மாதவிடாய் விடுப்பு : பாகுபாட்டை நியாயப்படுத்தும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு

பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பு வழங்க வேண்டுமா இல்லையா என்ற கேள்விக்கே இடமில்லை. அதனை வழங்க மறுக்கும் முதலாளிகளை எப்படிக் கட்டுப்படுத்துவது என்பதுதான் உண்மையில் பரிசீலிக்கப்பட வேண்டியது. பெண்களின் உடல்நலத்தையும், அவர்களின் பணியிட சமத்துவத்தையும் பாதுகாப்பது நிறுவனங்களின் விருப்பத்திற்கு உட்பட்டதாக இருக்க முடியாது. அது சட்டபூர்வமாக கட்டாயப்படுத்தப்பட வேண்டிய ஒரு அடிப்படை உரிமையாக இருக்க வேண்டும்.

பெண்கள் வேலைக்குச் செல்வது என்பது பெரும்பாலும் முன்னேற்றத்தின் அடையாளமாக முன்னிறுத்தப்படுகிறது. ஆனால், இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான உழைக்கும் பெண்களுக்கு, இந்த “முன்னேற்றம்” அவர்கள் பணிபுரியும் இடத்திலோ அல்லது வீட்டிலோ அதற்கேற்ற மாற்றத்தினை ஏற்படுத்தவில்லை. மாறாக, முதலாளியின் இலாபத்திற்காக சம்பளம் பெறுகின்ற தொழிலாளியாகவும், வீட்டில் சம்பளம் இல்லாத வேலையாளாகவும் பெண்கள் இன்றைக்கும் இரட்டைச் சுரண்டலுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

பணியிடங்களில் அவர்கள் தங்களது வேலையைச் செய்தால் மட்டும் போதாது, அவர்கள் ஆண்களைப் போன்றே திறமையானவர்கள் என்பதைத் தொடர்ந்து நிரூபித்துக் கொண்டே இருக்க வேண்டும். பெண்கள் பெரும்பாலும் ஆண்களை விட சிறப்பாக செயல்படுவதாகவும், அதிக நேரம் உழைப்பதாகவும், சிறந்த மேலாண்மைத் திறன் கொண்டிருப்பதாகவும் ஏராளமான சான்றுகள் இருந்தாலும் கூட, அவர்களது திறன் அங்கீகரிக்கப்படுவதில்லை. பணியிட சமத்துவம் என்பது நடைமுறையில் என்றைக்கும் பெண்களுக்கு வழங்கப்படுவது இல்லை. அது, அவர்கள் மீண்டும் மீண்டும் நிரூபிக்கவும், பாதுகாக்கவும், நியாயப்படுத்தவும் வேண்டிய ஒன்றாக மாற்றப்பட்டிருக்கிறது.

இப்படியாக பணியிடச் சமத்துவம் என்ற தங்களது உரிமைக்காகப் பெண்கள் போராடிக் கொண்டிருக்கும் போது அதற்கு எதிரான ஆயுதமாக, எப்பொழுதும் அவர்களது உயிரியல் இயல்பே முன்நிறுத்தப்படுகிறது. பெண் என்பவர் பலவீனமானவர் என்ற பார்வை சமூக இயல்பாக கட்டமைக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக பெண்களின் மாதவிடாய் சுழற்சி என்பது இயற்கையானதாக, வாழ்க்கையின் அங்கமாகப் பார்க்கப்படுவதை விட, அவர்களைப் பலவீனப்படுத்துவதாகவும், உழைப்புச் சந்தையில் ஆண்களை விட குறைந்த உற்பத்தித் திறன் கொண்டவர்களாகச் சித்தரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. நூற்றாண்டுகளாக முன்வைக்கப்படும் இந்த வாதம், இன்றும் கூடப் புதிய வடிவங்களில் தொடர்கிறது.

அதற்குச் சமீபத்திய எடுத்துக் காட்டாக உச்ச நீதிமன்றம் கூறியுள்ள கருத்தைப் பார்க்கலாம். பெண் தொழிலாளர்களுக்கும், மாணவிகளுக்கும் மாதவிடாய் விடுப்பு அளிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் மீண்டும் ஒருமுறை நிராகரித்திருக்கிறது. “இத்தகைய சட்டம் கொண்டு வந்தால் பெண்களை வேலைக்கு எடுக்க முதலாளிகள் தயங்குவார்கள்” என்று காரணம் கூறியுள்ளது. மேலும், “பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பு எனச் சட்டம் கொண்டு வந்தால் அது இளம் பெண்களின் வளர்ச்சிக்கு தீங்கு விளைவிக்கும்; அது அவர்கள் ஆண்களுக்கு சமமானவர்கள் அல்ல என்ற எண்ணத்தை உருவாக்கும்” என்றும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யகாந்த் தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்றத்தின் இந்த வாதத்தின் அடிப்படையே தவறானது. முதலாளித்துவம் உருவாக்கியுள்ள உழைப்புச் சந்தையில் பெண் தொழிலாளர்களுக்கு எதிரான பாகுபாடு நிலவுகிறது என நீதிமன்றம் ஒப்புக்கொள்கிறது. ஆனால் அந்தப் பாகுபாட்டை ஒழிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்துவதற்குப் பதிலாக, அதையே காரணமாகக் காட்டி பெண் தொழிலாளர்களின் அடிப்படை உரிமையை மறுக்கிறது. பாகுபாடு இருப்பதால் உரிமைகள் தேவையில்லை என்ற நீதிமன்றத்தின் நிலைப்பாடு பாகுபாட்டை நிலைநிறுத்துகிறது, நியாயப்படுத்துகிறது.

இங்கே பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பு வழங்க வேண்டுமா இல்லையா என்ற கேள்விக்கே இடமில்லை. அதனை வழங்க மறுக்கும் முதலாளிகளை எப்படிக் கட்டுப்படுத்துவது என்பதுதான் உண்மையில் பரிசீலிக்கப்பட வேண்டியது. பெண்களின் உடல்நலத்தையும், அவர்களின் பணியிட சமத்துவத்தையும் பாதுகாப்பது நிறுவனங்களின் விருப்பத்திற்கு உட்பட்டதாக இருக்க முடியாது. அது சட்டபூர்வமாக கட்டாயப்படுத்தப்பட வேண்டிய ஒரு அடிப்படை உரிமையாக இருக்க வேண்டும்.

ஜப்பான், தென் கொரியா, ஸ்பெயின் போன்ற நாடுகளில் மாதவிடாய் விடுப்பு சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அங்கு இது பெண்களின் வேலைவாய்ப்பைக் குறைக்கும் காரணியாகச் செயல்படவில்லை; மாறாக, உடல்நலத்தை மதிக்கும் பணியிடக் கலாச்சாரத்தை உருவாக்கியுள்ளது. இந்தியாவிலும், முறையான சட்டப் பாதுகாப்புகளுடன் இத்தகைய விடுப்பு அறிமுகப்படுத்தப்பட்டால், அது பாகுபாட்டை அதிகரிக்காமல் குறைக்கவே செய்யும். பாகுபாட்டைச் சுட்டிக்காட்டி உரிமைகளை மறுப்பது அல்ல, பாகுபாட்டை ஒழிக்கும் சட்டங்களை உருவாக்குவதே அரசின், நீதித்துறையின் கடமை.

எந்த நிறுவனமும் பெண்களுக்கு எதிரான பாகுபாட்டை நடைமுறைப்படுத்தினால், வேலைக்கு எடுக்க மறுத்தால், பதவி உயர்வில் பின்தள்ளினால், அல்லது மாதவிடாய் விடுப்பை காரணமாக காட்டி வேறுபாடு காட்டினால், அவற்றுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். சமத்துவத்தை மறுக்கும் நிறுவனங்களுக்கு, தண்டனைகள் வழங்கப்பட வேண்டும். ஆனால் உச்ச நீதிமன்றம் அவ்வாறு சிந்திக்கவில்லை, அதற்கு மாறாக பெண்கள் தங்களது உரிமையைக் கேட்க கூடாது என்று நீதிமன்றம் அவர்களது வாயை அடைக்கிறது.

உச்ச நீதிமன்றத்தின் வார்த்தைகள் பெண்களின் மீதான அக்கறையில் இருந்து கூறப்படுவதாகத் தோன்றினாலும் உண்மை அதுவல்ல. அது பெண்கள் மீது கொண்ட அக்கறையிலிருந்து உருவானதல்ல; மாறாக முதலாளிகளின் நலன்கள் பாதிக்கப்படாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற மனப்பான்மையில் இருந்தே இது வெளிவந்துள்ளது.

இங்கே கவனிக்க வேண்டிய இன்னொரு அம்சமும் இருக்கிறது. பெண்களின் மீதான இரட்டைச் சுரண்டலின் சுமை அனைத்துப் பெண்களுக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. கட்டிடத் தொழிலாளிகள், வீட்டுவேலை செய்பவர்கள், சிறுதொழில் பணியாளர்கள், விவசாயத் தொழிலாளிகள் என முறைசாரா துறையில் பணிபுரியும் பெண்களின் நிலைமை மிகவும் கடுமையானது. மாதவிடாய் விடுப்பு என்பது இவர்களைப் பொறுத்தவரை கற்பனைக்கே எட்டாத ஒன்று. ஒரு நாள் வேலைக்குச் செல்லாவிட்டால், அந்த நாளின் கூலியை இழக்க நேரிடும்; சில வேளைகளில் வேலையே போய்விடும் அபாயமும் உண்டு. மாதவிடாய் விடுப்பு என்ற கோரிக்கை, அலுவலகங்களிலும், தொழிற்சாலைகளிலும் பணிபுரியும் பெண்களுக்கானது மட்டுமல்ல, அமைப்புச் சாரா தொழிற்துறையில் பணியாற்றும் இந்த நாட்டின் பெரும்பாண்மை உழைக்கும் பெண்களின் கோரிக்கையாகும். ஆனால் அவர்களைப் பற்றி நீதிமன்றம் சிந்தித்துக் கூடப் பார்க்கவில்லை.

தொழிலாளர்களின் உரிமையை நிலைநாட்டுவது என்ற நியாயமான கோரிக்கையின் அடிப்படையில் இல்லாமல், வணிகம் செய்வதை எளிதாக்குவது (Ease of doing business) என்ற அரசின் கொள்கையின் அடிப்படையில் நீதிமன்றம் சிந்திக்கிறது. முதலீட்டாளர்களை மகிழ்விப்பதே இன்றைக்கு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. பெண் தொழிலாளர்களுக்கு உரிமைகளை வழங்குவது முதலாளிகளுக்குச் சுமையாக மாறிவிடக் கூடாது என நீதிமன்றம் கருதுகிறது.

பணியிடத்தில் பெண்களின் சமத்துவம் என்பது சந்தையின் நிபந்தனைகளுக்கு உட்பட்ட ஒரு சலுகை அல்ல; அது மறுக்க முடியாத அடிப்படை உரிமையாகும். முதலாளிகள் பாகுபாடு காட்டக்கூடும் என்பதற்காக பெண்களின் உரிமைகளை மறுப்பது, அந்தப் பாகுபாட்டையே சட்டபூர்வமாக்கும் செயலாகும். பெண்கள் சமத்துவத்திற்கு தகுதியானவர்களா என்பதை கேள்விக்கு உட்படுத்தும் காலம் கடந்துவிட்டது. அந்த சமத்துவத்தை உறுதி செய்ய சட்டமும், சமூகமும் மாற்றப்பட வேண்டும் என்பதே இன்றைய தேவை. பெண்கள் தங்களது உடலையும் உரிமைகளையும் மறைத்து சமத்துவத்தை அடைய வேண்டிய அவசியமில்லை; மாறாக, அந்த உடலும் அந்த உரிமைகளும் அங்கீகரிக்கப்படும் சமூகத்தை உருவாக்குவதே உண்மையான முன்னேற்றமாகும்.

  • சந்திரன்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன