-52-families-never-got-compensated

https://thewire.in/government/manhole-cover-a-symbol-of-how-the-most-depressed-sections-were-dealt-with-in-the-last-decade

https://thewire.in/rights/deep-failure-to-protect-the-most-vulnerable-members-of-society-dasm-on-manual-scavenging-deaths

https://theprint.in/india/five-years-after-modi-washed-their-feet-kumbh-sanitation-workers-fight-for-dignity-continues/2426960/

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன