ரஷ்ய எண்ணெய் : தரகு முதலாளிகளுக்காக இறையாண்மையை அடகுவைக்கும் இந்திய ஆளும்வர்க்கம்.

அமெரிக்காவின் பேச்சைக் கேட்டு ரஷ்ய எண்ணெயை நிறுத்தியதும், தற்போது அனுமதி பெற்று இறக்குமதி செய்வதும், இந்திய மக்களின் நலனை முன்னிறுத்தி எடுக்கப்பட்ட முடிவு அல்ல. இந்திய ஆளும் வர்க்கத்தின், மோடி அரசின், இந்த அமெரிக்க அடிவருடித்தனத்திற்கு, இந்தியத் தரகு முதலாளிகளின் நலனே அடிப்படையாக இருக்கிறது.

அமெரிக்க ஏகாதிபத்தியமும், அதன் அடியாளான இனவெறி இஸ்ரேல் அரசும் கூட்டுச் சேர்ந்து கொண்டு கடந்த பிப்ரவரி 28-ம் தேதி முதல் ஈரான் மீது அநீதியான போரைத் தொடுத்து வருகின்றன. இப்போரினால் உலகம் முழுவதும் எரிசக்தி நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இந்த நெருக்கடி இந்தியாவையும் தாக்கியிருக்கிறது. தனது கச்சா எண்ணெய்த் தேவைகளுக்காக வளைகுடா நாடுகளை இந்தியா சார்ந்துள்ளது. இந்நிலையில், வளைகுடா நாடுகளில் இருந்து மற்ற நாடுகளுக்குக் கப்பல் போக்குவரத்தைத் தடைசெய்யும் வகையில், ஹார்முஸ் நீரிணையை மூடிவிட்டதாக ஈரான் அரசு அறிவித்திருக்கிறது. அவ்வழியாகச் செல்லும் எந்தக் கப்பலையும் தாக்கி அழிக்கப்போவதாகவும் கூறியிருக்கிறது.

ஈரான் போர் ஒரு முடிவுக்கு வரும் வரை இந்தியாவிற்கு வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் வராது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இனி ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதைத் தவிர வேறு வழியில்லை. ஆனால் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கக் கூடாது என அமெரிக்கா ஏற்கெனவே நிபந்தனை விதித்துள்ளதால், ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை இந்தியா படிப்படியாகக் குறைத்துக் கொண்டு வருகிறது. தற்போது மீண்டும் ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கினால் டிரம்பின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். அத்துடன் அவர் மீண்டும் இந்தியாவின் மீது 25% கூடுதல் வரியை விதிக்கக்கூடும் என்ற அச்சமும் நிலவியது. இந்தச் சூழலில்தான் இந்தியா அடுத்த 30 நாட்களுக்கு ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கிக்கொள்ள அனுமதி அளிப்பதாக அமெரிக்கா அறிவித்தது.

அமெரிக்காவின் அறிவிப்பு வெளியான உடனேயே அது இந்தியாவில் மிகப் பெரிய எதிர்ப்பையும், கண்டனங்களையும் உருவாக்கியது. “ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்க நமக்கு அமெரிக்காவின் அனுமதி ஏன் தேவை? நாம் எந்த நாட்டில் எரிபொருள் வாங்க வேண்டும் என்பதை மற்றொரு நாடு ஏன் முடிவு செய்ய வேண்டும்?” என மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார். “ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்க இந்தியாவை அமெரிக்கா ‘அனுமதிப்பது’ என்பது இந்திய இறையாண்மைக்கு ‘அவமானகரமானது’..” என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கண்டித்துள்ளார்.

இந்த எதிர்ப்புகளுக்கெல்லாம் பதிலளிக்கும் விதமாகப் பேசிய இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், “எரிசக்தி கொள்முதல் என்பது ஒரு நாட்டின் இறையாண்மை சார்ந்த முடிவு என்றும், இந்தியாவின் எரிசக்தி கொள்முதல் கொள்கை, சர்வதேச அரசியல் அழுத்தங்களுக்கு அடிபணியாமல், நாட்டின் வணிக நலன்கள், விலை, மற்றும் விநியோகம் (cost, risk, and availability) ஆகியவற்றின் அடிப்படையிலேயே அமையும்” என்று கூறினார்.

அதேபோல “ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதற்கு இந்தியா ஒருபோதும் எந்த நாட்டின் அனுமதியையும் சார்ந்து இருந்ததில்லை” என்று ஒன்றிய அரசு அறிக்கை வெளியிட்டது.

ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது இந்தியாவின் இறையாண்மை சார்ந்த முடிவு என்றும், இதற்கு அமெரிக்காவின் அனுமதி தேவையில்லை என்றும் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி திட்டவட்டமாகத் தெரிவித்தார். உலகளாவிய எரிசக்தித் தட்டுப்பாட்டைத் தவிர்க்கவே இந்தக் கொள்முதல் செய்யப்படுவதாகவும், அமெரிக்கத் தடைகளுக்கு மத்தியிலும் இந்தியா தனது எரிசக்திப் பாதுகாப்பை உறுதி செய்யும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஆனால் இந்த வாதங்கள் எல்லாம் பொய் என நிரூபிக்கும் வகையில், ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசன்ட், “இந்தியர்கள் சொல்படிக் கேட்பவர்களாக (Good Actors) இருக்கின்றனர். நாம் ரஷ்ய எண்ணெய் வாங்கக் கூடாது எனச் சொன்னபோது அவர்கள் நிறுத்திக்கொண்டனர். தற்போது உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள எண்ணெய்ப் பிரச்சினையைச் சமாளிக்க ரஷ்ய எண்ணெயை வாங்க அவர்களுக்கு அனுமதி அளித்துள்ளோம்” எனக் கூறியுள்ளார். இதையே தனது சமூக ஊடகப் பக்கத்திலும் பதிவு செய்துள்ளார்.

ஸ்காட் பெசன்ட்டின் இந்தக் கூற்றை மீண்டும் ஒருமுறை பதிவு செய்யும் வகையில் அமெரிக்க வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர், கரோலின் லீவிட் மார்ச் 11 அன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இந்தியர்கள் நல்ல கூட்டாளிகள் எனச் சான்றளித்துள்ள அவர், இதன் காரணமாகத்தான் இந்தச் சலுகையை அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவிற்கு வழங்கியிருப்பதாகக் கூறினார். அதுமட்டுமின்றி இந்த அனுமதி என்பது தற்காலிகமானதுதான் என்றும் கூறியிருக்கிறார்.

இதன் மூலம் கச்சா எண்ணெய் வாங்குவது இந்தியாவின் இறையாண்மை சார்ந்த முடிவு என்று இந்திய ஆளும் வர்க்கம் கூறிவந்தது அப்பட்டமான பொய் என்பதும், அமெரிக்காவின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு ரஷ்ய எண்ணெயை வாங்காதே என்றபோது அவர்கள் நிறுத்தியதும், தற்போது அவர்களது அனுமதியைப் பெற்ற பிறகே ரஷ்ய எண்ணெயை இந்தியா வாங்குகிறது என்பதும் அம்பலமாகியிருக்கிறது.

இவ்வாறு அமெரிக்காவின் கட்டளைக்குக் கீழ்பணிந்து நடக்கும் அடிவருடித்தனத்தை இந்திய ஆளும் வர்க்கம் ‘ராஜதந்திரம்’ என்கிறது. அந்த அடிமைத்தனத்திற்குக் கிடைத்த 30 நாள் அனுமதியை, ராஜதந்திரத்திற்குக் கிடைத்த “வெற்றி” என்று மோடி அரசும், பா.ஜ.க.வினரும், கொஞ்சமும் வெட்கமின்றிப் பிரச்சாரம் செய்கின்றனர்.

அமெரிக்காவின் பேச்சைக் கேட்டு ரஷ்ய எண்ணெயை நிறுத்தியதும், தற்போது அனுமதி பெற்று இறக்குமதி செய்வதும், இந்திய மக்களின் நலனை முன்னிறுத்தி எடுக்கப்பட்ட முடிவு அல்ல. இந்திய ஆளும் வர்க்கத்தின், மோடி அரசின், இந்த அமெரிக்க அடிவருடித்தனத்திற்கு, இந்தியத் தரகு முதலாளிகளின் நலனே அடிப்படையாக இருக்கிறது.

ஈரான் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் தாக்குதல் தொடுப்பதற்கு முன்பு வரை நாளொன்றுக்குச் சுமார் ஒரு லட்சம் பீப்பாய் வரை ரஷ்ய கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்து வந்தது. ஆனால் மேற்காசியாவில் போர் தொடங்கிய பத்து நாட்களிலேயே ரஷ்யாவிடமிருந்து நாளொன்றுக்குப் பதினைந்து லட்சம் பீப்பாய்களை இந்தியா இறக்குமதி செய்துள்ளது.

அமெரிக்கா ரஷ்ய கச்சா எண்ணெய்க்கு அனுமதியளித்த பத்து நாட்களிலேயே இந்தியாவின் பகாசுர தரகு முதலாளியான முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் மட்டுமே சுமார் 30 மில்லியன் பீப்பாய்களை இறக்குமதி செய்திருக்கிறது. இதிலிருந்தே ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதி மூலம் யார் ஆதாயம் அடைகிறார்கள் என்பதை நாம் புரிந்துகொள்ள முடியும்.

அதுமட்டுமில்லாமல், வெனிசுலா அதிபர் மதுரோவை அமெரிக்கா கடத்திச் சென்ற பிறகு, வெனிசுலா நாட்டில் உள்ள கச்சா எண்ணெயை வாங்கிக்கொள்ளும் உரிமத்தை ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு அமெரிக்க அரசு வழங்கியுள்ளது.

இவையெல்லாம் இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தின் பலனாக அம்பானிக்குக் கிடைத்திருக்கிறது. இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்பது அமெரிக்காவின் பொருளாதாரச் சங்கிலியில் இந்தியாவைப் பிணைக்கும் வகையில் உருவாக்கப்பட்ட ஓர் ஒப்பந்தமாகும். அதில் இந்தியா தனது வரிகளைத் தளர்த்த வேண்டும் என்றும், அதே சமயம் அமெரிக்கா விதிக்கும் வரிகளில் எவ்வித மாற்றமும் இருக்காது என்றும் கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் அமெரிக்காவிடம் இருந்து இந்தியா 500 பில்லியன் டாலர் அளவிற்கு இறக்குமதி செய்யவிருக்கிறது. இவையெல்லாம் அமெரிக்க அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தகவல்களாகும்.

இந்த ஒப்பந்தத்தின் பின்னணியில்தான், ரஷ்ய எண்ணெய்க்கான அமெரிக்க அனுமதியின் உண்மையான நோக்கத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது. இது இந்தியாவின் எரிசக்தித் தேவைக்காக அல்ல; மாறாக, அமெரிக்காவின் எரிசக்தித் திட்டத்தில் இந்தியத் தரகு முதலாளிகளைப் பங்குதாரர்களாக மாற்றும் நகர்வாகும்.

இந்த ஒப்பந்தத்தின் உடனடிப் பலனாக, அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் அமெரிக்காவில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க அமெரிக்கா அனுமதி அளித்துள்ளது.

இதற்கென அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் “அமெரிக்கா ஃபர்ஸ்ட் ரிஃபைனிங்” நிறுவனம், ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து 300 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒரு கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனத்தைத் தொடங்க உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்திருக்கிறார்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் அடுத்த இருபது ஆண்டுகளில் ஆண்டொன்றுக்குச் சுமார் 125 பில்லியன் டாலர் மதிப்பிலான 1.2 பில்லியன் அமெரிக்க கச்சா எண்ணெய்ப் பீப்பாய்கள் சுத்திகரிக்கப்பட்டு 60 மில்லியன் பீப்பாய் எரிசக்தியாக மாற்றப்படும் என்றும்; 175 பில்லியன் டாலர் மதிப்பிலான பல்வேறு பெட்ரோலியப் பொருட்கள் உற்பத்தி செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. இதனால் அமெரிக்க வர்த்தகம் அதன் ஏற்றுமதி-இறக்குமதி மதிப்பில் சுமார் 300 பில்லியன் டாலர் அளவுக்கு அதிகரிக்கும் என்கிறது. இதைத்தான் அமெரிக்க அதிபர் டிரம்ப் 300 பில்லியன் டாலர் ஒப்பந்தம் எனக் கூறியிருக்கிறார்.

2014ஆம் ஆண்டிலிருந்து 2024 வரை அமெரிக்கா 10 பில்லியன் பீப்பாய்களை ஏற்றுமதி செய்த அதே வேளையில், சுமார் தனது எண்ணெய்த் தேவைகளுக்காக 28 பில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்திருக்கிறது. இதனால் அமெரிக்காவின் வர்த்தகப் பற்றாக்குறை 1.8 டிரில்லியன் டாலர் என்ற அளவில் உயர்ந்தது.

இதைத் தடுக்கும் பொருட்டே டிரம்ப் அறிவித்தபடி AFR நிறுவனமும் இந்தியாவின் தரகு முதலாளித்துவ நிறுவனமான ரிலையன்ஸ் நிறுவனமும் கூட்டுச் சேர்ந்து முதலீடு செய்துள்ளதாக டிரம்ப் பெருமையுடன் அறிவிக்கிறார்.

டிரம்ப் தனது சோஷியல் ட்ரூத் தளத்தில் அறிவித்த சில மணிநேரங்களிலேயே இந்தியாவிற்கான அமெரிக்கத் தூதர் செர்ஜியோ கேர், ”உலகம் முழுவதும் எண்ணெய் விலையைக் கட்டுக்குள் வைத்திருப்பதற்கு இந்தியா ஒரு சிறந்த நட்பு நாடாக இருந்து வருகிறது. இதனால் ரஷ்ய கச்சா எண்ணெயை இந்தியா தொடர்ந்து வாங்குவதை அமெரிக்கா அங்கீகரிக்கிறது. இந்தியாவிடம் சிறந்த எண்ணெய்ச் சுத்திகரிப்பு நிறுவனங்களும், அதிகளவில் எண்ணெய் நுகர்வோர்களும் இருக்கிறார்கள். இதனால் இந்தியாவும், அமெரிக்காவும் கைகோர்த்துச் செயல்படுவது அவசியம்” என்றார்.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலனுக்கும், அதற்குச் சேவையாற்றும் இந்தியத் தரகு முதலாளிகளின் நலனுக்கும் எந்தப் பாதகமும் வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் ரஷ்ய கச்சா எண்ணெய்க்கான அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது என இதன் இரகசியத்தை மறைமுகமாக அம்பலப்படுத்தினார் செர்ஜியோ கேர்.

மேலும் சமீபத்தில் வெளிவந்த ப்ளூம்பெர்க் இணையதளத்தின் செய்தியும், அமெரிக்காவின் ரஷ்ய கச்சா எண்ணெய் அனுமதிக்குப் பின்னால் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலையீடு இருக்கிறது எனக் கூறுகிறது.

இவை அனைத்தையும் தொகுத்துப் பார்க்கும்போது தெளிவாகப் புரிவது ஒன்றுதான். ரஷ்ய கச்சா எண்ணெயை வாங்குவது குறித்து அமெரிக்கா வழங்கிய “அனுமதி”, அமெரிக்காவின் உலகளாவிய எரிசக்தித் திட்டங்களில் இந்தியத் தரகு முதலாளிகளை இணைக்கும் ஒரு அரசியல்-பொருளாதார ஏற்பாடாகும். இந்திய மக்களின் தேவைகள், அவர்களின் வாழ்க்கைச் செலவு, எரிபொருள் விலை போன்றவை இக்கணக்கில் எங்கும் இடம்பெறவில்லை.

இந்த ஒப்பந்தங்களின் மூலம் லாபம் அடைவது அம்பானி போன்ற தரகு முதலாளிகளும், அமெரிக்க ஏகாதிபத்திய நிறுவனங்களுமே அன்றி இந்திய மக்கள் அல்ல. இதுவே இன்று “ராஜதந்திரம்” என்ற பெயரில் விளம்பரப்படுத்தப்படும் புதிய வகைப் பொருளாதார அடிமைத்தனம் என்பதை இந்த நிகழ்வுகள் வெளிப்படையாகக் காட்டுகின்றன.

இவ்வாறு உலக அரசியலில் நடக்கும் போர்களும் பொருளாதார ஒப்பந்தங்களும், அவை குறித்த இந்திய அரசின் நிலைப்பாடுகளும், மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு நடைபெறவில்லை. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலகளாவிய திட்டங்களுக்கும், இந்தியத் தரகு முதலாளித்துவத்தின் லாபவெறிக்கும் இடையே உருவாகும் கூட்டணியில் இருந்துதான் இத்தகைய முடிவுகள் எடுக்கப்படுகின்றன. அதன் விளைவுகளைச் சுமப்பது, எப்போதுமே இந்தியாவின் அடித்தட்டு மக்கள்தான்.

ஆகவே, “தேசிய நலன்”, “எரிசக்தி பாதுகாப்பு”, “ராஜதந்திர வெற்றி” போன்ற சொற்களின் பின்னால் மறைந்திருக்கும் உண்மையை மக்கள் புரிந்துகொள்ள வேண்டிய அவசியம் இன்று அதிகரித்துள்ளது.

  • தாமிரபரணி

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன