என்சிஇஆர்டி (NCERT) விவகாரம்: நீதித்துறை ஊழலை அம்பலப்படுத்துவது தண்டனைக்குரிய குற்றம் என்கிறது உச்ச நீதிமன்றம்!

2016–2025 காலகட்டத்தில் உச்ச நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் மீது 8600 புகார்கள் வந்துள்ளன என்று மத்திய சட்ட அமைச்சகம் மக்களவையில் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் ஒன்றும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல என்பதை இந்தத் தரவுகளே ஆணித்தரமாகச் சொல்கின்றன. ஆனால், தலைமை நீதிபதியோ, "எங்களைப் பற்றி விமர்சிக்கக் கூடாது" என்கிறார்.

மோடி-அமித் ஷா கும்பலை பாசிஸ்டுகள் என்று நாம் அடிக்கடி குறிப்பிடுவதுண்டு. பொதுவாக, பாசிஸ்டுகள், தங்களைப் பற்றிய விமர்சனங்களை அனுமதிப்பதில்லை. தங்கள் மீதான விமர்சனங்களையும், விமர்சிப்பவர்களையும், விமர்சிக்கும் அமைப்புகளையும் அரசு இயந்திரத்தின் துணையோடு கண்காணிப்பதும் ஒடுக்குவதுமே அவர்களின் பிரதானப் பணி. இப்படி ‘ஜனநாயகம் தழைத்தோங்கும்’ ஒரு நாட்டில், அதனைக் கட்டிக் காக்கும் நீதித்துறையின் லட்சணமும் வேறாகவா இருக்கும்?

தன் மீதான விமர்சனங்களை மக்களிடம் சொல்லக்கூடாது, பாடத்திட்டத்தில் வைக்கக்கூடாது, அது தண்டனைக்குரிய குற்றம் என்கிறது உச்ச நீதிமன்றம். ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த வழக்குகளில் தீர்ப்பு வழங்கும் அதே உச்ச நீதிமன்றம், நீதிபதிகள் மீது எழும் ஊழல் குற்றச்சாட்டுகளை அம்பலப்படுத்துவதைத் தண்டனைக்குரிய குற்றம் எனக் கூறினால், அதை எப்படி புரிந்துகொள்வது?

இங்கே நாம் குறிப்பிடுவது இரண்டு வாரங்களுக்கு முன்பு உச்ச நீதிமன்றம் முழுத் தடை விதித்த எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தைப் பற்றித்தான்.

என்சிஇஆர்டி (NCERT), தனது எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் நீதித்துறை ஊழல்கள், வழக்குகள் தேக்கம், நீதிபதிகள் பற்றாக்குறை பற்றிய விவரங்களைக் கூடுதலாகச் சேர்த்துத் திருத்தப்பட்ட புத்தகத்தைக் கடந்த மாதம் வெளியிட்டிருந்தது. “எங்களையே விமர்சிக்கிறீர்களா?” எனப் பொங்கி எழுந்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூரியகாந்த் அமர்வு, தாமாக முன்வந்து (suo motu) இந்த விவகாரத்தை எடுத்துக்கொண்டு விசாரித்தது, தீர்ப்பையும் வழங்கிவிட்டது.

“இது நீதித்துறையை மக்களிடையே மதிப்பிழக்கச் செய்ய வேண்டும் என்ற உள்நோக்கத்தில் இருந்து செய்யப்பட்ட திட்டமிட்ட நடவடிக்கை” என்று விமர்சித்ததோடு, இப்பகுதியைப் பாடத்திலிருந்து நீக்குமாறும், விநியோகிக்கப்பட்ட புத்தகங்களைப் பறிமுதல் செய்யவும், இணையதளங்களில் உள்ளவற்றையும் நீக்குமாறும், பள்ளிகளில் கூட இப்புத்தகம் பயன்படுத்தப்படாததை உறுதி செய்ய வேண்டும் என்றும் மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

இவ்வாறு தடை விதிப்பது நீதித்துறையின் மதிப்பைக் காப்பதற்கே என்று உச்ச நீதிமன்றம் விளக்குகிறது. இந்த அத்தியாயம் மாணவர்களிடம் நீதித்துறை குறித்த தவறான கருத்துகளை உருவாக்கும் என்றும், இது குழந்தைகளின் மனதில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் நீதிமன்றம் கவலை தெரிவித்தது. நீதிமன்றங்கள் குறித்த தவறான கருத்துக்கள் குழந்தைகளின் மனதில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கவலைப்படும் நீதிமன்றங்கள், பல ஆண்டுகளாக முடிக்கப்படாமல் தேங்கிக்கிடக்கும் வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் குறித்தும், நீதிபதிகளின் இலஞ்ச லாவண்யங்கள் குறித்து தொடர்ந்து புகார்கள் அதிகரித்து வருவது குறித்தும் சிறிதும் கவலைப்படுவதில்லை.

இந்த புத்தகங்களுக்குத் தடை போட்டது பத்தாது என்று இன்னும் ஒரு படி மேலே போய், மார்ச் 11 அன்று, உச்ச நீதிமன்றம், இந்த புத்தகத்தை வடிவமைத்த எழுத்தாளர்கள் மைக்கேல் டானினோ, சுபர்ணா திவாகர், அலோக் பிரசன்ன குமார் ஆகிய மூவரையும் அடையாளம் கண்டு, அவர்களை “அரசு நிதியில் இயங்கும் எந்தவொரு பாடத்திட்டம் மற்றும் கல்வித் திட்டங்களிலிருந்தும்” நீக்க உத்தரவிட்டது. இது அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கும் பொருந்தும் என்று உத்தரவிட்டது. அதாவது நீதிமன்றத்தை விமர்சனம் செய்ததால் இவர்கள் இனி எங்கேயும் வேலை செய்ய முடியாத நிலையை உச்ச நீதிமன்றம் ஏற்படுத்தியிருக்கிறது. அந்தத் தீர்ப்பில், “இந்த நபர்களுக்கு இந்திய நீதித்துறை பற்றிய போதுமான அறிவு இல்லை, அல்லது அவர்கள் வேண்டுமென்றே உண்மைகளைத் திரித்துக் காட்டியுள்ளனர்” என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

இந்தச் சர்ச்சையைத் தொடர்ந்து சமூக ஊடகங்களில் வெளியான எதிர்வினைகளை பார்த்த பிறகு, “சில சமூக விரோதிகள்” எவ்வாறு எதிர்வினையாற்றியுள்ளனர் என்பதைப் புறக்கணிக்க முடியாது என்று தலைமை நீதிபதி சூரியகாந்த் கூறியுள்ளார். “அவர்கள் நாட்டிற்கு வெளியே மறைந்திருந்தாலும் கூட, நான் அவர்களை விட்டுவைக்க மாட்டேன்” என்று அவர் எச்சரித்துள்ளார்.

நீதிபதிகள், தாங்கள் அரசியல் சட்டத்தின் பாதுகாவலர்கள், மக்களின் அடிப்படை உரிமைகளைக் காப்பவர்கள் என்று கூச்சமில்லாமல் கருத்தரங்குகளில் சவடால் அடிக்கின்றனர். ஓட்டுக் கட்சிகளும், அதன் தலைவர்களும், அரசு அதிகாரிகளும் நீதிமன்றத்தின் தீர்ப்பே இறுதியானது, அதை மீற முடியாது என்ற தொனியில் நீதிமன்றங்களுக்கும் நீதிபதிகளுக்கும் வளிந்து ஒளிவட்டம் தருகின்றனர். ஆனால், நீதிமன்றங்களோ மக்களின் அடிப்படை வாழ்வாதாரப் பிரச்சினைகளில் கூட, குறைந்தபட்சம் சட்டத்தின்படி தீர்ப்பு எழுதியதில்லை. மாறாக, மக்களின் நலன்களுக்கு எதிராகவும், முதலாளிகள், ஆட்சியாளர்கள் மற்றும் ஆளும் வர்க்க நிலைப்பாட்டிற்கு ஆதரவாகவுமே தீர்ப்பெழுதியுள்ளனர்.

தொழிலாளர்கள்-விவசாயிகளின் கோரிக்கை சார்ந்த வழக்குகள், பாபர் மசூதி வழக்கு, பணமதிப்பிழப்பு வழக்கு, 370 சட்டப் பிரிவை நீக்கிய வழக்கு, தேர்தல் பத்திர வழக்கு, சமீபத்திய வாக்காளர் பட்டியல் திருத்த வழக்கு என மிக முக்கியமான வழக்குகளில் எல்லாம் உச்ச நீதிமன்றம் வெளிப்படையாகவே மோடி கும்பலுக்கு ஆதரவாகத் தீர்ப்புகளை வழங்கியுள்ளது. இத்தீர்ப்புகளை வழங்கிய நீதிபதிகள், அதற்குக் கைமாறாகத் தங்களது பணி ஓய்வுக்குப் பிறகு பல உயர் பதவிகளில் மோடி கும்பலால் நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.

எனவே, நீதிபதிகள் என்றாலே நடுநிலையானவர்கள், ஊழல் கறை படியாதவர்கள் என்று சொல்வது “வெள்ளைத் தோலுள்ளவன் பொய் சொல்ல மாட்டான்” என்ற மூடநம்பிக்கையைப் போன்றது. என்சிஇஆர்டி (NCERT) வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்த சமயத்தில்தான், பணம் பதுக்கிய வழக்கில் விசாரணையில் உள்ள டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் சர்மாவின் விசாரணைக் குழுவில் புதிய நீதிபதியை நியமிப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டிருந்தார் தலைமை நீதிபதி.

நீதித்துறையில் ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து எழும் விவாதங்கள் வெறும் அரசியல் விமர்சனங்களாக மட்டுமே இல்லை. இதற்கான புள்ளிவிவரங்களும் வெளிவந்துள்ளன. 2016–2025 காலகட்டத்தில் உச்ச நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் மீது 8600 புகார்கள் வந்துள்ளன என்று மத்திய சட்ட அமைச்சகம் மக்களவையில் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் ஒன்றும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல என்பதை இந்தத் தரவுகளே ஆணித்தரமாகச் சொல்கின்றன. ஆனால், தலைமை நீதிபதியோ, “எங்களைப் பற்றி விமர்சிக்கக் கூடாது” என்கிறார்.

  • மாணிக்கம்

தகவல் ஆதாரம்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன