ஹிந்த் ரஜப்பின் குரலை ஒடுக்கிய இந்திய ‘ஜனநாயகம்’

இத்திரைப்படத்தை மக்களின் பார்வைக்குச் சென்று விடாமல் தடுப்பதன் மூலம் இஸ்ரேல் இனவெறி அரசுக்கு ஆதரவாக, இந்திய மோடி அரசு செயல்பட்டு வருகிறது என்பது மீண்டும் ஒருமுறை அம்பலமாகியிருக்கிறது.

காசா மீது கடந்த இரண்டு ஆண்டுகளில் இஸ்ரேல் நடத்திய இனவெறித் தாக்குதலில் இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர். போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட அக்டோபர் 10-ஆம் தேதிக்குப் பிறகும் கூட 82 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்.

பிப்ரவரி 2024-ஆம் ஆண்டு இந்தப் போர் சூழலுக்கு அஞ்சி காசா நகரிலிருந்து தனது குடும்பத்துடன் வெளியேற முயன்றபோது, இஸ்ரேலியப் படைகளால் ஐந்தே வயது நிரம்பிய ஹிந்த் ரஜப் கொல்லப்பட்டுள்ளார்.

இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்ட தனது அத்தை, மாமா மற்றும் மூன்று உறவினர்களின் சடலங்களுடன், குண்டு துளைக்கப்பட்ட ஒரு வாகனத்தில் சிக்கித் தவித்த ரஜப்பிற்கு, பாலஸ்தீன மீட்புப் படையினர் ஆறுதல் கூறுவதில் தொடங்கி அச்சிறுமியை மீட்பதற்காக எடுத்துவரும் நடவடிக்கைகள் வரை பல மணிநேரம் உரையாடல் நடைபெறுகிறது. இறுதியில் தன்னை மீட்க ஆம்புலன்ஸ் வரும் என்று எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த சிறுமியும், அவரைக் காப்பாற்ற சம்பவ இடத்திற்கு சென்று கொண்டிருந்த இரண்டு மருத்துவப் பணியாளர்களும் இஸ்ரேல் இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்படுகின்றனர்.

இந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து இஸ்ரேல் இனவெறி அரசின் கொடூரமான தாக்குதலைப் படம் பிடித்துக் காட்டும் திரைப்படம் தான் ’தி வாய்ஸ் ஆப் ஹிந்த் ரஜப்’ (The voice of Hind Rajab). பாலஸ்தீன மீட்புப் படையினருக்கும், ரஜப்பிற்கும் இடையில் பல மணிநேரம் நடைபெற்ற உரையாடலின் உண்மையான ஒலிப்பதிவுகளை துனிசிய இயக்குநர் கௌதர் பென் ஹானியா இத்திரைப்படத்தில் பயன்படுத்தி இருக்கிறார்.

இத்திரைப்படம் அமெரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி, பிரான்ஸ் மற்றும் பல நாடுகளில் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற வெனிஸ் திரைப்படவிழாவில் உலக சினிமாவின் மிக மதிப்புமிக்க கௌரவங்களில் ஒன்றாகக் கருதப்படும் சில்வர் லயன் விருது இத்திரைப்படத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலின் இனவெறியைப் பற்றிப் பேசும் இத்திரைப்படத்திற்கு அங்கே கூட தடை விதிக்கப்படவில்லை ஆனால் இந்தியாவின் மோடி அரசினுடைய மத்திய திரைப்படத் தணிக்கை வாரியம் தணிக்கைச் சான்றிதழ் வழங்க மறுத்து விட்டது. இத்திரைப்படத்தின் விநியோகஸ்தரான மும்பையைச் சேர்ந்த மனோஜ் நந்த்வானா என்பவர் இந்தியா – இஸ்ரேல் உறவு பாதிக்கும் என்பதால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என தணிக்கை வாரிய உறுப்பினர் தன்னிடம் தெரிவித்ததாக கூறியிருக்கிறார்.

இத்திரைப்படத்தின் இயக்குநரான கௌதர் பென் ஹானியா “உலகின் மிகப்பெரிய மக்களாட்சிக்கும் மத்திய கிழக்கின் ஒரே மக்களாட்சி”க்கும் இடையிலான உறவு ஒரு திரைப்படத்தை வெளியிடுவதன் மூலம் முறிந்துவிடும் அளவிற்கு அவ்வளவு பலவீனமானதா? என தனது X தளத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

பாலஸ்தீன மக்களின் துன்பங்களையும், இஸ்ரேல் இனவெறி அரசின் தாக்குதல்களையும் உலகிற்கு வெளிக்கொண்டு வரும் கலைப்படைப்பான இத்திரைப்படத்தை இந்திய தணிக்கை வாரியம் கடந்த ஒரு மாதமாக கிடப்பில் போட்டிருந்தது. இந்த கால இடைவெளியில் தான் மோடி இஸ்ரேலுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்திரைப்படத்தை மக்களின் பார்வைக்குச் சென்று விடாமல் தடுப்பதன் மூலம் இஸ்ரேல் இனவெறி அரசுக்கு ஆதரவாக, இந்திய மோடி அரசு செயல்பட்டு வருகிறது என்பது மீண்டும் ஒருமுறை அம்பலமாகியிருக்கிறது.

இத்திரைப்படத்தின் விமர்சனத்தை தி கார்டியன், நியூயார்க் டைம்ஸ் போன்ற நாளிதழ்கள் ஏற்கனவே வெளியிட்டுள்ளன. அச்சிறுமி வாகனத்தில் சிக்கித் தவித்த இடத்திலிருந்து சுமார் 50 மைல் தொலைவில் இருக்கும் மேற்கு கரையின் ரமல்லாவில் உள்ள பாலஸ்தீனிய செஞ்சிலுவை சங்கத்தின் அவசர அழைப்பு மையத்தில் முழுப்படமும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அந்த மையத்தில் பணியாற்றும் ஊழியர்கள் காசாவிலிருந்து வரும் அவசர அலைபேசி அழைப்புகளுக்கான உதவிகளை செய்து வருகிறார்கள். காசாவின் வாகனங்களின் போக்குவரத்தை டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம் கண்காணிக்கிறார்கள்.

படத்தின் டிரெய்லரை காண மேல் உள்ள வீடியோவை கிளிக் செய்யவும்

ஜெர்மனியில் வசிக்கும் ஹிந்த் ரஜப்பின் மாமா, காசாவில் உள்ள தன் சகோதரி குடும்பத்திற்கு உடனடியாக உதவ வேண்டும் என பாலஸ்தீனிய செஞ்சிலுவை சங்கத்தை தொலைபேசியில் அழைத்துப் பேசுகிறார். அவரிடம் பேசும் அவசர அழைப்பு மையத்தின் பணியாளரான ஒமர், காரில் இருக்கும் ஒரு அலைபேசி எண்ணிற்கு அழைக்கிறார். எதிர் முனையில் ஒரு பெண் எடுத்து பேசுகிறாள். ஒரு சில நிமிடங்களுக்குப் பிறகு துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்கிறது. அதற்குப் பிறகு அப்பெண்ணின் குரல் கேட்கவில்லை. காரில் ஒரு சிறுமி மட்டும் உயிரோடு இருப்பதாக மாமாவிடமிருந்து மீண்டும் தகவல் வருகிறது. ஒமர் காரில் இருக்கும் ஹிந்த் ரஜப்புடன் தொடர்பு கொள்கிறார்.

சிறுமி ரஜப்பை மீட்பதற்காக அவசர அழைப்பு மையத்தின் நான்கு ஊழியர்களும் எவ்வாறு ஒருங்கிணைக்கும் பணியை மேற்கொள்கிறார்கள்; ஆம்புலன்ஸ் மூலம் சிறுமியை மீட்கப் எப்படி போராடுகிறார்கள்? என இதற்குப் பிறகு வரும் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இதில் வரும் நான்கு அவசர அழைப்பு பணியாளர்களின் கதாபாத்திரத்தை ஏற்று நடிகர்கள் நடித்திருந்தாலும், சிறுமி ரஜப்பின் குரல் மட்டும் நிஜமானது அவளின் குரல் மட்டுமே திரையில் ஒலிக்கிறது. அச்சிறுமி, தன்னை மீட்குமாறு அவசர அழைப்பு மையத்தின் ஊழியர்களான ஒமர் மற்றும் அவரது மேற்பார்வையாளரான ராணாவிடம் கெஞ்சுகிறாள்.

இஸ்ரேல் டாங்கிகளின் குண்டுகளின் சத்தங்களுக்கு இடையில் யாராவது வந்து என்னை கூட்டிச் செல்லுங்கள் என ஹிந்த் ரஜப்பின் குரல் ஓலமிடுகிறது. படுகாயமடைந்து குற்றுயிரும் குலையுயிருமாக உயிருக்குப் போராடும் அச்சிறுமி மெல்ல மெல்ல கூக்குரலிடுகிறாள். ஆனால் ஆம்புலன்ஸ் அனுமதி பல மணி நேரங்களுக்குப் பிறகும் கிடைத்தபாடில்லை.

காசாவில் மீட்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் ஆம்புலன்சுக்கும் கூட முறையான அனுமதி பெறவேண்டும். ஆம்புலன்ஸ் எந்த வழித்தடங்களுக்கு சென்று வருகிறதோ அதற்கு இஸ்ரேல் இராணுவத்தின் அனுமதி தேவை. இல்லையென்றால் ஆம்புலன்ஸ் மீதும் தாக்குதல் தொடுக்கப்படும். இப்படி பல மருத்துவ பணியாளர்கள் இஸ்ரேல் இராணுவத்தினரால் கொல்லப்பட்டிருக்கின்றனர். இந்த அனுமதியில் ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை சிறிதும் பிசகினாலும் அப்பழி செஞ்சிலுவை மையத்தின் ஊழியர்கள் மீதே வந்து சேரும்.

சிறுமியோடு பேசும் அவசர அழைப்பு பணியாளரான ஓமர் எப்படியாவது அவளை காப்பாற்ற வேண்டும் என பதட்டமாகிறார். ஆம்புலன்ஸ் அனுமதிக்காக முட்டி மோதுகிறார். ஒரு கட்டத்தில் பலனில்லாமல் ஆம்புலன்ஸை நேரடியாக அனுப்பலாம் என்கிறார். ஆனால் முறையான அனுமதியின்றி ஆம்புலன்ஸை அனுப்பினால் தற்போது உயிரோடு இருக்கும் சொற்ப ஆம்புலன்ஸ் பணியாளர்களின் உயிரும் பறிபோகும் என அவரது மேற்பார்வையாளர் மறுக்கிறார்.

சிறுமி ஹிந்த் ரஜப் மற்றும் இஸ்ரேலியப் படைகளின் தாக்குதலுக்கு முன்பு ஆம்புலன்ஸின் மருத்துவ பணியாளர் புகைப்படம்: பாலஸ்தீனிய செஞ்சிலுவை X தளம்

இறுதியாக ஆம்புலன்ஸ் செல்வதற்காக ஒரு வழி ஒதுக்கப்படுகிறது. ஆனால் அதன் முழுப் பயணத்திற்கான அனுமதி கிடைக்கவில்லை. நேரம் செல்லச் செல்ல ஓமர் மற்றும் அவரது சக பணியாளர்களும் தன்னை மீட்கும் பணியில் ஏன் தோல்வியடைகிறார்கள் என்பதை அச்சிறுமியால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஒரு பெண் ஊழியர் தாங்கள் அச்சிறுமியை மீட்டும் பணியில் ஒருங்கிணைக்கும் வேலையை மட்டும் மேற்கொள்கிறோம் என்றும் அவளை மீட்பதற்கு மேலும் இரண்டு மணி நேரம் கூட ஆகலாம் என விளக்கமளிக்கிறார்.

இறுதியாக ஆம்புலன்ஸ் ரஜப் சிக்கியிருந்த வாகனத்தை நெருங்குகிறது. மீட்பதற்கு 200 அடி தொலைவேயுள்ள நிலையில், இஸ்ரேலியப் படைகளின்  குண்டு வீச்சுக்கு ஆம்புலன்ஸ் உள்ளாகிறது. ரஜப் இத்தாக்குதலுக்குப் பிறகும் சுமார் ஒரு மணி நேரம் உயிருக்குப் போராடியிருக்கிறாள். ரஜப் சிக்கியிருந்த வாகனத்தில் 335 புல்லட் குண்டுகளின் துளைகள் இருந்ததாக தடயவியல் சோதனை கூறுகிறது. மேலும் ரஜப்பை மீட்கச் சென்ற ஆம்புலன்ஸ் உருத்தெரியாமல் காட்சியளிக்கிறது.

இனப்படுகொலையிலிருந்து உலக மக்கள் தங்களைக் காப்பாற்ற வேண்டும் என பாலஸ்தீன மக்களின் தொடர்ச்சியான வேண்டுகோளுக்கு இடையில் தன்னை காப்பாற்றும் படி ஒரு சின்னஞ்சிறு சிறுமி மன்றாடியிருப்பது காண்போரின் நெஞ்சைப் பதைபதைக்க வைக்கிறது. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஹிந்த் ரஜப் போன்ற சிறுமிகளை மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த பாலஸ்தீன மக்களையும் இனப்படுகொலை செய்துவரும் அமெரிக்க-இஸ்ரேல் இராணுவ நடவடிக்கைகளை உலக நாடுகள் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருகின்றன. ஆனால் இத்திரைப்படத்தின் வாயிலாக ரஜப்பின் குரலைக் கேட்கும் ஒவ்வொருவருக்கும், அவள் தன்னிடம் தான் உதவி கேட்கிறாள் என்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. இது காண்போரின் நெஞ்சைக் குறுக்கும் நெடுக்குமாக கிழிக்கிறது. இதனை நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் சிறுமியின் உண்மைக் குரலை வணிக நோக்கத்திற்காக திரைப்படத்தில் பயன்படுத்தி இருக்கக் கூடாது என நீலிக்கண்ணீர் (அச்சிறுமிக்காக அழுவது போல் நடிக்கிறது) வடிக்கிறது.

இஸ்ரேலியப் படைகளால் தாக்குதலுக்குள்ளான ஹிந்த் ரஜப்பை மீட்கச் சென்ற ஆம்புலன்ஸ் – புகைப்படம்: பாலஸ்தீனிய செஞ்சிலுவை X தளம்

வெனிஸ், டொராண்டோ நகரங்களின் திரைப்பட விழாவில், இத்திரைப்படம் உயரிய விருதுகளைப் பெற்றிருந்தாலும், அமெரிக்காவில் இத்திரைப்படத்தைத் திரையிடப் பெரிய விநியோகஸ்தர்கள் யாரும் முன்வரவில்லை. இதன் காரணமாக ஒரு புதிய விநியோக நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டு அதன் மூலமே திரையிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் மோடி அரசு, இத்திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க மறுத்துள்ளதன் மூலம் அமெரிக்க-இஸ்ரேல் செய்துவரும் இனப்படுகொலையில் இந்தியாவும் ஒரு பங்காளி என நிருபித்துள்ளது. உலகம் முழுவதிலும் உள்ள பாசிஸ்டுகள் ஒன்றிணைந்து செயல்படுவதிலும், சிந்திப்பதிலும் ஒரணியில் நிற்கின்றனர் என்பதற்கு இது ஒரு துலக்கமான எடுத்துக்காட்டு. ஆனால் இவர்களை எதிர்த்துக் களமாட வேண்டிய உலக மக்கள் தனித்தனியே நிற்கின்றனர். இத்திரைப்படத்தில் வரும் ஹிந்த் ரஜப்பின் குரல் இஸ்ரேலிய இனவெறி அரசை மட்டும் அம்பலப்படுத்தவில்லை. மாறாக இந்திய பாசிஸ்டுகளையும் சேர்த்தே அம்பலப்படுத்தியிருக்கிறது.

  • தாமிரபரணி

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன