தி.மு.க.வின் ‘மகளிர் நலத் திட்டங்கள்’ உள்ளே
ஒளிந்திருக்கும் வர்க்க நலன் என்ன?

பெண்கள் வீட்டில் முடங்கிக் கிடப்பது, பிற்போக்குக் குடும்பத் தளைகளுக்குள் கட்டுண்டு கிடப்பது போன்றவற்றைக் கண்டு, இதை உடைக்க என்ன செய்யலாம் என்று சிந்தித்து, தி.மு.க. இத்திட்டங்களைச் செயல்படுத்துவது போல ஜெயரஞ்சன் போன்றோர் உருவாக்கி வரும் பிம்பங்கள் எவையும் உண்மையல்ல. உண்மையில், இவை ஸ்டாலினோ அல்லது தி.மு.க.வின் ‘பொருளாதாரப் புலிகளோ’ வடிவமைத்த திட்டமே அல்ல. ஐ.எம்.எஃப்., உலக வங்கியின் ஆணைக்கினங்க செயலாக்கப்படுபவை.

“அ.தி.மு.க.வின் அடிமை ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்”, “பாசிசம் வீழட்டும் தமிழகம் தலைநிமிரட்டும்” – போன்ற முழக்கங்களைக் கொண்டு 2021 சட்டமன்றத் தேர்தலை தி.மு.க எதிர்கொண்டது. 2024 நாடாளுமன்றத் தேர்தலிலோ “பாசிசத்தை வீழ்த்த இந்தியாவைக் காக்க ஸ்டாலின் அழைக்கிறேன்” என்ற முழக்கத்தைத் தமிழகத்தில் முன்வைத்தது. இப்பிரச்சாரத்திற்கு ஒத்திசைவாக இவ்விரு தேர்தல்களின்போதும், “தி.மு.க.தான் பாசிசத்தின் தடையரண்” “இது யார் ஆட்சிக்கு வருவது என்பதற்கான தேர்தல் அல்ல; யார் வரக்கூடாது என்பதற்கான தேர்தல்” – என்றெல்லாம் வலது, இடது கம்யூனிஸ்டுகள், முன்னாள் புரட்சியாளர்கள், மா-லெ குழுக்கள், அறிவு ஜீவிகள் என அனைவரும் கோஷ்டி கானம் பாடினர்.  

ஆனால், மக்களை ஒடுக்குவதிலும், தனியார்மயக் கொள்கையை அமல்படுத்துவதிலும் தான் எந்தவிதத்திலும் பா.ஜ.க.வுக்குச் சளைத்தவன் அல்ல என்பதையும்; பாசிச எதிர்ப்பில் தான் ஒரு சோளைக்காட்டு பொம்மைதான் என்பதையும் தி.மு.க. இந்த ஐந்தாண்டு ஆட்சியில் மீண்டும் மீண்டும் நிரூபித்துவிட்டது.

“நீ வேணும்னா உன்னை கோபால்சாமி என்று சொல்லிக் கொல்லலாம்; ஆனால், ஊர் உன்னை சப்பாணி என்றுதான் அழைக்கிறது” என்ற சினிமா வசனம் போல, தி.மு.க.வும் அதன் அடிவருடிகளும் வேண்டுமானால் அக்கட்சியை ‘பாசிச எதிர்ப்பாளன்’ என்று இன்னும் சொல்லிக் கொள்ளலாம்; ஆனால், முத்தமிழ் முருகன் மாநாடு நடத்தியது தொடங்கி, ஆபரேஷன் சிந்தூரில் இராணுவத்தை ஆதரித்துப் பேரணி போனது வரை அதன் “பாசிச எதிர்ப்பு” பல்லிளித்து நிற்கிறது. அம்பலப்பட்டு நாறும் தி.மு.க.வின் “பாசிச எதிர்ப்பு” யோக்கியதையை மூடிமறைத்து அத்தர், பன்னீரு பூசும் ‘திருப்பணியை’ மேற்கூறிய சக்திகள் செவ்வணே செய்து வந்தாலும், அது வேலைக்காகவில்லை!

மறுபுறம், ஃபாக்ஸ்கான், சாம்சங் தொழிலாளர் போராட்டம் தொடங்கி தூய்மைப் பணியாளர், செவிலியர் போராட்டம் வரை அதன் மக்கள் விரோத நடவடிக்கைகள் அம்பலமாகி மக்கள் காறி உமிழும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறாக, அனைத்துப் பக்கமும் அம்பலப்பட்டிருக்கும் தி.மு.க., எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள “ஸ்டாலின் தொடரட்டும்; தமிழ்நாடு வெல்லட்டும்”, “தமிழ்நாடின் வளர்ச்சியில் ஒருவரையும் பின் தங்கவிடமாட்டேன்” “500 ஆண்டுகள் போற்றும் 5 ஆண்டு சாதனை” — என்று பல்லவியை மாற்றியுள்ளது. மற்றபடி, ‘பாசிச எதிர்ப்பு’ என்பதை ஒரு ஊறுகாய் போலத் தொட்டுக் கொள்கிறது.

இவ்வாறாக, தனது அம்மணத்தை மறைக்கப் பயன்படுத்திக் கொள்ளும் மூடுதிரையாக ‘நான்காண்டு ஆட்சியில் செய்த மக்கள் நலத் திட்டங்களின் சாதனைகளை’ முழுவீச்சில் விளம்பரம் செய்து வருகிறது. தொலைக்காட்சி முதல் யூடியூப்வரை; பத்திரிக்கைகள் முதல் தெருக்கள் வரை எங்கெங்கு காணினும் தி.மு.க.வின் இந்த விளம்பரங்கள் படுஜோராகக் காணப்படுகின்றன. இவற்றில், மகளிர் உரிமைத் தொகை, மகளிர் விடியல் பயணம், புதுமைப் பெண், தோழி விடுதிகள் போன்ற திட்டங்களை மட்டும் இக்கட்டுரையில் பார்ப்போம்.

“மகளிர் உரிமைத் தொகை மூலம் சுமார் 1.31 கோடிப் பெண்கள் மாதாந்திரம் ரூ.1000 பெற்றுள்ளனர்; இது அவர்களின் குடும்பச் செலவில் இருந்து மருத்துவச் செலவு வரை அனைத்திற்கும் பயன்பட்டுள்ளது; பெண்கள் தமது செலவுகளுக்குக் குடும்பத்தையோ கணவரையோ சாராமல் சுயமாக இயங்க வழிவகுத்துள்ளது; இந்தியாவில் பிற மாநிலங்களில் இதை வெவ்வேறு பெயரில் அமல்படுத்தும் அளவுக்கு முன்னோடியான திட்டமாக மாறியுள்ளது; திட்டம் தொடங்கப்பட்ட செப்டம்பர் 2023-இல் இருந்து தற்போது பிப்ரவரி 2026 வரை சுமார் 35,000 கோடி ரூபாய் இதற்காகச் செலவழிக்கப்பட்டுள்ளது” – என்கிறது தி.மு.க. அரசு. 

நிர்ந்தர வேலை கேட்டதற்காக திமுக அரசால் கொடூரமாக ஒடுக்கப்பட்ட தூய்மைப் பணியாளர்கள்

அதேபோல, பெண்கள் இலவசமாகப் பேருந்துப் பயணம் செய்யும் “மகளிர் விடியல் பயணம்” திட்டத்திற்கு கடந்த நான்கரை ஆண்டுகளில் 12000 முதல் 15,000 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது; இதனால், சராசரியாக ஒரு குடும்பப் பெண் மாதாந்திரம் சுமார் ரூ.800 முதல் 1000 வரை சேமிக்கிறார்; பெண்கள் குடும்பத்தை எதிர்பார்க்காமல் சொந்தக் கால்களில் நிற்கவும், எங்கும் சென்றுவரவும் இத்திட்டம் வழிவகுத்துள்ளது; 881 கோடி முறை பெண்கள் இத்திட்டத்தின் மூலம் பயணம் செய்துள்ளனர்” என்கிறது. மேலும், “கல்லூரி மாணவிகள் பயன்பெறும் ‘புதுமைப் பெண்’ திட்டம் மூலம், சுமார் 7 இலட்சம் மாணவிகளுக்கு மாதாந்திரம் ரூ.1000 கொடுக்கப்பட்டுள்ளது; இது பெண்கள் கல்லூரிகளில் சேரும் விகிதத்தை பலமடங்கு அதிகரித்துள்ளது; அதேபோல, சுமார் 19 விடுதிகளில் பெண்கள் தங்கிப் பணிபுரியும் வகையில் உயர்தர தோழி விடுதிகள் கட்டப்பட்டுள்ளன; இத்திட்டங்களால் பெண்கள் சுயமாகப் பொருளாதரத்தில் முன்னேறி வருகிறார்கள் என்று பிரச்சாரம் செய்கிறது, தி.மு.க. தமிழ்நாட்டின் தொழிற்துறை வளர்ச்சிக்கும், பொருளாதர வளர்ச்சிக்கும் இத்திட்டங்கள் ஆதரக் கல்லாக இருப்பதாகவும், தொலைநோக்கிலானதாகவும், ஒன்றிய அரசின் அறிக்கைகளே இவற்றைப் பாராட்டுவதாகவும் முதலமைச்சர் முதற்கொண்டு கடைக் கோடித் தி.மு.க. தொண்டர்கள் வரை மக்களிடம் இதை விளம்பரம் செய்கின்றனர்.

இவ்வாறு பட்டியல் போட்டுப் பார்க்கையில், “அடடே மகளிர் நலனுக்காக தி.மு.க. இவ்வளவு செய்துள்ளதே” என்ற மலைப்பு வரலாம்.

மறுபுறம், இத்திட்டங்கள் கடும் நிதிச் சுமையையும் கடனையும் மாநிலத்திற்கு ஏற்படுத்துகிறது; இலவசங்களைக் கொடுத்து மக்களின் வாக்குகளைக் கவரும் ஒரு உத்தி – என்றெல்லாம் பா.ஜ.க.வும் அ.தி.மு.க.வும் பிரச்சாரம் செய்து வருகின்றனர். பாசிச கும்பலின் அடியாள் படைகளும் நீதிமன்றங்களும் இவ்வாறே ‘இலவச கலாச்சாரம்’ ‘ரேவடி கலாச்சாரம்’ என்று இவற்றைக் கண்டிக்கின்றன. உண்மையில், மேற்படி திட்டங்கள் மக்களின் ஓட்டுக்களை வாங்குவதற்காகப் பயன்படுகின்றன என்பது உண்மைதான். ஆனாலும், அவை வெறும் கவர்ச்சித் திட்டங்கள் மட்டும் அல்ல! ஏகாதிபத்தியத்தின் சுரண்டல் நலனுக்காக, ஐ.எம்.எஃப்., உலக வங்கி ஆகியவற்றின் உத்திரவின்படி, ‘தொலை நோக்கில்’ வடிவமைக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுவையே!

“எது முதலாளியின் நலனுக்கானதோ, அதை மக்களின் நலனுக்கானது” என்று பிரச்சாரம் செய்வதிலும் நம்பவைப்பதிலும்தான் முதலாளி வர்க்கத்தின் வெற்றியும் முதலாளித்துவ அரசுகளின் வெற்றியும் அடங்கியுள்ளது. ஒரு பற்பசை கம்பெணி, ‘தனது பற்பசையை விற்பதால் தன் இலாபம் பெருகும்’ என்று விளம்பரம் செய்வதில்லை. மாறாக, “இப்பற்பசை பற்கூச்சத்தைப் போக்கும், ஈறுகளை வலிமையாக்கும்” என்றுதான் முதலாளிகள் நம் தலையில் கட்டுகின்றனர். அதேபோல, “நாட்டின் இயற்கை வளங்களைக் கொள்ளையடித்து வேகமாக ஏற்றுமதி செய்து இலாபம் ஈட்டத்தான் 8 வழிச் சாலை போடுகிறோம்” என்று நம்மிடம் சொல்லப்படுவதில்லை. மாறாக, “2 மணி நேரத்தில் சேலம் – சென்னை போகலாம்; பயண நேரம் குறையும்; வேலைவாய்ப்பு பெருகும்; தொழில் வளர்ச்சி பெருகும்” என்றுதான் முதலாளித்துவ அரசுகள் நம் தலையில் இத்திட்டங்களைக் கட்டுகின்றனர்.

இதைப்போலத்தான், பன்னாட்டு, உள்நாட்டு கார்ப்பரேட்டு முதலாளிகளின் நலனையும் சுரண்டலையும் அடிப்படையாகக் கொண்டு, தொலைநோக்கில் திட்டமிடபட்டு, நடைமுறைப்படுத்தப்படும், மகளிர் உரிமைத் தொகை, புதுமைப் பெண், தோழி விடுதிகள், விடியல் பயனம் போன்ற திட்டங்கள் மக்களின் நலனுக்கானது என்று பிரச்சாரம் செய்து, நம்பவைத்து, வெற்றிகரமாகவே நமது தலையில் கட்டிவிட்டது தி.மு.க. அரசு!

மேற்படி திட்டங்களின் உண்மை சொரூபத்தைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

சுருங்கக் கூறினால், மேற்கூறிய அனைத்துத் திட்டங்களும் பெண்களை உழைப்புச் சந்தையில் (FLFP – Female Labour Force Participation) மிக அதிகமாகவும் விரைவாகவும் இழுத்து வருவதையே இலக்காகக் கொண்டுள்ளன.

தமிழ்நாடு அரசு உலக வங்கியோடு சேர்ந்து “தமிழ்நாடு பெண்கள் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பு திட்டம்” (TNWeSafe) என்ற திட்டத்தை 2024-ஆம் ஆண்டு முதல் அமுல்படுத்தி வருகிறது. இது ஒரு PforR (Program for Results) திட்டமாகும். அதாவது, திட்டத்தை அமல்படுத்தும் முன்னர் உலக வங்கி அதற்கான கடனை வழங்காது; திட்டத்தின் சில விளைவுகளைப் பார்த்துவிட்டுப் பின்னரே அக்கடனை வழங்கும். இத்திட்டத்தின் மதிப்பு 1,250 கோடி ரூபாய் ஆகும். முதல் தவனையாக ரூ.147 கோடியை உலக வங்கி இதற்காக அளித்துள்ளது. 5 ஆண்டுகளுக்கு, அதாவது 2024 – 2029 வரை இத்திட்டம் அமலாகும்.

இத்திட்டத்தின் இலக்கு, தமிழ்நாட்டின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியின் மதிப்பை 2030-ஆம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் டாலராக அதிகரிப்பதாகும். இவ்வளர்ச்சியைத் துரிதப்படுத்துவதற்காக, பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கையை விரைவாக உயர்த்துவதாகும்.

இவ்வாறு உழைப்புச் சந்தையில் பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கையை உயர்த்துவதற்காக ஒன்பது வெவ்வேறு பெயர்களில் — பெண்களுக்கன பொருளாதாரம் (Womenomics), பெண்களுக்கான தரவு வங்கி (Women Information Bank), கூட்டு முயற்சி (Synergy), திறன்சுடர் (skill development), கலங்கரை (career support), தோழி விடுதிகள், தொழில் அணங்கு, அண்பு குடில் (Care Cube) — உலக வங்கி வகுத்துக் கொடுத்த திட்டங்களை, தமிழில் பெயர் மாற்றி, அச்சுப் பிசகாமல் அப்படியே அமலாக்கி வருகிறது, தி.மு.க. அரசு.

இதை நாம் கூறவில்லை, கடந்த ஜனவரி மாதம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் உலக மகளிர் உச்சி மாநாட்டில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “ஆண் – பெண் இடையிலான பாலின இடைவெளியை குறைத்தால் பொருளாதாரம் வேகமாக வளரும் என்று ஐ.எம்.எஃப் (I.M.F) அமைப்பே சொல்கிறது. நாங்களும், 2030-க்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட தமிழ்நாடு எனும் எங்கள் இலக்கை அடைய பெண்கள் தான் முக்கியப் பங்கு வகிக்க வேண்டும் என்று செயல்பட்டு வருகிறோம்” என்று கூறியிருக்கிறார்.

ஆம், முதலமைச்சர் ஸ்டாலின் சொல்வதுபோல், இந்தியாவின் உழைப்புச் சந்தையில் பெண்களின் பங்கேற்பு (Labour Force Participation Rate – LPRF) மிகக் குறைவாக உள்ளதாகவும் இதைச் சரி செய்தால் ஜி.டி.பி 20 – 30% வளரும் என்றும் ஐ.எம்.எப் அமைப்பு தொடர்ந்து ஓலமிட்டு வருகிறது.

ஐ.எம்.எப்.இன் அடியொற்றிப் பேசிய முதல்வரும், “இப்போதே பல தனியார் நிறுவனங்களில் இத்தனை சதவீதம் பெண் தொழிலாளர்களுக்கு என்று ஒதுக்க ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால், பெண்கள் அதிகமாக வேலைக்குச் செல்வதில் நாம் திருப்தி அடைந்துவிடக் கூடாது. ஆண்களுக்கு இணையாக பெண்கள் வெளியே வர வேண்டும். இன்னும் அதிகமாக வர வேண்டும். புதிதாக வளர்ந்து வரும் துறைகளில் பெண்கள் இடம் பெற வேண்டும்” என்றார்.

பெண்கள் வீட்டில் முடங்கிக் கிடப்பது, பிற்போக்குக் குடும்பத் தளைகளுக்குள் கட்டுண்டு கிடப்பது போன்றவற்றைக் கண்டு, இதை உடைக்க என்ன செய்யலாம் என்று சிந்தித்து, தி.மு.க. இத்திட்டங்களைச் செயல்படுத்துவது போல ஜெயரஞ்சன் போன்றோர் உருவாக்கி வரும் பிம்பங்கள் எவையும் உண்மையானவையல்ல. உண்மையில், இவை ஸ்டாலினோ அல்லது தி.மு.க.வின் ‘பொருளாதாரப் புலிகளோ’ வடிவமைத்த திட்டமே அல்ல. ஐ.எம்.எஃப்., உலக வங்கியின் ஆணைக்கினங்க செயலாக்கப்படுபவை என்பதையே மேலே கண்டோம். எனவே, ஆடு நணைவதைக் கண்டு ஓநாய்களுக்கு என்ன கவலை! ஃபாக்ஸ்கான் பெண் தொழிலாளிகளும், தூய்மைப் பணியாளர்களும் போராடியபோது, கொடூரமாக ஒடுக்கிய “அப்பா” ஸ்டாலின், இத்திட்டங்களைச் செயல்படுத்துவதன் நோக்கம் மேன்மேலும் அதிகமாகவும் விரைவாகவும் பெண்களை உழைப்புச் சந்தைக்குள் இழுத்து வருவது மட்டுமே!

மேற்படி திட்டங்கள் இத்திசையில் உண்மையில் பெரிய முன்னேற்றத்தைச் சாதித்துள்ளன. 2017-18ஆம் ஆண்டுகளில் 37 சதவீத கிராமப்புற பெண்கள் மட்டுமே தொழிலாளர்களாக இருந்தனர். இது ஆண்டுக்காண்டு வளர்ச்சியடைந்து, 2023-24ஆம் ஆண்டில் 54 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. நகர்ப்புறங்களிலும் இதேபோல வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இது தொடர்ந்து வளர்ந்துவருவதை அரசே சாதனையாகப் பீற்றிக்கொள்கிறது.

2025ஆம் ஆண்டு Institute for What Works to Advance Gender Inequality (IWWAGE) வெளியிட்ட ஆய்வறிக்கையிலிருந்து (Tamil Nadu Fact Sheet – TREND IN FEMALE LABOUR FORCE PARTICIPATION IN TAMIL NADU)

உதாரணமாக, தமிழ்நாட்டில் இயங்கும் ஃபாக்ஸ்கான் நிறுவனம் 42,000 தொழிலாளர்களை பணிக்கமர்த்தியுள்ளது. இதில் 33,000 பேர் (அதாவது 76%) பெண் தொழிலாளர்களாவர். ராயல் என்ஃபீல்டு, எமாகா போன்ற அனைத்து நிறுவனங்கள் பெண்களை அதிகளவில் பணியமர்த்த விரும்புகின்றனர். அதேபோல, ஸ்விக்கி, சொமேட்டோ, அமேசான், பிளிப்கார்ட் போன்ற கிக் பணிகளிலும் பெண்களை பணிக்கமர்த்துவதையே பெரும்பாலான உள்நாட்டு, வெளிநாட்டு கம்பெனிகள் விரும்புகின்றனர்.                                    

சரி, ஏன் இவ்வாறு பெண்கள் உழைப்பை முதலாளித்துவம் அதிகமாக விரும்புகிறது? பெண்களை முன்னேற்றவா? பொதுவில், முதலாளித்துவச் சமூக அமைப்பில் உற்பத்திச் சக்திகளின் (அதாவது, இயந்திரங்கள், தொழில்நுட்பம் etc) வளர்ச்சியின் விளைவாக உடல் உழைப்பு, உடல் வலிமைக்கான தேவை குறைகிறது.

“உடலுழைப்புக்கான திறமை மற்றும் உடல் வலிமை எந்த அளவுக்குக் குறைவாகத் தேவைப்படுகின்றதோ, அதாவது நவீனத் தொழில்துறை எந்த அளவுக்கு மேலும் மேலும் வளர்ச்சி பெறுகின்றதோ, அந்த அளவுக்கு மேலும் மேலும் ஆண்களின் உழைப்புப் பெண்களின் உழைப்பால் அகற்றப்படுகிறது. தொழிலாளி வர்க்கத்துக்கு வயது வேறுபாடும், ஆண், பெண் என்கிற பால் வேறுபாடும் இனிமேல் எவ்வித தனித்த சமூக முக்கியத்துவத்தையும் கொண்டிருக்கவில்லை. அனைவருமே உழைப்புக் கருவிகள்தாம். அவர்களைப் பயன்படுத்திக் கொள்வதற்கு ஆகும் செலவு மட்டும் அவர்களின் வயதுக்கும் பாலினத்துக்கும் தக்கவாறு அதிகமாகவோ குறைவாகவோ இருக்கிறது.” (மார்க்ஸ், ஏங்கல்ஸ், கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை)

எனவே, முதலாளித்துவம் தன் தொடக்க காலந்தொட்டே ஆண்களுக்கு இணையாக பெண்களையும் குழந்தைகளையும் உழைப்பில் ஈடுபடுத்தி ஈவிரக்கமின்றிச் சுரண்டுவதைத் தொடர்ந்து மேற்கொண்டுவருகிறது. பல்வேறு சமூகச் சூழல்களால், ஆண்களைவிட பெண்கள் சங்கமாய்த் திரள்வது, தமது எதிர்ப்புகளை வெளிப்படுத்துவது, உரிமைகளுக்காக நிற்பது போன்றவை குறைவு. ஒப்பீட்டளவில் மிகவும் பலவீனமான பிரிவினர் (vulnerables) என்பதால் அவ்வாறு அவர்கள் எதிர்த்துப் போராடினாலும், எளிதில் நசுக்கி ஒடுக்கிவிட முடியும். உலகம் முழுவதும் மூலதனம் பெண் உழைப்பை உறிஞ்சிக் கொழுப்பதன் இரகசியம் இதுதான். ஆப்பிள் தொலைபேசியை உற்பத்தி செய்யும் கொலைகார ஃபாக்ஸ்கான் நிறுவனம் எவ்வாறு சீனாவின் கிராமப்புறப் பெண்களைக் குறிவைத்து வேலைக்கு அமர்த்துகிறது என்பதைப் பற்றி எண்ணற்ற ஆய்வுகள் வந்துள்ளன. எனினும், இந்தியா போன்ற நாடுகளில் சாதி, குடும்ப கெளரவம், பெண்கள் மீதான கற்பொழுக்கம் போன்ற நிலப்பிரபுத்துவ விழுமியங்கள் இன்னும் வேரூன்றியிருப்பதால் இது இன்னும் அவர்களுக்கு அனுகூலமாக உள்ளது.

சங்கத்தில் சேர்ந்து போராடும் ஒரு பெண்ணின் வீட்டிற்கு போன் செய்து ‘உன் பெண் இன்னாருடன் சுற்றுகிறார்; அவள் எதிர்காலம் பாழாகிவிடும்’ என்று நிர்வாகம் மிரட்டினாலே போதும்; குடும்பமே அப்பெண்ணை வீட்டிற்கு அழைத்துக் கொள்ளும். இது ஒன்றும் கற்பனை அல்ல! இதுதான் ஃபாக்ஸ்கான் உள்ளிட்ட அனைத்து பெண் தொழிலாளர்கள் போராட்டத்திலும் ஆலை நிர்வாகம் மேற்கொண்ட அனுகுமுறை!!

ஆண்களுக்கு இணையாக, சொல்லப்போனால் ஆண்களைவிட அதிகமாக, பெண்களைக் கசக்கிப் பிழிய வாய்ப்பிருக்கும் அதே சூழலில், அவர்களுக்கு சம ஊதியம் கூட கொடுக்காமல் அடிமாட்டு விலையில் உழைப்பைச் சுரண்ட முடியும். அதுவும் கிராமப்புறத்தில் இருந்து வரும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட உழைக்கும் வர்க்கப் பெண்களுக்கு ரூ. 12,000 – 15,000 என்பதே மிகப்பெரிய தொகையாகப் பார்க்கப்படும் என்பதால் முதலாளிகளுக்கு இது இன்னும் அணுகூலமானது.

எனவேதான், கிராமப்புற, நகர்ப்புறங்களில் உள்ள ஐ.டி.ஐ., பாலிடெக்னிக் கல்லூரிகள் போன்ற இடங்களுக்கு இம்முதலாளிகள் படையெடுத்துச் செல்கின்றனர். அங்கு படித்துக் கொண்டிருக்கும் 16 – 22 வயதுக்குட்பட்ட இளம் பெண்களைக் குறிவைத்து, கசாப்புக் கடைக்காரன் ஆடுகளை வாங்கிச் செல்வதைப் போல, கொத்துக் கொத்தாக தத்தமது கம்பெனிகளுக்குள் இழுத்து வருகின்றனர். பொதுவில் அனைத்து உற்பத்தி நிறுவனங்களும் இந்த இளம் பெண்களைக் குறிவைக்கக் காரணம், அவர்களின் இளம் இரத்தம் தான்.

உற்பத்தித் துறையில் இருக்கும் கடுமையான வேலைகளை 10 – 12 மணி நேரம் செய்வதற்குறிய இளமையும் இரத்தமும் இவர்களிடம் இருப்பதால் தான் இவர்கள் நாவில் எச்சில் ஊறுகிறது. அதனால்தான், திருமணமான அல்லது பிள்ளை பெற்ற பெண்களைப் பெரும்பாலான நிறுவனங்கள் வேலைக்கு எடுப்பதில்லை. கடந்த ஜூன் 2024 இல் திருமணமான பெண்களை பாக்ஸ்கான் வேலைக்கு எடுப்பதில்லை என்ற செய்திகள் பிபிசி, ஃபர்ஸ்ட் போஸ்ட், இந்து போன்ற பத்திரிக்கைகளிலேயே வெளியாயின. ஃபாக்ஸ்கான் போன்ற மின்னணு சாதனங்கள் உற்பத்தித் துறையில் குறிப்பிட்ட உதிரிப் பாகங்களைப் பொருத்த, கை நடுங்கக் கூடாது; கண் பார்வை துல்லியமாக இருக்க வேண்டும் என்பதுதான் இதற்கு முக்கியக் காரணமாகும். எனவே, திருமணமான, பிள்ளைப் பெற்ற பெண்களை இந்நிறுவனங்கள் உற்பத்தித் திறன் அற்றவர்கள் என்றே பார்க்கின்றனர்.

ஆக, 3-4 ஆண்டுகள் இளம் இரத்தம் உள்ளவரை, கரும்பு மிஷினில் கரும்பைப் பிழிந்து சக்கையை வெளியேற்றுவதைப் போல, இப்பெண்களின் உழைப்பை முற்றிலுமாக உறிஞ்சிவிட்டு வெளியே தள்ளிவிட முடியும். இதைத்தான் கார்ப்பரேட்டுகள் ஏற்கனவே செய்து வருகிறார்கள். “தமிழ்நாட்டில் உள்ள 18 லட்சம் தையல் தொழிலாளர்களில் 60% பெண் தொழிலாளர்கள் உள்ளனர். … தொழிற்சாலை அமைப்பானது கொட்டடிகள் போல (sweatshop) இயங்கும் நிலையை கொண்டு வந்தது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.” என்று ஆளும் வர்க்கப் பத்திரிக்கையான இந்து நாளேடே குறிப்பிடுகிறது. இந்தச் சுரண்டலை மேலும் தீவிரப்படுத்தி, ஆழப்படுத்தவே மேன்மேலும் ‘உழைப்புச் சந்தையில் பெண்களின் பங்கேற்பை அதிகரிக்கச் செய்யுமாறு’ ஐ.எம்.எப்., உலகவங்கி போன்றவை ஆணையிடுகின்றன.  

இதைத்தான் ‘இந்தியாவிலேயே பெண் தொழிலாளர்கள் அதிகம் கொண்ட மாநிலமாக (40%) தமிழ்நாடு உள்ளது; ஓசூர், சென்னை போன்ற இடங்களில் மின்னணு, காலனி உற்பத்தித் துறைகளில் மட்டும் சுமார் 1 இலட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் வேலை வாய்ப்பைப் பெற்றுள்ளனர்’ என்றெல்லாம் திராவிட மாடல் அரசு தம்பட்டம் அடிக்கிறது.

சரி. முதலாளிக்கு, அதாவது காசப்புக் கடைக்காரனுக்கு, நோஞ்சான் ஆடுகளைக் கொடுத்தால் வாங்குவானா? சதைப் பிடிப்புள்ளவற்றைத்தானே வாங்குவான்!! எனவே, அவ்வாறு பெண்களை திறன் படைத்த தொழிலாளர்களாக மாற்றவும், அதைக் காட்டி முதலீடுகளைக் கூவிக் கூவி ஈர்க்கவும்தான் நான் முதல்வன், திறன் சுடர் போன்ற திட்டங்கள். அதாவது, எப்படி ஆடு வளர்ப்பவன் தன் சொந்தச் செலவில் தீவணம் வாங்கிப் போட்டு, ஆட்டை வளர்த்து சந்தையில் விற்கிறானோ, அதேபோல, அரசு மக்களுடைய வரிப் பணத்தை எடுத்து முதலாளிக்குத் தேவையான திறன்களையும் வளர்த்து தயார் நிலையில் (ready-made) பெண் தொழிலாளிகளை அனுப்பவே இத்திட்டங்கள்.

இவ்வாறு அரசே தன் சொந்த செலவில் ஆடுகளை சதைப்பிடிப்போடு, அதாவது முதலாளிக்குத் தேவைப்படும் திறன்களோடு, வளர்த்துக் கொடுத்தது மட்டுமின்றி, அவற்றை அடைத்து வைத்துப் பாதுகாக்கும் பட்டிகளையும் அமைத்துத் தருகிறது: அவைதான் தோழி விடுதிகள். ஏற்கனவே குறிப்பிட்டதுபோல, சுமார் 19 இடங்களில் ஆயிரக்கணக்கான பெண்கள் தங்கும் வசதிகளுடன் இவ்விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளன. 10-12 மணிநேரம் வரை சுரண்டுவதற்கு ஏதுவாக இவ்விடுதிகள் தொழிற்சாலைகளுக்கு அருகமைப் பகுதிகளில் அமைக்கப்படுகின்றன. எனவே, உள்ளூர் பெண்கள் அல்லது வெளியே தங்கும் பெண்களை வேலைக்கெடுத்தால் ஆகும் பயண நேரம் போன்றவற்றை இதில் ஒழித்துவிட முடியும். அந்த நேரத்தை உற்பத்தியில் அவர்களை எளிதாக ஈடுபடுத்திவிட முடியும்.

மார்க்சின் கூற்றுப்படி தொழிலாளியின் உழைப்புச் சக்தி என்பது எல்லாவற்றையும்போல ஒரு சரக்கு; தொழிலாளி ஒருநாளில் தான் இழந்த உழைப்புச் சக்தியை உண்டு, உறங்கி மீட்டமைத்து வருவதற்கான தொகைதான் (subsistence) கூலியாகும். எனவே, இவ்விடுதிகளில் தங்கும் பெண்களுக்கு உணவு, வாடகை, மின்சாரம் — அதாவது உழைப்புச் சக்தியை மீட்டமைப்பதற்கான அடிப்படைகளை — போன்றவற்றை அரசே மாணியங்கள் மூலம் மலிவு விலையில் கொடுக்கப்படுவதால், முதலாளிகள் கூலியை மேன்மேலும் குறைத்துவிட முடியும்.

இவ்வாறு பெண்களை உழைப்புச் சந்தைக்குள் திறனுள்ளவர்களாக இழுத்து வருவது முதல் அவர்களை கொட்டடியில் அடைத்துச் சுரண்ட ஏற்பாடுகளைச் செய்து கொடுப்பது வரை என ஆதிமுதல் அந்தம் வரை துல்லியமாகத் திட்டமிடப்பட்டே இவை நடைமுறைப்படுத்தப்படுகின்றன. இவைபோதாதென்று, குழந்தை வளர்ப்பினால் பெண்கள் வேலைக்கு வரும் விகிதம் குறைகிறது, அவர்களின் உற்பத்தித் திறன் குறைகிறது என்பதால், அதைச் சரிக்கட்ட “குழந்தை வளர்ப்பையும் அரசே பொறுப்பெடுத்துச் செய்ய வேண்டும்” என தமிழக அரசின் சமீபத்திய பொருளாதார அறிக்கை 2025-26 (Economic Survey of Tamil Nadu 2025-26) கூறியுள்ளது. இவை முழுக்க முழுக்க முதலாளித்துவ உழைப்புச் சுரண்டலையே அடிப்படையாகக் கொண்டுள்ளன; மற்றபடி, மகளிர் நலன், சமூக நீதி என்பதெல்லாம் அப்பட்டமான பித்தலாட்டமே!!

எது எப்படியோ பெண்கள் வெளியே வருகிறார்கள் செய்கிறார்கள்; அதானால் இந்தத் திட்டங்களை ஆதரிக்கலாம் என்று வாதிடுவோருக்கு ஒன்றைச் சொல்கிறோம். பெண்கள் மீதான ஒடுக்குமுறையின் உருவகமான (embodiment of women slavery) பார்ப்பனிய சித்தாந்தத்தை ஏற்று நடைமுறைப்படுத்துகின்ற; சதி, பால்ய விவாகம் போன்றவற்றை ஆதரித்த ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க தலைமையிலான ஒன்றிய மோடி அரசு, கடந்த 2021 ஆம் ஆண்டு பெண்களின் திருமண வயதை 18 இலிருந்து 21 ஆக உயர்த்தியது. இதன் நோக்கம் பெண் விடுதலை, முன்னேற்றம் என்றே தம்பட்டம் அடித்தது. ஆனால், இச்சட்டம் நிறைவேறப்பட்டதும், ‘உழைப்புச் சந்தையில் பெண்களின் பங்கேற்பு உயரும்’ என்று எல்லா பொருளாதாரப் பத்திரிக்கைகளும் புகழ்ந்து எழுதின. அதுதான் அச்சட்டத்தின் உண்மை நோக்கமும்!! மோடி வயது வரம்பை உயர்த்தி இதைச் செய்தார் என்றால், ஸ்டாலின் நலத் திட்டங்கள் என்ற பெயரில் அதையேதான் செய்கிறார்! எனவே, இருவரது நோக்கமும் ஒன்றுதான்: ஐ.எம்.எஃப்., உலக வங்கி உத்திரவின்படி, உழைப்புச் சந்தையில் பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கையை உயர்த்துவதே!! ஆக, கருப்போ, காவியோ முதலாளித்துவ சேவையில் ஒன்றுதான்!!

சரி, ஏதோவொரு வகையில் பெண்கள் பொருளாதார வாழ்விற்குள் வருகிறார்களே; குடும்பப் பிற்போக்கை விட்டு வெளியே வருகிறார்களே; முன்னேறுகிறார்களே; இது நல்லதுதானே என்று நினைக்கலாம்.

உண்மையில், இப்பெண்கள் ரூ.10,000 – 20,000 வரையிலான அடிமாட்டுக் கூலிக்கே பெரும்பாலும் அமர்த்தப்படுகின்றனர். அதுவும், பணிநிரந்தரமோ, பணிப்பாதுகப்போ கிஞ்சித்தும் இல்லை. 11 -12 மணி நேரம் எவ்விதக் கேள்விகளும் உரிமைகளும் இன்றிச் சுரண்டப்படுகின்றனர். ஏற்கனவே குறிப்பிட்டது போல கொட்டடிக் கூடங்களுக்கு (sweat shops) நிகரான கொடுமையான நிலைமைகளின் கீழ் சுரண்டப்படுகின்றனர். அதுவும் 3 – 4 ஆண்டுகள் அவர்கள் உடலில் இளரத்தம் உள்ளவரை கசக்கிப் பிழிந்துவிட்டு சக்கைகளாகத் தூக்கியெறியப்படுகின்றனர். அதன் பிறகு அவர்கள் வாழ்க்கை?!

பெண்கள் முன்னேற்றம், இந்தியாவுக்கே முன்மாதிரி என்றெல்லாம் பேசும் தி.மு.க. முதல்வர் ஸ்டாலின் பெண் தொழிலாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றோ; நியாயமான, சம ஊதியம் கொடுக்க வேண்டும் என்றோ; 8 மணிநேரம் மட்டுமே வேலை வாங்க வேண்டுமென்றோ; பணிப்பாதுகாப்பை உத்திரவாதம் செய்ய வேண்டுமென்றோ; பேறு கால விடுப்பு, மாதவிடாய் கால விடுப்பு போன்றவற்றை வழங்க வேண்டும் என்றோ முதலாளிகளைக் கேட்பாரா?! கேட்கத்தான் முடியுமா?!

இவ்வாறு கேட்பத்தை விட்டுவிடுங்கள், 2021 ஆம் ஆண்டு தரமான உணவு கோரிப் போராடிய பெண் தொழிலாளிகளையும்; 2024-இல் நிரந்தரப் பணி கோரிப் போராடிய தூய்மைப் பணியாளர்களையும் கொடூரமாக ஒடுக்கியது இதே ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசுதான்!

மேலும், மிகமுக்கியமாக, இந்த அத்துக் கூலிக்கு, நிச்சயமற்ற நிலையில், 3 – 4 ஆண்டுகள் கிடைக்கும் வேலையும்; அதற்கு இப்போது கொடுக்கப்படும் சம்பளமும் கூட நிலைக்கப் போவதில்லை. ஐ.எம்.எஃப்., உலக வங்கியின் ஆசைக்கிணங்க மேன்மேலும் பெண்கள் உழைப்புச் சந்தைக்குள் இழுத்துவரப்படும்போது, வேலையற்ற பெண் தொழிலாளிகளின் ரிசர்வ் பட்டாளம் நகர்ப்புறங்களில் திரண்டு நிற்கும். அப்போது, பெண் தொழிலாளிகள் முதலாளிகளோடு பேரம் பேசும் ஆற்றல் (negotiating power) அடியோடு இல்லாமல் போகும்; எனவே, முதலாளி கொடுப்பதுதான் கூலி, சொல்வதுதான் வேலை நேரம் என்று ஆகிவிடும். பெண் தொழிலாளிகளின் உண்மை ஊதியம் படுபாதாளத்தில் வீழ்ச்சியுறும். இதுதான் முதலாளி வர்க்கத்தின் விருப்பமும் நோக்கமும் ஆகும்.

எனவே, பெண் தொழிலாளிகளை இவ்வாறு நவீன கொத்தடிமைகளாக மாற்றுவதை நோக்கித்தான் ‘திராவிட மாடல்’ அரசு நாலுகால் பாய்ச்சலில் முன்னேறி வருகிறது!

  • திருமாறன்

ஆதாரங்கள்:

https://documents1.worldbank.org/curated/en/099070924115041218/pdf/P180699-68e4053c-a18d-4f7c-be16-9082e103eabf.pdf

https://www.worldbank.org/en/news/feature/2024/09/23/tamil-nadu-working-women-s-hostels-a-home-away-from-home

https://www.thenewsminute.com/tamil-nadu/tamil-nadu-starts-working-women-hostels-nine-districts-180415

https://www.thehindu.com/news/national/tamil-nadu/corporates-pitch-in-to-play-key-role-in-naan-mudhalvan-scheme/article66129461.ece

https://behanbox.com/2025/04/16/comfort-control-career-a-peek-into-tamil-nadus-thozhi-working-womens-hostels/

https://www.thehindu.com/news/national/tamil-nadu/over-413-lakh-girl-and-over-328-lakh-boy-students-benefitedunder-the-pudhumai-penn-and-tamil-puthalvanschemes-in-2024-25-says-tn-government/article70313977.ece#google_vignette

https://www.newindianexpress.com/states/tamil-nadu/2023/Feb/09/enrolment-of-girls-in-colleges-up-by-27-cmmk-stalin-2545744.html

https://tamil.oneindia.com/jobs/tamil-nadu-government-offers-unique-opportunity-to-learn-japanese-language-through-tamil-645157.html

https://www.dtnext.in/news/tamilnadu/naan-mudhalvan-a-big-hit-as-70000-get-jobs-in-leading-firms

https://www.newsclick.in/feminisation-industrial-workplace-empowerment-or-exploitation

https://www.newindianexpress.com/states/tamil-nadu/2025/Mar/31/all-for-skill-development?utm_source=chatgpt.com

https://www.dtnext.in/news/tamilnadu/more-than-148-l-tn-students-get-job-placements-due-to-naan-mudhalvan-scheme-796567?utm_source=chatgpt.com

https://www.newindianexpress.com/states/tamil-nadu/2025/Apr/14/tn-sees-30-rise-in-government-school-students-joining-higher-education-in-three-years-shows-data

https://www.thenewsminute.com/videos/women-at-the-heart-of-tamil-nadus-factory-economy-let-me-explain-102-pooja-prasanna

https://www.eurasiareview.com/11042025-tamil-nadus-women-workforce-a-paradox-of-progress-and-persistent-challenges-analysis/#google_vignette

https://www.etvbharat.com/ta/state/mk-stalin-said-that-he-is-working-towards-goal-of-making-tamil-nadu-trillion-dollar-economy-by-2030-tamil-nadu-news-tns26012703358

https://iwwage.org/wp-content/uploads/2025/03/IWWAGE-Factsheet-Tamil-Nadu.pdf

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன